search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை"

    திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வரை நன்றாக இருந்த தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்தது. தற்போதைய மழையால் சேறும்-சகதியுமாக மாறி விட்டது.
    மணிகண்டம்:

    மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிலம்புடையான்பட்டியில் சுமார் 150 குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து சுமார் 70 டன் அளவிற்கு தினமும் டாரஸ் லாரியில் இரும்புகளை ஏற்றிச் செல்வதால் சிலம்புடையான்பட்டியில் இருந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வரை நன்றாக இருந்த தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்தது. தற்போதைய மழையால் சேறும்-சகதியுமாக மாறி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த தனியார் தொழிற்சாலை முன்பு திரண்டு அவ்வழியே எந்தவித லாரியும் செல்லக்கூடாது என்று முட்களை வெட்டி போட்டு அப்பகுதியில் நின்றவாறு சாலையை சேதப்படுத்திய தனியார் தொழிற்சாலையை கண்டித்தும் அதை சீரமைத்து கொடுக்காத ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டம் போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் கலைந்து சென்றனர்.
    ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது.
    ஆவுடையார்கோவில்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆவுடையார் கோவிலில் இருந்து இந்த வழியாக செல்லும் மினி பஸ் குளத்து குடியிருப்பு, பெருநாவலூர், கறம்பக்குடி, காடங்குடி, திருவாகுடி, குருங்கலூர் வரை சென்று திரும்புகிறது. இந்த பஸ்சில்தான் பெருநாவலூர் மற்றும் ஆவுடையார் கோவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 முறை ஆவுடையார்கோவிலில் இருந்து குருங்கலூர் வரை இந்த மினி பஸ் சென்று வருகிறது. இதனால், மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குடவாசல் அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் வடமட்டம் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக குடவாசல் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு வடமட்டம், பரவக்கரை, சற்குணேஸ்வரபுரம், அன்னியூர் ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகிறார்கள். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை இந்த சாலை வழியாகத்தான் விற்பனைக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் சாலை மோசமாக இருப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றின் இருபுறமும் சாலைகள் அமைத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆறு மணல் வளம் மிகுந்த பகுதி ஆகும். பல ஆண்டுகள் முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டதால் தற்போது மணல் வளம் மறைந்து ஆறு முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் மணல் குவாரி அமைக்க நடவ டிக்கை எடுத்த போது பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பால் மணல் குவாரி அமைக்கப்படவில்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பணி புரிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மானாமதுரையில் உள்ள வைகை ஆறு முழுவதையும் சீரமைத்து கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

    அதன் பின்னர் எந்த கலெக்டரும் வைகை ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தடுப்பனை அமைத்தும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக ஆற்றங்கரைகளில் சாலை அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    ஆனால் தடுப்பணை மட்டும் தான் அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்படவில்லை. மானாமதுரை வைகை ஆற்று தடுப்பு அணைக்கு பின்பு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் திருப்புவனம் பகுதியில் இரு இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மானாமதுரையில் அமைக்கப்படவில்லை.

    தற்போது வைகை ஆற்று பகுதியில் தலைச்சுமையாக அதிக அளவு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதையும் பொதுப்பணித்துறையால் தடுக்க முடியவில்லை.

    வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் தனியாக செல்ல முடியவில்லை. பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய மைதானம் ஏதும் மானாமதுரையில் கிடையாது.

    அதனால் வைகை ஆறு பாலத்தை கடந்து 4 வழிச்சாலை மற்றும் புதிய புறவழிச்சாலையில் செல்லும் நிலை உள்ளது.

    கடந்த 26-ந் தேதி சாலை வழியே சென்ற அ.ம.மு.க. நிர்வாகி சரவணன் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். வைகை ஆற்றுக்குள் செல்ல முடியாமல் கருவேல மரங்கள் இருந்ததால் தப்ப முடியாமல் இறந்தார்.

    இதே போல் வைகை ஆற்று புதிய பாலத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையும் அடிக்கடி நடைபெறுகிறது. இதையும் தடுக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாக வைகை ஆறு மாறி வருகிறது.

    பொதுமக்கள் பாதுகாப்பாக நடைபயிற்சி செய்ய மானாமதுரை ரெயில் பாலத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணை வரை ஆற்றின் இருகரைகளிலும் சாலை வசதி அமைக்க வேண்டும்.

    மணல் திருட்டு தடுக்கப்பட வேண்டும். புதிய புறவழி சாலை பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். வைகை ஆறு முழுவதும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில், 30-வது சாலை பாதுகாப்பு வார விழா தொடங்கியது. விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறைக்கும் வகையில் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்தும், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஜீப்ரா கிராஸிங் பயன்பாடு மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் சாலைப் பாதுகாப்பு வார விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதசாரிகள் சாலையை கடந்து செல்வதற்காக புதிதாக ஜீப்ரா கிராஸிங் அமைக்கப்பட்டு, அதன் பயன்பாடு குறித்தும், அதனை பயன்படுத்தும் விதம் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவஞானம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் மாவட்டத்திலுள்ள முக்கிய இடங்களில் உள்ள சாலை சந்திப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள இடங்களில் சாலைகளை பாதசாரிகள் எளிதாக கடந்து செல்வதற்காக ஜீப்ரா கிராஸிங் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் (விருதுநகர்), மோட்டார் வாகன ஆய்வளர் இளங்கோ, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மரிய அருள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மசினகுடி-தெப்பக்காடு சாலையில் காட்டுயானைகள் மரத்தை சாய்த்தன. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மசினகுடி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ளது முதுமலை புலிகள் காப்பகம். இங்குள்ள வனப்பகுதி தொடர் மழை காரணமாக பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் ஏராளமான காட்டுயானைகள் முதுமலைக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன. இந்த காட்டுயானைகள் அவ்வப்போது சாலையோரங்களிலும் வந்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மசினகுடி-தெப்பக்காடு சாலையில் காட்டுயானைகள் உலா வந்தன. அப்போது சாலையோரத்தில் இருந்த தேக்கு மரத்தை வேரோடு சாய்த்தன. தொடர்ந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தின் பட்டைகளை உரித்து தின்றன. பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

