search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    இனி தான் நடிக்கும் படங்களில் அரசியலே இடம் பெறக்கூடாது என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Rajini #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். தான் நடிக்கும் படங்கள் வெளியாகும் நாளில் சென்னையில் இருப்பதை எப்போதுமே தவிர்த்து விடுவார். இந்த முறை படப்பிடிப்பை தேர்ந்தெடுத்தார்.

    ரஜினி செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கி விட்டனர். படப்பிடிப்பில் இருந்தபடியே ‘காலா’ படம் பற்றி விசாரித்தார். படத்துக்கு எல்லா தரப்புகளில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் உற்சாகம் ஆனார்.

    ரஜினி நடிக்கும் எல்லா படங்களிலும் இளமையான தோற்றத்தில் சில காட்சிகளிலாவது வருவார். அப்படி காலாவில் இல்லை. அதோடு தன் வயதுக்கேற்ற ஜோடியுடன் நடித்து இருந்தார். எனவே இந்த மாற்றங்களை தனது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தனது ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டது ரஜினிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த படத்தில் ரஜினி மொத்தமே 30 நாட்கள் தான் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது. அதில் ரஜினிக்கான காட்சிகள் திட்டமிடப்படவில்லை. இந்த படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.

    படப்பிடிப்புக்கு முன்னர் முழு கதையை படிக்கும்போதும் அதை சரிபார்த்துக்கொண்டார். காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் என்பது ரஜினிக்கு மைனசாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. எனவே சர்ச்சையை தவிர்க்க ரஜினி நடித்துவரும் படங்களில் இனி அரசியல் இருக்காது என்றே தெரிகிறது. 

    சென்னை வந்தபிறகு ஒட்டுமொத்தமாக மீண்டும் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பின்னர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கும். மாநாட்டிலேயே கட்சி பெயர் அறிவிக்கப்படலாம்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ரஜினிகாந்த் நடிக்க இருந்த கதையில் நடிகர் விஜய் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajinikanth #Vijay #Vijay62
    முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படம் ரஜினி நடிக்க இருந்த கதை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம் பல இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இருவர் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன். இவர்கள் இருவர் சொன்ன கதைகளும் ரஜினிக்குப் பிடித்திருந்தன. அதில் வெற்றிமாறன் சொன்ன கதையைக் கேட்டு முடித்ததும் `இது வங்கியில் போடும் முதலீடு போல. எப்போது வேண்டுமானாலும் இந்தக் கதையில் நடிக்கலாம். எப்போது நடித்தாலும் இந்தப் படம் வெற்றி பெறும்’ என்று கூறி வெற்றிமாறனைக் காத்திருக்க சொன்னார் ரஜினி.

    முருகதாஸ் சொன்ன கதையைக் கேட்டதும் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்ட ரஜினி `இதுதான் என் அடுத்த படம். கண்டிப்பாக இதில் நாம் சேர்ந்து எடுக்கிறோம்‘ என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். அது ஆக்‌ஷன் கலந்த அரசியல் கதை. அதை முருகதாஸ் ரஜினிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கியிருந்தார். ஆனால் முருகதாஸ் ஸ்பைடர் படத்தில் இருந்ததால் ரஜினியை இயக்கும் வாய்ப்பு மீண்டும் ரஞ்சித்துக்கே சென்று இருக்கிறது. அப்படி ரஜினிக்காக உருவாக்கிய கதையில் விஜய்யை நடிக்க வைத்துவிட்டாராம் முருகதாஸ். ஆக, ரஜினி நடிக்க இருந்த கதையில் விஜய் நடிக்கிறார்.

    காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டி போட்டு வருகிறார்கள். #Rajini
    ‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

    ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 

    ரஜினியின் ‘காலா’வை தொடர்ந்து புதிய படப்பிடிப்பு கடந்த 7-ந் தேதி தான் தொடங்கியது. டேராடூன் மற்றும் டார்ஜிலிங் என இரண்டு இடங்களிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்த கட்டமாக மதுரையில் சில காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர். 



    படத்தில் ரஜினி, விஜய்சேதுபதி இருவருக்கும் ஜோடி கிடையாது என்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க சிம்ரன், திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    கோவை:

    கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது.

    கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டசபை தொகுதிகளில் 47-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று, கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்துக் காட்டியது.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ஐ கைப்பற்றியது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதற்கு கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜெயலலிதா முன்னுரிமை வழங்கினார். அவரது நம்பிக்கைக்குரிய மாவட்டமாக திகழ்ந்ததால் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்து செயல்படுத்தினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதில் அனைத்து கட்சியினரும் குறியாக உள்ளனர். குறிப்பாக புதிய கட்சி தொடங்கியுள்ள கமலஹாசன் இந்த மாதத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மேலும் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தார்.

