search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யோர்பா லிண்டா நகரின் வழியாக பறந்து சென்ற ஒரு சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதியது.



    மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? உயிரிழந்தவர்கள் யார்? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Aircraftcrashes #Aircraftcrashesintohouse 
    அமெரிக்காவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் 2 பேரை சக போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள பீகன் பர்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 5 போலீசாரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து உடன் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த போலீசார் 5 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. #Huawei



    சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், அமெரிக்க அதிகாரிகள் சுமத்திய அனைத்து குற்றசாட்டுகளையும் மறுத்ததோடு எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது. 

    ஹூவாய் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நிதித்துறை எழுப்பியது. அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்ற சம்பவங்களில் ஹூவாய் நிறுவன மூத்த நிதி அலுவலர் மெங் வான்சௌக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. 

    ஹூவாய் நிறுவனம் வர்த்தக ரகசியங்களை திருடியதாகவும், வங்கி ஊழல், விதிமுறை மீறல் மற்றும் அமெரிக்க அரசிடம் போலி அறிக்கைகளை வழங்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

    அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஹூவாய் நிறுவனம், டுவிட்டரில் பதில் அளித்துள்ளது. அதில், "ஹூவாய் நிறுவனமோ மற்றும் அதன் துணை நிறுவனங்களோ அமெரிக்க அரசு சுட்டிக்காட்டியிருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் ஹூவாய் மூத்த நிதி அலுவலர் மெங் எவ்வித தவறும் செய்யவில்லை. அமெரிக்க நீதிமன்றங்களும் இதேபோன்ற முடிவை எட்டும் என நம்புகிறோம்," என தெரிவித்துள்ளது. #Huawei
    அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசா பிராசசிங் நடைமுறை நாளை தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது. #H1BVisa
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 3 ஆண்டு காலம் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா ஆகும். இந்தியாவில் ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடம் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. குறிப்பாக 70 சதவீதம் ‘எச்-1 பி’ விசாக்கள் இந்தியர்களுக்கே கிடைக்கிறது.

    அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணி அமர்த்துவது வழக்கம். குறிப்பாக மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் நிறுவனங்கள் இந்த விசாவின்கீழ்தான் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது. அமெரிக்க அரசு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது. இது தவிர்த்து அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும். இந்த விசாக்கள் வழங்குவதற்கான பிரிமியம் பிராசசிங் என்று அழைக்கப்படுகிற சிறப்பு பரிசீலனை நடைமுறையை அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென நிறுத்தி வைத்தது.

    இந்த நிலையில் மறுபடியும் ‘எச்-1 பி’ விசா பிராசசிங் நடைமுறை நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் தனது ‘எச்-1 பி’ விசா விண்ணப்பத்தை ‘பிரிமியம் பிராசசிங்’ நடைமுறையை பின்பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டு, உரிய கட்டணத்தை செலுத்திவிட்டால், இதுபற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு 15 நாளில் பரிசீலித்து முடிவு எடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    பியாங்யங் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா, வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.



    ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதற்கு, பதிலளித்த கிம் ஜாங் அன், அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் என கூறியதாக தெரிகிறது. அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருக்கு எழுதிய கடிதத்தில், மீண்டும் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக  தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கிம் ஜாங் அன் தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  

    மேலும், டிரம்பின் நேர்மறையான அணுகுமுறை புதிய வழிமுறையை காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அவரது செயல்பாடு உள்ளது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    அமெரிக்காவில் உள்ள செப்ரிங் பகுதியில் உள்ள வங்கியில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். #USbankattack
    மியாமி:

    தெற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில், இன்று காலை துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், திடீரென கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    தாக்குதல் நடத்திய நபர் 21 வயதுடைய செப்ரிங் பகுதியை சேர்ந்தவராக கருதப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கையின் படி, அமெரிக்காவில் 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 40,000 பொதுமக்கள் இதுபோன்ற திடீர் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை இந்த அளவுக்கு தீவிரமாக இருந்தபோதிலும், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கடும் சட்டங்கள் இயற்றும் முயற்சிகள் பல ஆண்டுகளாக இழுபறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. #USbankattack 
    வெனிசுலாவில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். இதனை அமெரிக்கா அங்கீரித்துள்ளது. #VenezuelaActingPresident #JuanGuaido #Trump
    கராகஸ்:

    வெனிசுலாவில் கடந்த சில வருடங்களாகவே அதிபர் மதுராவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான கிளர்ச்சி ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் நிகோலஸ் மதுரோ 67% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக்கொண்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன் 21.2% சதவீத வாக்குகளே பெற்றார்.

    மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேசமயம், பாராளுமன்றத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வரும் எதிர்க்கட்சியினர், நிகோலஸ் மதுரோ அதிபர் பதவி ஏற்பதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும், கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றுக்கொண்டார்.


