search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95766"

    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்துள்ளது என்ற செய்தி வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் வீரர் களுக்கான உணவு பட்டியல் கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியாகி உள்ளது.

    இதில் வழக்கமான உணவுகளை தவிர்த்து சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை எந்த வடிவத்திலும் சாப்பிடக்கூடாது, அவைகள் அவர்களது உணவு பட்டியலில் வரக்கூடாது என்றும், வீரர்களுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவுகள் அனைத்தும் ஹலால் செய்யப்பட்டவைகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    யோ-யோ பரிசோதனைக்கு செல்லும் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடும்போது தேவையற்ற சதை பிடிப்புகளால் பயிற்சியில் தோல்வி அடையலாம் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் உணவு உரிமை தனிப்பட்டதாகும். இதில் கிரிக்கெட் வாரியம் தலையிடுவது சரியா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்தநிலையில் இந்திய வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை என்று கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் எந்த ஒரு வீரர்களுக்கோ அல்லது அணி ஊழியர்களுக்கோ என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. இந்த வதந்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

    இந்த உணவு திட்டம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. செயல்படுத்தப்பட மாட்டாது. உணவு குறித்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல் வழங்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த உணவை தேர்ந்தெடுக்க சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில, டுவிட்டரில் படங்களை வெளியிட்டு பி.சி.சி.ஐ. தேர்வு குழுவுக்கு பதில் அளித்துள்ளார் சஞ்சு சாம்சன்
    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து, சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியது.

    நியூசிலாந்து அணி வருகிற 17-ந்தேதி முதல் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார்.

    இந்த தொடரில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சஞ்சு சாம்சன்

    இந்திய டி20 அணிக்கு கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    அணியில்  கே.எல். ராகுல், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன் என 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    சஞ்சு சாம்சன்

    இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் #JusticeForSanjuSamson என ஹேஷ்டேக்கை உருவாக்கி, ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னால் சிறப்பான வகையில் பீல்டிங் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை என்று தேர்வுக்குழு உறுப்பினர்களை கேள்வி கேட்கும் வகையில், தனது அபாரமான பீல்டிங் படங்களை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் சஞ்சு சாம்சன்.
    பிசிசிஐ-யின் சிஇஓ மற்றும் மாநில சங்கங்கள் இடையிலான பிரச்சனையில் மத்தியஸ்தராக மூத்த வக்கீல் பிஎஸ் நரசிம்மாவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர உச்சநீதிமன்றம் லோதா தலைமையிலான ஒரு கமிட்டியை நியமித்தது.

    இந்த கமிட்டி பல பரிந்துரைகளை ஒரு அறிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ பதவிகளில் போட்டியிடக் கூடாது, இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து பதவி வகிக்கக்கூடாது, அரசியல் பதவியில் இருக்கும் நபர் தலைவராக இருக்கக்கூடாது, ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு போன்ற முக்கியமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிசிசிஐ-க்கு உத்தரவிட்டது.

    இதனால் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜனதா எம்பி அனுராக் தாகூர் தனது பதவியில் இருந்து விலகினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் உள்பட பலருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் லோதா கமிட்டி பரிந்துரையை மாநில சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பரிந்துரைகளை செயல்படுத்த வினோத் ராய் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிர்வாகக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. நான்கு பேரில் இரண்டு பேர்தான் தற்போது அந்தக்குழுவில் உள்ளன. ஒருவர் தலைவர் வினோத் ராய், மற்றொருவர் டயானா எடுல்ஜி.

    இவர்களால் பிசிசிஐ-யில் சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியவில்லை. பிசிசிஐ-யின் பெரும்பாலான முடிவுகளை வினோத் ராய்தான் எடுக்கிறார். மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி ஒதுக்குவதில் சில பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சர்வதேச போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டடுள்ளது.

    இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    நிர்வாகக்குழுவுக்கும், மாநில சங்கங்களுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க மூத்த வக்கீலான பிஎஸ் நரசிம்மாவை மத்தியஸ்தராக நியமித்துள்ளது. மேலும், பிசிசிஐ பிரச்சனையை தீர்க்க குறைதீர் அதிகாரியாக (amicus) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி டி கே ஜெயினுக்கும் உதவியாக இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
    டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புஜாராவை ‘ஏ’ பிளஸ் ஒப்பந்தத்தில் சேர்க்காததால் சர்ச்சை எழுந்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணி வீரர்களுக்காக ‘ஏ’ பிளஸ், ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ ஆகிய பிரிவுகளில் ஊதிய ஒப்பந்தத்தை வெளியிடும். இந்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் வழங்கும் ‘ஏ’ பிளஸ் பிரிவில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது. இதில் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 3 சதங்களுடன் 521 ரன் குவித்தார்.

