search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாளஹஸ்தி"

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு (உற்சவ மூர்த்திகளுக்கு) குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது. அதையொட்டி தினமும் காலை, முதல் கால அபிஷேகம், 2-வது கால அபிஷேகம், 3-வது கால அபிஷேகத்துக்கு பின்னர் மற்றும் மாலை 4-வது கால பிரதோஷ கால அபிஷேகத்துக்கு பின்னர் வில்வார்ச்சனை நடக்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 3-ந்தேதி காலை அஷ்டோத்திர கலசாபிஷேகம், மாலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வெள்ளி அம்பாரிகளில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்தார். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்திர 108 சத சங்காபிஷேகம் மற்றும் மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    காலை 9 மணியில் இருந்து சங்கல்பம், யாக பூஜை, நைவேத்தியம், தீபாராதனை, மாலை 5 மணியளவில் தட்சிணாமூர்த்திக்கு சந்தன அலங்காரம் செய்து, சகஸ்ர நாமார்ச்சனை, தீபாராதனை, இரவு 8 மணியளவில் உற்சவர் தட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளேயே வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    குருப்பெயர்ச்சி விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நேற்று நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் இருந்து கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பாக சொர்ணமுகி ஆற்றுக்கு மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
    சித்தூர் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பாக சொர்ணமுகி ஆற்றுக்கு மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் கோவில் அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள் பங்கேற்று கோவிலில் சிறப்புப்பூஜைகள் செய்து, மஞ்சள், குங்குமம், பட்டு வஸ்திரம் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலையில் சுமந்த படி ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு சென்று, ஓடும் தண்ணீரில் மங்கள பொருட்களை தூவி சமர்ப்பித்தனர். அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டியின் குடும்பத்தினர், பக்தா்கள் பங்கேற்றனர்.
    திருவோண நட்சத்திரமும், சப்தமி திதியும் சேர்ந்து ஒரேநாளில் ஒன்றாக வந்ததால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி சோமவார பூஜை நிகழ்ச்சி நடந்தது.
    தெலுங்கு கார்த்திகை மாதத்தில் மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்துடன் வரும் சப்தமி திதி நாள் அன்று கோடி சோம வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருவோண நட்சத்திரமும், சப்தமி திதியும் சேர்ந்து ஒரேநாளில் ஒன்றாக வந்ததால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி சோமவார பூஜை நிகழ்ச்சி நடந்தது.

    அதையொட்டி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பல வண்ண மலர்களால் மகாசிவலிங்கம் வடிவமைத்து, அதன் மீது தீபம் ஏற்றி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் உள்ள கண்ணாடி மண்டபம் அருகில் பஞ்ச தீப ஸ்தம்பம் ஏற்பாடு செய்து, அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    முக்கிய விருந்தினராக பங்கேற்ற வேமிரெட்டி பிரபாகர்ரெட்டி எம்.பி. தம்பதியினர் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஏற்பாடு செய்திருந்த தீபங்களை ஏற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள் பலவண்ண மலர்கள் மீது வைத்திருந்த தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதனால் தட்சிணாமூர்த்தி சன்னதி வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஒளிர்ந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
    பிரசித்திப் பெற்ற கேதார்நாத் சிவன் கோவிலில் ஆதிசங்கரர் ஜீவசமாதியும், அதன் மீது அவரின் உருவச்சிலையும் இருந்தது. அது, இயற்கை சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டது. கேதார் நாத்தில் புதிதாக ஆதி சங்கரர் ஜீவசமாதியும், அவரின் உருவச்சிலையும் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

    அதையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மன் கோவில் அருகில் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது மடாதிபதிகள் மற்றும் ஆன்மிக பிரமுகர்களின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுதொடர்பாக நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு காணொலி காட்சி மூலம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஒளி பரப்பப்பட்டது. பின்னர் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. மாலை ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. கோலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    இந்த ஆண்டு 4-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த ஆண்டை போல் கேதார கவுரி விரத பூஜை கொரோனா தொற்றுப் பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக கோவில் சார்பில் நடத்தப்பட உள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கவுரி விரத பூஜை கோலாகலமாக நடப்பதும், அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவதும் வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் சார்பாக கேதார கவுரி விரத பூஜை நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு 4-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த ஆண்டை போல் கேதார கவுரி விரத பூஜை கொரோனா தொற்றுப் பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக கோவில் சார்பில் நடத்தப்பட உள்ளது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீகாளஹஸ்தியில் வசித்து வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான நாதஸ்வர வித்வான்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். #Suicide
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி கர்னால் தெருவைச் சேர்ந்தவர் முனிக்குமார் (வயது 40). இவர், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நாதஸ்வர வித்வானாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாதவி (36). இருவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சிராவனி (15) ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் முனிசாய் (12) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதவி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இரு மகள்களும் தூங்கி விட்டனர்.

    வீட்டின் அறையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    நேற்று காலை விடிந்ததும் இரு மகள்களும் பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுத இரு மகள்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றி ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இரு பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicide

    சந்திரகிரகணத்தின்போது ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் வாயுதலமாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து பரிகார பூஜைகளை செய்து அருள்பெற்றுச்செல்கின்றனர்.

    நாட்டின் அனைத்து கோவில்களிலும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஏற்படும்போது கிரகண காலத்தில் நடைசாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில்சூரிய மற்றும் சந்திர கிரகண நேரங்களில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு கிரகணக் கால அபிஷேகங்கள் நடத்தப்படுவது சிறப்புக்குரியதாகும்.

    அதன்படி நேற்று இரவு 11.54 முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது மூலவர்களுக்கு கிரகணக்கால சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட உள்ளதாக கோவிலின் வேதப் பண்டிதர் மாருதி சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சூரிய, சந்திரர்கள் சுயமாக தங்களின் பாவங்களை நீக்கிக் கொள்வதற்கு தவம் செய்து தங்களின் சக்திகளைத் திரும்ப பெற்றதாக தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போதும் சூரியனால் அமைக்கப்பட்ட புஷ்கரணியிலிருந்து (கிணறு) எடுக்கப்படும் புனித நீரால் மட்டுமே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சூரிய, சந்திர கிரகணங்களின் போது எப்போதும் போல் கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்து சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி கூறுகையில், “தினமும் இரவு 9 மணிக்கு நடைசாத்தப்படுவதுபோல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைசாத்தப்பட்டது. நள்ளிரவுக்கு பின்னர் 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அப்போது மூலவர்களுக்கு நடத்தப்படும் கிரகணக்கால அபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். அதன்படி கிரகணத்தின்போது திரளான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். 
    ×