search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதசுவாமி கோவில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகரை தேரில் எழுந்தருள செய்தனர். தேர் சக்கரத்தில் முக்கிய பிரமுகர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், ‘ஆத்மநாதா, மாணிக்கவாசகா’ என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது.

    தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் சுந்தரமூர்த்தி தம்பிரான், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(சனிக்கிழமை) 10-வது நாள் விழாவில் வெள்ளி ரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசித்து அருளிய உபதேச காட்சி நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்மநாதசுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர். கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தெட்சிணாமூர்த்தி தலைமையில் ஆவுடையார்கோவில் போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபட்டனர். 
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 14-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருள்வார்கள். பின்னர் பக்தர்கள் தேர்களின் வடத்தை பிடித்து இப்பார்கள்.

    இதற்காக 5 தேர்களும் கிழக்கு வீதியில் வரிசையாக நிறுத்தப்பட்டு, அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.

    பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
    நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
    நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

    காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர், முருகன் தேர் ஆகியவை வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நடராஜர் தேர் குற்றால நாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிவையும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை சபையில் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

    23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. 
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணி முதல் 11 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதி உலா வந்தார்.

    விழாவின் 8-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் குதிரை வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது.
    உப்பிலியபுரம் அருகே பூஞ்சோலை அம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..
    திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே சோபனபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூஞ்சோலை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் அச்சு மற்றும் சக்கரங்கள் பழுது அடைந்து இருந்தது. மரத்தாலான அந்த சக்கரங்களை அகற்றிவிட்டு புதிய இரும்பு சக்கரங்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி இக்கோவிலுக்கு ரூ.3¾ லட்சம் செலவில் புதிய இரும்பிலான சக்கரங்கள் மற்றும் அச்சுகளை பொருத்தினர். இதனையடுத்து தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டத்தை அமைதியாக நடத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக மாரியம்மன் கோவில் திடலில் நிறுத்தப்பட்டிருந்த புதிய இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு தேர்களில் பல வர்ணங்கள் பூசப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு ஆலயத்தில் புண்ணியதானம் மற்றும் கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் காரியஸ்தர்கள் கிராம வழக்கப்படி ஆசாரி களுக்கு முதல் மரியாதை கொடுத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன்பின் தேர்களுக்கு சன்னக்கட்டை போட்டு தேரோட்டம் நடத்தும் தொழிலாளர்களை அழைத்து வந்தனர். பிறகு, கிடா வெட்டி காவு கொடுத்து வானவேடிக்கை மேளதாளத்துடன் முதல் பூஜையை காஞ்சேரிமலை, குருவம்பட்டி புதூர் கிராம மக்கள் தேங்காய் உடைத்து நடத்தினார்கள்.

    ஆண்கள் ஒரு தேரையும், பெண்கள் ஒரு தேரையும் இழுக்க தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தேரிலிருந்து நவதானியங்களை அள்ளித் தெளித்த வண்ணம் தேர்வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தானியங்களை துணியில் முடிந்து புதுவீடு கட்டும் நிலக்கதவில் வைத்தால், குடும்பத்தில் நல்லது நடக்கும். வயலில் விதைக்கும் விதைகளுடன் கலந்து தெளித்தால் மகசூல் அதிகமாகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. தேர் வெள்ளோட்டமானது தேரோடும் வீதிகளில் வலம் வந்து மீண்டும் மாரியம்மன் கோவில் திடலை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், அறங்காவலர் துறை அதிகாரி நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏடு வா சிப்பு திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏடு வாசிப்பு திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. ஏடு வாசிப்பு நிகழ்ச்சிக்கு தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவின்15-ம் நாளான அடுத்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு முடிவில் இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும், 16-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீப விழா தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி மகாதீபம் ஏற்றுவதற்கான கொப்பரையும் தயார் நிலையில் உள்ளது.
    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகாதீபம் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதனையொட்டி தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.

