search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96073"

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நடந்தது.
    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    இதை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வரதராஜ பெருமாள், ஸ்ரீபூமி, ஸ்ரீநீலா தேவியர்களுக்கு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி மற்றும் ஊஞ்சல் வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. திரளான பெண்கள் புதுத்தாலி அணிந்து வழிபாடு செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மீனாட்சி, 8 திசைகளிலும் சென்று தேவர்களை வென்று இறைவன் சுந்தரேசுவரரிடம் அடையும் திக்கு விஜயம் நேற்று நடந்தது.

    சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் மற்றொரு நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மேற்கு-வடக்கு ஆடி வீதியில் இன்று காலை கோலாகலமாக நடந்தது.

    இதையொட்டி திருக்கல்யாண மண்டபம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருக்கல்யாணத்தையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுவாமி- அம்மன் சித்திரை வீதிகளில் வெள்ளி சிம்மாசன வாகனத்தில் வலம் வந்தனர். அதன் பிறகு கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

    முன்னதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வரிசையாக வந்தனர்.

    அனைத்து தெய்வங்களும் திருக்கல்யாண மேடையில் வீற்றிருந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மேடையின் வலதுபுறத்தில் பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சி அம்மன், சுவாமி-பிரியாவிடை, சுப்பிரமணியர், தெய்வானை என அமர்ந்து அருள்பாலித்தனர்.

    மீனாட்சி அம்மன் பட்டுச்சேலை அணிந்து வைர கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். சுந்தரேசுவரர் வெண்பட்டும், ஊதா நிற கல் பதித்த வைர கிரீடமும் அணிந்திருந்தார்.

    குலசேகரப்பட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிர பாண்டியர் பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேட மேற்று மாலை மாற்றி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர்.

    பழக்கூடையில் திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.



    விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், பாலிகை பூஜை, தாரை வார்த்தல், தங்கம், வெள்ளி பன்னீர் செம்புகள் மூலம் பன்னீர் தெளித்தல், கொன்றை மலர் மாலையுடன் ஆடை சாற்றுதல், சுவாமி-அம்மன் பிரதிநிதிகள் மாலை மாற்றுதல் ஆகிய பூஜைகள் நடந்தன.

    இன்று காலை 9.52 மணிக்கு மிதுன லக்கனத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. மல்லிகை மலர்களால் சுற்றப்பட்ட தங்கத்தில் வைரம் பதித்த மங்கல நாண் பக்தர்களிடம் காட்டப்பட்டதுடன், சுவாமி- அம்மன், பிரியாவிடை முன்பும் 3 முறை காட்டப்பட்டது. அதன்பின்பு வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளம் இசைக்க மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.

    அப்போது பக்தர்கள் சுந்தரேசுவரா... மீனாட்சி அம்மன் என்று முழங்கினர். மேடையின் மேல் புறத்தில் இருந்து மலர்கள் அம்மன்-சுவாமி மீது தூவப்பட்டது.

    மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டதும் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வந்திருந்த திரளான பெண் பக்தர்கள் தங்களது தாலிக்கயிறை புதிதாக மாற்றி அதில் குங்குமம் இட்டு ஒற்றிக் கொண்டனர்.

    அம்மனை தொடர்ந்து பிரியாவிடைக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை அடுத்து அக்கினி வலம் வருதல், சுவாமி-அம்மன் பிரதிநிதிகள் மேடையை வலம் வருதல், திருமாங்கல்யத்தில் தங்க பன்னீர் செம்பில் பன்னீர் தெளித்தல், நெய்வேத்தியம், ஆசீர்வாதம் என பூஜைகள் நடந்தன. அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

    திருக்கல்யாணம் முடிந்ததும் சுவாமி-அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மேடையில் இருந்து புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மகாலுக்கு சென்றனர்.

    இன்று இரவு நடைபெறும் அனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் வலம் வருகிறார்கள்.

    அப்போது மாசி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி-அம்மனை வழிபடுகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுவது மரபு. இங்கு ஆண்டுதோறும் விஷூ (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில் தமிழ் ப்புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதையொட்டி மூலஸ் தானமான தாணு மாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைந்தனர். அதனை சுற்றிலும் அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடி வைத்து அதில் தங்க ஆபரணங்கள் சூட்ட ப்பட்டன. மூலவராகிய தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமும், காய்-கனிகளும் பிரசாதமாக வழங்க ப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.

