search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆண்டவர், செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டவர் மற்றும் செல்லியம்மன் ஆகிய சாமிகள் எழுந்தருளினர். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதையொட்டி, இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 19-ந்தேதி கருடசேவை திருவிழா நடைபெற்றது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

    காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனைகள் காட்டினர். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாவட்ட கைத்தறி துறை உயர் அதிகாரி செல்வம், நகராட்சி ஆணையர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், வை.முருகேசன், ஆ.குமரன், சோ.செந்தில்குமார், மா.வெள்ளைச்சாமி, பா.கவிதா உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்து மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாக, காஞ்சீ சங்கர மடம் அருகே சென்றது. பிறகு 4 ராஜவீதிகள் வழியாக தேர் மீண்டும் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
    கோப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி ஜீயபுரம் அருகே கோப்பு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி படுகள பூஜையுடன் திருவிழா தொடங்கியது.

    பின்னர் கோவிலில் தினமும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. காளை வாகனம், பூதம், சிங்கம், மயில், யானை, காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளிவீதி உலா வருதல் மற்றும் மரகழுவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவையொட்டி நேற்று காலை குதிரை வாகனத்தில் அம்மன் அமர்ந்து தண்ணீர் பந்தலுக்கு சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

    பின்னர் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு மேற்பார்வையில், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பன்னீர்செல்வம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (புதன்கிழமை) காலை கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா செல்கிறார். நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 
    சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    சேலத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் வரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அழகிரிநாதருக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

    தேரோட்டத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் சாமி, ராஜகணபதி கோவில் முன்பு இருக்கும் தேர்நிலையம் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர்.

    இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    சேலம் கடைவீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவில் முன்பு தொடங்கிய தேரோட்டம், முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் நின்று சாமியை தரிசனம் செய்ததுடன் தேர் மீது பூக்கள் தூவினர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விருத்தாசலம் அருகே காட்டுப்பரூரில் பிரசித்திபெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பி அபிஷேகமும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் கடந்த 17-ந் தேதி இரவு நடந்தது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் ஆதிகேசவ பெருமாளுக்கும், வேதவல்லி நாச்சியாருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதனை தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் மற்றும் வேதவல்லி நாச்சியார் ஆகியோர் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் எழுந்தருளினர். பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இன்று(திங்கட்கிழமை) இரவு தீர்த்தவாரி நடக்கிறது.
    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்றழைக்கப்படும் இத்திருவிழா உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 6-ம்நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை வைகாசி விசாக தேரோட்டத்தையொட்டி காலை 11 மணிக்கு திருத்தேர் ஏற்றம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தேரோட்டம் தொடங்கியது. பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், செயற்பொறியாளர் சக்திவேல், கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிகரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், திருப்பூர் லாட்ஜ் உரிமையாளர் மகேஷ் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    கோவில் யானை கஸ்தூரி தேரை முட்டி நகர்த்திய காட்சி.

    தேரானது கிழக்கு ரதவீதியில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகளில் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது. இதற்கிடையே ரதவீதிகளில் உள்ள மேடான பகுதிகளில் தேர் வந்தபோது, கோவில் யானை கஸ்தூரி தனது தும்பிக்கையால் முட்டி தேரை நகர்த்தியது.

    தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை (திங்கட்கிழமை) இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் செய்திருந்தது. 
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவெறும்பூரில் பிரசித்தி பெற்ற நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. சிறிய மலைமீது அமைந்துள்ள இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலையில் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதி உலா வந்தனர்.

    கடந்த 10-ந்தேதி மாலை சேஷ வாகனம், அன்னவாகனத்திலும், 11-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 12-ந்தேதி மாலை கைலாச வாகனம், அன்னவாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. 13-ந்தேதி இடப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி காலை நறுங்குழல்நாயகி-எறும்பீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று மாலையில் யானைவாகனம், பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

    வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுடன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலைகோவில் வ.உ.சி. தெரு, ராஜவீதி, கள்ளர் தெரு வழியாக வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தையொட்டி வழிபாட்டு மன்றத்தினரால் தேவார இன்னிசை பாராயணம் நடைபெற்றது. அத்துடன் இளைஞர் அணி மற்றும் பொதுமக்கள் சார்பாக அன்னதானமும் நடைபெற்றது.

    மேலும் தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வருகிற 20-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோ.ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ஹேமாவதி மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர். 
    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி, கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர்.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் விநாயகர், அஸ்திரதேவரும், மற்றொரு சிறிய தேரில் அம்மனும், இன்னொரு தேரில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் எழுந்தருளினர்.

