search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    ஐ.சி.எப்.பில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இளம்பெண் மற்றும் மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், தாகூர் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவர், அண்ணன் மகளான 2-ம் வகுப்பு படிக்கும் சுசியுடன் (8) ஐ.சி.எப். சிக்னல் அருகே சாலையில் நடந்து வந்தார்.

    அப்போது அதிவேகத்தில் தாறுமாறாக வந்த கார் திடீரென விஜயலட்சுமி, சுசி மீது பயங்கரமாக மோதியது. பின்னர் தறிகெட்டு ஓடி சாலையோர நடைபாதையில் மோதி நின்றது.

    இதில் விஜயலட்சுமிக்கும், சுசிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து தாக்கினர். மேலும் காரின் கண்ணாடிகளையும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பலத்த காயம் அடைந்த விஜயலட்சுமி, சுசிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அயனாவரத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகனான கல்லூரி மாணவர் சரணை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்த அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர் காரை அதிவேகமாக ஓட்ட ரூ.2 லட்சம் வரை செலவு செய்து காரை மாற்றி வைத்து இருந்தார்.

    கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ராமநாதபுரம்:

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது60). இவர் தனது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக மனைவி அம்பிகா (56) ஆகியோருடன் காரில் நேற்று ராமேசுவரத்துக்கு புறப்பட்டார்.

    அவர்களுடன் பரமக்குடி அருகே உள்ள அரியக்குடி, போகலூரைச் சேர்ந்த உறவினர்கள் சித்திவிநாயகம், சுரேஷ் குடும்பத்தினரும் சென்றனர்.

    சாமிகும்பிட்ட பின் இன்று காலை ராஜேந்திரன் குடும்பத்துடன் காரில் ஊருக்கு புறப்பட்டார். பகல் 11 மணிக்கு ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வந்த சுற்றுலா வேன் எதிர்பாராத விதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார்-வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.

    காரில் பயணம் செய்த ராஜேந்திரன், சித்திவிநாயகத்தின் மகன்கள் திருமுருகன் (3), சாய்ராம் (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    சித்திவிநாயகம், அவரது மகள் சாதனாஸ்ரீ (6), உறவினர்கள் ராகசுதா (26), அம்பிகா, சுரேஷ் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல் வேனில் பயணம் செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த 21 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த உடனேயே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மருத்து வனைக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திலேயே அம்பிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விருத்தாசலம்:

    பண்ருட்டியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று இரவு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திருக்கோவிலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் சென்றது. இந்த காரில் 2 பெண் உள்ளிட்ட 4 பேர் வந்தனர்.

    இந்நிலையில் இந்த கார் அரசகுழி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்தினால் அப்பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பால் வியாபாரியை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரை சேர்ந்தவர் ரமேஷ் (35). பால் வியாபாரி. நேற்று இரவு பால் எடுக்க தொண்டாமுத்தூரில் இருந்து விராலியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விராலியூர் அருகே வரும் போது சாலையின் எதிர்புறம் திடீரென வந்த ஒற்றை காட்டு யானை சுரேஷை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த பகுதியில் யானையை விரட்டும் பணியில் இருந்த வனத்துறையினர் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது ரமேஷ் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ரமேசை மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத் திரிக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேசின் மோட்டார் சைக்கிளையும் யானை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. உயிர் பலி வாங்கிய யானை தொடர்ந்து நரசீபுரம் விராலியூர் பகுதியில் முகாமிட்டு இருக்கிறது.

    விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வரும் அந்த யானை தற்போது உயிர் பலி வாங்கி உள்ளது. எனவே கும்கி யானையை கொண்டு உடனடியாக ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் துரத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    திருச்செந்தூரில் மரத்தில் கார் மோதிய விபத்தில் பாளையை சேர்ந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருச்செந்தூர்:

    பாளை அன்புநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது46). இவர் தனியார் டி.டி.எச்-ல் மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை இவர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு சென்றார். காரை பாளை சமாதானபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.

    கார் திருச்செந்தூர் அருகே உள்ள நட்டங்குளம் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக கார் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே உள்ள 4 வழிச்சாலையில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 60). இவர், சைக்கிளில் 4 வழிச்சாலையை கடந்த போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரத்தில் விபத்து நடந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை.

    பலியான நாகலிங்கத்தின் உடல் அங்கேயே கிடந்த நிலையில், வேறு சில வாகனங்களும் ஏறிச் சென்றன. இதனால் உடல் சிதைந்து விட்டது.

    கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள பரம்புபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    4 வழிச்சாலையில் ராஜேந்திரன் நடந்து சென்ற போது ராஜபாளையத்தில் இருந்து திருப்புவனம் சென்ற தனியார் பஸ் மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேபாளம் நாட்டின் நவல்பரசி மாவட்டத்தில் இன்று ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். #Indianamongsixkilled #Nepalbusaccident
    காத்மான்டு:

    நேபாளம் நாட்டின் முதலாம் மாகாணத்தில் உள்ள சன்சாரி மாவட்டத்திற்குட்பட்ட இட்டாஹரி நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் இன்று ஒரு பஸ் பைராஹாவா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மத்யா-பிந்து நகராட்சிக்கு உட்பட்ட சாலை வழியாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்,சாலையை விட்டு விலகிச்சென்று பக்கவாட்டில் உள்ள அருன் ஆற்றுக்குள் விழுந்தது.

    இந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிதானந்தா யாதவ் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 36 பேர் பாரத்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Indianamongsixkilled  #Nepalbusaccident 
    வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உடல் நசுங்கினர்.

