search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    ஈரானில் உள்ள சபஹார் துறைமுக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்கா பொருளாதார தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்துள்ளது. #ChabaharPort #USSanctions #USExemptedIndia
    வாஷிங்டன்:

    ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமல்படுத்தியுள்ளது. நவம்பர் 5-ம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த பொருளாதார தடை இதுவரை இல்லாத மிக கடுமையானது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஈரானிலிருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு தடை விதித்துள்ளது. எனினும், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளது.

    இந்தப் பொருளாதாரத் தடைகளால், அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்கா நம்புகிறது.



    இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கானிஸ்தானை இணைக்கும் ரெயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு சில அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, “நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இங்கிருந்து ஆப்கனுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அமெரிக்கா சில அனுமதியை வழங்கி உள்ளது. ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதித்துள்ளது” என்றார். #ChabaharPort #USSanctions #USExemptedIndia
    அமெரிக்காவில் 435 பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், 35 செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் 36 மாநில கவர்னர் பதவிகளுக்காக இன்று நடைபெறும் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். #USpolls
    வாஷிங்டன்:

    அமெரிக்க காங்கிரஸ் என அழைக்கப்படும் அமெரிக்க பாராளுமன்றம் செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 ஆகவும் உள்ளது.

    இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக அதிபர் தேர்தலுடன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும்.

    இந்த முறை அதிபர் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என ஊடகங்கள் இந்த தேர்தலை குறிப்பிட்டு வருகின்றன.

    மேலும், பதவிக்காலம் முடிவடையும் 35 செனட் உறுப்பினர்களின் தொகுதிகளிலும், 36 மாநில கவர்னர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.



    பாராளுமன்றத்தின் தற்போதைய நிலவரப்படி பிரதிநிதிகள் சபையில் ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 235 ஆகவும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சார்ந்திருக்கும் ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 193 ஆகவும் உள்ளது. அதேவேளையில், செனட் சபையில் ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் கை ஓங்கி காணப்படுகிறது.

    இதனால், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொண்டுவந்த ஒபாமா கேர் எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய குடியுரிமை கொள்கை போன்வற்றை அமல்படுத்த முடியாமல் அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுமாறி வருகிறார்.

    இந்த இடைக்கால தேர்தலில் எப்படியும் தங்களது குடியரசு கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்நிலையில், (அமெரிக்க நேரப்படி) இன்று காலை அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.



    நாட்டின் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களான மைனே, நியூ ஹாம்ப்ஷைர், நியூ ஜெர்சி, நியூ யார்க், விர்ஜியானா ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின்படி பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் டிரம்ப் கட்சிக்கு 42 முதல் 55 சதவீதம் இடங்கள் கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.

    ஆனால், வேறுசில கருத்து கணிப்புகள் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் பெற்றி பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளன.

    அப்படி பாராளுமன்றத்தில் டிரம்ப்புக்கு போதுமான ஆதரவு கிடைத்தால் ஈரான் மீதான பொருளாதார தடை, சீனா மீதான வர்த்தக தடை உள்ளிட்ட அனைத்து கொள்கை முடிவுகளையும் அவர் வெகு சுலபமாக நிறைவேற்ற முடியும். அவரது ஆசை நிறைவேறுமா? என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகள்தான் தெளிவுப்படுத்த வேண்டும். #Votingbegins #USpolls #USmidtermpolls
    ஈரான் மீது இன்று ஏராளமான பொருளாதார தடைகளை திணித்துள்ள அமெரிக்கா அங்கிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு தற்காலிக விதிவிலக்கு அளித்துள்ளது. #USexemptIndia #Iranoilsanctions
    வாஷிங்டன்:

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதுடன், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

    ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் இந்தியா சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் இந்த நிபந்தனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இறுதி முடிவைத்தவிர வேறு எந்த நாட்டின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது என்பது இந்தியா கடைபிடித்துவரும் வெளியுறவுத்துறை கொள்கையாக உள்ளது.

    முன்னர் இருந்த அளவை விட ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் அளவை இந்தியா ஓரளவுக்கு குறைத்து கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு நுகர்வுத் தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

    இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இன்று முதல் இந்த தடைகள் அமலுக்கு வந்தது.

    இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இந்நிலையில், ஈரானிடம் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மைக் பாம்ப்பியோ சீனா, இந்தியா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய 8 நாடுகளுக்கு இந்த தற்காலிக விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். #USexemptIndia #Iranoilsanctions #MikePompeo
    அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் நாடும் தனது தலைமை பிரேசில் தூதரகத்தை இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. #OIC #Brazildecision #Jerusalemembassy #Brazilembassy
    இஸ்தான்புல்:

    அமெரிக்காவின் நட்புநாடான இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிவ் இருந்து வருகிறது. இஸ்லாமியர்களும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் உரிமை கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக மாற்றும் வகையில் அமெரிக்கா சமீபத்தில் ஜெருசலேம் நகரில் தனது தலைமை தூதரகத்தை கடந்த ஆண்டு திறந்துள்ளது.

    அமெரிக்காவை பின்பற்றி சில ஐரோப்பிய நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகருக்கு மாற்ற தீர்மானித்தன.

    அவ்வகையில், பிரேசில் நாடும் தங்களது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவை அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் கூட்டமைப்பு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் பிரேசில் நாட்டின் அறிவிப்பு சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக இந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரேசில் நாட்டு அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள ஜெய்ர் போல்சோனாரோ இந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    1969-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டமைப்பில் 53 இஸ்லாமிய நாடுகள் உள்பட ஒட்டுமொத்தமாக சுமார் 180 கோடி மக்கள்தொகையை 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன. #OIC #Brazildecision #Jerusalemembassy #Brazilembassy
    எங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. #NorthKoreathreatens #NorthKorea
    பியாங்யாங்:

    சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசினார். விரைவில் இரண்டாவது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

    இந்நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் ‘பியாங்ஜின்’ (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. #NorthKoreathreatens  #NorthKorea
    திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளதால் கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. #trump #GreenCard

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் அடங்குவர்.

    தங்களுக்கு கிரீன்கார்டு மூலம் குடியுரிமை கிடைக்கும் என காத்திருக்கும் நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    அதனால் அவர்களின் எண்ணம் ஈடேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர் ஆயிரக்கணக்கானவர்கள் சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியுள்ளனர். அவர்களால் திறமையான வெளிநாட்டினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து அதற்காக லட்சக் கணக்கானோர் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்கள் திறமைசாலிகள் எந்த பணியையும் மிக சரியாக செய்கின்றனர். அவர்கள் நமக்குதேவை.

    ஏனெனில் நமது நாட்டில் (அமெரிக்காவில்) பல கம்பெனிகள் உள்ளன. அவற்றில் பணிபுரிய ஊழியர்கள் தேவை. திறமையின் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என்றார்.

    டிரம்பின் இந்த அறிவிப்பு கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டி னருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. #trump #GreenCard

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யோகா கிளப்பில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #FloridaShooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் யோகா ஸ்டூடியோ உள்ளது. இங்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்தார்.

    அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர் எனவும், துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்டமாக தகவல் வெளியானது. 

    தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #FloridaShooting
    ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #US #Iran #India
    வாஷிங்டன்:

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதற்கிடையே, ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கியது.



    இந்நிலையில், ஈரான் நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள 8 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். இருப்பினும், அமெரிக்க தடைக்கு பின்னர் குறைந்தளவே கச்சா எண்ணெய் வாஙக அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #US #Iran #India
    அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே மகப்பேறு சுற்றுலாவாக வெளிநாட்டில் இருந்து பல கர்ப்பிணிகள் இங்கு வருகின்றனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து கரிப்பிணிப் பெண்கள் அமெரிக்காவுக்கு வருகின்றனர்.

    இங்கு வந்து குழந்தை பெற்றுகொண்டால் அந்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்தும் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இங்கு ‘பிரசவ சுற்றுலா’ வரும் வெளிநாட்டினரின் என்ணிக்கை பெருகி விட்டது என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    சீனாவில் இருந்தும் இன்னும் சில ஆசிய நாடுகளில் இருந்தும் இதுபோல் அதிகமான பெண்கள் வருகின்றனர். இது இப்போது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. அவர்கள் நமது நாட்டின் எதிரியாக இருக்கலாம். நம்மீது போர் தொடர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஒருவர் நம்மை வெறுப்பவராகவும் தனது நாட்டின் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம். 

