search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95936"

    ராஜபாளையத்தில் திருமணமான 10 மாதத்தில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் நட்டுக்கால் ராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இருவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த குருலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சம்பவத்தன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வதாக குருலட்சுமி கணவர் வீட்டாரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் குருலட்சுமி அங்கு செல்லாமல் மாயமானார்.

    இதனால் பதறிப்போன தினேஷ் மற்றும் உறவினர்கள் குருலட்சுமியை பல்வேறு இடங்களில் தேடினர் பலன் இல்லை.

    இதுகுறித்து குருலட்சுமியின் தாய் மகேசுவரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லிங்குசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    திண்டுக்கல் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 29). கார் டிரைவர். இவர் சசிகலா (39) என்பவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நேற்று நள்ளிரவு ஊராளிப்பட்டி பிரிவில் கார் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரின் பெரும் பகுதி சேதமடைந்தது. அவ்வழியே வந்தவர்கள் படுகாயமடைந்த பிரபு மற்றும் சசிகலாவை மீட்டு திண்டுக்கல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வெளியூருக்கு செல்லும் மக்களும் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களும் அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பல நேரங்களில் உயிரிழப்பும் நடந்து வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த சாலையில் பல விபத்துகள் இது போல நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அடிக்கடி முகாமிட்டு அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பிரனாம்பாள் (வயது50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதற்கிடையே ராஜா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    பாசத்துடன் இருந்து வந்த கணவர் திடீரென இறந்ததால் பிரனாம்பாள் சோகத்தில் மூழ்கினார். கணவர் இறந்தது முதல் அவர் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். மகன்கள் நன்றாக கவனித்து வந்தாலும் கணவரின் இறப்பை பிரனாம்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பிரனாம்பாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர்உசேன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை- 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டை காந்திநகர், சர்க்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 54). விவசாயி. இவர் நேற்று அவருடைய தம்பி மோகன் (52), அவரது மகன் சுந்தரம்(24) ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள வீட்டுமனையில் வளர்ந்து இருந்த முள்செடி விறகுகளை வெட்டி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விஜயகுமாரின் மற்றொரு தம்பி ராமன் (50). அவரது மகன்கள் சக்திவேல்(23), லட்சுமணன்(22) ஆகியோர் விஜயகுமாரிடம் நிலத்தை பங்கு பிரிக்கவில்லை.

    அதற்குள் அதில் வளர்ந்துள்ள முள்செடி விறகுகளை எப்படி வெட்டலாம் என கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோர் சேர்ந்து விஜயகுமார், மோகன், சுந்தரம் ஆகியோரை இரும்பி கம்பியாலும், உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மோகன், சுந்தரம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீரஞ்சிவிலு ஆகியோர் வழக்குபதிவு செய்து ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோரை கைது செய்தனர்.

    நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜின்னா (வயது 31). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று முகமது ஜின்னா மோட்டார் சைக்கிளில் அக்கரையில் இருந்து ஈஞ்சம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப் புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஜின்னா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து நீலாங்கரை போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திமுக எம்.பி. கனிமொழி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திண்டிவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இவ்வழக்கில் ஜூன்4ம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.  இந்நிலையில் இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. 
    மதகடிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தைதோப்பு அரசு பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அருகில் 40 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வாலிபர் கறுப்பு கலரில் ஜீன்ஸ் பேண்டும், பிங்க் கலரில் டீசர்ட்டும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன், ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த வாலிபர் யார்? எந்த ஊர் என்பது குறித்தும் குடிபோதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம் அருகே கோவில் நிர்வாகிகளை கண்டித்து, முன்னாள் நிர்வாகி கோவிலுக்குள் நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமு (வயது 54), இவர் இந்த கிராம ஒரு சமுதாயத்தின் நிர்வாகியாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தார். இவர் மீது கிராம மக்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்டுராக்கன், பாரி, வில்லியாழ்வார் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்து வருகிற 21-ந் தேதி கோவில் பொங்கல் விழாவை நடத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் முத்து ராமு கோவிலுக்குள் நுழைந்து உள்ளே பூட்டிக் கொண்டு சேலையால் தூக்கு போடவும், வி‌ஷ மருந்து பாட்டிலை கையில் வைத்தும் நிர்வாகிகளை மாற்றவும், ஓட்டுப் போட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யவும், நிர்வாகிகள் கோவில் திருவிழாவை நடத்தக் கூடாது எனவும் கோரிக்கை வைத்தார்.

    தகவல் அறிந்து ராஜபாளையம் தெற்கு இன்ஸ் பெக்டர் சங்கர்கண்ணன், தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் நடவடிக்கை எடுக்கும் வரை வெளியே வர மாட்டேன் என்று கூறி விட்டதால் வேறு வழியின்றி கோவிலின் பின்பக்க தகரக்கதவை கடப்பாரைக் கம்பியால் உடைத்தனர். உள்ளே நுழைந்து அவரை மீட்டனர். அதற்குள் முத்துராமு கையில் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்து, வாந்தி எடுத்தார்.

    இதனால் அவரை அவசரமாக அங்கிருந்த வாகனத்தில் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு போலீசார் முத்துராமு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவட்டார் அருகே தனது பாட்டி செல்போன் வாங்கி கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சஜினி (வயது 34). இவரது மகன் கிஸ்காஷ் (15). இவர் திருவட்டாரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கிஸ்காஷ் தனது பாட்டியிடம் புதிய செல்போன் ஒன்று வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு பாட்டி 10-ம் வகுப்பு முடித்த உடன் செல்போன் வாங்கித் தருவதாக கூறினார். ஆனால் மாணவர் தொடர்ந்து பாட்டியிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுவந்துள்ளார். அவர் வாங்கிக் கொடுக்க மறுத்துள்ளார்.

    இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட மாணவர் கிஸ்காஷ் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுத்தனர். மேலும் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் திருவட்டார் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (39) தொழிலாளி. இவர் புதிய வீடு கட்டியதில் கடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டில் அலெக்ஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்திருதார். இதனைப் பார்த்த மனைவி கதறி அழுதார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவர் அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அன்புகுமார் (வயது27). இவர் புதுவையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும் பி.எஸ். பாளையத்தை சேர்ந்த முகில்அரசிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முகில்அரசி கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்ற முதல் அன்புகுமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அய்யனாரும், அவரது மனைவியும் காய்கறி வியாபாரத்துக்கு சென்று விட்டனர். மதியம் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது அங்கு மகன் அன்புகுமார் மின்விசிறியில் கயிறால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அன்புகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அன்புகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் என்.ஜீ.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை(வயது 34). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிமேகலை அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மணிமேகலை நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் நேற்று இரவு மணிமேகலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மணிமேகலை மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்த டாக்டர்கள் மணிமேகலையை பரிசோதனை செய்தபோது அவர் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிமேகலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மணிமேகலை வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

    அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாரா? அல்லது பணி சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தநிலையில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரிமங்கலம் பெரியாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் செல்லும்போது, பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பின்னால் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த காரிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×