    வேடசந்தூர்:

    சேலத்தை சேர்ந்த 3 குடும்பத்தினர் நெல்லைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஒரு வேனில் நெல்லை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று விட்டு சேலம் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. செண்டர் மீடியனை தாண்டி எதிர்புற சாலையில் ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணம் செய்த 16 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் மற்றும் கரூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேப்பனஹள்ளி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆஸ்டீன் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது உறவினர் வசந்தகுமார். இவர்கள் 2 பேரும் தங்களது, உறவினர்களான மேரிவைலட்(65), டாரஸ் (48), ஏஞ்சல் (18), அனிதா (18) உள்பட 9 பேருடன் இன்று காலை பெங்களூருவில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு பிரார்த்தனை முடித்து விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர். அப்போது காரை வசந்தகுமார் ஓட்டி சென்றார். காரை நாகமங்கலத்தில் இருந்து கெலமங்கலம் வழியாக செல்லாமல் சூளகிரி வழியாக தவறுதலாக சென்று விட்டனர்.

    சூளகிரி அருகே கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது அந்த பகுதியில் உள்ள ஒரு யு வடிவ வளைவில் ஒசூரில் இருந்து ஒரு லாரி திரும்பியது.

    இதனை சற்று எதிர்பாராத வசந்தகுமார் காரை வேகமாக சென்று லாரி நடுவில் மோதி விட்டார்.

    இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த மேரி வைலட், அனிதா, ஏஞ்சல் ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் டாரஸ், ராஜன், காரை ஓட்டி வந்த வசந்தகுமார், அவரது 6 மாத ஆண் குழந்தை உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் சூளகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் டாரஸ் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 5 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    திண்டிவனம்:

    சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). இவர் சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    அந்த நிறுவனத்தில் ஜான்சாமுவேல் (29) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு இவர்கள் 2 பேரும் குடும்பத்துடன் ஊட்டி செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி விஜயகுமார், அவரது மனைவி சபரி (25), 8 மாத பெண் குழந்தை நானி மற்றும் விஜயகுமாரின் அத்தை ராமலட்சுமி (45), ஜான்சாமுவேல், அவரது மனைவி வின்சி (24) ஆகிய 6 பேரும் சென்னையில் இருந்து ஒரு காரில் ஊட்டிக்கு புறப்பட்டனர்.

    அங்கு அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னைக்கு அதே காரில் புறப்பட்டனர். காரை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த கார் இன்று அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    ஜான்சாமுவேல், வின்சி, 8 மாத குழந்தை நானி, கார் டிரைவர் அருண் ஆகிய 4 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் நட ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி டிரைவர் பஸ்சைஅதிவேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் கூறியுள்ளனர்.
    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த 13 பேர் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே குதித்து உயிர்தப்பினர்.

    இந்தவிபத்து குறித்து உயிர்தப்பிய பயணிகள் கூறியதாவது:-

    பஸ் சென்னையில் இருந்து புறப்பட்டபோதே பஸ்சின் டிரைவர் பஸ்சை அதிவேமாக ஓட்டி சென்றார். இதனால் நாங்கள் அச்சத்துடன் பயணம் செய்தோம்.

    சில பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் லாரி மீது பஸ் டமார் என்று மோதியது. சிறிது நேரத்தில் லாரியும், பஸ்சும் தீ பிடிக்க தொடங்கியது.

    இதில் நாங்கள் அனைவரும் கூச்சல் போட்டு அலறினோம். பின்னர் ஜன்னலை உடைத்து கீழே குதித்து உயிர்தப்பினோம். பஸ் டிரைவர் வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது.

    ஆம்னி பஸ் டிரைவர்கள் அனைவரும் மின்னல்வேகத்தில் ஓட்டிசெல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். வேகமாக ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அஜீஸ்நகர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள வளைவு பகுதியில் செல்லும்போது பஸ் டிரைவர்கள் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் டிரைவர்களின் கட்டப்பாட்டை இழந்து பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது.

    மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் எரிவதில்லை. இதனால் இரவில் வரும் வாகனங்கள் அந்த பகுதியில் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.

    எனவே அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். மேலும் ஆம்னி பஸ்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில் தீ பிடித்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மதுரை நோக்கி புதுவை பதிவு எண் கொண்ட என்.எல்.எல். என்ற ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர். மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த டிரைவர் அலெக் சாண்டர் (வயது 59) பஸ்சை ஓட்டி சென்றார்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூரை நோக்கி சிமெண்ட் ஏற்றிய டேங்கர் லாரி வளைவில் திரும்பியது.

    கண்இமைக்கும் நேரத்தில் வேகமாக சென்ற பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் டீசல் டேங்க் டமார் என்று பயங்கர சத்ததுடன் வெடித்தது.

    இதனால் பஸ்சும், லாரியும் திடீரென்று தீ பிடிக்க தொடங்கியது. தூங்கி கொண்டிருந்த பயணிகள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சல் போட்டனர்.


    பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். பஸ் முழுவதும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உள்ளே இருந்தவர்கள் கூக்குரல் போட்டு அலறினர். பின்னர் சிலர் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியாக கீழே குதித்தனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 3 பேர் மற்றும் டேங்கர் லாரி டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1) ஆம்னி பஸ் டிரைவர் அலெக்சாண்டர் (53), அலங்காநல்லூர், மதுரை.

    2) சக்திவேல் (58), பஸ் டிரைவரின் உதவியாளர், பராசக்தி நகர், மதுரை.

    3) மோனிஷா (23)விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை.

    4) லாரி டிரைவர் முருகன் (53), நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி.

    இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1) செல்வநாயகி (60), செங்கல்பட்டு.

    2) தமிழ்ச்செல்வன் (30), புதுக்கோட்டை.

    3) கேசவன் (30), மதுரை.

    4) தியாகு (28), மதுரை.

    5) வைதேகி (56), மதுரை உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மங்கலம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×