என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விபத்து"

    • ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்கப்பட்டது.

    நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இது தொடர்பான அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை நேற்று (மே 5) முதல் பின்பற்றப்படுகிறது.

    விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இலவச சிகிச்சை திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்தக் குழுவில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் 'நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தில் இலவச சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    • முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
    • போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்தபோது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    காரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுநர் ரமணி மற்றும் மீன் வியாபரி படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டது.
    • அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் பலியாகினர்.

    இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.

    • பிரியங்கா காந்தி அவருடைய தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • கோழிக்கோடு மாவட்டத்தில் பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

    பிரியங்கா காந்தி கேரள மாநிலத்தில் உள்ள அவருடைய தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நேற்று மாலை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஈங்காப்புலா சாலையில் பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் 2 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் பிரியங்கா காந்தி தனது வாகனத்தை நிறுத்தினார்.

    அவர் காரை விட்டு இறங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு தன்னுடைய பாதுகாவலர்களிடம் தெரிவித்தார். மேலும் டாக்டர்களை வரவழைத்து முதல் உதவி அளிக்க ஏற்பாடு செய்தார்.

    அவருடைய பாதுகாப்பு குழுவுடன் வந்த ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.பின்னர் விபத்து குறித்து அவர் விசாரித்து விட்டு சென்றார்.

    பிரியங்கா காந்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீ்ழூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதியது.

    இந்த கோர விபத்தில் பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.

    பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அரியானா மாநிலம் நூஹ் மாவட்டம் இப்ராகிம் பஸ் கிராமத்தில், டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி 7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இன்று காலை 10 மணியளவில் நெடுஞ்சாலையில் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பணியாளர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
    • பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.

    சென்னை அண்ணா நகரில் கார் கதவை திறந்தபோது ஏற்பட்ட விபத்தில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

    Indirect Taxes and Customs என்ற பெயர் பலகையோடு வந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.

    அப்போது பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.

    இதில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா நகர் போலீசார் உடலை கைப்பற்றினர்.

    பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
    • புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

    குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் சாலை விபத்து 8 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் உயிரிழப்புகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனை நாடு முழுவதும் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

    பைக் விபத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 140 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ம் ஆண்டு 123 பேர் உயிரிழந் துள்ளனர். இதனால் இந்தாண்டு சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அடுத்து சில நாட்கள் மட்டுமே மக்கள் குறைந்த அளவில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து போலீசார் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகள் நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை அமல்படுத்தியும், 3 மாதத்தில் 24 பேர் விபத்தில் உயிரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
    • இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

    மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    • 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியது.
    • ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

    நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.

    சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

     

    மேலும் காயமடைந்த 11 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 18 சக்கர டிரக் வாகன ஓட்டுநர் சாலமன் அரயா என்ற 37 வயது நபரை ஆஸ்டின் போலீசார் கைது செய்தனர்.

    போதையில் அவர் வாகனம் ஒட்டியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்",மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார்.
    • பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு போலீசார் அழைத்துச்சென்றனர்.

    குஜராத் மாநிலம் வதோதராவில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டம் பயிலும் மாணவர் ரக்ஷித் சௌராசியா. இவர் நேற்று இரவு வதோதராவில் அம்ரபாலி வளாகம் அருகே வேகமாக காரில் வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த ஸ்கூட்டரின்மேல் இடித்துள்ளார். 

    மேலும் 2 இருசக்கர வாகனங்கள் வழிப்போக்கர்கள் மீதும் கார் இடித்துள்ளது. இதில் 1 குழந்தை உட்பட 4 பேர் வரை காயமடைந்தனர். காரில் முன்பகுதி சேதமடைந்து உள்ளே ஏர்பேக் திறக்கும் அளவுக்கு மிகவும் பலமாக ஸ்கூட்டரின் மேல் இடித்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சேதமடைந்த காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்", மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார். பின்னர் தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்த மக்கள் பிடித்து அடித்துள்ளனர். சௌராசியா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    காயடமைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு கைது செய்து அழைத்துச்சென்றனர்.

    சௌராசியா குடிபோதையில் இருந்தானா என்பதை அறிய ரத்த பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவருடன் காரில் வந்த மற்றோரு இளைஞன் தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து
    • தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள குவாலியர்- மொரேனா சாலையில் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    குவாலியர் பகுதியில் இருந்து நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு மொரேனாவில் உள்ள பித்தோலி கிராமத்திற்கு காரில் 8 பேர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×