search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது.
    பீஜிங்:

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    உடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.

    இதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.

    மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


    அமெரிக்காவில் வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி பெண்ணை குற்றவாளி என கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்சிங். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் அஷ்தீப் கவுர் என்கிற மகள் இருந்தாள்.

    இந்த நிலையில், தனது மனைவியை பிரிந்த சுக்ஜிந்தர்சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்கிற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சுக்ஜிந்தர்சிங், ஷம்தாய் அர்ஜூன் மற்றும் அஷ்தீப் கவுர் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தாள். அவள் குளிக்க சென்றபோது, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் அர்ஜூன் தெரிவித்தார்.

    ஆனால் அஷ்தீப் கவுரை தண்ணீரில் மூழ்கடித்து, கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, ஷம்தாய் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூன் குற்றவாளி என கூறி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    அத்துடன், அவருக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் 3-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூனுக்கு 25 ஆண்டுகள் முதல் வாழ்நாள்சிறை வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    ஜூனோ:

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் இருந்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’ என்கிற சொகுசு கப்பல் சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கடந்த சனிக்கிழமை வான்கூவரில் இருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த கப்பல் நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கெட்சிகன் நகரை வந்தடைந்தது. அங்கு தரையிலும், கடலிலும் தரையிறங்கும் வசதி கொண்ட சிறிய ரக கடல் விமானங்கள் மிகவும் பிரபலமானவை.

    இந்த வகை விமானங்கள் மூலம், சுற்றுலா பயணிகளை அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

    இதில் ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர். இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதின. இந்த கோரவிபத்தில் 11 பேருடன் சென்று கொண்டிருந்த முதல் விமானத்தில் ஒருவர் உயிர் இழந்தார். மற்ற 10 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அதே போல் மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    படுகாயம் அடைந்த 10 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாயமான 2 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 
    எப். 21 விமானங்களை இந்தியா வாங்கினால் வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது.
    அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம், புதியதாக வெளியாகியுள்ள எப் 21 ரக விமானத்தில் 114 விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டால், நாங்கள் வேறு யாருக்கும் இவ்வகை விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் எனக் கூறியுள்ளது.

    இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை டெண்டர் கோரியுள்ளது. 18 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீப காலங்களில் மேற்கொள்ளப்படும் மிகவும் அதிகமான தொகையில் மேற்கொள்ளப்படுவதாகும். இந்த ஒப்பந்தத்தை வாங்க அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகிறது. 

    போட்டியில் முன்வரிசையில் இருப்பது லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எப் 21 விமானங்கள், போயிங் நிறுவனத்தின்  F/A-18 விமானங்கள், பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்தின் ரபேல், யூரோபைட்டர்  டைப்யூன், ரஷியாவின் மிக் 35 மற்றும் சுவீடனின் சாப் 35 கிரிப்பன் விமானங்கள் உள்ளது. இந்நிலையில் புதிய அறிவிப்புடன் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் முன்வந்துள்ளது. அதாவது இந்தியாவிற்கு விற்பனை செய்தால் அந்த தொழில்நுட்பத்தையும், விமானத்தையும் வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளது.

    லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் பேசுகையில், இந்தியாவில் 60 விமான நிலையங்களில் செயல்படும் வகையில் புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களில் உயர்தர எந்திரம், மின்னணு போர்திறன் கட்டமைப்பு, ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் ஆகியவை அடங்கும். இந்தியா எங்களிடம் வாங்க ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகில் யாருக்கும் வழங்கமாட்டோம்.  இது இந்தியாவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் தனித்துவமான தேவையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது எனக் கூறியுள்ளார். மேலும் இந்தியா வாங்கினால் விலையும் குறைவாக கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
    டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறுக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.

    அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி 20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.

    இதில் இரு நாடுகள் இடையிலான வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அந்த இடைப்பட்ட காலத்தில் வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரி வெள்ளிக்கிழமை (இன்று) முதல் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அத்துடன் பேச்சுவார்த்தையின்போது சீனா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் எனவே கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில், சீனா துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இறுதிகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை உரிய பலனை அளிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. #DonaldTrump #Iran
    வாஷிங்டன்:

    அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.

    அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்கவேண்டும். அதற்கு பிரதிபலனாக அந்நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.



    ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

    இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அறிவித்தார். அதாவது, ஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்கவேண்டும் என்ற நிபந்தனையை புறக்கணிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் இனி ஈரான் ஈடுபடும்.

    அத்துடன் அமெரிக்காவை தவிர்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் மற்ற 5 நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை 60 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் ஒப்பந்தத்தின் மேலும் சில நிபந்தனைகளை ஈரான் மீறும் என்றும் ஹசன் ருஹானி எச்சரித்தார்.

    இந்த நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய்க்கு அடுத்தபடியாக ஈரானின் 2-வது முக்கிய ஏற்றுமதிப் பொருள் உலோகங்கள் ஆகும். எனவே ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த தடையை விதித்து இருக்கிறது.

    இதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அப்போது பேசிய டிரம்ப், “தொழில்துறை உலோகங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானுக்கு கிடைக்கும் வருவாயை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் மூலம், தங்கள் நாட்டின் துறைமுகங்களில் ஈரான் நாட்டு உலோகங்களை அனுமதிப்பதை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் என்று பிற நாடுகளுக்கு அறிவிக்கிறோம்” என்றார்.

    மேலும், “தங்கள் நடத்தையை அடிப்படையில் ஈரான் மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்நாடு மேலும் புதிய நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்” என்றும் டிரம்ப் எச்சரித்தார். அதே சமயம் ஈரான் தலைவர்களை சந்தித்துப்பேசி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.  #DonaldTrump #Iran
    அமெரிக்காவில் தேவாலயம் அருகே மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். #Baltimore #GunFire
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கலந்துகொண்ட மக்கள் பலர் உணவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து போலீசார், படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #Baltimore #GunFire 
    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.#CaliforniaShooting
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இளம்பெண் ஒருவரும் மற்றும் 2 ஆண்களும் அடங்குவர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் ஜான் எர்னஸ்ட் (19) என தெரிய வந்துள்ளது.

    கடந்த 6 மாதத்துக்கு முன் பிட்ஸ்பர்க் நகரில் இதேபோல் யூதமத கோவிலில் நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #CaliforniaShooting
    குடிமக்களை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. #USVisa

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிரம்ப் அதிபரான பிறகு கட்டாயமாக கடை பிடிக்கப்படுகிறது.

    அந்த பட்டியலில் கினியா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, சியாரா, லியோக், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய 8 நாடுகள் உள்ளன. தற்போது அந்த பட்டியலில் பாகிஸ்தானும், கானாவும் இடம் பெற்றுள்ளன.

    சமீபத்தில் ‘விசா’ காலத்துக்கும் அதிகமாக அமெரிக்காவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை திரும்ப அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் தங்களது குடிமக்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.

     


    எனவே பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா வருவதற்கான ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 22-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அது வழக்கம்போல் நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை பாகிஸ்தானியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி கருத்து தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானியர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று தங்களது குடிமக்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்க சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ‘விசா’ காலம் முடிந்து அமெரிக்காவில் தங்கி இருக்கும் தனது குடிமக்களை சில ஆண்டுகளாக தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. #USVisa

    எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #SaudiArabiaapproves

    வாஷிங்டன்:

    ஈரானின் அணுஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. மேலும் ஈரானில் எண்ணை வருவாயை மூடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கக்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கபோவதாக மிரட்டல் விடுத்தது.

    எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது. இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. அந்த கெடு வருகிற மே 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இருந்தாலும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேலும் சலுகையை நீடிக்க முடியாது என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும். விலையும் கணிசமாக உயிரும் அபாயம் உள்ளது.

    இதற்கு தீர்வுகாணும் வகையில் டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஈரானிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    சவுதி அரேபியா மற்றும் ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள நாடுகள் எனது வேண்டுகோளை ஏற்று எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதே கருத்தைதான் அவர் கூறினார். எண்ணையை தாராளமாக உற்பத்தி செய்யுமாறு ஒபக் நாடுகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.

    இதனால் பெட்ரோல் விலை குறையும் என்றார். இருந்தாலும் கடந்த மாதத்தில் இருந்து கச்சா எண்ணை விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் டுவிட்டரில் மற்றொரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கலிபோர்னியாவில் பெட்ரோல் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு பிரச்சினை எழுந்துள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க அம்மாநில கவர்னருடன் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் நாளை முதல் 28-ம் தேதி வரை மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts #usawarning
    நியூயார்க்:

    இலங்கையில் கடந்த 21-ம் தேதி  ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் புகைப்படம் இன்று வெளியானது. இலங்கை போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் உள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக கருதப்படும் இவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்களையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

    இந்தநிலையில், இலங்கையில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், பொது இடங்களில் அதிகமாக கூட  வேண்டாம் என்றும், வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts #usawarning
    வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவிய இந்தியருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Americancourt

    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்தவர் யத்விந்தர்சிங் சாந்து. இவர் 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை வெளிநாட்டை சேர்ந்த 400 பேரை அமெரிக்காவுக்குள் வர கடத்தி வந்து ஊடுருவ உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    டொமினிகன் குடியரசு, ஹைதி பியர்டோ நிசோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களை கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவினார். இவரும், இவரது நண்பர்கள் பாம்பா, பூபிந்தர் குமார், ரஜிந்தர்சிங் ராபர்ட் ஹோவர்ட் ஸ்காட் மற்றும் அட்கின்ஸ் லாசன் ஹோவர்ட் ஆகியோர் இந்த செயல்களில் ஈடுபட்டனர்.

    வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்படுவார்கள். முதலில் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, ஈரான், பனாமா, வெனிசுலா, பெலிஷ் மற்றும் ஹைதி வழியாக டொனிகன் குடியரசு நாட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அங்கிருந்து படகுகள் மூலம் பியர்டோரிகா அல்லது புளோரிடாவுக்கு அழைத்து வரப்பட்டு விமானம் மூலம் கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டொமினிக் குடியரசு நாட்டில் இருக்கும்போது அமெரிக்காவுக்குள் நுழைய போலி விசா தயாரித்து வழங்கினர்.

    அதுபோன்று கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ செய்ய தலா 30 ஆயிரம் டாலர் முதல் 85 ஆயிரம் டாலர் வரை பணம் பெற்றுள்ளனர்.

    இதுசம்பந்தமாக கைது செய்யப்பட்ட யத்விந்தர்சிங் சாந்து மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி யத்விந்தர்சிங் சாந்துவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    இவர் 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோரை கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ செய்துள்ளார். பயணத்தின்போது ஒருவர் மட்டும் உயிரிழந்தார். #Americancourt

    ×