search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    சீனாவில் நடைபெறும் சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியில் முதல் சுற்றில் அதிரடியாக விளையாடி 2-ம் சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். #PVSindhu #FuzhouChinaOpen
    பீஜிங்:

    சீனாவில் நடைபெறும் சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ரஷிய வீராங்கனை எவ்ஜெனியா கொசெட்ஸ்கயாவை எதிர்க்கொண்டார். முதல் சுற்றிலேயே அதிரடியாக விளையாடிய பி.வி.சிந்து 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.



    அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்றில் ரஷிய வீராங்கனை தனது கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுதும் தனது அதிரடி விளையாட்டின் மூலம் 21-19 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். #PVSindhu #FuzhouChinaOpen
    சீனாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்வந்த கார்களின் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. #China #Accident
    பீஜிங்:

    சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #China #Accident
    லீ கெகியாங், இம்ரான்கான் சந்திப்பை தொடர்ந்து சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #Pakistan #China #Agreement
    பீஜிங்:

    பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான், முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் பீஜிங் நகருக்கு போய் சேர்ந்தார்.

    பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெற்ற (ஐ.எம்.எப்.) கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இதற்காக நட்பு நாடுகளிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிதி உதவி பெற முடிவு செய்தார். அந்த வகையில் அவர் முதலில் சீனாவின் உதவியை நாட முடிவு செய்தார்.



    ஒரு பக்கம், சீனாவுடனான சி.பி.இ.சி. என்னும் சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும், இந்த நெருக்கடியான கால கட்டத்தில் சீனாவின் உதவி அவசியம் தேவை என உணர்ந்துதான் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக 4 நாள் அரசு முறை பயணத்தை இம்ரான்கான் மேற்கொண்டுள்ளார்.

    அவர் முதலில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

    அதைத் தொடர்ந்து நேற்று சீன பிரதமர் லீ கெகியாங்கை, பீஜிங் நகரில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இம்ரான்கான் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அவரை வரவேற்று லீ பேசும்போது, “ எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற கூட்டாளிகள் என்று சீனாவையும், பாகிஸ்தானையும் அழைக்கலாம். நாங்கள் அந்த நாட்டின்மீது அரசியல் ரீதியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். எல்லா துறையிலும் ஒத்துழைப்பை கொண்டுள்ளோம். சீனாவின் வெளிநாட்டு கொள்கையில் பாகிஸ்தான் எப்போதுமே முன்னுரிமை பெற்ற நாடாக உள்ளது. உங்கள் வருகை நம் இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

    லீ கெகியாங்குக்கு நன்றி தெரிவித்து இம்ரான்கான் பேசினார்.

    அப்போது அவர், “ இரு நாடுகள் இடையேயான உறவு ஆழமாக இருந்து வந்துள்ளது. 2013-ம் ஆண்டில் சி.பி.இ.சி. என்னும் சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் ஒரு யோசனையாக மட்டுமே இருந்தது. இப்போது அது களத்திற்கு வந்துள்ளது. இது எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு உருவாக்கி தந்துள்ளது” என்று கூறினார்.

    இருவரும் சந்தித்துப் பேசிய பின்னர் சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

    இரு நாடுகளும் வனம், பூமி அறிவியல், விவசாயம், தொழில் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. லீ கெகியாங், இம்ரான்கான் சந்திப்புக்கு பின்னர் சீன வெளியுறவு துணை மந்திரி கோங் சுவான்யூ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா செய்யும்” என கூறினார்.பாகிஸ்தானுக்கு சீனா 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 44 ஆயிரம் கோடி) நிதி உதவி வழங்கும் என வெளியாகி உள்ள தகவல் குறித்து கோங் சுவான்யூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா அளிக்கும். இது இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பு குழுக்களும் பேச்சு வார்த்தை நடத்துவர். பாகிஸ்தானில் மந்திரிகளின் விமர்சனத்துக்கு ஆளானாலும்கூட, 60 பில்லியன் டாலர் (ரூ.4 லட்சத்து 44 ஆயிரம் கோடி) மதிப்பிலான சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் மாற்றம் இல்லை” என்று கூறினார். 
    சீனாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. #ChinaBusAccident #WomanAttacksDriver
    பீஜிங்:

    சீனாவின் வான்ஜோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு யாங்ட்சே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிரைவர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றதால்  விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான பேருந்து புறப்பட்டு வந்த இடத்தில் இருந்து விபத்து ஏற்பட்ட பகுதி வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும், பேருந்து தாறுமாறாக ஓடியபோது அருகில் சென்ற ஒரு வாகனத்தின் டேஷ்போர்டு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், பேருந்து தவறான பாதையில் சென்றது மட்டும் தெரியவந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை.

    இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய பேருந்தில் இருந்த கேமரா பதிவு நீர்மூழ்கி வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தது விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவந்தது.



    10 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், பேருந்து டிரைவருடன் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தன் செல்போனால் தாக்குவதும், பதிலுக்கு டிரைவர் தனது வலது கையால் தாக்குவதும், பேருந்து தாறுமாறாக ஓடுவதைப் பார்த்த பயணிகள் கத்தி கூச்சலிடுவதும் பதிவாகி உள்ளது. பேருந்தில் பயணி ஒருவர் டிரைவரை தாக்கியதால் விபத்துக்குள்ளாகி, 15 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. #ChinaBusAccident #WomanAttacksDriver



    சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். #ImranKhaninChina
    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வானவர் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்.

    இவர் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்

    பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhaninChina
    சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக மேற்கொள்ளப்படும் பேருந்து சேவைக்கு இந்தியா தெரிவித்த எதிர்ப்பை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. #CPECBusService #PakistanForeignOffice
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக இந்த பேருந்து இயக்கப்பட உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மீறும் செயல் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.

    ஆனால் இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் அறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை நிராகரித்துள்ளது. 

    ‘ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியா மீண்டும் மீண்டும் உரிமை கொண்டாடுவதால் வரலாற்று உண்மைகளையோ, காஷ்மீர் பிரச்சினையின் சட்டப்பூர்வ தன்மையையோ மாற்ற முடியாது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் பிரச்சினைக்குரிய பகுதி ஆகும். எனவே, ஐநா ஆதரவுடன் பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு நடத்திதான் இறுதி நிலையை முடிவு செய்ய வேண்டும்’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. #CPECBusService #PakistanForeignOffice
    பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் 30 மணிநேர பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. #PakistantoChina #PakistantoChinaBusservice
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவின் பகைநாடான பாகிஸ்தான் மீது சீனா அளவுகடந்த பாசத்தை பொழிந்து, அக்கறை காட்டி வருகிறது.

    சீனாவின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் அரபிக்கடலை ஒட்டி பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை சீனாவில் தன்னாட்சி உரிமைபெற்ற உய்குர் பகுதியுடன் இணைக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் ஆகியவற்றின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது.

    இந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம். இந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணம் 13 ஆயிரம் ரூபாயாகவும், இருவழி (சென்று, திரும்ப) கட்டணம் 23 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதி தற்போது வரை இல்லை. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக இந்த பஸ் சென்றுவரும். வாரத்தில் 4 நாட்கள் இந்த பஸ் போக்குவரத்து நடைபெறும் என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistantoChina #PakistantoChinaBusservice 
    சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் பாறை வெடித்து சரிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. #Chinacoalmineaccident #coalmineaccident #Deathtollrises
    பீஜிங்:

    சீனாவின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத நிலக்கரிச் சுரங்கங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் இயங்கி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

    இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட ஒரு நிலக்கரி சுரங்கத்தினுள் கடந்த 20-ம் தேதி மிகப்பெரிய பாறை ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால், அந்த சுரங்கத்துக்குள் செல்லும் இரு நுழைவு வாயில்களும் மூடிக்கொண்டன.
     


    இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, மூடப்பட்ட நுழைவு வாயில்களில் இருந்த இடிபாடுகள் நீக்கப்பட்டு உள்ளே சென்ற மீட்பு படையினர் நேற்று இரு பிரேதங்களை கண்டெடுத்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், இன்று மீட்புப் படையினர் மேலும் ஆறு பிரேதங்களை கண்டெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Chinacoalmineaccident #coalmineaccident #Deathtollrises
    சீனாவில் மழலையர் பள்ளி வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர், குழந்தைகளை கத்தியால் வெட்டியதில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். #kindergarten #ChinaKnifeAttack
    பீஜிங்:

    சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி மழலையர் பள்ளியில் இன்று காலை குழந்தைகள் தங்கள் வழக்கமான பயிற்சி முடிந்து வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தான் கொண்டு வந்த கத்தியால் குழந்தைகளை சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.

    இதனால் குழந்தைகளின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வெறித்தனமாக குழந்தைகளை தாக்குவதைப் பார்த்த பாதுகாவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.



    இந்த திடீர் தாக்குதலில் 14 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தாக்குதல் நடத்திய பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பள்ளிக்கு வந்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக சமுக வலைத்தளங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.

    சீனாவில் பொது இடங்களில் அதிகரித்து வரும்  கத்தி தாக்குதல் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. #kindergarten #ChinaKnifeAttack
    பாகிஸ்தான் நாட்டில் இருந்து முதன்முதலாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் சீனாவின் உதவியுடன் 2022-ல் நிறைவேற்றப்படும் என அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #China #SpaceProject #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அரசு சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து முதல் நபரை விண்வெளிக்கு அனுப்ப சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட 2 செயற்கைகோள்களை சீனாவின் ராக்கெட்டுகளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. 2022-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து முதல் வீரரை விண்வெளிக்கு அனுப்ப சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான ஒப்புதல் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.



    சீனாவில் இருந்து ஆயுதங்களை வாங்கும் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வரும் நிலையில், நவம்பர் 3-ம் தேதி பிரதமராக சீனாவுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #China #SpaceProject #ImranKhan
    இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி திட்டம் தீட்டியது குறித்த மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது. #MaithripalaSirisena #RAW #assassinationplot
    கொழும்பு:

    இலங்கை போலீஸ் துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கும் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவையையும் கொல்ல டெலிபோனில் சதி திட்டம் தீட்டப்பட்டது. அது குறித்த தகவல்களை உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன் என தெரிவித்தார்.

    இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த எம்.தாமஸ் என்பவர் கடந்த மாதம் செப்டம்பர் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார். எனவே அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை அதிபர் சிறிசேனா மறுத்தார். பிரதமர் மோடியுடன் டெலிபோனில் பேசினார்.

    ஆனால் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது குறித்த விசாரணையை இலங்கை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை சதி திட்டம் தீட்டியதற்கான டெலிபோன் உரையாடல்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சீன நிறுவனமான குயாவேயின் தொழில் நுட்ப உதவியுடன் டெலிபோன் உரையாடலை மீண்டும் பெற முயற்சி நடைபெற்றது. அதற்காக இலங்கை போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு செய்தனர்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் சதி திட்ட தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த விசாரணையின் போது தாமஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.ஐ.டி. போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், எனவே அவர்களின் பாதுகாப்பில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். #MaithripalaSirisena #RAW #assassinationplot
    ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இதுவாகும். #HongKongZhuhaiMacaoBridge #China
    பீஜிங்:

    உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.

    68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.



    கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #HongKongZhuhaiMacaoBridge #China
    ×