    5-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கார்த்திகை தீப திருவிழா தொடங்கியுள்ளதால் நேற்று வழக்கத்தை விட பல மடங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதை படத்தில் காணலாம்.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள். தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று தேர்களில் குதிரைகள், குடைகள் கட்டும் பணியும், தேரின் உச்சியில் கலசங்கள் பொருத்தும் பணியும் நடந்தது. காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது.

    2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.


    தேருக்கு கலசம் பொருத்தும் பணி நடைபெற்ற போது எடுத்த படம். சிறப்பு பூஜை செய்யப்பட்ட மகா தீப கொப்பரை.

    வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் நகரின் மையப்பகுதியில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    இதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனை மண்ணு நாட்டார் தலைமையிலான குழுவினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தயார் நிலையில் உள்ள தீப கொப்பரைக்கு நேற்று அவர்கள் பூஜை செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை மகாதீபம் ஏற்ற ஒரு சில நாட்களே இருப்பதாலும் தேரோட்டமும் நாளை நடைபெற உள்ளதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
    நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன், நவநீதேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிங்காரவேலர் அன்னை வேல்நெடுங்கன்னி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலர் மேனி எங்கும் வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

    இந்த காட்சியை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிக்கலில் குவிகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற சிங்காரவேலர் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், சுந்தர கணபதிக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி ஆகிய நிகழச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து சிங்காரவேலர் தங்க மஞ்சத்தில் வீதி உலாவும், பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. கடந்த 10-ந்தேதி தங்கமயில் வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. அப்போது சிங்காரவேலர் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். கோவிலில் இருந்து தொடங்கிய தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் அன்னையிடம் சக்திவேல் வாங்குதலும், சக்திவேல் வாங்கியவுடன் சிங்காரவேலருக்கு வியர்வை சிந்தும் காட்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
    தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    விழா நாட்களில் அம்பாள் கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி விருஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    9-ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு பாகம்பிரியாள் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து காலை 10.20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் ரதவீதிகள் வழியாக சென்று நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தேரோட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் இடித்தல் (திருப்பொற்சுண்ணம்), 10 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள், சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. 9.30 மணிக்கு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது. 
    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. மாலையில் சமய சொற்பொழிவு நடந்தது.

    திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு உலகம்மன் தேருக்கு எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் மேள தாளம் முழங்க வலம் வந்து 9.50 மணிக்கு நிலையத்தை அடைந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    விழாவில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.20 மணிக்கு யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.05 மணிக்கு தெற்கு மாசிவீதியில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். 
    கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 24­-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருநாளான இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ரதரோகணம் நடைபெற்றது. பின்னர் வணிக வைசிய சங்கத்தினர் மண்டகப்படிதாரர்கள் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு 7.30 மணிக்கு வணிக வைசிய சங்கம் சார்பில் மெயின் ரோட்டில் உள்ள 9-ம் நாள் திருநாள் மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார மற்றும் தீபாராதனைகள் நடைபெறும் பின்பு அங்கு இருந்து அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    10-ம் நாள் திருநாளான நாளை (2-ந் தேதி) காலை அம்மன் பல்லக்கில் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    11-ம் நாள் திருநாளான 3-ந் தேதி மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரி‌ஷப வாகனத்தில் பூவன நாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். 12-ம் நாளான 4-ந் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும்.

    மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர்திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் தினமும் காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பு நடைபெற்றது.

    தினமும் இரவில் அய்யா வைகுண்டர் காளை, அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான அய்யா திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை உகப்படிப்பும், அதைதொடர்ந்து திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது.

    இதையடுத்து மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் வானவேடிக்கை, சங்கு முழக்கம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளம் முழங்கப்பட்டது.

    இதில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, கொட்டிவாக்கம் முருகன், ராயபுரம் மனோ, ராபர்ட் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருத்தேரில் எழுந்தருளிய அய்யா, மணலி புதுநகர் பகுதிகளில் வீதிஉலா வந்து, பின்னர் கோவிலை வந்தடைந்தார்.

    விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    ×