    இதனால் புஜாரா கிரிக்கெட் வாரிய ஊதிய ஒப்பந்தத்தில் ‘ஏ’ பிளஸ் பிரிவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘ஏ’ பிரிவில்தான் (ரூ.5 கோடி) இடம் பெற்றுள்ளார். அவருக்கு ‘ஏ’ பிளஸ் பிரிவு தரம் உயர்வு அளிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறும்போது, ‘‘புஜாராவுக்கு ரூ.7 கோடி சம்பளம் கிடைக்கும். ‘ஏ’ பிளஸ் ஒப்பந்தம் வழங்கப்படாதது வேதனை தருகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தராத வகையில் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு செயல்பாடு உள்ளது’’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதுபற்றி கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் “டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர்களுக்கு மட்டுமே ‘ஏ’ பிளஸ் ஒப்பந்தம் போடப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் தேவையற்றது. ஏற்கனவே அணி நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டுள்ளது’’ என்று பதில் வருகிறது.

    என்றாலும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் புஜாராவிற்கு ஏ பிளஸ் பிரிவு கொடுக்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கனும் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிஓஏ-விற்கு பரிந்துரை செய்துள்ளார்.
    ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கலாம் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிகே கண்ணா உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு பரிந்துரை செய்துள்ளார்.

    தற்போது பிசிசிஐ-யின் முடிவுகள் அனைத்தும் நிர்வாகக் குழுவினால்தான் எடுக்கப்படுகிறது. இதுகுறித்து சிஇஓ தலைவர் வினோத் ராய்க்கு சிகே கண்ணா எழுத்தியுள்ள கடிதத்தில் ‘‘புல்வாமா தாக்குதலில் வீரர்கள் மரணம் அடைந்ததை நாடே துக்கமாக அனுசரித்து வரும் நிலையில், நாமும் அதனுடன் பங்கேற்றுள்ளோம்.

    மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நம்முடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளோம். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிசிசிஐ சார்பில் குறைந்தது ஐந்து கோடியாவது நிதியுதவி அளிக்க வேண்டும்.

    சையத் முஷ்தாக் அலி மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் ஐபில் தொடரின் தொடக்க விழா மற்றும் தொடக்க போட்டியிலும் அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    பெண்கள் அணி பயிற்சியாளர் தேர்வு முறை அரசியலமைப்பிற்கு புறம்பானது என்று நிர்வாகக்குழுவில் ஒருவரான டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார். #BCCI
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கும், ஒருநாள் அணி கேப்டனான மிதாலி ராஜி-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ரமேஷ் பவாரின் பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.

    புதிதாக பயிற்சியாளரை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டது. இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியான நபர்களை தெரிவிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய் கபில்தேவ் உள்பட மூன்று பேர் கொண்ட தற்காலிக கமிட்டியை அமைத்தது. இதற்கு நிர்வாகக்குழுவில் உள்ள மற்றொரு அதிகாரியான டயானா எடுல்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ‘‘உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் வேலை, லேதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ-யில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். ஒருதலைபட்சமாக புதிதாக ஒரு கமிட்டியை அமைத்தது அரசியலமைப்பிற்கு எதிரானது. அவமானகரமான நடைமுறையின்படி பயிற்சியாளரை நியமனம் செய்ததை நான் ஆதரிக்கவில்லை’’ என்று தனது ஆதங்கத்தை எடுல்ஜி மெயில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
    பிசிசிஐ-க்கு எதிராக நஷ்டஈடு கேட்டு ஐசிசி-யில் முறையிட வேண்டும் என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று நஜம் சேதி தெரிவித்துள்ளார். #BCCI #PCB
    இந்திய கிரிக்கெட் வாரியம் - பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையே கடந்த 2014-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் நஜம் சேதி கையெழுத்திட்டிருந்தார். அதில் 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி பிசிசிஐ பாகிஸ்தான் கூட விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவு முயற்சி செய்தும் பிசிசிஐ இறங்கி வரவில்லை. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்காக பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    இது தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கிற்கான செலவை பிசிபி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவிகிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.

    இந்த வழக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜம் சேதியால் ஐசிசி-யில் தாக்கல் செய்யப்பட்டது. இவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.



