search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 19-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து உற்சவர்களான திரிபுரசம்ஹாரமூர்த்தி மற்றும் திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 8 மணி அளவில் ராஜ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். அப்போது கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசம்ஹாரமூர்த்தியும், திரிபுரசுந்தரியும் எழுந்தருளினர்.

    பின்னர் தேரில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள், ஹரகர மகாதேவா, ஓம் நமச்சிவாயம், சிவாய நம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர்.

    8.15 மணிக்கு கோவில் முன்பு இருந்து தொடங்கிய தேரோட்டம், மாடவீதியில் வலம் வந்து மீண்டும் 9.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் பண்ருட்டி முன்னாள் நகரசபை தலைவர் பன்னீர்செல்வம், செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ஜெயசித்ரா, வக்கீல் எம்.சி.தண்டபாணி, முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், தொழில் அதிபர்கள் சந்திரசேகர், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் வைரக் கண்ணு, மீனா ஜூவல்லர்ஸ் பத்மநாபன், தேவநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், கோவிந்தன் மற்றும் கே.என்.சி. மோகன், வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி திருவதிகை பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார்.

    பின்னர் தேரில் வீற்றிருந்த திரிபுரசம்ஹாரமூர்த்தி, 3 அரக்கர்களையும் அவர்களது 3 கோட்டைகளையும் எரித்து சம்ஹாரம் நிகழ்த்தும் ஐதீக பெருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    10-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜர் உற்சவமும், தீர்த்தவாரி உற்சவமும், மாலை 4 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது. 
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து உற்சவர் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேரோட்டம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் தொடங்கி தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.

    தேரோட்டம் நடைபெற்ற வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றுடன் நாணயங்கள் கலந்து தேர் மீது தூவி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் தாசில்தார் பி.எஸ்.கோபி, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, பொறியாளர் சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, முன்னாள் நகரசபை தலைவர் எஸ்.அமுதா, கம்பன் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் முருகன், திருமகள், மோகன், பாஸ்கரன், மூர்த்தி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பல இடங்களில் பக்தர்கள் அன்னதானம், கூழ், மோர் வழங்கினர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) கெங்கையம்மன் சிரசு பெருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார்.

    அதன் பின்னர் ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதி சென்றடைந்தார். திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். 8-ம் நாளான இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேருகிறார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

    பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ×