search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95604"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
    சென்னை :

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 140-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.

    சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளார்.

    தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சசிகலா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தி உள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுக்கூட்டத்திலும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் இவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க தங்கள் தரப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு உறுதியாக உள்ளது.

    ஆணையம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்காத பட்சத்தில் தங்கள் தரப்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்த உள்ளதாக சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-



    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே சரியான முடிவு எடுக்கவில்லை என சிலர் அளித்த வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை ரிச்சர்டு பீலே மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். எனவே, ரிச்சர்டு பீலே கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

    கடந்த 9-ந் தேதி மதியம் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் ரிச்சர்டு பீலேவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென்று அவரிடம் விசாரணை நடத்தும் முடிவை ஆணையம் கைவிட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையத்தின் வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறினார். ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவில்லை. அப்படி இருக்கும்போது எந்த சூழ்நிலையில், எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

    இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் எங்கள் தரப்பில் அவரிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது வக்கீல்கள் ஆணையத்துக்கு அளித்து வருவதால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் மூலம் சசிலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தும் முடிவையும் ஆணையம் கைவிட்டுள்ளது தெரிகிறது.

    அதேவேளையில் அப்பல்லோ நிர்வாகமும், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்காமல் ஆணையம் தனது விசாரணையை முடிக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், பிப்ரவரி 24-ந் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala 
    பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா மீது அவதூறாக புகார் கூறிய அதிகாரி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன் என்று புகழேந்தி கூறியுள்ளார். #pugalenthi #sasikal #roopa

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

    போலீஸ் அதிகாரி ரூபா தனது கடமையை செய்யாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளார். அவருக்கு பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும். நாங்களும் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துகிறோம்.

    ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் சிறைத்துறை பொறுப்பில் இருந்தபோது 2 மெமோக்களை ரூபாவுக்கு வழங்கினார்.

    அந்த மெமோக்களுக்கு பதிலளிக்காத அவர் சசிகலா விவகாரத்தை கையில் எடுத்து அவரது பிரச்சினையை திசைதிருப்பி விட்டார். சிறையில் எந்த வசதியும் இல்லாமல் சசிகலா, அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ரூபா கூறி இருக்கிறார். நான் இதுவரை 1 கோடி பணத்தைகூட நேரில் பார்த்தது இல்லை.


    இந்த விவகாரத்தில் என்னையும் தேவையில்லாமல் இழுத்து கர்நாடக ஊழல் தடுப்புபடை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ரூபா மீது நானே மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சசிகலா தரப்பிலும் அவர் மீது வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #sasikal #roopa

    பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது தொடர்பாக நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது என்று போலீஸ் அதிகாரி ரூபா கூறினார். #Roopa #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கு தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிமுறைகளை மீறி ஏராளமான சலுகைகளை அளித்து வருவதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    அதில், சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது உண்மைதான், பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    இதுசம்பந்தமாக போலீஸ் அதிகாரி ரூபா கூறியதாவது:-

    சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறேன். அது இன்னும் எனக்கு தரப்படவில்லை. முழுமையாகவும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. அந்த அறிக்கையில் இன்னும் பல வி‌ஷயங்கள் வெளிவரலாம்.

    நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று இந்த அறிக்கை மூலம் நிரூபணமாகி இருக்கிறது. விசாரணை ஆழமாகி ஊடுருவி நடத்தி இருக்கிறார்கள். ஜெயில் அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி பதிவு செய்திருந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சசிகலாவை முதல் வகுப்பு கைதியாக நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர் முதல் வகுப்பு கைதி அல்ல. அவருக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தனி சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கும் வசதி, தனி பார்வையாளர் கூடம், படுக்கை அறை, எல்.இ.டி. டி.வி. என வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்த பிரச்சினையால் நான் பல இன்னல்களை சந்தித்தேன். என்னை இடமாற்றம் செய்தார்கள். ஆனால் இதை நான் தண்டனையாக கருதவில்லை. அதே நேரத்தில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டதை நல்ல வி‌ஷயமாக கருதினேன். இப்போது நான் கூறிய குற்றச்சாட்டின்படி உண்மை வெளிவந்துள்ளது.

