search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95604"

    ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். #JayaDeathprobe #CVShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகராஜாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திறந்துவைத்தார். அதன்பின்பு விழுப்புரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே தொடங்கி வைத்தார்.

    மேலும் அங்கு ஒரு திருமண மண்டபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

    ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமல் தடுத்தது யார்? என்று ஆணையம் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யவிடாமல் தடுத்தது யார்? என்பது தெரியவரவேண்டும்.



    மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கியிருந்து இட்லி-தோசை சாப்பிட்டு ரூ.1 கோடி அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் செலவு ஏற்படுத்தி உள்ளனர். சசிகலா தரப்பினர் உண்மையான ஆவணங்களை மறைத்துள்ளார்கள். ஆணையத்தில் பொய்யான தகவல்களை கூறி உள்ளனர். சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.

    எனவே ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா சாவில் உள்ள உண்மை விபரங்களை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayaDeathprobe #CVShanmugam
    விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #SaiPallavi #Vijay
    மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது.

    இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.

    அதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக இயக்கவிருக்கிறார்கள். இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை தொடராக உருவாக்குகிறார்.



    இதில் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் ஏற்கனவே சில்க் ஸ்மித்தா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பாராட்டை பெற்றவர். தற்போது என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி படத்தை உருவாக்குகின்றனர். இதில் சசிகலாவாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மாரி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #JayalalithaaBiopic #SaiPallavi #Vijay

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய பிறகு அ.தி.மு.க.வுக்கு தினகரன் உரிமை கோருவது ஏன்? என்று திவாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். #Dhivakaran #TTVDhinakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை விட அ.ம.மு.க. வலுவாக இல்லை. அ.ம.மு.க.வில் இருப்பவர்கள் பலர் எங்களுடைய உறவினர்கள்தான். தமிழகத்தின் மேற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களில் அ.ம.மு.க.விற்கு தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. ஒரே பகுதியில் இருந்து கூட்டத்தை அழைத்துக்கொண்டு நாடக செட்டு போல கூட்டங்களை நடத்துகிறார்கள். அவர்களது கூட்டங்களில், உள்ளூர் பிரமுகர்கள் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் மேலூரிலும் முதல் கூட்டம் போடப்பட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து வருகிற சேதாரங்கள் மட்டுமே அ.ம.மு.க. மற்றும் எங்கள் கட்சிக்கு வருகின்றனர். அங்குள்ள உள்ளூர் அரசியல் பிரச்சனை காரணமாக இந்த சேதாரங்கள் உள்ளன. இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உற்று நோக்க வேண்டும்.


    மேலும் தினகரனின் அரசியல் என்பது நயவஞ்சகத்தனமானது. அ.ம.மு.க.வை தொடங்கிய பின்னர் அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரும் வழக்குகளை ஏன் நடத்த வேண்டும்?

    சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் எப்படி பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் பதவி வகிக்க முடியும்?

    தினகரனை நம்பி செந்தில் பாலாஜி பல கோடி ரூபாயை அ.ம.மு.க.வுக்கு செலவு செய்துள்ளார். அவரே கட்சி மாறி விட்ட நிலையில் மற்ற எம்.எல்.ஏக்களும் நம்பிக்கையிழந்துள்ளனர். அ.தி.மு.க எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சி. அதனை பாதுகாக்க வேண்டுமானால் அனைவரும் பேராசையை கைவிட்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும்.

    அதன் மூலம் கட்சியையும், தொண்டர்களையும் வலுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக இருந்தாலும் கட்சியை ஒருங்கிணைக்க தூய்மையான எண்ணத்தோடு செயல்பட வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வினரது செயல்பாடுகள் செயற்கையாகத் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #TTVDhinakaran
    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது என்று மதுசூதனன் தெரிவித்தார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
    ராயபுரம்:

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாசர்பாடி முல்லை நகரில் இன்று நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது. அவர் ரூ. 1½ கோடிக்கு உணவு சாப்பிடவில்லை.

    சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள். மருத்துவ சிகிச்சை பெற்றபோது 75 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அவைத் தலைவரான என்னையே ஒரு தடவை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை.


    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். இதுவே அவரது எண்ணமாகும். அவரது ஆத்மா அங்கு தான் இருக்கிறது.