    இதைத்தொடர்ந்து பாடலீஸ்வரரின் தேரை கலெக்டர் அன்புசெல்வன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அப்போது பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் வலம் வந்தது. தேரடித்தெருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட திருத்தேர், சுப்புராய செட்டித்தெரு, சங்கரநாயுடு தெரு, சஞ்சிவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் 1.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இதில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர், அன்னதானம், சுண்டல், கேசரி ஆகியவற்றை வழங்கினார்கள். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக வழியில் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பாடலீஸ்வரருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, வேல்விழி, தலைமை எழுத்தர் ஆழ்வார், கோவில் குருக்கள் நாகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நின்றனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியளவில் தேரில் இருந்து இறங்கிய பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு தேரடியில் மண்டகபடி பூஜையும், 8.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் 10-வது நாளான இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம், திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரியும், இரவு முத்து பல்லக்குகளில் ராஜவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    11-ம் நாள் விழாவான நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும், 12-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(திங்கட்கிழமை ) காலை 6.30 மணிக்கு அறுபத்து மூவர் தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகமும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும், 13-ம் நாள் விழாவான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டேஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது.
    வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    திருச்சியை அடுத்த வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சாமி தினமும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு அழைத்து வரப்பட்டார். அதனை அடுத்து தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் திருச்சி, அதவத்தூர், வரகனேரி, அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தேர் வலம் வந்தபோது, ஆங்காங்கே சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை நடராஜர் தரிசனம், விசாக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், பிறகு பால்காவடிகள், அபிஷேகங்கள் நடைபெறும். இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துகுமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும். 
    தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது பிரம்மன் வளர்த்த யாககுண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால் இங்குள்ள சிவனுக்கு அனலாடீஸ்வரர் என்று பெயர்.

    இந்த கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. மேலும் இந்த கோவிலின் தேர் பழுதடைந்ததால் கடந்த 18 ஆண்டுகளாக இந்த கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற வில்லை. இந்த நிலையில் இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அப்போது பல லட்சம் ரூபாய் செலவில் புதியதாக தேர் தயார் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் தினமும் காலை, மாலை ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் புஷ்பரதத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து சோமாஸ்கந்தர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

    தெற்குரத வீதி, பவளக்கடைவீதி, வடக்குரத வீதி வழியாக சென்று 10.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பின்னர் இரவு தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) நடராஜர் தரிசனம், விசாக நட்சத்திர தீர்த்தவாரி, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முத்துபல்லக்கில் வீதியுலா, விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
    திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் 64 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி உறையூரில் மிகவும் பழமை வாய்ந்த பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. உதங்க மாமுனிவருக்கு சிவபெருமான் ஐந்து நிறங்களில் காட்சி அளித்ததால் இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் ஐவண்ணநாதர், பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15-ந்தேதி சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த ஆண்டு தேரோட்டத்திற்காக தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை 8.10 மணிக்கு இந்த தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சன்னதி தெரு, சவுராஷ்டிரா தெரு, டாக்கர் ரோடு, நவாப் தோட்டம் உள்ளிட்ட வீதிகளில் சுற்றிய தேர் இறுதியாக 12 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது.

    பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோவிலில் கடந்த பல ஆண்டுகளாகவே வைகாசி விசாகத்தின்போது சவுக்கு கம்புகளால் செய்யப்பட்ட சாதாரண தேரில் தான் சுவாமி வீதி உலா வந்தார். 64 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புதிதாக செய்யப்பட்ட தேரில் சுவாமி வலம் வந்ததால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
    சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
    புதுவை அபிஷேகப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்றுமுதல் நாள்தோறும் காலையில் பல்லக்கில் சாமி வீதி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடந்து வந்தது. விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது.

    அதிகாலை 5 மணிக்கு நடந்த தேரோட்டத்தில் தமிழகம், புதுவை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து “கோவிந்தா, கோவிந்தா” என்ற கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர்.

    தேர் 4 மாட வீதிகளின் வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இன்று இரவு 6.30 மணிக்கு தேரடி உற்சவமும், 10 மணிக்கு தீர்த்தவாரி அவரோ ஹணமும் நடக்கிறது. நாளை காலை மட்டையடி உற்சவமும், மாலையில் திரு மஞ்சனமும், இரவு சாமி வீதியுலாவும் நடக்கிறது. 19-ந் தேதி புஷ்பயாகமும், 20-ந்தேதி ஊஞ்சல் உற்ச வத்துடன் விழா நிறைவடைகிறது.
    ×