    ஜெயிலில் சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் ஜெயில் விதிமுறைகளை மீறியது மட்டும் அல்ல. சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கிய ஒருவருக்கு அதை முறையாக நிறைவேற்றாததால் கோர்ட்டு அவமதிப்பு செயலாகவும் இது உள்ளது.

    அப்போதைய ஜெயில் இயக்குனர், சசிகலாவுக்கு எந்த வசதிகளையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னது தவறு என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல ஜெயில் சூப்பிரண்டும் இதற்கு பொறுப்பானவர் ஆவார்.

    2014-ல் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தபோது இதே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததா? என்று எனக்கு தெரியாது. அப்போது நான் ஜெயில் அதிகாரியாக நியமிக்கப்படாததால் எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Roopa #Sasikala
    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று சசிகலாவின் வக்கீல் அசோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில், சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி பணம் கொடுத்து தனி அறைகள், தேவைப்படும் போதெல்லாம் ஷாப்பிங், வேலைக்கு ஆட்கள் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை அதிகாரியாக இருந்த பெண் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

    இதையடுத்து சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்து விட்டு, சிறை கைதி உடையின்றி சாதாரண உடையில் உள்ளே வருவது போல் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசிடம் அறிக்கையை வழங்கியது. ஆனால், அரசு அந்த அறிக்கையை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.

    அந்த அறிக்கை, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சசிகலாவுக்கு பல சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது, உண்மைதான் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், சசிகலாவின் வக்கீல் அசோகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அவர் மீது 2 குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. முதலாவதாக, சிறையில் சொந்த உடை அணிந்து வருகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அவர் சாதாரண தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார். கடுங்காவல் தண்டனை அளிக்கப்படவில்லை.

    எனவே, கர்நாடக சிறை சட்ட விதியில் சாதாரண தண்டனை பெற்றவர் சொந்த உடையை உடுத்திக் கொள்ளலாம் என்று தெளிவாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ‘ஏ’ கிளாஸ் கைதிகளின் சட்ட விதிகளை மட்டும் படித்துவிட்டு, கர்நாடக சிறையின் விதியை படிக்காமல் இப்படி குற்றம் சாட்டுகிறார்.

    2-வது குற்றம் சசிகலா வெளியே சென்று வருவதாக வெளியான வீடியோ. அது வெளியே சென்று வரும் வீடியோ இல்லை. சிறைக்குள் பார்வையாளர்களை சந்தித்துவிட்டு செல்லும் வழி. எனவே வெளியான வீடியோவில் வரும் காட்சி அவர் என்னை சந்தித்துவிட்டு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வாங்கிக் கொண்டு சிறைக்குள் செல்கிறார். ஆனால் இந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக யாரோ ஒருவருடைய தூண்டுதலின்பேரில் வெளியிட்டு உள்ளனர். இது பொய்யான வீடியோவாகும்.

    மேலும், அதிகாரி ரூபா வேண்டுமென்றே அரசு அதிகாரிகள் வரம்பை மீறி செயல்படுகிறார். மீடியாவை சந்திக்கிறார். அரசியல்வாதிகளுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்.

    ரூபா மீது நாங்கள் அவதூறு வழக்கு தொடர உள்ளோம். அவர் யார் தூண்டுதலின்பேரில் செயல்படுகிறார் என்றும் எங்களுக்கு தெரியும். அதனை நாங்கள் நேரம் வரும்போது வெளியிடுவோம். அரசிடம் இருந்து அறிக்கையும் இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை.

    வீடியோவில் வரும் காட்சி சிறையின் உள்ளே உள்ள காட்சி தான். வெளியே உள்ள கேமராவில் எதுவும் பதிவாகவில்லை. ஏனென்றால் சசிகலா வெளியே செல்லவே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை தான் என குறுக்கு விசாரணையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக, சசிகலாவின் வக்கீல் தெரிவித்தார். #Vijayabaskar #Rajasenthurpandian
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    ஆணையத்தில் விஜயபாஸ்கர் என்ன சொன்னார்? என்பது பற்றி ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் குறுக்கு விசாரணை நடத்தியபோது பல்வேறு கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை கிடைத்தது.

    அவர் கூறும்போது ஜெயலலிதாவை டிரக்கியாஸ்டமி சிகிச்சைக்காக 7.10.2016 அன்று அழைத்து சென்ற போது தன்னை கடந்துதான் ஸ்டிரெச்சரில் ஜெயலலிதாவை கொண்டு சென்றதாகவும், நான் அவரை மிக அருகில் பார்த்தேன் என்றும் சாட்சியம் அளித்தார்.


    ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவையா? அமைச்சரவை கூடியதா? ஜெயலலிதாவுக்கு எப்படிப்பட்ட சிசிச்சை அளிக்கப்பட்டது? எய்ம்ஸ் டாக்டர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது? மத்திய அரசு எந்த அளவு உறுதுணையாக இருந்தது? என்பது உள்ளிட்ட பல வி‌ஷயங்கள் குறித்து ராதாகிருஷ்ணன் என்னவெல்லாம் சொன்னாரோ அதையே அமைச்சர் விஜயபாஸ்கரும், விசாரணையில் குறிப்பிட்டு சொன்னார்.

    விஜயபாஸ்கரிடம் எனது தரப்பிலும், அப்பல்லோ தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல விஷயங்களை அவர் தெளிவாக பதிவு செய்தார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே என்ன சொல்லி இருந்தார். இவர் என்ன சொன்னார்? என்பதற்கும் பதில் கிடைத்தது.

    டாக்டர் பாபு மனோகரன் சாட்சியம் அளித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் 7.10.2016 அன்று ஜெயலலிதாவை பார்த்ததாக கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு, மருத்துவர் சொல்லி உள்ளார் என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்று விஜயபாஸ்கர் கூறினார்.

    29.12.2016 அன்று சசிகலாவை, ஓ.பன்னீர் செல்வம் உள்பட முழு மனதாக எல்லோருமே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்ற விவரம், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதலில் நடைபெற்றபோது எதிர்தரப்பினர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து பிரசாரம் செய்தார்கள் என்பது உள்பட பல வி‌ஷயங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கடுக்காக சொன்னார்.

    எய்ம்ஸ் டாக்டர்கள் என்ன செய்தார்கள், என்ன மாதிரி சொன்னார்கள் என்பது பற்றியும் பேசினார். நான் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல கேள்விகள் கேட்டேன்.

    கேபினட் மீட்டிங் (அமைச்சரவை கூட்டம்) நடந்ததா? யார் தலைமையில் நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம் என்றார்.

    அன்றைக்கு 2-வது இடத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வமும், 3-வது இடத்தில் இருந்த திண்டுக்கல் சீனிவாசனும், எடப்பாடி பழனிசாமியும் அங்கு இருந்தார்களா? என்று கேட்டதற்கு ஆமாம், எல்லோரும் இருந்தார்கள் என்று பதில் அளித்தார்.


    ஆனால் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கேபினட் மீட்டிங் நடக்கவே இல்லை என்றும், அதற்கு நான்தான் சான்று என்றும் கூறியிருந்தார். இன்று அதே அமைச்சரவையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் கேபினட் மீட்டிங் நடைபெற்றது என்று ஆணையத்தில் கூறி உள்ளார்.

    இதே கருத்தைத்தான் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கொடுத்த கடிதத்திலும் தெளிவாக உள்ளது.

    19.10.2016 அன்று கேபினட் மீட்டிங் நடைபெற்றது. எல்லா அமைச்சர்களும் சேர்ந்து அம்மாவுக்காக பிரார்த்தனை செய்து அவர் விரைவில் பூரண நலம் பெற்று முதல்வராக பணி தொடரவேண்டும் என்று போட்ட தீர்மானத்தையும் சொன்னார்.