    டி.டி.வி. தினகரன் ஒரு வழிப்பாதை போல, அவருக்கு எடுக்கதான் தெரியும் கொடுக்க தெரியாது. அதனால் தான் அவரால் செந்தில் பாலாஜியை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

    ஆர்.கே. நகரில் எந்தவித பணியும் நடைபெறவில்லை. தொகுதி பக்கமே அவர் வரவில்லை. தேர்தலின் போது 20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றிவிட்டார். தற்போது மக்களை சந்திக்க பயப்படுகிறார். வருகிற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
    ஆட்சியை பிடிக்க நினைத்த சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா சிறையில் பிடித்து தள்ளிவிட்டது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். #Jayalalithaa #Sasikala #MRVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் விழா தளவாபாளையத்தில் நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அமாவாசைக்குள், அடுத்த அமாவாசைக்குள் அ.தி.மு.க. ஆட்சி கலைந்து விடும் என்றவர்களின் கனவை பொய்யாக்கி கடுமையான விமர்சனங்களையும் கடந்து இந்த ஆட்சி தொடர்கிறது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசு யாரும் இல்லை. அதனால் அவருக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால் அவருடன் இருந்த மன்னார்குடி கும்பல் சொத்துக்களை வாரி சுருட்டியது. இதனால் ஜெயலலிதா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.


    ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை அவரது ஆன்மா சும்மா விடாது. அவர் இறந்த உடன் மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்களை வரவழைத்து ஜெயலலிதா போல் கொண்டை போட்டு, கழுத்து வரை ஜாக்கெட் போட்டு சசிகலா ஆட்சியை பிடிக்க நினைத்தார்.

    ஆனால் ஜெயலலிதா ஆன்மா அவரை பிடித்து பெங்களூர் சிறையில் போட்டு விட்டது. எனவே ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் அவர்களையும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #Sasikala #MRVijayabaskar
    குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர், டிஜிபி டிகே ராஜேந்திரன், சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர்.

    அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றவர்களின் பட்டியல் இருந்ததாக தகவல்கள் வந்தது.

    அந்த பட்டியலில் தமிழக அமைச்சர், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விசாரித்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த 28.7.2017 அன்று உத்தரவிட்டது.

    இதேபோல சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் குட்கா ஊழல் பற்றிய விசாரணையை சி.பி.ஐ. தற்போது மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரது பணிக்காலம் முடிந்தபிறகு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு 30.6.2017 அன்று அரசாணை பிறப்பித்து உள்ளது.

    அவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாக, குட்கா ஊழல் பிரச்சினையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படவில்லை என்று அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    தற்போது போயஸ் கார்டனில் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையினரின் அறிக்கை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    அதில் தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவரின் பதவியை சட்டவிரோதமாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக, முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் டி.கே.ராஜேந்திரனின் டி.ஜி.பி. பதவி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.



    வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், டி.ஜி.பி., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் சசிகலாவை எதிர் மனுதாரராக சேர்த்து அவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
     
    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார். #TTVDhinakaran #Sasikala
    பெங்களூரு:

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார்.

    தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சந்தித்து பேசினர்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்தபிறகு நடைபெறும் சந்திப்பு இதுவாகும்.

    மேலும் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாள் விசாரணை நடத்திய பிறகு இந்த சந்திப்பு நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யமாட்டோம் என்று தினகரன் அறிவித்து இருந்தார். ஆனால் ஒரு சிலர் அப்பீல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சசிகலாவிடம் தினகரனும், மற்றவர்களும் ஆலோசனை நடத்தி வருவதாக  தெரியவருகிறது.

    மேலும் சசிகலா மற்றும் தினகரனை தவிர மற்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கூறி இருந்தனர். ஆனால் இவர்கள் 2 பேரை சேர்த்தால்தான் நாங்களும் அ.தி.மு.க.வில் இணைவோம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது.  #TTVDhinakaran #Sasikala
    பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். #ITRaids #Sasikala
    பெங்களூரு:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.



    சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவர்கள் உறவினர்கள் டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடந்தது. மொத்தம் 187 இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை உதவி கமி‌ஷனர் வீரராகவன் தலைமையில் உள்ள குழுவினர் இந்த விசாரணையை நடத்தினார்கள். இந்த விசாரணை குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகளும், 2 உதவியாளர்களும் இடம்பெற்று இருந்தனர்.

