search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95995"

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நேற்று ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். #Tirupati
    திருமலை:

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 11 மணி நேரமும் ரூ.300 டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று ஏழுமலையானை 70,713 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  #Tirupati
    திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. #TirupatiTemple #PlasticBan
    திருப்பதி:

    திருப்பதியில் கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது.

    50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இதை தொடர்ந்து நாளை முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது.

    திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம் பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றை தவிர்க்க வேண்டும்.

    திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர்.

    திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் உடைமைகள், கடைகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் திருப்பதி தேவஸ்தான சுகாதார ஆய்வாளர் கமிஷ்டி தலைமையில் நாளை முதல் திருமலை முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை நடத்துகின்றனர்.

    மேலும் அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்கள் பொருட்களை சோதனை செய்யும்போதே பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படும். அதனையும் மீறி கொண்டு வந்தால் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    லட்டுகளை போட்டுத் தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது.  #TirupatiTemple #PlasticBan

    திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்களை கைது செய்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். #Redsandalwood #Arrest
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி புள்ளைய காரி பல்லி என்ற அடத்தில் இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 30க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோதண்டம் என்ற போலீஸ்காரரின் தலையில் கல்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    அவரை மீட்ட போலீசார் ரங்கம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செம்மர கடத்தல் கும்பல் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

    இதையடுத்து கடத்தல் கும்பல் தப்பி ஓடியது.அவர்களை விரட்டி சென்ற போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த பொன்னிவேல், சிலக்காடு, சக்திவேல், சின்னராஜ், குமார் என தெரிய வந்தது.

    இதில் தப்பி ஓடும் போது கீழே விழுந்ததில் ஒருவருக்கு கால் உடைந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் வனப்பகுதியில் தப்பி ஓடியவர்களை பிடிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடத்தல் கும்பல் விட்டு சென்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #Redsandalwood #Arrest

    திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்ற தமிழக வாலிபர்கள் 2 பேரை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். #RedSandalwood #Tirupati
    திருப்பதி:

    திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதி பீமாவரம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. வெங்கட்ரமணா, இன்ஸ்பெக்டர் சந்து, வன அலுவலர் லட்சுமிபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்களை கண்ட போலீசார் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கும்பல் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த வெங்கடேஷ் (24), கிருஷ்ணகிரியை சேர்ந்த கார் டிரைவர் அபு பக்கர் (23) என தெரியவந்தது.

    செம்மர கடத்தல் கும்பல் விட்டு சென்ற 14 செம்மரங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். #RedSandalwood #Tirupati

    திருப்பதி கோவிலில் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருட சேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறுகிறது.
    திருப்பதி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருட சேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறுகிறது.

    அதில் உற்சவர் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 14-ந்தேதி கருடசேவை நடந்தது.

    இதையடுத்து இதே மாதத்தில் வந்த பவுர்ணமியையொட்டி நாளை இரவு மீண்டும் மற்றொரு கருடசேவை நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் தேவஸ்தானம் செய்து வருகிறது.
    சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது. #Tirupatitemple
    திருமலை:

    சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நேற்று காலையில் இருந்து மாலை வரை 98,230 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.1 கோடியே 66 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 52 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    இன்று காலையிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி, நாராயணகிரி பூங்கா வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது.

    தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். திருமலையில் உள்ள பல இடங்களிலும் உணவுப் பொட்டலங்களை ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் வழங்கி வருகிறார்கள்.  #Tirupatitemple
     


    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாட்களில் 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நாட்களில் பக்தர்கள் 17 கோடியே 75 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடந்தது. விழாவில் தினமும் மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகன ஊர்வலத்தை தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி வலம் வந்த கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனையொட்டி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி, சக்கரத்தாழ்வார் உற்சவர்கள் கோவிலில் இருந்து மாடவீதிகள் வழியாக புஷ்கரணியை அடைந்தனர்.

    அங்கு உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. திருமஞ்சனம் நிறைவடைந்ததும் சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் புஷ்கரணிக்கு எடுத்துச்சென்று வேதமந்திரங்கள் முழங்க 3 முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி எழுந்தனர். இதனையொட்டி புஷ்கரணி மற்றும் மாடவீதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக புஷ்கரணியில் நீச்சல் வீரர்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தனர். தீர்த்தவாரி முடிந்ததும் உற்சவர்கள் கோவிலுக்கு திரும்பினர். அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களிலும் மொத்தம் 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், கருடசேவை நடந்த அன்று மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் 29 லட்சத்து 30 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியிருந்ததோடு 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும், 6 கோடியே 70 லட்சம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டதாகவும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கருடசேவை தினத்தில் மட்டும் 1,000 போலீசார் கூடுதலாக ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

    பிரம்மோற்சவ நாட்களில் கல்யாண கட்டாவில் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு முடி இறக்கும் பணியில் ஆயிரத்து 270 ஆண் தொழிலாளர்களும், 270 பெண் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். இந்த நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 17 கோடியே 75 லட்சம் இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    திருப்பதியில் கருட சேவையன்று 16 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதையடுத்து ஊழியர்கள் 8 பேரிடம் விஜிலென்ஸ் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupati #TirupatiLaddu
    திருமலை:

    திருப்பதியில் லட்டு விற்பனை கவுன்டர்களில் தேவஸ்தான பணியாளர்கள், ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள், வங்கிகளின் ஏற்பாட்டின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பதியில் கடந்த 10-ந்தேதி தொடங்கி நவராத்தி பிரம்மோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட வாகன சேவையன்று சாமி தரிசனத்திற்காக 4 லட்சம் பக்தர்கள் திருப்பதி மலையில் திரண்டனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.

    இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கான வரிசையில் லட்டு வாங்குவதற்கான டோக்கன்கள் வாங்கப்படும். சாமி கும்பிட்டு வெளியில் வந்தபின் லட்டு விற்பனை கவுன்டர்களில் டோக்கன்களை கொடுத்து பக்தர்கள் லட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    பக்தர்களிடமிருந்து பெறப்படும் டோக்கன்களை வாங்கும் ஊழியர்கள் அதில் அச்சிடப்பட்டிருக்கும் பார் கோடுகளை ஸ்கேன் செய்து சரி பார்த்த பின்னர் லட்டுகளை வழங்குவார்கள். போலி டோக்கன்களை கொடுத்து யாரும் முறைகேடுகளில் ஈடுபடாமல் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கருட சேவை அன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. எனவே டோக்கன்களை ஸ்கேஸ் செய்யும் போது சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் கண்டு கொள்ள வேண்டாம்.

    பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் பக்தர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த உத்தரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஊழியர்கள் அன்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டுகளை முறைகேடாக விநியோகம் செய்துள்ளனர்.

    கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுகளை கன்வேயர் பெல்ட் மூலம் கவுன்டர்களுக்கு அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு டிரேயிலும் 51 லட்டுகள் இருக்கும்.

    கருட சேவை நாளில் தேவஸ்தான அதிகாரிகள், விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது ஆகியவற்றில் மூழ்கி இருந்தனர்.

    இந்த சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஒப்பந்த ஊழியர்கள், அன்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகளை முறைகேடாக விநியோகித்துள்ளனர்.

    கருடசேவை முடிந்த பின் விற்பனை செய்யப்பட்ட லட்டுகளின் எண்ணிக்கைக்கும் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட டோக்கன்களின் எண்ணிக்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில விஜிலென்ஸ் துறையினர் ஒப்பந்த ஊழியர்கள் 8 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Tirupati #TirupatiLaddu

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார்.
    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.

    தினமும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-வது நாளான நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு தங்க குதிரை வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வருகிறார்.

    நாளை காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்பகுளம் அருகேயுள்ள வராஹி கோவிலில் பூஜைகள் செய்து பின்னர் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்ய உள்ளனர். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    பிரம்மோற்சவ நாளில் வாடகை அறை முன்பதிவை தேவஸ்தானம் 50 சதவீதம் குறைத்தது. மேலும் பரிந்துரைக் கடிதங்களுக்கு வாடகை அறை முறையையும் ரத்து செய்தது.

    அதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வாடகை அறைகள் எவ்வித தடங்கல்களும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது வாடகை அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.61.44 லட்சமும், இந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ரூ.68.38 லட்சமும் வருவாய் கிடைத்தது. 2015ஆம் ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது ரூ.71.61 லட்சமும் நடப்பாண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6 நாட்களில் ரூ.54.91 லட்சமும் வருவாய் கிடைத்துள்ளது.

    வாடகை அறை பிரிவு- 2 மூலம் 2015 ஆம் ஆண்டு ரூ.1.39 கோடியும், தற்போது 6 நாட்களில் ரூ.1.01 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி (பொறுப்பு) சிவக்குமார்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பறக்கும் படை அதிகாரிகள் ரவீந்திராரெட்டி, சதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு தங்கக் குதிரை வாகன வீதிஉலா ஆகியவை நடக்கின்றன. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகனம், இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி, ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக சென்றன. ராமர், நரசிம்மர், ஆஞ்சநேயர் போன்ற வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர்.



    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி (பொறுப்பு), கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பேஷ்கார் ரமேஷ், பறக்கும்படை அதிகாரிகள் ரவீந்திராரெட்டி, சதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை தங்க யானை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா ஆகியவை நடக்கிறது. 
    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று இரவு தங்கக்கருட வாகன வீதிஉலா நடந்தது. கொட்டும் மழையில் நடந்த வாகன வீதிஉலாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை மோகினி அவதார வீதிஉலா நடந்தது. அசுரர்களிடம் இருந்து தேவர்களை காக்க மகா விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். எனவே அதனை விளக்கும் வகையில் உற்சவர் மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் பல வண்ணமலர்கள், பிரத்யேக தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மோகினி அவதாரத்தை ரசிக்கும் வகையில், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் உடன் வந்தார். வாகன வீதி உலாவின்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    வாகன வீதிஉலாவின் முன்னால் நடன கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது.

    பின்னர் சிகர நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை, தங்கக்கருட வாகன வீதிஉலா (கருட சேவை உற்சவம்) நடந்தது. பட்டு வஸ்திரம், கிளி ஆகியவற்றாலும், லட்சுமி ஆரம், மகர கண்டி, சகஸ்ர நாமாவளி ஆரம், கடிக அஸ்தம் ஆகியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் மலையப்பசாமி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். உற்சவர் மலையப்பசாமி மற்ற நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தாலும் தனது சொந்த வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுகுண்டல வாடா, வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா... அனாத ரட்சகா, ஆபத் பாந்தவா கோவிந்தா... கோவிந்தா... என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், பக்தர்களின் கண்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    முன்னதாக கருட சேவையை பார்ப்பதற்காக நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் காலை 10 மணியளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு குடிநீர், மோர், உணவு ஆகியவை வழங்கப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வந்ததை சுமார் 2½ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீதிஉலாவில் மத்திய மந்திரி ஆர்.கே.சிங், திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர்யாதவ், தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ, கோவில் அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    ×