    அந்த கேபினட் மீட்டிங்கிலும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாராவது ஜெயலலிதாவை வெளிநாடு சிகிச்சைக்கு கொண்டு போவது பற்றி பேசினார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் அந்த மாதிரி எதுவும் பேசவில்லை. அந்த மாதிரி சூழ்நிலை எதுவும் எழவில்லை என்று கூறினார்.

    கேபினட் மீட்டிங்கை யார் கூட்டியது? இதற்கான நடைமுறை என்ன? என்று கேட்டதற்கு பொதுத்துறையிடம் இருந்து எல்லோருக்கும் கடிதம் வரும் என்றார்.

    பொதுத்துறை எப்படி கடிதம் அனுப்புவார்கள் என்று கேட்டதற்கு, தலைமை செயலாளர்தான் கடிதம் எழுதி அதை நடைமுறைப்படுத்துவார் என்பதை விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தினார். இப்படி பலதரப்பட்ட வி‌ஷயங்களை தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை 2017 மார்ச் மாதம் 5, 6-ந்தேதிகளில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒரு கமி‌ஷன் வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட வி‌ஷயத்தில் அவர் சொன்ன பேட்டியில், ‘தம்பி விஜயபாஸ்கர், விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உன்னைத்தான்பா முதன் முதலில் விசாரிக்கவேண்டும். அதில் முதல் குற்றவாளியா நீதான் இருப்பாய்’ என்று சொன்ன வீடியோ பதிவு பற்றியும், அதற்கு அப்போது விஜயபாஸ்கர் கூறிய பேட்டியில் ‘கமி‌ஷன் போடும்போது முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைதான் விசாரிப்பார்கள்’ என்று கூறிய பேட்டி பற்றியும் விஜயபாஸ்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் இந்த பேட்டியும் உண்மை. அந்த பேட்டியும் உண்மை என்று கூறினார்.

    உடனே நான் இதுவும் உண்மை, அதுவும் உண்மை என்றால் எது சரியானது என்று கேட்டேன். அதற்கு அவர் கருத்து சொல்ல விருப்பமில்லை என்றார்.

    நீங்கள் கருத்து சொல்ல விருப்பம் இல்லாததற்கு 29.8.2017-ல் இருந்து இப்போது துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் உங்கள் அமைச்சரவையில் இருக்கிறாரே? அதுதான் காரணமா? என்று கேட்டேன். அதற்கும் கருத்து சொல்ல விருப்பம் இல்லை என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக காழ்ப்புணர்ச்சியோடு தான் அவர் செயல்பட்டார். எல்லாம் அறிந்து கொண்டும், தெரிந்துகொண்டும் மருத்துவ சிகிச்சை பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவர் மறைத்து சொன்னார் என்பது போன்ற பல வி‌ஷயங்களை விஜயபாஸ்கர் வாயிலாகவே நான் சாட்சியமாக வாங்கி இருக்கிறேன்.

    விஜயபாஸ்கர் இதற்கு ஒத்துழைத்தார் என்று சொல்ல முடியாது. மிக கடினமாக பல கேள்விகளை போட்டு அதில் இருந்து கிடைக்க கூடிய பதில்களை வைத்து எங்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் ஆதாரங்களை உருவாக்க உள்ளேன்.

    இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.  #Vijayabaskar #Rajasenthurpandian
    சசிகலாவுக்கு தண்டனையை நீடிக்க முடியாது என்றும் அவருக்கு சலுகைகளை செய்து கொடுத்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார். #Sasikala

    பெங்களூரு:

    கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதுகுறித்து சிறை துறை டி.ஐ.ஜி. ஆக இருந்த ரூபாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது.

    இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அறிய சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 2 முறை தகவல் அறியும் சட்டத்தில் அறிக்கை குறித்து கேட்டபோதெல்லாம் பதில் தர மறுக்கப்பட்டது. பின்னர் 3-வது முறையாக மேல் முறையீட்டுக்கு சென்று அறிக்கையை பெற்றேன். அந்த அறிக்கை எனக்கு ஒருவித திருப்தியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது.

    சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. நான் முறைப்படி விசாரணை நடத்தி கண்டுபிடித்த தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. நான் கூறாத சில தகவல்களும் அந்த அறிக்கையில் உள்ளது.

    குறிப்பாக தனியாக சமையல் செய்தது, அதற்கு ஆதாரமாக சிதறி இருந்த மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களை சேகரித்தது. சசிகலா தங்கி இருந்த 4 அறைகளிலும் அவர் பார்வையாளர்களை சந்தித்த அறையிலும் திரைச் சீலைகள் போடப்பட்டு இருந்தது உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான் இதையெல்லாம் சாதித்தார்.


     

    ஆனால் அந்த புகாரை கர்நாடக லஞ்ச ஒழிப்பு துறை தான் விசாரணை நடத்த வேண்டும் என்று வினய்குமார் பரிந்துரைத்து உள்ளார்.

    லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி சிறை துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் சிறை துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    அதிகாரிகள் சிறை விதிமுறைகளுக்கு மீறி சலுகை செய்து கொடுத்து உள்ளதால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இந்த புகாருக்காக சசிகலாவின் தண்டனையை நீடிக்க முடியாது. நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது.

    இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கும், சசிகலாவுக்கு சிறப்பு சலுகை செய்து கொடுக்கப்பட்டதில் தொடர்பு உள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி விசாரணை நடத்தினால் இதில் சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிக்குவார்கள்.

    தற்போதைய நிலையில் கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துவதால் அரசு ஊழியர்களான சிறை துறை அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala

    கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது என புகழேந்தி தெரிவித்துள்ளார். #Pugazhendhi #Kodanadestate #OPS
    திண்டுக்கல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீதிமன்ற உத்தரவை மீறி பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக பழி சுமத்தப்படுகிறது. ஆனால் சிறையில் சசிகலா பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.

    தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. டெல்லில் இருந்து பிரதமர் மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்கிறார். பா.ஜனதா அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டால் 3 மணி நேரம்கூட அவர் தமிழக முதல்வராக இருக்க முடியாது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு மருத்துவ கல்லூரி கட்ட அனுமதி அளிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.


    கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பயப்படுகின்றனர். எனவே திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க ஆதரவு கொடுத்துள்ளனர். மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்பொழுதும் தெளிவான முடிவு எடுப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #Kodanadestate #OPS
    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என விசாரணைக்குழு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. #Sasikala

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார்.

    சசிகலாவுக்கு விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கின. அந்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

    சிறை விதிகளை மீறி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு 4 விசே‌ஷ அறைகள் ஒதுக்கப்பட்டன. அவர்களுக்கு தனி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட சசிகலாவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது போன்ற விதி மீறல்கள் நடந்ததாக ரூபா குற்றம் சாட்டினார்.

     


    சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், சிறைத்துறை டி.ஜி.பிக்கும் அனுப்பி இருந்தார்.

    தன் மீதான லஞ்சப் புகாரை அப்போதைய டி.ஜி.பி.சத்யநாராயண ராவ் மறுத்தார். ரூபா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரூபா சிறைத்துறையில் இருந்து போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விணய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்தது.

    இந்த குழுவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனருமான ரவி, மைசூரு சிறை தலைமை சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இவர்கள் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான சத்யநாராயணராவ் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்றனர்.

    சிறை அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். சிறையில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்த இடங்களையும் பார்வையிட்டனர். சசிகலா, இளவரசி தங்கி இருந்த அறைகளையும் பார்வையிட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்த குழுவின் பதவிக் காலம் 2 முறை நீடிக்கப்பட்டது. அதன் பிறகு விசாரணை அறிக்கையை இந்த குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக உள்துறை செயலாளரிடம் தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் அறிக்கை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-

    சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் தங்க 4 அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அந்த அறைகளில் ஏர்கண்டிசன் வசதி செய்யப்பட்டு இருந்தது. பூனைகள் நுழையாத வகையில் அறைகளில் திரைச்சீலைகள் போடப்பட்டு இருந்தன.