    நேற்று காலை 10.50 மணிக்கு 9 பேர் கொண்ட குழுவினரும் சிறை வளாகத்துக்கு காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் சிறை கேட் வரை அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து 5 பைகள் மற்றும் சூட்கேஸ்களில் வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை எடுத்து சென்று சசிகலாவிடம் காட்டி விசாரணை நடத்தினார்கள். 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.

    அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது, ஞாபகம் இல்லை என்று அவர் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

    சசிகலா பங்குதாரராக இருந்த நிறுவனங்கள், அவரது உறவினர்கள் தொடர்பான சொத்துக்கள், வங்கி பண இருப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு ஓட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவில் இடம்பெற்ற ஒரு அதிகாரிக்கு பெங்களூருவிலேயே வீடு இருப்பதால் அவர் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட உணவை சாப்பிட்டார்.

    சசிகலாவுக்கு சாப்பிடுவதற்காக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் சாப்பிட்டுவிட்டு வந்தபிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இந்த விசாரணை விவரங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளும் அதற்கு சசிகலா அளித்த பதில்களும் சம்பவ இடத்திலேயே டைப் செய்யப்பட்டு அந்த பேப்பரை காட்டி சசிகலாவிடம் அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர்.

    விசாரணை நடப்பதற்கு முன்பும், விசாரணை முடிந்த பிறகும் சிறையில் உள்ள மருத்துவர்கள் சசிகலாவுக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தனர்.

    இந்நிலையில்  இன்று 2-வது நாளாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் மாலை வரை விசாரணை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். #ITRaids #Sasikala
    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தினர். #ITRaids #Sasikala
    பெங்களூரு:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். இதே போல சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர்கள் டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.



    சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

    அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சிறைத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது.

    அதன்படி, ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றது. அங்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். இன்றும், நாளையும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #ITRaids #Sasikala
    அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt #MadrasHC
    சென்னை:

    ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியாமல் போனது.

    இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மறு குற்றச்சாட்டு பதிவுசெய்ய வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


    இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவானது,

    அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் 4 மாதங்களில் சசிகலா, பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை முடிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt
    தி.மு.க.தான் முதல் எதிரி, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார் என்று நெல்லையில் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #thangatamilselvan #ammk #admk #dmk

    நெல்லை:

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.ம.மு.க. வளர்ச்சி பெற்று வருகிறது. வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணையாமல் ஜெயிக்க முடியாது என எண்ணி இரு கட்சிகளையும் இணைய வைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக அறிகிறோம்.

    அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். தி.மு.க. தான் எங்களுக்கு முதல் எதிரி. முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார்.

    அ.தி.மு.க., தி.மு.க. பா.ஜனதா மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய தலைமயை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது உண்மைதான். அதை சசிகலா, டி.டி.வி. தினகரனால் தான் கொடுக்க முடியும். முன்கூட்டியே இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.


    மதசார்பற்ற அணிகளுடன் தான் கூட்டணி என்று டி.டி.வி. தினகரன் தெளிவுப்படுத்தி விட்டார். எனவே பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம். அ.தி.மு.க.வை பொறுத்த வரை தவறு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தான். கட்சியை பிளவுப்படுத்தி இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்த ஓ.பி.எஸ்.ஐ. மீண்டும் கட்சியில் சேர்த்ததை மக்கள் விரும்பவில்லை. அ.தி.மு.க. வில் 90 சதவீத தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.

    தமிழக அரசு உள்ளாட்சி, இடைத்தேர்தலை நடத்தாமல் உள்ளது. எனினும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். கஜா புயல் நிவாரணத்திற்கு முதல்வர் 15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டார். அதுவே தவறு. 40 ஆயிரம் கோடி கேட்டிருக்க வேண்டும்.

    ஆனால் வெறும் 350 கோடியை மட்டும் வழங்கி மத்திய அரசு தமிழகத்தை அவமானப்படுத்தி விட்டது. தமிழக அமைச்சர்களோ, முதல்வரோ மக்கள் பிரச்சினைக்காக டெல்லி செல்வ தில்லை. தங்களை பாதுகாத்து கொள்ளவே டெல்லி செல்கின்றனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுவிப்பு துணிச்சலான முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #ammk #admk #dmk

    அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை டிசம்பர் 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt
    சென்னை:

    ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.

    இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மறு குற்றச்சாட்டு பதிவுசெய்ய வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt
    ×