search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி கம்பம் சாட்டுதலும், 12-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவில் அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான மாசித்திருவிழாவின் தேரோட்டம் நேற்று நடந்தது.

    முன்னதாக 3.30 மணி அளவில் அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. 4.30 மணி அளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் தேர் சுற்றி வந்து 5.30 மணி அளவில் நிலை வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    இதற்கிடையே மேடான பகுதிகளில் தேர் செல்லும்போது, அதனை கோவில் யானை கஸ்தூரி தன் தும்பிக்கையால் முட்டி தள்ளியது. இன்று இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் மேலாளர் உமா, சித்தனாதன் சன்ஸ் ராகவன், கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் நகர் முக்கிய பிரமுகர் கள் கலந்துகொண்டனர்.
    காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் ஆகும். இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 18-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதைதொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் மணக்கோலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் தேரில் எழுந்தருளினார். இதையொட்டி பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். தேர்த்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 5.15 மணிக்கு நடந்தது. கோவில் மிராசுதாரர்கள், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், சி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர், நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... ரங்கா... என்று கோஷமிட்டபடி சென்றனர். மேலும் பெரும்பாலான பக்தர்கள் வாழை பழங்களை தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் தேர் இரவு 9.10 மணியளவில் தேர்நிலைக்கு வந்தடைந்தது.

    தேரோட்டத்தையொட்டி காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, பேரூர் செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி ஆகியோர் தலைமையில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேர் திருவிழாவில் அ.தி.மு.க. 4-வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ரங்கநாதன், மீன் குளத்தி பகவதி அம்மன் பஜனை வழிபாட்டு குழு ஆறுச்சாமி, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மனோகரன், இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ராமு, இந்து அறநிலைய துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், செயல் அலுவலர்கள் ஜெயசந்திரன், செல்வராஜ், ராமஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான க.விமலா, செயல் அலுவலர் (பொறுப்பு) லோகநாதன், கோவில் கணக்கர் மகேந்திரன் உள்பட பலர் செய்து இருந்தனர். தேரோட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகன உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா சேஷ வாகன உற்சவமும், 22-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சந்தன சேவையும் நடக்கிறது.

    23-ந் தேதி காலை 8.30 மணிக்கு வசந்த நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா முடிவடைகிறது. 
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார்.

    சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி - தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், கதிரேச ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் நிலையம் வந்தடைந்ததும், தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தது.

    தேரோட்டத்தில் கோவில் இணை ஆணையர் பாரதி, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியஆதித்தன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், குமரேச ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், முருகன் ஆதித்தன், சிவனேச ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட விழா வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

    ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ‘ஹைட்ராலிக் பிரேக்’ பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப் படுகிறது.

    மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போர் வியக்கத்தக்கது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடத்திட கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகநாதர், காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மலைக்கோட்டை அருகே நந்திகோவில் தெருவில் நாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் கற்பக விருட்ச வாகனம், காமதேனு, பூத, கமல வாகனம், கைலாச பர்வதம், அன்ன வாகனம், இடப வாகனம், யானை, பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 15-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது. 16-ந் தேதி நந்தி வாகனம், சிம்ம வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். நேற்று காலை 9.55 மணிக்கு மேஷ லக்னத்தில் பலவகையான பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி, அம்பாள் பிரியாவிடையுடன் சாமி தேரிலும், அம்பாள் அம்மன் தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்னர் பஞ்ச மூர்த்திகள் முன்னே செல்ல தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வடக்கு ஆண்டாள் வீதி, கீழ ஆண்டாள் வீதி, சின்னகடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் நந்தி கோவில் தெரு வழியாக வலம் வந்த தேர், மீண்டும் மதியம் 1 மணியளவில் நிலையை அடைந்தது.



    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) காலை மாசி மகம், நடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு இடப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருள்கின்றனர்.

    நாளை(புதன்கிழமை) சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கின்றனர். அன்று காலை நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை முட்செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், இரவு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

    இதேபோல, திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி காசிவிசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், சர்க்கார்பாளையம், திருவெறும்பூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரியும், இரவு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசி மக பெருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.45 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் முதலில் சுவாமி தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து 10.45 மணிக்கு நிலையத்தை அடைந் தது. பின்னர் 11 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து 12 மணிக்கு நிலையத்தை அடைந் தது. தேருக்கு முன்னால் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 5 கோபுரம், 5 தீர்த்தங்கள், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என அனைத்தும் 5 ஆக அமையப்பெற்றது தனி சிறப்பாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர்(விருத்தகிரீஸ்வரர்) காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தனித்தனி தேர்களில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதிகாலை 5.35 மணிக்கு விநாயகர் தேர் முதலில் புறப்பட்டது. அந்த சமயத்தில் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கிழக்கு கோட்டை வீதியில் இருந்து புறப்பட்ட தேர், தெற்கு, மேற்கு, வடக்கு வீதி வழியாக கிழக்கு வீதியில் உள்ள நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி எழுந்தருளிய தேரானது 7 மணிக்கு புறப்பட்டு, நான்கு வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது.