    குக்கர் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தன. சசிகலாவும், இளவரசியும் தாங்களே சமையல் செய்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இது சம்மந்தமாக டி.ஐ.ஜி. ரூபா புகைப்பட ஆதாரங்களை கொடுத்து இருந்தார்.

    நாங்கள் விசாரணைக்கு சென்ற போது சமையல் அறை மாயமாகி இருந்தது. ஒரு அறையில் சோதனை நடத்தியபோது சமையலுக்கான மஞ்சள் தூள் பாக்கெட்டை கண்டுபிடித்து கைப்பற்றினோம். இதனால் சசிகலா தங்கி இருந்த அறையில் சமையல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

     


    சசிகலா, இளவரசி ஆகியோர் தங்கி இருந்த பகுதிகளில் ஆண் காவலர்கள் யாரும் பணியமர்த்தப்பட வில்லை. பெண் காவலர்கள் மட்டுமே அங்கு பணியில் இருந்தனர்.

    சசிகலா, இளவரசி ஆகியோர் கைதிகள் அணியும் உடை அணியாமல் சொந்த உடைகள் அணிய அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் ஷாப்பிங் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சசிகலா சுடிதார் உடையிலும், இளவரசி சேலையிலும், பெண்கள் சிறையின் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்று ஷாப்பிங் செய்து கையில் பையுடன் வரும் காட்சி சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.

    இதுபோல 74 ஆதாரங்களை ரூபா கொடுத்திருந்தார். நாங்கள் சிறைக்கு சென்று ஆய்வு நடத்தியபோது சில ஆதாரங்களை அழிக்க அதிகாரிகள் முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சி.சி.டி.வி. கேமிராக்களையும் இயங்கவிடாமல் அதிகாரிகள் சுவிட்ச்-ஆப் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 4 அறைகளில் ஒரு அறையில் சொகுசு கட்டில் மற்றும் படுக்கை விரிப்புகள் போடப்பட்டு இருந்தது.

    சசிகலா சிறையில் பார்வையாளர்களை சந்திக்க ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக சிறையில் உள்ள பயன்படுத்தப்படாத ஒரு அறையை அவருக்கு அலங்கரித்து அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்தனர். மற்ற கைதிகள் பார்வையாளர்களை சந்திக்க குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சசிகலாவுக்கு அதிக அளவில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    சசிகலாவுக்கு ஏ.கிளாஸ் வசதியை எந்த நீதிமன்றமும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் ஏ.கிளாஸ் வசதியை அவருக்கு செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கியதாக தெரிவித்தனர்.

    நீதிமன்றத்திடம் ஏன் அனுமதி வாங்கவில்லை என்று கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர். இது கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி அப்பட்டமான விதிமுறை மீறல் ஆகும்.

    இந்த சிறையில் 28 அறைகள் உள்ளன. இந்த அறைகளில் 100க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சசிகலாவுக்கு வசதி செய்து கொடுக்கவே ஒரு அறையில் 4 பெண் கைதிகள் தங்குவதற்கு பதிலாக அளவுக்கு அதிகமாக பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர்.

    குக்கரில் சசிகலா சமையல் செய்தது பற்றி சிறைத் துறை ஊழியர்களிடம் நாங்கள் கேட்டபோது அது கைதிகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் அது உண்மையல்ல.

    19-7-2017 அன்று நாங்கள் சிறையில் ஆய்வு நடத்திய போது சசிகலா அறையில் இருந்த அலமாரிகளை அகற்றிக் கொண்டு இருந்ததை நாங்களே நேரில் பார்த்தோம். சசிகலாவுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதும் உண்மை தான். சிறையில் சசிகலா, இளவரசிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மை தான்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட கர்நாடக அரசு இதுபற்றி ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    சசிகலாவுக்கு சலுகைகள் கொடுத்ததுபோல முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அப்துல்கரீம் டெல்கிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ஊழல் தடுப்பு துறை விசாரணைக்குப்பின் இதில் மேல் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