    இதையடுத்து காலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் மரம் விழுந்து கிடப்பது குறித்து மசினகுடி போலீசார், வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். மசினகுடி சோதனைச்சாவடி அருகே தெப்பக்காடு சாலையில் விழுந்து கிடந்த மரத்தால், அந்த வழியே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    அவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பகுதியில் உள்ள வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக சார்க்கடை நிரம்பி கழிவுநீர் ரோட்டில் தேங்கியது. மேலும் கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் இல்லாததால் பல வீடுகளில் கழிவுநீர் புகுந்து. அந்த பகுதி சேறும், சகதியாக காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து கழிவு நீரை அகற்றி, பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இன்று காலை வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ. நகர் பகுதி மக்கள் விமான நிலைய ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மறியல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை அதிகாரிகள் யாரும் வரவில்லை. மறியல் காரணமாக ஒரு மணி நேரத் துக்கு மேலாக போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மதுரையில் சாலை அமைக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் சாலை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.

    மழை காலங்களில் மேலும் சாலைகள் சேதமடைந்து தண்ணீர் தேக்கும் குளங்களாக மாறி விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    மதுரை காளவாசல், செல்லூர், பழங்காநத்தம், பெரியார், காமராஜர் சாலை, தவிட்டு சந்தை, வில்லாபுரம், அவனியாபுரம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மோசமாக உள்ளன.

    செல்லூர் மார்க்கெட், அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடுவதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை சாலைகள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமல் அவதியடைகின்றனர். சாலை மேலும் சேதமடைந்து காணப்படுகின்றன.

    இதை கண்டித்தும் சாலை அமைக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ரெயில்வே தண்டவாளங்களை வாகன போக்குவரத்துக்காக அம்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோல்பூர் மாவட்டத்தில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், ரெயில்வே தண்டவாளங்களில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். வெள்ளம் ஓடும் பகுதிக்கு மேலே இந்த ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆபத்தான பயணத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்கின்றனர்.  #Rajasthan
    விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்காத சாலையை விரைவில் சரி செய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் காரியாபட்டி அருகேயுள்ள அம்மன்பட்டி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள சாலை கடந்த 12 ஆண்டுகளாக செப்பனிடாமல் மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    இந்தச் சாலையை செப்பனிடக்கோரி மாவட்ட நிர்வாகம், நெடுஞ் சாலைத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அருகில் உள்ள இலுப்பையூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல முடியாமல் 17 கிலோமீட்டர் தூரம் உள்ள கமுதி சென்று தான் பள்ளி சென்று வருகின்றனர்.

    அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் கூட இந்த சாலையில் வர மறுக்கின்றனர்.

    அப்படியே 108 ஆம்புலன்ஸ் வந்தாலும் இந்த சாலையில் செல்லும் போது நோயாளிகளுக்கு மேலும் உடல் நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.

    அவசர தேவைக்கு இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் கூறுகையில் எங்கள் ஊர் சாலை கடந்த 12 ஆண்டுகளாக பழுதடைந்த சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எங்கள் கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எங்கள் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து விருதுநகர் சென்று எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தார். #tamilnews
    போடி போஜன் பார்க் பகுதியில் குறுகிய சாலைகளால் விபத்து அபாயம் உள்ளது.

    போடி:

    வெளியூர்களில் இருந்து போடிக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு வாயிலாக உள்ளது போஜன்பார்க். இங்கிருந்து கட்டபொம்மன் சிலை பகுதிக்கு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள சாக்கடையில் தடுப்பு சுவர் இன்றி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் வளைவுகளில் வேகமாக திரும்பும் போது அவர்கள் சாக்கடைக்குள் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. சாலையில் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

    மேலும் குறுகிய வளைவுகள் குறித்து அறிவிப்பு பலகைகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி எச்சரிக்கை பலகை மற்றும் சிக்னல் அமைக்க வேண்டும். சாக்கடைக்கு தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

    சாலையை சீரமைக்க கோரி தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை சீனிவாசபுரம் சி.ஆர்.சி. டெப்போ அருகே உள்ள பிருந்தாவனம் பகுதியில் உள்ள பூதலூர் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மற்றும் மாணவ- மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    மேலும் சாலைகளில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடப்பதால் நடந்து செல்பவர்களின் கால்களை ‘பதம்’ பார்த்து காயம் ஏற்பட்டு விடுகிறது.

    இதனால் சாலையை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை. மேலும் அந்த பகுதியில் தெருவிளக்குகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் மக்கள் திண்டாடி வந்தனர்.

    தொடர்ந்து பிருந்தாவனம் பகுதியில் சாலையை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வந்தனர். இதனால் ஆவேசமடைந்த இப்பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் இன்று காலை பிருந்தாவனம் பகுதியில் சாலை மறியல் செய்ய திரண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியநாராயணன் மற்றும் கள்ளபெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது அங்கு சாலை மறியலில் நின்ற பொது மக்களிடம் ‘‘இன்னும் ஒருசில நாட்களில் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தனர். இதை கேட்டு அப்பகுதி பெண்கள் ஆவேசம் அடைந்தனர். ஒவ்வொரு முறையும் இதே பதிலை தான் கூறுகிறீர்கள். சாலை சரிசெய்ய முடியுமா? முடியாதா’’? என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சூரிய நாராயணனை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பொது மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் சில நாட்களில் சாலை கண்டிப்பாக சீரமைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ×