search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.
    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.

    தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் டிரம்பின் மகள் இவாங்கா இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் மக்களுக்கு ஆனந்தமான நேரம் இதுவாகும்’ என தெரிவித்துள்ளார்.
    இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறுகையில், “அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் இருந்து நான் கூறுவது என்னவென்றால், இந்திய தேர்தல்களின் நேர்மையில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்” என்றார்.

    மேலும் அவர், “மற்ற நாடுகளுக்கு அனுப்புவது போல் இந்தியாவுக்கு தேர்தல் பார்வையாளர்களை நாங்கள் அனுப்புவதில்லை. ஏனெனில் இந்தியத் தேர்தல் ஆணையம் மிகவும் சுதந்திரமாகச் செயல்படுகிறது. நாங்கள் இந்திய அரசுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறோம். அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்” என கூறினார்.

    அத்துடன், “மனித வரலாற்றிலேயே ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் விளங்குவதாக சிலர் என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புத திருவிழாவை மக்கள் அமைதியுடன் நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக இந்திய மக்களை நாங்கள் பாராட்டுகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார். 
    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
     வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் 
    வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்’ என தெரிவித்துள்ளார்.
    அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார்.
    டெஹ்ரான்:

    ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் போர் கப்பல், போர் விமானம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். அசர்பைஜான் மாகாணத்தின் அரசு தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றி மக்களிடம் உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகி இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

    இது அமெரிக்காவுக்கு நாம் தெரிவிக்கும் தீர்க்கமான பதில் ஆகும். அந்நாட்டின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடிபணியாது’’ என குறிப்பிட்டார்.
    அமெரிக்காவில் ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம் ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க கடற்படை விமானம், ஏ.வி-8 பி ஹாரியர். இந்த விமானம், அங்கு வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

    அவர் நியூபெர்ன் நகரில் உள்ள கரோலினா கிழக்கு மருத்துவ மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உள்ளூர்வாசிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. சம்பவ இடத்தை ராணுவம் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகிறது. விபத்துக்கான காரணம், உடனடியாக தெரியவரவில்லை.
    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்கள் மீது 25 சதவீத வரிவிதிப்பு என்ற முடிவை 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு சீனா, இந்தியா, ஜப்பான், கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஏராளமாக இறக்குமதி வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கு பதிலடி தரும் வகையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டார்.

    மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைமதிப்பில் 25 சதவீதம் தொகையை நாங்கள் வரியாக விதிப்போம் என அவர் எச்சரித்திருந்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் நியாயமற்ற போட்டியால் அமெரிக்காவில் வாகன உற்பத்தி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இந்த புதிய வரிவிதிப்பு முறையை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ள டிரம்ப், இதுதொடர்பாக, வர்த்தக பிரதிநிதிகள் கலந்துபேசி இன்னும் 180 நாட்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என இன்று தெரிவித்துள்ளார்.
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் எப்-16 ரக போர் விமானம் கட்டிடத்துக்குள் பாய்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மார்ச் ஏர் ரிசர்வ் பேஸ் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

    பிற்பகல் 3.45 மணியளவில் வேன் புரேன் பவுலேவார்ட் நகரத்தின்மீது பறந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி ஒரு பண்டகச்சாலைக்குள் (கிடங்கு) பாய்ந்தது. இந்த விபத்தில் கிடங்கின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது.



    சமயோசிதமாக பாரசூட் மூலம் கீழே குதித்த விமானி மற்றும் இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தானை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.

    அவர்களை தனிவிமானம் மூலம் பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்டனர்.

    அந்த விமானம் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
    தகவல் தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார்.
    வாஷிங்டன்:

    சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

    அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5-ம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்து, ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

    இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். அதில், எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகளில் தீவிரமாக அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

    இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில், நெருக்கடி நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் ஹூவாய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்தது.

    இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹூவாய் நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
    அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    அதன்படி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரசாரம் செய்தார்.

    இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியினர் கவர்னர்களாக இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

    கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 16 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு முழுமையாக தடைவிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்புக்கு தடைவிதிக் கும் சட்ட மசோதா அலபாமா மாகாண சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கீழ்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது மசோதாவுக்கு ஆதரவாக 74 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன.

    எனவே பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் கீழ்சபையில் அந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதா நேற்று முன்தினம் மேல்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதரவாக 25 ஓட்டுகளும், எதிராக 6 ஓட்டுகளும் விழுந்தன.

    இதன் மூலம், கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா மேல்சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசு கட்சியை சேர்ந்த அலபாமா மாகாணத்தின் பெண் கவர்னரான கெய் இவேவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    அவர், இந்த மசோதாவில் கையெழுத்திடுவது அல்லது நிராகரிப்பது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கருக்கலைப்பை கடுமையாக எதிர்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மசோதா கையெழுத்தாகி சட்டமானால், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஆபத்து நேரிட்டாலோ அல்லது பாலியல் பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தாலோ, தவறான உறவின் மூலம் கருத்தரித்தாலோ மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

    மேற்கூறிய காரணங்கள் தவிர வேறு எதற்காக கருக் கலைப்பு செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கருக்கலைப்பு செய்யும் டாக்டருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் கருக்கலைப்பில் ஈடுபடும் பெண் குற்றவாளியாக கருதப்படமாட்டார்.

    கருக்கலைப்புக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ள அமெரிக்க அரசு ஈராக் நாட்டின் பாக்தாத், எர்பில் நகரங்களில் உள்ள தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது.

    ஈரான் அரசின் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கேற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வரலாற்று சிறப்புமிக்க அந்த ஒப்பந்தம் வழிவகுத்தது.
     
    ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து.

    இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

    இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

    அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன.

    ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.

    ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும்.



    இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது.

    பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்புகிறது. ஏற்கனவே இந்தப் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தொகுதி உள்ளது. அதில் சேரும் வகையில் யு.எஸ்.எஸ். ஆர்லிங்டன் விமானம் தாங்கி போர்கப்பலையும் அனுப்பியது.

    கத்தார் தளத்துக்கு அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் போய்ச் சேர்ந்து விட்டன.

    ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

    ஆனால் இதை ஈரான் நிராகரித்து உள்ளது. இது முட்டாள்தனமான செயல் என ஈரான் விமர்சித்துள்ளது.
    ஈராக்கில் மட்டும் அமெரிக்காவின் 5 ஆயிரத்து 200 படை வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் அனுப்பி வைப்பது, அந்த நாடு ஈரானுடன் போர் தொடுப்பதற்கான முன்னேற்பாடா? என்ற கேள்வி சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அவசிய-அவசரமான பணிகளில் இல்லாத பணியாளர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
    ×