    இதனால் சசிகலாவுக்கு சிறையில் நன்னடத்தை பாதிக்கப்படும் என்றும் முன் கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. #Sasikala

    ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் பணம் கொடுத்து தான் ஜெயித்தார் என்று அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் தெரிவித்தார். #Dhivakaran #TTVDhinakaran #Jayalalithaa #ApolloHospital
    கோவை:

    அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அங்கு சசிகலா குடும்பம் மட்டும் சாப்பிடவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் என பலர் சாப்பிட்டனர். அப்பல்லோவில் உணவு விலை அதிகம் என்பதால் பில் அதிகம் வர காரணம்.

    ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்த போது சசிகலாவின் குடும்பத்தில் ஒட்டு மொத்தம் 10 பேர் தான் இருந்தனர். சசிகலா மீது தற்போது குற்றச்சாட்டு கூறுபவர்கள் அப்போது சசிகலாவின் காலில் விழுந்தவர்கள். அப்போது அவர்கள் கோமா நிலையிலா இருந்தார்கள்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்தில் நான் ஆஜராகி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அவர்கள் குறிப்பிட்ட கேள்விகளை மட்டுமே கேட்டனர்.



    ஜெயலலிதாவிடம் எந்த மாதிரியான அறிமுகம் ஏற்பட்டது என்பது குறித்து தான் கேள்வி கேட்டனர்.

    நான் தற்போது சசிகலா குடும்பத்தை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியே வந்து விட்டேன். தனிக்கட்சி ஆரம்பித்து 4 மாதம் ஆகி விட்டது.

    மாவட்ட செயலாளர், நகர செயலாளர், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கட்சியை வலுப்படுத்தி வருகிறேன்.

    டி.டி.வி. தினகரன் ஜாதிக்கட்சி நடத்துகிறார். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் கட்சி பதவி வழங்கி உள்ளார். அவர் பதவி கொடுத்தவர்கள் அனைவரும் எங்கள் உறவினர்கள். அவர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் போய் விடுவார்கள்.

    டி.டி.வி. தினகரன் தனது கட்சி அங்கீகாரத்துக்கு பதிவு செய்யவில்லை. எங்கள் கட்சியில் 95 சதவீத வேலைகள் முடிந்து விட்டது.

    ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை சரியான வழி காட்டுதல் இல்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். தேர்தலில் டி.டி.வி. தினகரன் தனக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என நினைக்கிறார். அவர் ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் கொடுத்து தான் ஜெயித்தார்.

    20 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கவில்லை என்றால் அவர் ஜெயித்திருக்க மாட்டார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது. இதனை கட்சி, ஆட்சியில் இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் அமைச்சர்கள் தான் யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என கூறி வருகிறார்கள்.

    இதில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் தான் உணர்வுபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைப்படி அழைப்பு வந்தால் நாங்கள் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். எங்கள் கட்சிக்கு வருபவர்கள் வரட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #TTVDhinakaran #Jayalalithaa #ApolloHospital
    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நடிகை விஜயசாந்தி சந்தித்து பேசினார். #vijayashanthi #sasikala

    பெங்களூர்:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான விஜயசாந்தி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து சிறை வட்டார தரப்பில் கூறும்போது, நடிகை விஜயசாந்தி நேற்று முன்தினம் சசிகலாவிடமும் சிறைத்துறையிடமும் முன் அனுமதி பெற்று சசிகலாவை சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனிமையில் பேசி கொண்டிருந்தனர் என தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பின் போது, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று சசிகலாவிடம் கூறியதாக தகவல் வெளியானது.

    இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் மிக நெருங்கிய நண்பராக நடிகை விஜயசாந்தி இருந்து வந்தார். ஏற்கனவே பலமுறை சசிகலாவை சிறையில் சந்தித்து பேசி இருக்கிறார்.


