search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை"

    தண்டராம்பட்டு அருகே மலைக்கிராமங்களில் சாலை அமைக்க 6 கிலோமீட்டர் நடந்து சென்று கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மலைக் கிராமங்களான கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு ஆகிய கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக நூற்றுக்கணக்கான பழங்குடி இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் கீழ்வலசை கிராமத்தில் 358 மலைவாழ் மக்களும், மேல்வலசை கிராமத்தில் 198 மலைவாழ் மக்களும், அக்கரப்பட்டு கிராமத்தில் 190 மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமங்களில் கடுக்காய், சாமை, தினை, மரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, நெல், பலாப்பழம், நெல்லிக்காய், மக்காச்சோளம் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சாமை, தினை, கடுக்காய், பலாப்பழம், நெல்லிக்காய், மக்காசோளம் ஆகியவற்றை தங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை தங்கள் கிராமங்களுக்கு நேரடியாக வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

    கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு கிராம மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மலையின் கீழ் இருக்கும் முக்கிய நகரங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்ற அடிப்படையிலும், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வேலை என பலவற்றுக்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உள்செக்கடி கிராமத்தில் இருந்து பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து கீழ்வலசை கிராமத்திற்கு 6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொண்டு, சாலை வசதி ஏற்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    உள்செக்கடி கிராமத்தில் 3 மலைக் கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் சார்பாக கலெக்டருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கீழ்வலசை கிராமத்திற்கு அழைத்து சென்றார்கள்.

    உள்செக்கடி முதல் கீழ்வலசை வரை உள்ள மலைப்பாதையில் முதல் கட்டமாக வருவாய்த்துறை இடமான 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக சாலை அமைப்பதற்கு ரூ.29 லட்சம் நிர்வாக அனுமதி வழங்கி, முதற் கட்டப்பணிகள் தொடங்கப்படும். மேலும், மலைப்பாதையில் 4.6 கிலோ மீட்டர் வனத்துறை இடத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த சாலை அமைக்கப்படுவதால், தற்போது 90 கிலோ மீட்டர் சுற்றி வாகனங்களில் செல்வதற்கு பதிலாக, 25 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் அருகில் உள்ள முக்கிய நகரமான தானிப்பாடிக்கு வந்து சேரலாம். இதன்மூலம் மலைவாழ் மக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி செல்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும், தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும்.

    மேலும் அவர் கீழ்வலசை முதல் மேல்வலசை வரை 662 மீட்டர் தூரமும், கீழ்வலசை முதல் அக்கரப்பட்டு வரை 2½ கிலோ மீட்டர் தூரமும் வருவாய்த்துறை இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக புதிய சாலை அமைப்பதற்கு திட்டம் தயாரிக்க கூறியுள்ளார். விரைவில் அறிக்கை கிடைத்தவுடன் அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று கலெக்டர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து கீழ்வலசை மற்றும் மேல்வலசை கிராமங்களில் நேரில் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மலைவாழ் மக்கள் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கலெக்டர் உடனடியாக கிணற்றினை ஆழப்படுத்தியும், பலப்படுத்தியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைத்தும் மலை கிராமங்களுக்கு சீராக தண்ணீர் வழங்க உத்தரவிட்டார்.

    முன்னதாக அரசு பழங்குடியினர் நல ஆரம்பப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

    அப்போது 3 பார்வையற்ற பழங்குடியின மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும், கீழ்வலசை கிராமத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பராமரிப்பு செலவிற்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணையும், மூன்று சக்கர நாற்காலியும் வழங்கினார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். 
    கூடலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் மரம், பாறைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அப்பர் பவானியில் அதிகபட்சமாக 144 மி.மீட்டரும், தேவாலாவில் 107 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 100 மி.மீட்டரும் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு நாளில் சராசரியாக 39.37 மி.மீ. மழை பெய்தது.



    மழையுடன் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதேபோல் பச்சை தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம் என்ற இடத்தில் நேற்று காலை 7 மணிக்கு ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு துறையை சேர்ந்த அனில்குமார், ரமேஷ் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மழையை பொருட்படுத்தாமல் ராட்சத மரத்தை மின்வாள்கள் கொண்டு வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கூடலூர்- மைசூரு இடையே போக்குவரத்து சீரானது.

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் கூடலூரில் இருந்து பார்வுட் வழியாக கிளன்வன்ஸ், எல்லமலை, பெரியசோலைக்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் ரவி, நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் அனிபா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த பாறைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பல கட்டங்களாக போராடி பாறைகள் அகற்றப்பட்டது.

    இதனால் காலை 11 மணிக்கு கூடலூர்- பெரியசோலை இடையே போக்குவரத்து தொட ங்கியது. இருப்பினும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் எல்லமலை, சூண்டி உள்பட பல இடங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓவேலி பேரூராட்சி பகுதியில் செல்போன் அலைவரிசை சேவை முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தகவல்களை பரிமாற முடியாமல் சிரமம் அடைந்து உள்ளனர். பந்தலூர் தாலுகா பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதனால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.அம்பலமூலா பகுதியில் சிவஞானம் என்பவரது வீட்டின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை மற்றும் சமையல் அறை சேதம் அடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், உதவியாளர் பிரேம் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். இதேபோல் அய்யங்கொல்லி, கோழிச்சால் உள்பட பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொட்டும் மழை யில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் நேற்று மாலை மரம் ஒன்று வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வாகனங்கள், கூடலூரில் இருந்து ஊட்டி வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். மரம் விழுந்ததால் ஊட்டி-கூடலூர் சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதித்தது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. 
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கியும் சாலை போடப்படாததால் தனது இரு மகன்களின் துணையுடன் மாநில மந்திரி சாலைப் பணியாளராக மாறினார். #UPMinisterconstructsroad #Ministerconstructsroad
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில மந்திரிசபையில் கேபினட் அந்தஸ்துடன் மந்திரியாக பதவி வகிப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான இவர் வாரனாசி மாவட்டம் பதேபூர் கவுடா கிராமத்தை சேர்ந்தவராவார்.

    மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுகிறது, இந்த திருமண விழாவுக்கு மாநில மந்திரிகள் பலர் வருவார்கள் என்பதால் தனது வீடு இருக்கும் பாதையை முக்கிய சாலையுடன் இணைக்கும் வகையில் தனது வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்துக்கு புதிய சாலையை ஏற்படுத்த வேண்டும் என மாநில பொதுப்பணி துறைக்கு இவர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதற்கு அனுமதி அளித்தும் சாலை போடும் பணிக்காக 16.77 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் கடந்த 30-5-2018 அன்று பொதுப்பணி துறை உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், இந்த உத்தரவுக்கு பின்னர் 20 நாட்களாகியும் அங்கு சாலை போட அதிகாரிகள் முன்வராததால் தனது சொந்த செலவில், மகன்கள் அரவிந்த், அருண் ஆகியோரின் துணையுடன் தானே சாலைப் பணியாளராக மாறிய ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுமார் மூன்று மணிநேர உடல் உழைப்பில் சாலையை போட்டு முடித்து விட்டார்.

    ஒரு மந்திரியால் தனது வீட்டின் அருகே சாலை போட முடியவில்லை என்றால் பொதுமக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்று கேட்கிறார் ஓம் பிரகாஷ் ராஜ்பர். #UPMinisterconstructsroad  #Ministerconstructsroad
    ×