search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. #China #ArtificialMoon
    பீஜிங்:

    உலகில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவில் டூப்ளிகேட் மாதிரிகள் உள்ளன. அந்த வகையில், சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெருவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான முதல் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தால், 2022-ம் ஆண்டு இந்த செயற்கை நிலவுகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த செயற்கை நிலவின் மூலம், மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளிலும், பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளிலும் வெளிச்சம் பெற முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த செயற்கை நிலவானது இயற்கையான நிலவை விட 8 மடங்கு ஒளிரும் சக்தி கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏறத்தாழ மனிதன் தயாரித்த அனைத்து பொருட்களுக்கும் சீனா டூப்ளிகேட் மாதிரி செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியின் மூலம் இயற்கையின் தலையிலேயே சீனா கைவைத்துவிட்டது என நகைச்சுவையாக கூறப்படுகிறது. #China #ArtificialMoon
    சீனாவின் முன்னாள் துணை நிதி மந்திரி சாங் ஷாவ்சுன் ஊழல் புகாரில் இன்று கைது செய்யப்பட்டார். #ZhangShaochunarrested #corruptioncharges
    பீஜிங்:

    சீனாவில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு உள்ளாகும் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் க்சி ஜின்பிங்  உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் பல முன்னாள் மந்திரிகளும், முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளை லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிதித்துறை முன்னாள் துணை மந்திரி சாங் ஷாவ்சுன் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எதையும் சீன ஊடகங்கள் வெளியிடவில்லை. #ZhangShaochunarrested  #corruptioncharges
    இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக சீனா சூப்பர்சானிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. #BrahMosmissile #supersonicmissile
    பீஜிங்:

    சீனாவில், சூப்பர்சானிக் எச்டி-1 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம், இந்த சோதனையை நடத்தியது. அந்நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது.



    இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் வெய் டோங்சு தெரிவித்தார். 
    சீன நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake
    பெய்ஜிங்:

    சீனா நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் நேற்று சுமார் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் கணித்துள்ளது.
     
    ஜிங்ஜியாங் மாகாணத்தில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாகாண தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. #Earthquake
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார். #USPresidentialElection #China #DonaldTrump
    வாஷிங்டன்:

    2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே, கடந்த மாதம் டிரம்ப் சீனா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது, தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதை சீனா விரும்பவில்லை என்றும், அதனால் இந்த ஆண்டுக்குள்(2018) அமெரிக்காவில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு சீனா முயற்சித்து வருவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார். இதை உடனடியாக சீனா மறுத்தது.



    இந்த நிலையில், அமெரிக்காவின் சி.பி.எஸ். செய்திச் சேனலுக்கு ஜனாதிபதி டிரம்ப் அளித்த ஒரு மணி நேர பேட்டி நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பப்பட்டது. அதில் சீனா மீது அவர் புதியதொரு குற்றச்சாட்டை கூறினார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், சீனாவின் தலையீடும் இருந்ததாக அப்போது பகிரங்கமாக தெரிவித்தார். சீனா மீது டிரம்ப் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதல் முறையாகும்.

    அவர் கூறுகையில், “அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டது. அதை விட அதிகமாக சீனாவும் இதில் தலையிட்டது என்றே நினைக்கிறேன். இதுதான் மிகப்பெரிய பிரச்சினை. இப்படி நான் சொல்வதால் ரஷியாவின் மீது கூறிய குற்றச்சாட்டில் இருந்து விலகி செல்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டது. ஆனால் இதில் சீனாவின் குறுக்கீடும் இருந்தது என்றுதான் சொல்கிறேன்” என்றார்.

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததா? என்பது பற்றி முன்னாள் எப்.பி.ஐ. இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் இருந்து டிரம்பின் அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் அண்மையில் திடீரென விலகிக் கொண்டார்.

    இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “இது நிச்சயம் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கும் விஷயம். ஜெப் செசன்ஸ் ஏன் இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் நான் சரியாகவே செயல்பட்டேன் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

    ரஷியாவின் தலையீடு தொடர்பான விசாரணையை நீங்கள் ரத்து செய்யப்போவதாக கூறப்படுகிறதே? என்ற மற்றொரு கேள்விக்கு, “அதுபோன்ற வாக்குறுதி எதையும் நான் அளிக்கவில்லை. அதுமாதிரியான நோக்கம் எதுவும் என்னிடம் இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியும். ஆனால், இந்த விசாரணை மிகவும் நியாயமற்ற ஒன்றாகும். ஏனென்றால் இதில் எந்த விதத்திலும் கூட்டுச் சதி இல்லை” என்று மறுத்தார்.

    உங்களுக்கு தேர்தலில் உதவும்படி ரஷியாவை அழைத்தீர்களா? என்று கேட்டபோது, “எனக்கு தேர்தலில் உதவி செய்யும்படி ரஷியாவை அழைத்தேன் என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?... அவர்களால் எனக்கு உதவ முடியாது என்பதுதான் உண்மை. ரஷியாவை உதவிக்கு அழைத்தேன் என்று கூறுவது மிகவும் கேலிக்குரியது” என்று டிரம்ப் பதில் அளித்தார்.
    இந்தியாவுக்கு போட்டியாக 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்குகிறது. #China #Pakistan #MilitaryDrone
    பீஜிங்:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய, ரஷிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் டெல்லி வந்திருந்தார். 5-ந் தேதி நடந்த இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    அந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன ‘எஸ்-400’ ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.



    இந்த ஏவுகணைகள், 250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக் கும் திறன் வாய்ந்ததாகும்.  இந்திய வான்பாதுகாப்பை பலப்படுத்துவதில் இந்த ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கும்.

    ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம், அண்டை நாடான பாகிஸ்தானை அலற வைத்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்த நாடு இப்போது தத்தளித்து வரும் வேளையில் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்கி குவிக்க முடிவு எடுத்துள்ளது.

    அந்த வகையில் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை வாங்கி குவிக்க உள்ளது. இந்த ஆளில்லா விமானங்களை சீனாவின் செங்டு விமான தொழில் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஆனால் இந்த 48 ஆளில்லா விமானங்களை சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக தயாரிக்க முடிவாகி உள்ளது. இது குறித்த தகவல்களை பாகிஸ்தான் விமானப்படையின் ஷெர்டில்ஸ் ஏரோபாட்டிக் குழு, தனது அதிகாரப்பூர்வ ‘பேஸ்புக்’, பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அதே நேரத்தில் இந்த 48 விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது, அவற்றின் விலை என்ன, அவை எப்போது வினியோகம் செய்யப்படும் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

    கடந்த பிப்ரவரி மாதம் இந்த விமானம் முதன்முதலாக விண்ணில் பறந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆளில்லா விமானம் முதன்முதலாக விண்ணில் பறப்பதற்கு முன்பே அவற்றை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எந்தெந்த நாடுகள் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

    பாகிஸ்தானுக்கு சீனா 48 ஆளில்லா விமானங்களை வினியோகம் செய்யப்போவது இதுவே முதல் முறை.

    மேலும் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ‘ஜே.எப். தண்டர்’ என்னும் ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானங்களையும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்குவது பற்றி சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் சாங் ஜாங்பிங் கூறும்போது, “சீனா, இவ்வளவு ஆளில்லா விமானங்களை ஒரு வெளிநாட்டுக்கு விற்பனை செய்வது இது முதல் முறை ஆகும். இது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான ராணுவ உறவை பலப்படுத்தும். அமெரிக்காவின் எம்.கியூ-1 பிரிடேட்டர், எம்.கியூ-9 ரீப்பர் ஆகிய ஆளில்லா விமானங்கள் தான் மிகவும் அதிநவீனமானவை. ஆனால் அவற்றின் விற்பனையை அமெரிக்கா கட்டுக்குள் வைத்துள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் ஆளில்லா விமானங்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உண்டாகும். அவை குறைந்த விலையில், சிறப்பாக செயல்படும்” என்று குறிப்பிட்டார்.  #China #Pakistan #MilitaryDrone
    சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    லியான்:

    பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சீன தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். 
     
    கடந்த செப்டம்பர் முதல் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெங் ஹாங்வே செப்டம்பர் 29-ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முதல் அவரை காணவில்லை என தகவல் வெளியானது. இண்டர்போலின் சீன தலைவர் மெங் ஹாங்வேவை விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹாங்காங்கின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

    இதற்கிடையே விதிகளை மீறியது தொடர்பாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், மெங் ஹாங்வே அனுப்பி வைத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இண்டர்போலின் சீன துணை தலைவராக உள்ள கிம் ஜாங் யங் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    மாயமான இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீன அரசு தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    பெய்ஜிங் :

    பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். 
     
    இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என அவர் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியானது. 



    இதற்கிடையே, இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேவை, விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில், விதிகளை மீறியது தொடர்பாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. #Interpol #MengHongwei
    சர்வதேச போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை காணவில்லை என அவரது மனைவி அளித்துள்ள புகாரின் பெயரில் பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #Interpol #MengHongwei
    பாரீஸ்:

    சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் கிரிமினல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அமைப்பின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் மாயமாகியுள்ளதாக மனைவி புகாரளித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் உள்ள லைய்ன் நகரில் வசித்த அவர் சமீபத்தில் சீனா சென்றதாகவும், அப்போதிருந்து திரும்பி வரவில்லை, எந்த தகவலும் இல்லை என மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். இதனை அடுத்து, பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #Pakistan #PrimeMinister #ImranKhan #China
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றுக்கொண்டார். பிரதமராக அவர், அடுத்த மாதம் (நவம்பர்) முதல் முறையாக சீனாவுக்கு செல்வதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தை விரைவில் முடிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காக பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

    குரேஷி மேலும் கூறுகையில், ‘எங்களுக்கு உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. சாலை, ரெயில் இணைப்புகள் உள்ளிட்டவை பற்றாக்குறையாக இருக்கிறது. எனவே சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் பல துறைகளில் குறிப்பாக தொழில்துறை வளர்ச்சி, வேளாண் உற்பத்தி மற்றும் நாட்டின் வறுமை ஒழிப்பு போன்றவற்றுக்கு பயன்படும்’ என்றும் தெரிவித்தார்.  #Pakistan #PrimeMinister #ImranKhan #China 
    அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி செய்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் டிரம்ப் புகார் அளித்துள்ளார். #DonaldTrump #China #UNSecurityCouncil
    நியூயார்க்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லிணக்கம் இல்லை. இரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் தொடர்ந்து கூடுதல் வரி விதித்து வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது சீனாவுக்கு அமெரிக்கா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.



    இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பேரழிவு ஏற்படுத்துகிற ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நவம்பர் 6-ந் தேதி நடக்க உள்ள எங்கள் தேர்தலில் தலையிடுவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. இது எனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்” என்று குறிப்பிட்டார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 33 இடங்களுக்கும், 39 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. #DonaldTrump #China #UNSecurityCouncil
    அமெரிக்காவும், சீனாவும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. #China #US #TradeWar
    பீஜிங்:

    இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

    அதாவது இரு நாடுகளும் பரஸ்பரம் புதிய வரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா வரிவிதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின் துடைப்பான் முதல் இணையதள கருவிகள் வரை இந்த வரி விதிப்பு பொருந்தும்.

    இதைப்போல அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு முதல் குறிப்பிட்ட ரக விமானங்கள் வரையிலான பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய வரி விகிதத்தை சீனா அறிவித்து உள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தி இருந்தாலும், இதை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். எனினும் அதற்கான காலத்தைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. #China #US #TradeWar
    ×