    நான் கடந்த வாரம் ஐதராபாத் சென்றிருந்தபோது சசிகலாவை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள் என்று என்னிடம் கேட்டார். அதன்படி அவரை சந்திக்க அனுமதி பெற்று கொடுத்தேன். அவர் ஐதராபாத்தில் இருந்து வந்து சசிகலாவை சந்தித்து விட்டு சென்றார். இதில் அரசியல் எதுவும் இல்லை. வழக்கமான சந்திப்புதான். இந்த சந்திப்பு குறித்து எங்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் தெரியும். இந்த சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #vijayashanthi #sasikala

    பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் செயல்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. #HCMaduraiBench #DGP #TKRajendran
    மதுரை:

    மதுரை மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

    குட்கா ஊழலில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாருக்கு வருமான வரித்துறையினர் பரிந்துரை கடிதம் அளித்துள்ளனர்.

    பின்னர் டி.கே. ராஜேந்திரன் தமிழக டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரை டி.ஜி.பி. பதவியில் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து கடந்த 30.6.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    வழக்கு விசாரணையின்போது, டி.கே. ராஜேந்திரனுக்கு குட்கா ஊழலில் உள்ள தொடர்பு பற்றி வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கை மாயமாகி விட்டது என்று அப்போதைய தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் மதுரை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலாவின் அறையில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


    அதில் குட்கா ஊழலில் டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருந்தது குறித்து வருமான வரித்துறையினர் அனுப்பிய கடிதங்கள் சிக்கி உள்ளன. அரசு அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த தகவல் பரிமாற்றம், எந்தவித சம்பந்தமும் இல்லாத சசிகலாவின் அறைக்கு சென்றது எப்படி? டி.கே. ராஜேந்திரனை டி.ஜி.பி. பதவியில் நீட்டிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அவருக்கு எதிரான ஆவணங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. பதவி நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது.

    குடிமைப்பணிகள் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான விதிமுறைகள், டி.கே.ராஜேந்திரன் வி‌ஷயத்தில் மீறப்பட்டு உள்ளன.

    எனவே டி.கே.ராஜேந்திரனை தமிழக டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு ஏற்படுத்திட வேண்டும். இந்தக்குழு நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்திடவும் உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு போலீஸ் சட்டவிதிகள் 2013-ன் படி புதிய டி.ஜி.பி.யை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த மாதம் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கும், கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கை ஜனவரி 2-ம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சென்று சேரவில்லை என தெரிகிறது. எனவே மீண்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  #HCMaduraiBench
    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். #CVShanmugam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பரபரப்பாக கூறி இருந்தார். அதுமட்டுமல்ல ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் சசிகலா தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் அன்று முதல் இன்று வரை இவர் அமைச்சராக இருந்தவர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றவர். அவருக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார்.


    சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டு தான் இவ்வளவு பில் வந்ததாக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். அது தவறு. அப்பல்லோவில் தரப்பட்ட டீ, காபி, சமோசா, வடை, பிஸ்கட், மதிய உணவு ஆகியவற்றை யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்கு தெரியும். காலையில் இருந்து இரவு வரை இருந்த அமைச்சர்களுக்கும் தெரியும்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒருமுறை கூட அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அது தவறு.

    உண்மை என்னவென்றால் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது 19.10.2016 அன்று கேபினட் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அம்மா பூரண நலம் பெற வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 31.10.2018 அன்று ஆணையத்தில் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

    ஆனால் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறுவது குறித்து அதில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிகிறது. இதுபற்றி அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவிடம் ஆணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது. அவரும் கேபினட் கூட்டம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

    எனவே அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம்.

    ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரை இடைக்கால அறிக்கை வழங்க ஆணைய விதிகளில் இடம் இல்லை என தெரிகிறது.

    சி.வி.சண்முகம் இப்போது புதுப்புது தகவல்களை கூறுவதை பார்க்கும் போது கமி‌ஷன் விசாரணை இன்னும் 6 மாதத்துக்கு மேல் செல்லும் என தெரிகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மருத்துவத்தை தாண்டி அரசியல் நடைபெறுவதாகவே கருத வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CVShanmugam #RajaSenthurpandian
    ×