    ஆனால், அவரது மனைவி அமெரிக்காவில் குழந்தை பெற்றுவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அமெரிக்க குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நமது நாட்டின் மண்ணில் கால்பதித்த சில வினாடிகளில் அந்த பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டாலும் அன்னியர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற கேலிக்கூத்தான, பைத்தியக்காரத்தனமான கொள்கையால் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நாம் குடியுரிமை அளிக்க வேண்டியுள்ளது. இந்த முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவில், 6-ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளார். இதற்கு என சிறப்பு சட்டம் இயற்ற இருப்பதாகவும், அதற்காக வெள்ளை மாளிகை வக்கீல்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது உலகிலேயே அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் நிலை எனவும் இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #Trump
    அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய பெண் நியோமி ஜகாங்கிர் ராவை ஜனாதிபதி டிரம்ப் நேர்காணல் நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #DonaldTrump #Interview #IndianAmericanWoman #JudgePost
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடுமையான பாலியல் புகார்களுக்கு ஆளான பிரெட் கவனாக், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பாக அவர் வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தார்.



    அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகி விட்டதால், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியாக உள்ளது. இந்த காலி இடத்துக்கு பரிசீலிக்கப்படுகிறவர்களில் ஒருவர், இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (வயது 45) ஆவார். இவரிடம் சமீபத்தில் ஜனாதிபதி டிரம்ப் நேர்காணல் நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர் தற்போது அங்கு தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக உள்ளார். இந்தப் பதவியில் இவரது நியமனத்துக்கு செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் ஆதரவாக 54 ஓட்டுகளும், எதிராக 41 ஓட்டுகளும் விழுந்தது நினைவுகூரத்தக்கது. இவரை அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதில் டிரம்ப் ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    இவர் பார்சி இன இந்திய பெற்றோருக்கு மகளாக பிறந்தவர் ஆவார். அமெரிக்காவில் புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  
    இலங்கையில் சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. #MaithripalaSirisena #Parliament #SriLanka
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா. அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார்.



    மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது.

    ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதிபரை அவர் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி வரை அதிபர் சிறிசேனா முடக்கினார்.

    இதை ஏற்க மறுத்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபரின் நடவடிக்கையால் நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும் என கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதம் எழுதிய அவர், தன்னிடம் ஆலோசனை செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்குவது மிகப்பெரும் தவறு என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் அரசின் தலைவராக ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட கரு ஜெயசூர்யா, அவருக்கு எதிராக வேறொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை ரனில் விக்ரமசிங்கேயின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த பரபரப்பான சூழலில் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேற தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக விக்ரமசிங்கேயின் ஆதரவாளரும், மந்திரியுமான அர்ஜுனா ரணதுங்காவை கொழும்பு நகரில் முற்றுகையிட்ட ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சுடப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

    இலங்கையில் நிலவும் இந்த அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவுரெட் கூறுகையில், ‘இலங்கையில் யார் தலைமையில் அரசு அமைப்பது? என்பதை மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் உறுதி செய்யும் பொருட்டு, சபாநாயகருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை அதிபர் உடனடியாக கூட்ட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    இலங்கையில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கவனிப்பதாக கூறிய நவுரெட், அங்கு வன்முறை மற்றும் அடக்குமுறையில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இதைப்போல இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அமைதியாக தீர்வு காண வேண்டும் எனவும், அனைத்து கட்சிகளும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் அரசியல் சாசன வழிமுறைகளை மதித்து சட்டத்தின் ஆட்சியையும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே நேற்று பிரதமர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தில் நேற்று உரையாற்றிய ரனில் விக்ரமசிங்கே, நாடாளுமன்ற விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது எனக்கூறினார். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய அவர், சபை கூடும்போது அதை நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகருக்கே அதிகாரம் இருப்பதாகவும், இது தொடர்பாக நாளை (இன்று) அவர் முடிவு எடுப்பார் என்றும் ரனில் விக்ரமசிங்கே கூறினார்.

    இதைப்போல இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பம் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூர்யா, சிலர் இதை வெளியில் தீர்க்க முயல்வதாகவும், இது ரத்தம் சிந்தவே வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
    ×