    இதுபோல், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், குமாரகோவில் குமாரசாமி கோவில் போன்ற கோவில்களிலும் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 
    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தாயுமானசுவாமி-மட்டுவார் குழலம்மை தாயாருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நலுங்கு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் மட்டுவார் குழலம்மை நந்தவனத்தில் உள்ள முக்குளம் சென்று தவசு பூஜை செய்து காத்திருந்தார். தொடர்ந்து தாயுமானசுவாமி சீர்வரிசை பொருட்களுடன் முக்குளம் சென்று அம்பாளுக்கு கொடுத்து, அலங்காரம் செய்தவுடன் மலைக்கோட்டை உள்வீதியில் திரு வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 12.45 மணிக்கு மேல் தாயுமானசுவாமி-மட்டுவார் குழலம்மை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் 1 மணிக்கு மேல் திருக்கல்யாண சடங்குகள் நடந்தன. அதையடுத்து தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திரு நாணை தொட்டு வணங்கியவுடன் சுவாமி அம்பாளுக்கு திரு நாண் பூட்டுதல் (திருக்கல்யாணம்)நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்கள் தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் மொய் செய்தனர். பின்னர் அப்பளம், வடை, பாயசத்துடன் கல்யாண விருந்து நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 5.53 மணிக்கு மேல் மீன லக்னத்தில் திருத் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சுவாமி கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்று முதல் தினமும் காலை பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், கிளி, யானை, அன்னம், பூத வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    திருவிழாவின் 6-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் தேங்காய், பழம், பூ மாலைகள் போன்ற பொருட்களை எடுத்து வந்திருந்தனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் சொல்லி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு கைலாச வாகனம், அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடாகிறார். நாளை(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி தங்க குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேே-்ராட்டம் 18-ந் தேதி(வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.

    19-ந் தேதி காலை 7 மணிக்கு தேர்கால் பார்த்தலும், நடராஜர் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடாகிறார். 20-ந் தேதி இரவு முத்து பல்லக்கும், 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சபிரகார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல்அலுவலர் ஹேமலதா மற்றும் ஊழியர்கள், பக்த பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.
    சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மதுரையில் அம்மனின் ஆட்சி நேற்று முதல் தொடங்கியது.
    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    அதன்படி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் நடந்தது. இந்த விழாவையொட்டி இரவு 8 மணி அளவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரவு 8.10 மணி அளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டது. அப்போது பச்சை நிற பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

    பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது.

    சிவபெருமானை மீனாட்சி அம்மன் போருக்கு அழைத்த சம்பவத்தை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாசி வீதியில் நடக்கிறது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் 4 கோபுர வாசல்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. இதுதவிர திருக்கல்யாண மேடை ரூ.10 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 50, 100 ரூபாய் டிக்கெட் மற்றும் புதிய உபயதாரர்கள் என 6,400 பேர் வடக்கு கோபுரம் வழியாகவும், 3,500 பேர் முன்னுரிமை அடிப்படையில் தெற்குகோபுரம் வழியாகவும், மிக முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் 11 இடங்களில் திருக்கல்யாண மொய் பணம் கோவில் சார்பில் வசூலிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அவ்வப்போது பிஸ்கட் மற்றும் சோர்வு நீங்க நீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. 
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விஷூ (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சித்திரை புத்தாண்டு கனி காணும் நிகழ்ச்சி 14-ந் தேதி நடக்கிறது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ( கேரளபுத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி மூலஸ்தானமான தாணுமாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைவார்கள். அதனை சுற்றிலும், அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடியும் வைக்கப்படும்.

    மூலவராகிய தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் அன்று ஒருநாள் மட்டும் அடுக்கி வைக்கப்படும். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடுவார்கள். மேலும், கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமாக காசும், காய்-கனிகளும் பிரசாதமாக வழங்கப்படும்.

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி 14-ந் தேதி சுசீந்திரம் கோவிலில் தோரணங்கள் கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். காலை மற்றும் மாலை வேளைகளில் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் அமரும்படி செய்து சிறப்பு ஸ்ரீபலி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.
    திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் கலந்துகொள்வதற்காக பவளக்கனிவாய் பெருமாள் 16-ந்தேதி புறப்படுகிறார். அவரோடு தெய்வானையுடன் முருகப்பெருமானும் புறப்படுகின்றனர்.
    மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி மீனாட்சி அம்மனின் அண்ணனாக கலந்துகொள்வதற்காக வருகிற 16-ந்தேதி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். அவர் தனது கையில் கென்னடி சுமந்து வருகிறார்.

    இதே சமயம் தனது தாய்-தந்தையின் திருமணத்தை கண்டுகளிப்பதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசாமியும் புறப்பட்டு வருகின்றனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து சாமியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.



    இதனையடுத்து 17-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு 4 நாட்கள் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலிலேயே தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பிறகு 19-ந்தேதி பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் தனித்தனியாக எழுந்தருளி புறப்பட்டு தனது இருப்பிடமான திருப்பரங்குன்றத்தை நோக்கி வருவார்கள்.

    அப்போதும் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் வழிநெடுகிலுமாக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்கண்கள் அமைக்கப்பட்டு சாமியை வரவேற்று பக்தர்கள் வழிபடுகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொன்றுதொட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
    குமாரசாமி கோவிலில் திருக்கல்யாணம், குறவர் படுகளத்துடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள வேளிமலை குமாரசாமி கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண விழா 24-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. நேற்று முருக பெருமானுக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மலை மேல் அமர்ந்திருக்கும் கல்யாண மண்டப விநாயகருக்கு கணபதி ஹோமமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5.30 மணியளவில் முருகன் கோவிலை அடுத்த வேளிமலையில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். அதன்பிறகு பகலில் மலையிலிருந்து முருகபெருமான் வள்ளியுடன் பூப்பல்லக்கில் கோவிலுக்குள் எழுந்தருளினார்.

    அப்போது வள்ளியை முருக பெருமான் திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வள்ளியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முருக பெருமானை வில், அம்பு, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு போர் புரிவது போன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் முருகன் வள்ளியின் உறவினர்களுடன் போரிட்டபடி மலையில் இருந்து கீழே இறங்கி வருவதும், இறுதியில் குறவர்கள் முருக பெருமானிடம் சரணடையும், புகழ்பெற்ற குறவர் படுகளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன்பிறகு வள்ளியின் உறவினர்கள் முருக பெருமானின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வள்ளியுடன், முருக பெருமான் மேற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதன்பிறகு வள்ளிக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு நடந்தது. வள்ளிக்கு சீதனமாக பட்டுச் சேலை, சீப்பு, வளையல், குங்குமம், திருமாங்கல்யம் போன்றவற்றை நார்ப்பெட்டியில் வைத்து வீதி உலாவாக கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு இரவு 7 மணிக்கு கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளிக்கு முருக பெருமான் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தினைமாவு, பஞ்சாமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை திருவிழாக்குழு மற்றும் குறவன் சமுதாயத்தினர் செய்து இருந்தனர்.

    இரவு 10 மணிக்கு சாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இதில் திருவிழாக்குழு நிர்வாகிகள் பிரசாத், மாதவன் பிள்ளை, சுனில்குமார், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ், கிருஷ்ணன் வகையை சேர்ந்த ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சோமரசம்பேட்டையை அடுத்த குமாரவயலூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா கடந்த 21-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் நாளன்று சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் பால் காவடி, மயில் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். இரவில் சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத்தொடர்ந்து 22-ந் தேதி உபய அபிஷேகங்களும், 23-ந் தேதி இரவு வள்ளி நாயகியின் தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், அதன்பின் யானை விரட்டல் காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மூர்த்திகளான முருகப்பெருமான், வள்ளி அலங்கரிக்கப்பட்டு மணமேடையில் வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்ட பின்னர், வள்ளிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் செய்து, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆலோசனையின்படி உதவி ஆணையர் ராணி, நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    சிதம்பரம் சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளினார்.
    சிதம்பரம் சபாநாயகர் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். இதையடுத்து மேள, தாளம் முழங்க சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலையில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் கோவில் கொடிமரத்தின் முன்புறம் அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    பின்னர் உற்சவரும், அம்மனும் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். இரவு 11.30 மணி அளவில் கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு மேல் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டபகபடி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இரவு திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    விழா நிறைவாக 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி அளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், குமரக்கோவிலில் மண்டகப்படியும் நடக்கிறது. மேலும் அன்றிரவு அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.
    ×