    அதன் பின்னர் விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. அப்போது சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் திருவாசகங்களை வாசித்தபடி முன்னே செல்ல தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதேபோல அடுத்தடுத்து விருத்தாம்பிகை அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று 4 வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.

    இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாசி மக உற்சவம் நடக்கிறது. இதில் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    செய்யாறு டவுன் திருவோத்தூரில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளான கற்பக விருட்ச காமதேனு வாகனத்திலும், 7-ந்தேதி சூரிய பிரபை, இரவில் சந்திர பிரபை வாகனத்திலும், 8-ந்தேதி பூத வாகனத்திலும், 9-ந்தேதி பெரிய நாக வாகனத்திலும், 10-ந் தேதி பகலில் அதிகார நந்தி வாகனத்திலும், இரவில் பெரிய ரிஷப வாகனத்திலும் வேதபுரீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று முன்தினம் காலை 63 நாயன்மார்கள் வீதி உலாவும், பகலில் சந்திரசேகர வாகனத் தில் சாமி வீதி உலாவும், இரவு அம்மன் தோட்ட உற்சவத் துடன் திருக்கல்யாண வைபவமும் யானை வாகன சேவையும் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை சிறப்பு ஆராதனை நடந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர், விழா குழுவினர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் வேதபுரீஸ்வரரும், 3-வது தேரில் பாலகுஜாம்பிகையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் தேர்கள் சன்னதி தெரு, ஆற்றங்கரை தெரு வழியாக சென்று கோவில் வெளிபிரகாரத்தினை சுற்றி வந்து குமரன் தெரு, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

    இன்று (புதன்கிழமை) பகலில் சந்திரசேகர சாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகனத்திலும், நாளை நந்தி வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    15-ந்தேதி பகலில் நடராஜர் உற்சவமும், மாலை தீர்த்த வாரியும், கொடி இறக்குத லுடன் ராவணேஸ்வர திருக் கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப் பாடுவுடன் பிரம் மோற்சவ விழா நிறைவடை கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் விழா குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட தேரோட்டம் நடைபெற்றது.

    திருத்தேரில் காலை 7மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 9ம் தேதி இரவு 8மணிக்கு வெட்டிவேர் சப்பரம் வீதி உலா நடைபெற உள்ளது.

    துணை சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    சுத்தூர் கிராமத்தில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் மாதேஸ்வரர் கோவிலில், சுத்தூர் மடம் சார்பில் ஆண்டுத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

    தேரோட்டத்தை துமகூரு சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க மகாசுவாமி, கொல்லாபுரத்தின் திகம்பர ஜெயின மடத்தின் லட்சுமி சேனா பட்டாரகா சுவாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேரில் மூலவரான மாதேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்கள் வெள்ளத்தில் மாதேஸ்வரர் வீற்றிருந்த தேர் முதலில் வலம் வர, அதனைத்தொடர்ந்து ஆதிகுருசிவராத்திரீஸ்வரரின் உருவச்சிலைகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் அணிவகுத்து வந்தன. தேரோட்டத்தை காண வந்த திரளான பக்தர்கள் கோவில் அருகே ஓடும் கபிலா ஆற்றில் புனித நீராடிவிட்டு பின்னர் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தில் சாமனூர் சிவசங்கரப்பா, மண்டியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிவராமேகவுடா, மந்திரிகள் பண்டப்பா காசம்பூர், வெங்கடராவ் நாடகவுடா உள்பட பலர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து காலை தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதி உலா வருகிறார். வருகிற 2-ந் தேதி கருட சேவையும், 4-ம் தேதி தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறத்தல், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தலைமைப்பதி பள்ளி அறையில் இருந்து அய்யா பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார்.

    பின்னர், அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா அமர்ந்து இருக்க பகல் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. காவி உடை அணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    தேர், கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக மதியம் 2 மணிக்கு வடக்கு ரதவீதியில் தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் பூ போன்ற பொருட்களை அய்யாவுக்கு சுருளாக படைத்து வழிபட்டனர். தேர் மாலையில் நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    ×