     
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் பாராளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ(வயது 35), தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார். ஒரு கட்டத்தில் அவரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஜூவான் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மதுரோவுக்கு எதிராக போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், தலைநகர் கராகசில் எதிர்க்கட்சி சார்பில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், சபாநாயகர் தனது அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். இதனால் அதிபர் மதுரோ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த அரசியல் மாற்றம் வெனிசுலாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே வெனிசுலாவின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ தன்னைத்தானே அறிவித்ததை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அங்கீகரித்து ஆதரவு தெரிவித்துள்ளன.

    இதேபோல் மற்ற நாடுகளும் ஜூவான் கெய்டோவை ஆதரிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். அதிபர் நிகோலஸ் மதுரோ முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூவான் கெய்டோ தலைமையிலான தேசிய சபை தான் சட்டப்பூர்வமானது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #VenezuelaActingPresident #JuanGuaido #Trump
    அமெரிக்காவில், மலை உச்சியில் இருந்து விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. #California #YosemiteNationalPark #MeenakshiMoorthy #VishnuViswanath #Intoxicated #SelfieKills
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் இந்திய தம்பதி விசு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா தலமான யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சென்றனர்.



    அப்போது அவர்கள் 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்தனர். கணவன்-மனைவி இருவரும் மலை உச்சியில் நின்று ‘செல்பி’ படம் எடுத்தபோது உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது இந்த உண்மை தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #California #YosemiteNationalPark #MeenakshiMoorthy #VishnuViswanath #Intoxicated #SelfieKills 
    வட அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி தற்போது உறைந்து பனி நீர்வீழ்ச்சியாக காணப்படுகிறது. #naiagaraicefalls
    நியூயார்க்:

    வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும்.  இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.  இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது.

    இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் குளிர்கால நிலை, காற்று,  புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது.

    இதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு பனி சுவர் போன்ற அமைப்பு உருவானது. இதனையடுத்து பார்வையாளர்கள்  நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புத காட்சியினை படம் பிடித்து  சமூக ஊடகங்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல்  கடந்த ஆண்டும், இதே சீசனில் நீர்வீழ்ச்சிகள் உறைந்தது குறிப்பிடத்தக்கது. #naiagaraicefalls




    அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் நதியின் அழகை மேலும் அழகூட்டும் வகையில் பனி உறைந்து நிலவைப்போல் காட்சியளிக்கிறது. #Americaicedisc
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வெஸ்ட்புரூக் பகுதியில் உள்ள ஆற்றின் மீது பிரமிப்பூட்டும் காட்சி உருவாகியுள்ளது. ஆற்றின் இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, பனி கொட்டித் தீர்த்து ஆற்றின் படுகை நிலா போல் மாறி காணப்படுகிறது.

    வெப்பநிலையானது படிப்படியாக வீழ்ச்சியடைந்ததால், மணற்பாறைகளிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு, பனி தகட்டினை ஏற்படுத்தியுள்ளது.  இந்த மாபெரும் சுழலும் பனி தகடு 90 மீட்டர் பரப்பளவில் உள்ளது.

    இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இந்த பனி தகடுகள் அரிதாகவும் , இயற்கையாகவும் உள்ளது.  இது கிட்டத்தட்ட 100 மீட்டர் அகலம் கொண்டது. மேலும் இது எதிர் கடிகார திசையில் சுழல்கிறது’ என கூறினர்.

    நதி செல்லும் வழியில், நீர் வெண்பனியாய் உறைந்து இருக்க, அதன்வழியாக சுழலும் நீரும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இது காண்போர் கண்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வழகை காண பலரும் உற்சாகத்துடன் வந்த வண்ணம் உள்ளனர். #Americaicedisc

    அமெரிக்காவில் அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும் என ஹாலிவுட் பாடகி லேடி காகா வலியுறுத்தி உள்ளார். #LadyGaga #DonaldTrump
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஹாலிவுட் திரையுலகின் பிரபல பாடகி லேடி காகா, அரசுத்துறைகள் முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் படி வலியுறுத்தி உள்ளார்.

    இது பற்றி அவர் கூறுகையில், “அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும். ஏனெனில் வாரந்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் அரசு ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பிழைத்து வருகிறார்கள்” என தெரிவித்தார். #LadyGaga #DonaldTrump
    அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். #OhioPlaneCrash
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஒகியோ மாநிலம், வாய்னே கவுண்டியில் மிகப் பழமையான சிறிய விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. கிளப்லேண்டில் இருந்து 60 கிமீ தெற்கில் விமானம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.

    மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் மோதி, பின்னர் ஒரு வீட்டின் முன்னால் விழுந்து நொறுங்கியது. நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 2 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் ஆப்பிள் கிரீக் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    விபத்துக்குள்ளான விமானம், 76 ஆண்டுகள் பழமையானது. என்ஜின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விமானம் விழுந்தபோது, அருகில் இருந்த வீடு கடுமையாக குலுங்கி உள்ளது. ஆனால், வீட்டில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #OhioPlaneCrash
     
    ×