    கொங்கு மண்டலத்தில் கால் பதிப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனையில் அவர் இருப்பதால் கோவை சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார்.


    இதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தனது முதல் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இதற்கு முன் ஏற்பாடாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் தாங்கள் முத்திரை பதிக்க ரஜினி, கமல்ஹாசன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வும் தற்போது களத்தில் குதித்துள்ளது.

    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்ட விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் மாநாட்டை அறிவித்திருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமலை தொடர்ந்து விஜயகாந்தும் கொங்கு மண்டலத்தை குறிவைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொங்கு மண்டலம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குமா? அல்லது இவர்களுக்கு சாதகமாக அமையுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் காலா படத்தின் கனெக்‌ஷனை அடுத்த படத்திலும் பின் பற்ற இருக்கிறார்கள். #Rajini #Kaala
    ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதில் ரஜினி, கரிகாலன் என்கிற காலாவாக நடித்திருந்தார். தன் கையில் சரீனா என்ற முன்னாள் காதலி பெயரை பச்சை குத்தி இருப்பார். காதலி பிரிந்த பின்னாலும் கூட அதை அழிக்காமலேயே சரீனா நினைவிலேயே வாழும் கதாபாத்திரத்தில் தோன்றினார். 

    காலா படம் வெளியாகும் சமயம் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் ரஜினி. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் அந்த படத்திலும் கையில் பச்சையுடன் தோன்றுவது தெரிய வந்து இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ரஜினியின் புகைப்படம் ஒன்றில் புது பட கெட்டப்பில் ஒரு டீ சர்ட் அணிந்து கையில் காப்பு அணிந்திருக்கிறார். ஏதோ ஒரு பெயரை பச்சையும் குத்தியும் இருக்கிறார். 



    காலாவில் கையின் உள்பக்கமாக பச்சை குத்தி இருந்தவர் இதில் அதே வலது கையில் பின்பக்கமாக பச்சை குத்தி இருக்கிறார். ரஜினி இதற்கு முன் ‘முத்து’ படத்திலும் கையில் காப்புடன் நடித்து இருந்தார். அந்த காப்பு மணிக்கட்டு அருகில் காணப்படும். அதை வைத்து சண்டை இடுவார். ஆனால் இந்த படத்தில் காப்பு முழங்கைக்கு மேலே இருக்கிறது.
    ரஜினி இனி அடுத்த படம் வரும்போதுதான் வருவார் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். #Elangovan #Rajinikanth

    கரூர்:

    கரூர் அருகே உள்ள புலியூர் செட்டிநாடு விருந்தினர் மாளிகையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷனை கவர்னர் நியமித்தார். அந்த விசாரணை கமி‌ஷன் எந்த உண்மையை கண்டுபிடித்தது என தெரியவில்லை.

    தமிழக கவர்னருக்கும், நிர்மலாதேவிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெளிவாகவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது சோனியா காந்தி உடனே அவரை பதவியில் இருந்து நீக்கினார். அதே போன்று மோடியும் தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்கவேண்டும்.

    மாவோயிஸ்டுகள் பிரதமர் மோடியை கொல்ல முயற்சி செய்தாலும் தவறுதான். அவர்களை அடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மாணவர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தகூடாது.

    தமிழக காங்கிரசில் மாற்றம் ஏதும் ஏற்படுமானால் அதனை ராகுல் காந்தி அறிவிப்பார். அவர் யாரை வேண்டுமானால் புதிய தலைவராக நியமிக்க முடியும். ஆனால் தமிழக காங்கிரசார் தற்போது சோர்வாக இருப்பது உண்மை. அவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் வேலை வாங்கவில்லை.


    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டிற்கு சென்றது தவறு. அவர் தனது கடைசி காலத்தில் இப்படி திசை மாறிச்சென்றது வெட்கக்கேடானது. காங்கிரசுக்கு அவர் துரோகம் செய்தார் என்பதை விட இந்திய மக்களுக்கு இந்தியாவின், மதச்சார்பற்ற கொள்கைக்கு துரோகம் செய்துவிட்டார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    எனவே தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு குளு கோஸ் தேவை. தமிழக அரசின் செயல்பாடு ஜீரோவாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுருட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பதவியில் உள்ள நீதிபதியே ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஒப்பானது என கூறியுள்ளார். அதனை புதிதாக முளைத்துள்ள அரசியல் தலைவர் என சொல்லிக் கொள்பவர் (ரஜினி) அதில் பயங்கரவாதிகள் பங்கேற்றனர் என கூறியுள்ளார். தற்போது அவர் நடித்த படம் வெளியாகிவிட்டது. இனி அடுத்த படம் வெளியாகும் போது தான் அவர் பேசுவார் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Elangovan #Rajinikanth

    ரஜினியின் காலா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தியேட்டருக்கு வந்து கொண்டாடி இருக்கிறார்கள். #Kaala #Rajini #Rajinikanth
    ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். 

    இப்படத்தில் ரஜினி படம் முழுக்க கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தே வருகிறார். மும்பை தாதாவான அவரது இந்த தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் ரஜினியின் காலா தோற்றத்திலேயே தியேட்டர்களுக்கு வந்திருந்தனர்.



    கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து தியேட்டர்களில் அவர்கள் தெறிக்க விட்டனர். இதனால் தியேட்டர்களில் திரும்பிய திசையெல்லாம் கருப்பு வண்ணமாகவே காணப்பட்டது. இப்படி காலா உடையில் வந்த ரசிகர்கள் பலர் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த ‘‘காலா ரஜினி’’ கட்அவுட்டுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
    ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்க சென்ற இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்க வில்லை என்று கூறியிருக்கிறார். #Kaala #Ranjith #Rajini
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். ரசிகர்களின் உற்சாகத்தை இயக்குனர் பா.ரஞ்சித் திரையரங்குக்கு சென்றிருக்கிறார்.

    ரசிகர்களின் உற்சாகத்தில் திகைத்துப் போன இயக்குனர் ரஞ்சித், இப்படம் குறித்து கூறும்போது, ‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.
    ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் ‘காலா’ படத்தை கர்நாடகா திரையரங்குகளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். #Kaala #Rajini
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.  இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத் மற்றும் நடிகைகள் ஈஸ்வரிராவ், ஹீமா குரேஷி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின்னர் வெளியாகும் படம் என்பதனால் ரசிகர்களிடையே பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் காலையிலேயே திரையரங்குகள் முன் ரசிகர்கள் குவிந்தனர்.

    காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு தடை விதிக்கும்படி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்திற்கு தடை விதித்தது.

    எனினும், காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், காலா படம் உலகெங்கிலும் இன்று வெளியானது.



    இதேவேளையில், கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து திரும்பி செல்ல செய்தனர்.
    தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹீமா குரேசி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காலா’ படத்தின் விமர்சனம். #Kaala #Rajini
    மும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. மகன், மருமகள் என அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார் நானா படேகர். 

    தனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வரும் ரஜினியின் இளைய மகன், சம்பத்திடம் தட்டி கேட்டு போராட்டம் நடத்துகிறார். இதனால் அங்கு பிரச்சனை நடக்க, ரஜினி வந்து சம்பத் ஆட்களை அடித்து விரட்டுகிறார். பின்னர் எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.



    இதனால், அசிங்கப்படும் சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இவர் சொல்லும் திட்டத்தில் மக்களுக்கான நல்ல விஷயம் இல்லாததால் ரஜினி எதிர்க்க ஆரம்பிக்கிறார்.

    இறுதியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி எப்படி சமாளித்தார். தாராவி மக்களை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் காலாவாக வரும் ரஜினி தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், மக்களை எதிர்ப்பவர்களுக்கு சூரனாகவும் நடித்திருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனா மேலோட்டமான ரொமன்ஸ் என நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். நானா படேகரை எதிர்க்கும் போது மிரட்டலான நடிப்பில் இளமையான ரஜினியை பார்க்க முடிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது வருந்துவது நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார். நடன காட்சியில் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

    அரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அபாரம். சின்ன சின்ன முக அசைவில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். முக்கிய காட்சிகளில் கூட எளிதாக நடித்து அசால்ட் பண்ணியிருக்கிறார். சம்பத் மற்றும் ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 



    ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    தாழ்த்தப்பட்டவர்களின் வலியையும் உணர்வையும் ரஜினி மூலமாக தத்துரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினியை கையாண்ட விதம் அருமை. அரசியல் சார்ந்த கதையை தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் தலைவனையும், மக்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். 



    சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘காலா’ கிங்.
    ரஜினி நடித்துள்ள காலா படத்தை தடை விதிக்க கோரி ராஜசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் நாளை (7-ந் தேதி) வெளியாகிறது. உலகம் முழுக்க படத்துக்கு வரவேற்பும், கர்நாடகாவில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், “காலா படத்தின் கதையும், தலைப்பும் என்னுடையது. எனவே ‘காலா’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் ஏற்கெனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. #Kaala #Rajini
    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ பாடத்திற்கு கர்நாடகாவில் எழுந்து வந்த சிக்கல் தீர்ந்து, 130க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. #Kaala #Rajini
    ரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. 

    காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. 

    காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

    இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.
    ×