search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95995"

    திருப்பதி கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு ஆர்.சி.புக், புகை மாசு சான்று கட்டாயம் என்றும் ஆவணங்கள் இல்லாவிட்டால் அனுமதியில்லை என்றும் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். #Tirupati #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    பக்தர்கள் வரும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருமலையிலும், திருப்பதி மலைப்பாதைகளிலும் விபத்துகள் நடக்கின்றன.

    இந்தநிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி உத்தரவின்பேரில், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அலிபிரி டோல்கேட் மற்றும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதையில் உள்ள 7-வது மைல் ஆகிய இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கான லைசென்சு, ஆர்.சி.புத்தகம், புகை மாசு சான்று, சீட் பெல்ட், ஹெல்மெட், தகுதி சான்று ஆகியவை உள்ளதா? எனக் கேட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகள் கேட்கும் அனைத்துச் சான்றுகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு சான்று இல்லையென்றாலும், அந்த வாகனத்தை திருமலைக்கு அனுமதிக்காமல் திருப்பி விடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tirupati #TirupatiTemple
    திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள், பத்மாவதி தாயார் கோவில் உள்ளே டோக்கன் பெற்று, கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்ட்டர்களில் லட்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். #TirupatiLaddu
    திருப்பதி:

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்வதற்காக, திருமலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரம் லட்டுகள் வாகனத்தில் திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள், பத்மாவதி தாயார் கோவில் உள்ளே டோக்கன் பெற்று, கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்ட்டர்களில் லட்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் பத்மாவதி தாயார் கோவில் லட்டு பிரசாதமும் விற்பனை செய்யப்படுகிறது, என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tirupati #TirupatiLaddu
    திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாதந்தோறும் இரு நாட்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிவந்தது.

    இந்நிலையில், டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, மார்கழி மாத உற்சவங்கள், அரையாண்டு விடுமுறை உள்ளிட்டவற்றால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


    ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் நிர்வகித்து வரும் பல கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய துணிகளை வரும் 13-ந் தேதி இணையதளம் வாயிலாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியஸ்டர், பருத்தி வேட்டிகள், துணிகள், உண்டியலுக்கு பயன்படுத்தும் துணிகள், ரவிக்கைத் துணிகள், மேல்துண்டுகள், லுங்கிகள், சால்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறை, பஞ்சாபி ஆடைகள், ஜமுக்காளம், போர்வைகள், திரைச் சீலைகள் உள்ளிட்டவை ஏலம் விடப்பட உள்ளன.

    இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய www.tirumala.org, www.mstce commerce.com/ www.mstcindia.co.in  ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati #TirupatiTemple
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் முறைகேடுகளை தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம் செய்யப்படுகிறது. #Tirupati #PlasticBan
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம் மற்றும் மலையில் கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்தது.

    திருமலையில் உள்ள கடைகளில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    திருப்பதிக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டுகள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படும் என கூறினர்.

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் போது 26 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், லட்டு முறைகேடுகளை தவிர்க்கவும் திருப்பதி தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    லட்டு வாங்க பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அட்டைபெட்டிகள் தயார் செய்யபட்டுள்ளது. அதில் 2 லட்டு, 4 லட்டு, 5 லட்டுகள் வைக்கும் அளவிற்கு 3 வகையான அட்டை பெட்டிகள் 4 கலர்களில் தயார் செய்யபட்டுள்ளன.

    மொத்தம் 1லட்சம் அட்டை பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. காலை முதல் பக்கதர்களுக்கு அட்டை பெட்டிகளில் லட்டு வினியோகம் செய்யபட்டு வருகிறது. #Tirupati #PlasticBan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ்அம்பானி ரூ.1 கோடியே 11 லட்சத்தை காணிக்கையாக செலுத்தினார். #MukeshAmbani #Tirupati
    திருமலை :

    ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ் அம்பானியின் மகள் ஈ‌ஷாஅம்பானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்தத் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பாக, அந்தத் திருமண அழைப்பிதழை எடுத்து வந்து, திருப்பதி ஏழுமலையானின் பாதத்தில் வைத்து, சிறப்புப்பூஜை செய்வதற்காக, ரிலையன்ஸ் அதிபர் முகே‌ஷ் அம்பானி, மகன் அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன முதன்மை இயக்குனர் பி.எம்.பிரசாத், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் மாதவராவ் ஆகியோர் திருமலைக்கு வந்தனர். அவர்கள், திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி இரவு ஓய்வெடுத்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை கோவிலில் நடந்த அர்ச்சனை சேவையில் முகே‌ஷ் அம்பானி, மகன் அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மகளின் திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் பாதத்தில் வைத்து, அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்து வழங்கினர்.

    கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் முகே‌ஷ் அம்பானிக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம், டைரி, காலண்டர் ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். பின்னர் தங்க விமான கோபுரத்தை வலம் வந்த முகே‌ஷ் அம்பானி, அங்குள்ள பிரதான உண்டியலில் ரூ.1 கோடியே 11 லட்சத்தை காணிக்கையாக செலுத்தினார். #MukeshAmbani #Tirupati
    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருமலை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. #Tirupati #Rain
    திருப்பதி:

    திருமலை மற்றும் திருப்பதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருமலை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்தும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மழை காரணமாக கோவில் மகாதுவாரம், மாடவீதிகள் உள்ளிட்ட பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியது. பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தரிசனத்துக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த நிலையில், திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.

    கனமழை காரணமாக திருமலை மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.  #Tirupati #Rain

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.







    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் கொண்டு வந்த மங்கல பொருட்களை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தபோது எடுத்த படம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ் தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மங்கல பொருட்களை படத்தில் காணலாம்.







    கி.பி.1,320-ம் ஆண்டு மாற்று மதத்தினர் ஸ்ரீரங்கத்திற்கு படையெடுத்தனர். இதன் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது.

    நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் அக்கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன. திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலபோக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ் தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மங்கல பொருட்களை படத்தில் காணலாம்.

    அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள் உள்ளிட்ட மங்கல பொருட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில்குமார்சிங்கால், பொக்கிஷ பொறுப்பாளர் குருராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், அர்ச்சகர்கள் நேற்று முன்தினம் இரவு எடுத்து வந்தனர்.

    நேற்று காலை 6.45 மணி அளவில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் இருந்து திருப்பதி வஸ்திர மரியாதை புறப்பட்டு கருடமண்டபம் வந்தது. அதன்படி மங்கல பொருட்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வஸ்திர மரியாதைகளை பெற்றுக்கொண்டனர்.
    திருப்பதி பஸ் நிலையங்களில் பயணிகள் போல் நடித்து நகை, பணம் திருடிய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி பஸ் நிலையங்கள் மற்றும் பஸ்களில் பயணிகளிடம் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக திருப்பதி குற்றப்பிரிவு போலீசாருக்குப் புகார்கள் வந்தன. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் திருப்பதியில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மாதவம் தங்கும் விடுதி அருகில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த இரு இளம்பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும், கர்னூல் மாவட்டம் ஆத்மகூரு மண்டலம் சித்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரமணம்மா என்கிற சங்கீதா (வயது 22), அனிதா (19) எனத் தெரிய வந்தது. இளம்பெண்களான இருவரும், திருப்பதியில் உள்ள பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள்போல் நடித்து, சக பயணிகளிடம் நகை, பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான இரு இளம்பெண்கள் மீதும் திருப்பதி போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். #Redsandalwood #Smugglers #Tirupati
    திருப்பதி:

    திருப்பதி ரேணுகுண்டா அருகே உள்ள ஏர்பேடு கிருஷ்ணாபுரம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. அவற்றை கடத்தல் கும்பல் அடிக்கடி வெட்டி கடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 20-க்கும் மேற்பட்ட கும்பல் ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருப்பதாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கிருஷ்ணாபுரம் வனப்பகுதிக்கு சென்ற செம்மர கடத்தல் பிரிவு போலீசார் செம்மரம் வெட்டி கொண்டிருந்தவர்களை சரண் அடையுமாறு எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் போலீசார் மீது கற்கள் மற்றும் கத்திகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பயந்து போன கும்பல் வனப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர்.

    வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ஒரு கார் மற்றும் 9 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #Redsandalwood #Smugglers #Tirupati


    திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க, தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.

    திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை பக்தர்கள் வரிசையில் செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமலையில் புதிதாக பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    லட்டு கவுண்ட்டர்களில் ஸ்கிரீன் போர்டுகள் வைக்கப்பட உள்ளன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட்) வழங்கும் இடத்தில் ஸ்கிரீன் போர்டுகள் வைக்கப்பட உள்ளன. கல்யாண கட்டாக்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா? எனக் கண்காணிக்கப்பட உள்ளனர்.

    கன்னியாகுமரியில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, சிமெண்டு சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, கழிவறைகள் கட்டும் பணி ஆகியவற்றை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். திருப்பதியைச் சுற்றி உள்ள தேவஸ்தான கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட, ‘ஹெட் கவுண்ட்’ கருவி பொருத்தப்பட உள்ளது.

    தேவஸ்தான காலண்டர்கள், டைரிகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். அதற்கான சாப்ட்வேரில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் சென்டர்கள் மூலம் பக்தர்கள் குறைகள், புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதனை அறிக்கையாக தயாரித்து அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #TirupatiTemple
    திருப்பதி-தனப்பள்ளி சாலையில் உள்ள ஓட்டலில் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். #Tirupati #TirupatiHotels
    திருமலை:

    திருப்பதி மாநகராட்சியில் அனுமதியில்லாமல் சிலர் ஓட்டல்கள் நடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் உணவுப்பொருள் கண்காணிப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணாச்சாரி, உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி சேஷாரெட்டி, பறக்கும்படை அதிகாரி ராமசாமி மற்றும் உணவுப் பொருள் ஆய்வாளர்கள் திருப்பதி மாநகராட்சியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், துரித உணவகங்கள், சிற்றுண்டிகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

    அப்போது திருப்பதி- தனப்பள்ளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. அகில இந்திய வானொலி நிலையம் சாலையில் உள்ள பிரியாணி ஓட்டல் ஒன்றில் தரமற்ற இறைச்சி வகைகளை வாங்கி வந்து பிரியாணி தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது. அந்த ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் பிரியாணியில் தரமற்ற இறைச்சி வகைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பதியில் உள்ள பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்ட கேக் வகைகள் தரமற்றதாக இருந்தன. அதனை பரிசோதனைக்காக எடுத்து சென்று ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதி லீலா மகால் சர்க்கிளில் உள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அங்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அலிபிரி போலீசில் ஒப்படைத்தனர்.   #Tirupati #TirupatiHotels
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கமுடியாமல் சிலர் இரும்பு கேட்டுகளை உடைத்து சாமி தரிசனத்திற்கு செல்ல முயன்றனர்.

    தேவஸ்தான ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். கூட்டம் காரணமாக பக்தர்கள், தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பூங்காக்களில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    கூட்டம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள், திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்கு சென்று முன்பதிவு செய்த பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.
    ×