search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Rajini #Kaala
    காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

    ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’ என்றார்.
    கர்நாடகாவிற்கு சென்ற கமல்ஹாசன், காலா படத்துக்கு தடைவிதித்தது குறித்து பேசாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #Kamal #PrakashRaj #Kaala
    நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவுக்கு சென்று முதல்-அமைச்சர் குமாரசாமியை சந்தித்தார். அப்போது காலா படத்துக்கு கர்நாடகாவில் தடைவிதித்தது குறித்து அவர் பேசாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    இதற்கு பதில் அளித்த கமல் ‘காலாவை விட, காவிரி முக்கியம்’ என்றார். இதற்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதுபோல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார்.

    நான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா, ம.ஜ.த என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோதிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட நடிகர் சத்யராஜ், ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். #Rajini #SathyaRaj
    பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

    நீங்கள் அரசியலில் குதித்து விட்டீர்கள். அப்படியே உள்ளே இறங்குவற்கு பெயர்தான் அரசியல். நீங்கள் வியாபாரத்துக்கு உள்ளே வந்துவிட்டு அதுக்கு ஏதோ ஒரு பெயர் வைக்க கூடாது. அந்த வியாபாரத்துக்கு ஆன்மீக அரசியல் அப்படின்னு பெயர். அந்த வியாபாரத்துக்கு, எனக்கும் கூட, நான் நினைத்த வரைக்கும் ஆன்மீக அரசியல்னா என்னான்னு எனக்கு தோணுதுன்னா... இரும்புக்கரம் கொண்டு அடக்குவதல்ல ஆன்மீக அரசியல். அன்புக்கரம் கொண்டு அடக்குவதுதான் ஆன்மீக அரசியல்.

    எனக்கு தெரிந்து ஆன்மீகம் என்றால் அன்பு. நாம் நிம்மதியைத் தேடி மலைக் கெல்லாமா போகிறோம். நமக்கு தெளிவாக இருக்கிறது. இந்த பெரியார் திடலில் படித்தவர்கள் நாம். இப்படியே நிம்மதியாகத்தான் இருப்பேன். எனக்கு எங்கேயும் போக வேண்டாம். காலையில் பல் விலக்கும் போது நிம்மதியாக விலக்குவேன். ஷேவ் பண்ணும் போதும் நிம்மதியாக ஷேவ் செய்வேன். இட்லி-தோசை சாப்பிட்டாலும் நிம்மதியாக சாப்பிடுவேன்.

    தெளிவாக இருக்கிறேன். அய்யா கொடுத்த அறிவு. தந்தை பெரியார் கொடுத்த அறிவு. ஒரு பஞ்ச் டயலாக் கூட அய்யாவை வைத்துத்தான் பேசுவேன். எனக்கு தலையில் முடி இல்லையேன்னு சொன்னாங்க. நாங்கள் எல்லாம் தலைக்கு மேல இருக்கிறதை நம்பி வாழ்றவங்க இல்லை. தலைக்கு உள்ளே இருக்கிறதை நம்பி வாழ்றவங்க. தலைக்கு மேல இருக்கிறது என்பது பரம்பரை. ஆனால் உள்ளே இருக்கிறது அய்யா கொடுத்தது. அது கொட்டாது, வளர்ந்துகிட்டே தான் இருக்கும்.



    தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து தான் நம்பிய கொள்கைக்காக தான் நம்பிய சுயமரியாதை கொள்கைக்காக அப்படியே களத்தில் இறங்கி, நம் எதிர்காலம் என்னாகும், நம் தொழில் என்னாகும், சிறைக்கு போவோமா, மாட்டோமா, அப்படிங்கிறதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வருவதற்கு பெயர்தான் அரசியல்.

    அதுதான் சமூக சேவை. திட்டம் போட்டு கணக்கு போட்டு அரசியலுக்கு வருவது அரசியல் அல்ல. அதுக்கு பெயர் வியாபாரம். கடைசியாக இருக்கிற நீதியும் கைவிட்டு விடும் போதுதான் சமுதாயம் புரட்சி மீது நம்பிக்கை வைக்கிறது.

    போராட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பது ஒரு நாடு சுடுகாடாக மாறுவதற்காக அல்ல. நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத் தான் போராட வேண்டியது இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திரையிட கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு தொடர்பாக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா இன்று கருத்து தெரிவித்துள்ளார். #Kaala #BJPsupportsKaala
    ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ரஜினி தெரிவித்திருந்த கருத்துகளை முன்வைத்து, இந்தப் படத்தை திரையிடப் போவதில்லை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்துள்ளது.

    இந்த தடையை மீறி கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியானால் இங்குள்ள சில கன்னட அமைப்பினரால் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என்ற அச்சத்தில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திரையிட கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு தொடர்பாக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

    சிக்மகளூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈஸ்வரப்பா, ‘அவர்கள் (அரசியல் உள்ளிட்ட) எந்த துறையில் இருந்தாலும் கலைஞர்கள் இந்த நாட்டின் சொத்து. அவர்கள் ஒரு மொழிக்கோ, பிராந்தியத்துக்கோ மட்டும் உட்பட்டவர்கள் அல்ல என்று குறிப்பிட்டார்.

    மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் இந்த கர்நாடக மாநில மக்களுக்கு மட்டுமே சொந்தக்காரராக இருந்ததில்லை. நாட்டின் பல பகுதிகளில் பல விருதுகளை அவர் பெற்றுள்ளர். எனவே, கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எப்போதுமே ஒட்டுமொத்த நாட்டுக்குமே சொந்தமானவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார். #BJPsupportsKaala
    ரஜினியின் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Kaala #Rajini #Dhanush
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

    கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. 



    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயற்சிப்பதாக கமல்ஹாசன் மீது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார். #Rajini #Kamal
    காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


    மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை கமல்ஹாசன் உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.


    ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. 

    சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம். இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றிருந்த நிலையில் ஒத்துழையாமை, சாத்விக சட்ட மறுப்பு, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, தேசியக் கல்வி போன்ற தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் காந்தி மக்கள் கருத்தை மாற்ற முயன்றார். அடங்கிக் கிடப்பதுதான் ஆண்டவன் எழுதி வைத்த விதி என்ற நம்பிக்கையில் ஒடுங்கிக் கிடந்த அடித்தட்டு மக்களிடம் தன் உரிமை சார்ந்த சொந்தக் கருத்துகளின் மூலம்தான் புரட்சிக் கனலை அண்ணல் அம்பேத்கார் மூட்டினார். 

    தன்மான உணர்வின்றித் தலை தாழ்ந்து கிடந்த தமிழரிடையே பகுத்தறிவு சார்ந்த தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் "அறிவும் மானமுமே மனிதற்கு அழகு" என்று பெரியார் சமூக மாற்றத்திற்கு வித்திட்டார்.  ரஜினிகாந்த் காந்தியும் இல்லை; அம்பேத்கரும் இல்லை; பெரியாரும் இல்லை. ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை. 



    காந்தியின் சீடர் என்று அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் பெரிய தொழில்கள் காந்தியின் கனவு என்கிறார். கிராமக் கைத்தொழில்களும், சிறு குறு தொழில்களும், வேளாண்மையும் பல்கிப் பெருகுவதன் மூலமே அனைத்து மக்களும் வறுமையற்ற வாழ்வை அடைய முடியும் என்று இடையறாமல் வலியுறுத்திய காந்தி பெருந்தொழில்களுக்கு எதிராகவே இறுதிவரை போராடினார். கமல்ஹாசன் இனியாவது காந்தியப் பொருளாதாரம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது. சமூக வலைத்தளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படம் தொடர்பாக ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Kaala #Rajini
    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் வியாழன் ரிலீசாக இருக்கிறது. இதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் ரஜினிக்கு அனுப்பி இருக்கும் வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

    காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனது கட்சிக்காரரின் தந்தை திரவியம் நாடார் 1957-ல் தூத்துக்குடியில் இருந்து மும்பை சென்றவர். தூத்துக்குடி அப்போது கடும் வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவதிப்பட்டதால் புலம்பெயர்ந்தார்.

    இயல்பிலேயே உதவும் குணம் கொண்ட அவர் மும்பை தமிழர்களுக்காக பாடுபட்டவர். அவரது காலகட்டத்தில் மும்பையில் வாழ்ந்த தமிழர்கள் பல கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு காவலராக விளங்கியவர்.

    “இந்தப் படத்தின் கதை என்னுடைய அப்பா தொடர்பானது என்று தெரிகிறது. தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற என் தந்தை தாராவி தமிழ் மக்களுக்கு பல நல்ல வி‌ஷயங்களை செய்துள்ளார். அவர்களை பொறுத்தவரை அவர் தெய்வம். அவரை அங்குள்ள மக்கள் காட்பாதர் எனப் பொருள்படும் வகையில், ‘காத்வாலா சேட்’ என்றே அழைப்பர்.

    காலா படத்திலும் அது குறித்து கூறப்பட்டுள்ளது. அதோடு என் தந்தை சர்க்கரை வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆளாக திகழ்ந்தவர். இதுவும் படத்தில் வருகிறது.

    ஆனால், நிஜத்திற்கு விரோதமாக படத்தில் காட்வாலா சேட் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது. என் தந்தை சட்ட விரோதமான செயல்கள் எதிலும் ஈடுபடாதவர்.

    எனவே இப்படத்தால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கும் காலாவுக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு நடிகர் ரஜினி மற்றும் தனுஷ், 36 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும், விளக்கமும் அளிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும். படம் வெளியாக அனுமதிக்க மாட்டேன். அவதூறுக்காக ரஜினி ரூ.101 கோடி தரவேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படக்குழுவினர், ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். #Kaala
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

    இப்படத்தின் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் காலா எமோஜி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காலா படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டது. 

    இந்த நிலையில், இன்று காலை மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தில் இடம் பெறும் ‘கண்ணம்மா...’ என்ற பாடலின் புரமோ வெளியானது. தற்போது காலா புரமோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். 



    இந்த புரமோவில், ‘நான் காலா... எமன், எமராஜ்’ என ரஜினி பேசும் வசனம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். #Kaala #Rajinikanth
    கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #kaalaissue
    பெங்களூரு:

    நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளது. தமிழக அரசியலில் ரஜினி தம்மை நிலைப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் காலா திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்து அறிவித்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பேசிய ரஜினி, கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தை தென்னிந்திய வர்த்தகசபை பார்த்துக்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் முதல்வர் குமாரசாமிக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ரஜினியின் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை எனவும், மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். #kaalaissue
    தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி கூறியுள்ள துணிச்சலாக கருத்து வரவேற்கத்தக்கது என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan
    கோவை:

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்க மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ராஜ்வர்தன் ரத்தோர் இன்று கோவை வந்தார்.

    அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தமிழகம் முழுவதும் மத்திய மந்திரிகள் விளக்க இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதுகுறித்து எதிர்கருத்துகள் வந்தால் அதை தாங்கி கொள்ளாமல் மிக மோசமான விமர்சனம் செய்யும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.

    பொதுமக்கள் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை திசைதிருப்பி வரம்பு மீறச் செய்து அதை அபாயக்கட்டத்தில் கொண்டு போய் விடுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    போராட்டத்தின் போது சமூக விரோதிகள் கலந்திருக்கிறார்கள் என்ற பா.ஜ.க. மற்றும் ரஜினி சொல்லும் போது மற்ற கட்சிகள் ஏன் எதிர்த்து பாய்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களை கொச்சைப்படுத்துவதாக சொல்லி கொந்தளிக்கிறார்கள்.

    பஸ் மீது, கலெக்டர் அலுவலகம் மீது தீ வைத்தது மற்றும் ஆயுதம் ஏந்தி போராடியதெல்லாம் மக்கள் தானா? அப்படியென்றால் நீங்கள் தான் மக்களை கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியும். போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்று தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் பேசி வருகிறார்கள். இது தவறு.



    ஸ்டெர்லைட்டில் அபாயம் இருப்பதற்கு காரணம், 40 ஆயிரம் டன் காப்பர் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியின் போது ஸ்டெர்லைட் நிர்வாகம் பெற்ற ஊக்கம் தான். அதுதான் அவர்களை 4 லட்சம் டன் காப்பரை உற்பத்தி செய்ததன் விளைவு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தி.மு.க. ஒப்புக்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் சொன்னது போல தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு பல உதவிகள் கிடைத்தது உண்மை தான். அதை மறைக்க அவர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    போராட்டம் மட்டுமே தமிழகத்தில் சோறு போடும் என எல்லா கட்சிகளும் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைதியாக வாழக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யும் நாடகத்தை எல்லா கட்சிகளும் நடத்தினால் தமிழக மக்கள் அதை புறக்கணிப்பார்கள். மிக மோசமான முன் உதாரணத்தை தமிழக அரசியலில், சட்டமன்ற வரலாற்றில் ஸ்டாலின் படைத்து வருகிறார். இப்படி வெளிநடப்பு செய்தால் தமிழக மக்கள் நலன் புறக்கணிப்படுகிறது.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1996-ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டம் இந்த நிலைக்கு மாறியது சமூக விரோதிகளால் தான். தற்போது எனக்கு கடுமையாக விமர்சனங்கள் வருகிறது. தொலைபேசியில் மிரட்டல்கள் வருகின்றன.

    யாரெல்லாம் சமூக விரோதிகளை சொன்னால் கோபப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்கள். ரஜினி துணிச்சலாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது. உடனே அவர் பின்னால் பா.ஜ.க., அ.தி.மு.க. இருக்கிறது என்று சொல்லக் கூடாது. சினிமாவில் வேண்டும் என்றால் அவருக்கு டப்பிங் பேசலாம். உண்மையான அரசியலில் அப்படி இருக்க முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு காரணம் தி.மு.க., காங்கிரஸ் தான். அதற்கு முழு பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் முடிந்த பிறகு வேறு எந்த பிரச்சினையை தேடலாம் என்று எதிர்கட்சிகள் யோசிப்பார்கள். இதனால் தான் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடி இருக்கின்றன. இனிமேல் தான் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும்.

    விஞ்ஞான பொருளைக் கண்டுபிடிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார்கள். கெயில் திட்டத்தை கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தை சுடுகாடாக மாற்றத்தான் பல போராட்டங்கள் இருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பல உதவிகளை செய்தார். மக்களுக்கு பாதிக்கப்படுகின்ற திட்டங்களை மத்திய அரசு ஒப்புக் கொள்ளாது.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விடும் என்பதால் சமூக வலைதளங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெண் தலைவர் என்று கூட பார்க்காமல் வரம்பு மீறி தரக் குறைவாக விமர்சனங்களை செய்கின்றனர்.

    இதை நாங்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டோம். எங்கள் வேலையை திறம்பட செய்வோம். என்னை பற்றி வரம்பு மீறி பேசினால் அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan

    போராட்டத்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு, போராடவே கூடாதென்று ரஜினி சொல்லவில்லை என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். #Kaala #Ranjith
    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘காலா’. இப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயத்துடன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் இயக்குனர் பா.இரஞ்சித்.

    அப்போது, போராட்டத்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று ரஜினிகாந்த் நேற்று கூறியது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த பா.இரஞ்சித், “அது அவருடைய கருத்து. போராட்டத்தில் தான் நான் இருக்கிறேன். போராட்டத்தின் மூலமாகத்தான் இங்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரஜினி சாரும் ‘போராட்டமே கூடாது’ எனச் சொல்லவில்லை. காலையில் அவரிடம் பேசினேன். ‘போராட்டமே வேண்டாம் என்று நான் பேசவில்லை. 



    ஆனால், போராட்டத்தில் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது’ என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார். போராட்டமே கூடாது என்றால், நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெறமுடியும். நிச்சயமாகப் போராடுவோம்” என்று தெரிவித்தார்.
    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தை எதிர்த்து போராட்டம் நடித்துவோம் என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். #Kaala #Rajini
    ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்பது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    ‘குசேலன்’ படப்பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுந்தபோது அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்தார். தற்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறி அரசியல் தலைவர் ஆகிவிட்டார். அவர் தனது அரசியல் லாபத்திற்காக காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

    கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவர் நடித்த ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக ரஜினிகாந்த் ஆணித்தரமாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், காவிரி நதி நீர் பங்கீட்டு அதிகாரங்களை காவிரி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

    மேலும் அவர், காங்கிரஸ் -ஜே.டி.எஸ். கூட்டணி அரசு காவிரி நீரை விவசாயிகளுக்கு திறந்து விட வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கர்நாடகாவில் ‘காலா’ படம் திரையிட தடை விதிப்பதாக கன்னட அமைப்புகள் அறிவித்து உள்ளன.
    ×