search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்க கூடாது என்று நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #NikkiHaley #US #Pakistan
    வாஷிங்டன்:

    அமெரிக்க வாழ் இந்தியரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் டிரம்ப் அரசின் புதிய கொள்கைகளை பாராட்டி உள்ளார்.

    அமெரிக்காவின் பாதுகாப்பு, வலிமை மற்றும் வளத்தை கருத்தில் கொண்டு புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா வெளிநாடுகளுக்கு நிதி உதவி செய்கிறது. அதே நேரத்தில் அவர்களிடம் இருந்து அதற்கான பிரதி பலன் திரும்ப கிடைக்கிறதா? என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது.

    அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெறும் பாகிஸ்தான் ஐ.நா.சபையில் பல விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்துள்ளது.

    2017-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ரூ.7100 கோடி (1 பில்லியன் டாலர்) நிதி உதவி பெற்றது. இது அதிக பட்ச நிதியாகும். இந்த நிதி பாகிஸ்தான் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, நெடுஞ்சாலை, மின் திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்பட்டன.


    இத்தகைய வெளிநாட்டு நிதி உதவி நண்பர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களில் 76 சதவீத அளவுக்கு பாகிஸ்தான் எதிராகத்தான் வாக்களித்துள்ளது.

    பாகிஸ்தான் பயங்கரவாதிளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவது நீண்ட கால வரலாறு. அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவித்தனர்.

    இத்தகைய சூழ்நிலையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்க கூடாது. இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அரசு புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளது.

    எனவே பயங்கரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது நடவடிக்கையை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நிக்கி ஹாலே தென் கரோலினா மாகாணத்தின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து விலகினார். #NikkiHaley #US #Pakistan
    சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. #SaudiArabia #PrincessRimaBint #SaudiArabia #womanenvoytoUS
    ரியாத்:

    இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன.

    இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    சவுதி இளவரசிகளில் ஒருவரான ரிமா பின்ட் பன்டர் என்பவர் அமெரிக்காவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக தற்போது அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பதவி வகிக்கும் சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் இணைத்துப் பேசப்படுவதால் இந்த புதிய நியமனத்துக்கு சவுதி அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி ரீமாவின் தந்தை சவுதி அரேபியா நாட்டு உளவுத்துறையின் முன்னாள் தலைவராக பணியாற்றியதுடன், அமெரிக்காவுக்கான சவுதி தூதராக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பதவி வகித்துள்ளார்.

    இதனால் அமெரிக்காவில் தங்கி படித்த இளவரசி ரீமா சவுதி அரேபியாவில் செய்துவரும் சில பொதுச்சேவைகளால் அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiArabia #PrincessRimaBint #SaudiArabia #womanenvoytoUS
    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

    பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானார். #IndiandeadatUS
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென உள்ளே நுழைந்தார். கடையில் மேலாளர் கோவர்தன் ரெட்டி (வயது 48) மட்டும் இருந்துள்ளார். அவரை மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இந்த தாக்குதலில் கோவர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பணத்தையோ, விலை உயர்ந்த பொருட்களையோ திருடிச் செல்லவில்லை. எனவே, வேறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

    இச்சம்பவத்தில் பலியான கோவர்தன் தெலுங்கானா மாநிலத்தின் யாததிரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குப் பணிக்காகச் சென்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கோவர்தன் உடலை இந்தியா கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அங்குள்ள தெலுங்கு அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USShooting #IndianShotDead

    அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். #MandeadatTunnel
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாலிபர் ஒருவர், கிராண்ட் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்க நடைமேடையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ரெயில் ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலின் கதவுகள் மூடப்பட்டிருந்தபோதும், அந்த வாலிபரின் சட்டை ரெயிலின் கதவில் மாட்டிக் கொண்டது. இதனால் அவர் இழுத்துச் செல்லப்பட்டு, சுரங்கப்பதை தண்டவாளத்தில் விழுந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த வாலிபரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்த வாலிபர் யார் என சரிவர தெரியாத நிலையில், இதனை விசாரித்த அதிகாரிகள் அவரது சடலத்தில் இருந்த மெக்சிகன் தூதரகம் அளித்த அடையாள அட்டையை கண்டறிந்தனர். இதன்மூலம் அந்த வாலிபர், குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த விசன்டே அலடோர் என தெரியவந்தது. #MandeadatTunnel

    பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #PulwamaAttack #RajnathSingh
    புதுடெல்லி:

    காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா மற்றும் அமெரிக்காவுக்கான தூதர் ஹர்ஸ்வர்தன் சிரிங்லா ஆகியோரை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது. அதன்படி நாடு திரும்பிய அவர்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தி வந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவர்கள் இருவரும் நேற்று சந்தித்தனர். வழக்கத்துக்கு மாறான முறையில் நடந்த இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் புலவாமா தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்ச்சியும், பரபரப்பும் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து, 16 மாநிலங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #DonaldTrump #Emergency
    கலிபோர்னியா:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு பாராளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.



    ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

    நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். அதன்படி, கலிபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன. கலிபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டின் அவசரநிலையை அறிவித்திருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், டிரம்பின் அவசர நிலை பிரகடனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.

    ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், மக்களின் வரிப்பணத்தை திருடுவதையும் தடுப்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் சேவியர் பெசிரா தெரிவித்தார். #DonaldTrump #Emergency 
    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. #Pakistan #Taliban
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர்.

    அதன்படி கடந்த மாதம் இறுதியில் கத்தார் தலைநகர் தோகாவில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆப்கன் விவகாரத்தில் தீர்வுகாண ஒரு ஒப்பந்தத்தை கட்டமைக்க இரு தரப்பும் ஒப்புதல் அளித்தன. அதே சமயம் குறிப்பிடத்தக்க வகையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண்பது மற்றும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்ப பெறுவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.
    அமெரிக்காவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #DonaldTrump #Emergency
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.

    ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக தற்போது நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து உள்ளார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்து இட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

    அதில் அவர், ‘தேசிய அவசரநிலை சட்டம் பிரிவு 201-ன்படி நாட்டில் அவசர நிலையை பிறப்பிப்பதில் எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளேன். எல்லை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள அவர்கள், இதற்காக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #DonaldTrump #Emergency 
    அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #FactoryShooting
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

    ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானவர்கள் நவீன துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.

    ஆனால் இதுவே அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சிலர், சக குடிமக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அங்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட சிகாகோ நகரின் புறநகர் பகுதியான அரோராவில் ஹென்றி பிராட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கான வால்வுகள் தயாரிக்கும் இந்த நிறுவனம் வட அமெரிக்காவின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு கட்டிடம் ஒன்றில் நேற்று முன்தினம் பகலில் மும்முரமாக பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த கேரி மார்ட்டின் (வயது 45) என்ற ஊழியர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.

    இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் பின் ஒருவராக சரிந்தனர். இதைப்பார்த்த பிற ஊழியர்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்கும் இங்கும் ஓடினர். இதனால் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குண்டு பாய்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து உடனே அரோரா நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ஹென்றி பிராட்டை சரணடையுமாறு கூறினர். ஆனால் அவர் போலீசாரையும் நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 6 போலீசார் காயமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது கருதப்படுகிறது. அதேநேரம் 5 அல்லது அதற்கு மேல் உயிரிழப்புகளை ஏற்படுத்திய 3-வது சம்பவம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிகாகோ நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. #PulwamaAtack #AjitDoval #USSupportIndia
    புதுடெல்லி:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.



    இதற்கிடையே, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதல் தொடர்பாக, அவரிடம்  அஜித் தோவல் தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஜான் போல்டன் உறுதியளித்துள்ளார்.

    இந்த உரையாடல் குறித்து ஜான் போல்டன் கூறுகையில், ‘தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அஜித் தோவலிடம் நான் கூறினேன். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அவரிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

    பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது’ என்றார். #PulwamaAtack #AjitDoval #USSupportIndia
    அமெரிக்காவின் மலைப்பகுதியில் சிங்கம் ஒன்று ஓட்டப்பந்தைய பயிற்சி மேற்கொண்ட வாலிபர் மீது பாய்ந்ததால், அதனை திரும்ப தாக்கிக் கொன்றார். தற்போது தனது அனுபவத்தை கூறியுள்ளார். #USmanKilledLion
    டென்வர்:

    அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி உள்ளது. இங்கு பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக மலை சிங்கங்கள் 4500 முதல் 5500 வரையிலான எண்ணிக்கையில் வசிக்கின்றன.  

    இந்நிலையில் கொலராடோ பகுதியில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி அன்று  காலை ஓட்டப்பந்தைய பயிற்சிக்காக டிராவிஸ் காஃப்மன்(31) ஓடிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்துள்ளார். திடீரென சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்தது. அது 80 பவுண்ட் எடை கொண்ட ராக்கி மலைப்பகுதியைச் சேர்ந்த மலைச்சிங்கம் ஆகும்.

    சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றும் தப்பிக்க இயலவில்லை. இதனால் தற்காப்பு கருதி வேறு வழியின்றி சிங்கத்துடன் போராடி அதனைக் கொன்றார். டிராவிஸின் முகம் மற்றும் கைகளில் அடையாளம் தெரியாத அளவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

    பின்னர் அவர் வனத்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    நடந்த சம்பவம் குறித்து டிராவிஸ் முதல் முறையாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிங்கம் எனது மார்பில் ஏறி நின்றுக் கொண்டு கால்களில் உள்ள தன் கூரிய நகங்களை கொண்டு முகத்தில் கீறியது. என்னை காப்பற்றிக் கொள்ள சிங்கத்தினை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் கடுமையாக தாக்க துவங்கியது. எனக்குள் இருந்த உயிர் பயம், சண்டையிட என்னை மேலும் தயார்படுத்தியது. பின்னர் அருகில் இருந்த பாறையில் சிங்கத்தை மோதினேன்.

    இதனையடுத்து சிங்கத்தை காலின் அடியில் போட்டு, கழுத்து பகுதியில் காலை வைத்து நெறித்தேன். இறுதியில் சிங்கம் இறந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக இந்த மலைச்சிங்கங்கள் அமைதியான குணநலன் கொண்டவை. கடந்த சில ஆண்டுகளாக இவை மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என கொலராடோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விலங்குகளின் வாழ்விடங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வதாலும், அந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடுவதாலும் மனிதர்களை விலங்குகள் தாக்குவதாக கூறுகின்றனர்.

    இந்த தாக்குதலுக்குப் பின்னர், லாரிமர் கவுன்டியின் இயற்கை வளத்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #USmanKilledLion
    ×