    இந்நிலையில் நஜம் சேதி பிசிசிஐ-க்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘பிசிசிஐக்கு எதிராக ஐசிசி செல்ல வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அப்போது ஷகாரியார் கான் சேர்மனாக இருந்தார். ஐசிசி 60 சதவிகிதம்தான் பிசிசிஐ-க்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஏனென்றால், அது பாகிஸ்தானுக்கு சட்டப்பூர்வமான விவகாரம் இருந்ததாக நம்பியுள்ளது’’ என்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடுத்த நஷ்டஈடு வழக்கில், பிசிசிஐ-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவான தொகையில் 60 சதவீதம் வழங்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் - பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையே கடந்த 2014-ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி பிசிசிஐ பாகிஸ்தான் கூட விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவு முயற்சி செய்தும், பிசிசிஐ இறங்கி வரவில்லை.

    இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்காக பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் தொடரில் பங்கேற்க முடியும் என பிசிசிஐ கூறியிருந்தது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களைக் கட்டுப்படுத்தாது, மேலும் ஐசிசிக்கு வருவாய் கிடைப்பதற்கான வழிவகைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தரவில்லை. 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய அரசுதான் இருதரப்பு தொடர்களுக்கு அனுமதி தர வேண்டும் என பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

    ஒப்பந்தத்தின்படி இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்காததால், பிசிசிஐ ரூ.500 கோடி இழப்பீடு தரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. ஐசிசி தகராறு தீர்ப்பாயத் தலைவர் மைக்கேல் பெலாஃப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதற்காக இரு வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வழக்காட நியமித்தன.

    கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் மேல்முறையீடும் செய்ய முடியாதது எனவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கிற்கான செலவை பிசிபி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. #BCCI #RahulJohri
    புதுடெல்லி :

    வேலை பார்க்கும் இடங்களிலும் , பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சர்வதேச அளவில் ‘மிடூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.

    இதில் சினிமாத்துறையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் ‘மிடூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து வருகின்றனர். எனினும் அரசியல் துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் துறையிலும் முதல் மிடூ குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    ராகுல் ஜோரி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2016-ஏப்ரல் முதல் பணியாற்றி வருகிறார். அவர் மீது பத்திரிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அடையாளத்தை வெளிபடுத்தாத அந்த பெண், ராகுல் ஜோரியும், இவரும் வெவ்வேறு ஊடக நிறுவனங்களுக்கு வேலை செய்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் குறிபிட்டு உள்ளார்.  

    ராகுல் ஜோரி தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிசிசிஐ நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்ததுள்ள சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாக குழு ராகுல் ஜோரிக்கு உத்தரவிட்டுள்ளது. #BCCI #RahulJohri
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த அனுராக் தாகூரை பதவியில் இருந்து தூக்கிய சுப்ரீம் கோர்ட், அதற்கென தனி குழுவை நியமித்தது. நீதிபதி லோதா குழு பரிந்துரைத்த நிர்வாகிகளின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

    இந்நிலையில், அடுத்த பிசிசிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைவராக இருப்பவர்களுக்கு என சில தகுதிகளை நீதிபதி லோதா குழு பரிந்துரைத்தது. இந்த தகுதிகள் கங்குலிக்கு இருப்பதால் அவர் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    தற்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் கங்குலி, இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, ஐபிஎல் ஒழுங்கமர்வு குழு உறுப்பினர், கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளார். கங்குலிக்கு மூத்த வீரர்கள் பலரின் ஆதரவும் இருப்பதால் அவர் தலைவராவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகியுள்ள நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட ஊதியம் இன்னும் வீரர்களுக்கு வந்து சேரவில்லை.

    உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன. பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்கும் உள்ளாயின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.


    வினோத் ராய்

    இந்த ஊதிய உயர்வையே வீரர்கள் போராடிதான் பெற்றார்கள் என அப்போது கூறப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைப்பதில் குறியாக இருந்தனர்.

    இந்நிலையில், நாளை இந்திய அணி இங்கிலாந்து டூர் செல்ல உள்ளது. சுமார் 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்து 5 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தப்படி இன்னும் ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து இன்று பொறுப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது. எனினும், வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டிக்கு எதிராக பொறுப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டு விவாதிக்க உள்ளனர். பொறுப்பு நிர்வாகிகளின் பொதுக்குழுவில் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில், நிர்வாக கமிட்டி ஒப்புதல் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×