search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • பழனி மலை மீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.
    • திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.

    மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

    பெயர் காரணம் :

    பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை "ஞானப்பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

    இதேப்போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.

    மகன் கோபித்துக்கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக்கோவில் தல புராணம் கூறுகிறது.

    மலை உருவான கதை :

    பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப்பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

    சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலை குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

    அப்போது முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

    இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. "இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது...?" என்று யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனை கீழே இறங்குமாறு கூறினான்.

    ஆனால் அந்த சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

    பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப்பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

    இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள்பாலிப்பதாக அப்போது அருளினார்.

    அன்று முதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள்.

    இதனால்தான், பழனி மலை மீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

    திருவாவினன்குடி சிறப்பு :

    திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

    திருவாவினன்குடி கோவிலில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசிக மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.

    குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக்காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் இந்த கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.

    நலம் தரும் கிரிவலம் :

    பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

    மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

    வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. இப்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம் :

    இங்கு முருகப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.

    எப்போதும் அபிஷேகம் :

    முருகப்பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.

    தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.

    ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.

    சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரசித்திப்பெற்ற பஞ்சாமிர்தம் - பாதயாத்திரை :

    பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தப்படியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.

    திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

    சர்ச்சைக்குரிய விவாதம் :

    பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவதுபடை வீடு என்று கூறுவோரும் உண்டு.

    கொடைக்கானல் மலையில் இருந்து

    பழனி மலையின் தோற்றம்...

    • பழனி முருகன்கோவிலில் போகர் சன்னதி உள்ளது.
    • 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா நடக்கிறது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி புலிப்பாணி ஆசிரமத்தை சேர்ந்த சிவானந்தா புலிப்பாணி சுவாமிகள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    பழனி முருகன்கோவிலில் போகர் சன்னதி உள்ளது. இது, புலிப்பாணி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18-ந் தேதி அந்த விழா நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு போகர் ஜெயந்தியை நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    இது சட்டத்துக்கும், ஆன்மிகத்துக்கும் புறம்பானது. பழனி கோவிலில் போகர் சன்னதியில் தொன்றுதொட்டு புலிப்பாணி பாத்திர சாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்தியதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகள் உள்ளன. எனவே வருகிற 18-ந்தேதி அன்றும் வழக்கம் போல போகர் ஜெயந்தி பூஜையை நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, போகர் சன்னதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பூஜைக்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதம். ஏராளமான பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இது அமைந்துள்ளது என தெரிவித்தார். விசாரணை முடிவில், வருகிற 18-ந்தேதி புலிப்பாணி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழாவை முறைப்படி நடத்த அனுமதிக்கப்படுகிறது. போகர் ஜெயந்தியின் போது, மரகதலிங்கத்திற்கும், புவனேஸ்வரி அம்மனுக்கும் வழக்கம் போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • வருகிற 18-ந்தேதி போகர் ஜெயந்தி நாளாகும்.
    • பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. போகர் என்ற சித்தரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. மூலவர் சிலையை வடித்த போகருக்கு கோவில் வளாகத்தில் தனிசன்னதி உள்ளது. பழனிக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு போகர் சன்னதியில் வழிபடுவது வழக்கம்.

    இங்கு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வருகிற 18-ந்தேதி போகர் ஜெயந்தி நாளாகும். இந்நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பழனி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில், விஜயதசமி அன்று வில்அம்பு போடும் நிகழ்ச்சியில் போகர் சன்னதி பூசாரிகள் பங்கு கொள்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விழாக்களின் போது சன்னதி பூசாரிகள் மற்றும் பூஜை செய்பவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் சன்னதி பூசாரிகள், போகர் சன்னதி உரிமை தங்களுக்கு தனிப்பட்டது என கோவில் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு போகர் சன்னதி சுவற்றில் வரையப்பட்டு இருந்த ஓவியங்களை அழித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் போகர் சன்னதி பூசாரிகள் தங்களின் சுய நலனுக்காகவும், கோவில் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத வகையில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முயற்சி செய்கின்றனர். எனவே நடைமுறையில் இல்லாத புதிய விழாக்கள் எதையும் நடத்த கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    • மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, கடந்த 29-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.

    7-ம் நாள் திருவிழாவான நேற்று பங்குனி உத்திரம் ஆகும். இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். அவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    பங்குனி உத்திர விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

    பகல் 12 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு விநாயகர், அஸ்திர தேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.

    இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கார்த்தி, செந்தில், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் உரிமையாளர்கள் ஹரிஹரமுத்து, செந்தில், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், பழனி வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஜே.பி.சரவணன், வி.பி.எஸ் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி, ஜவகர் ரெசிடன்சி உரிமையாளர் மனோகரன், பழனி முருகன் ஜூவல்லரி உரிமையாளர் பாலமுருகன் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    அப்போது பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" "வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேர் இழுக்கும் போது அதன் பின்னால் அலங்கரிக்கப்பட்ட கஸ்தூரி யானை சென்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்து நிலை வந்து சேர்ந்தது. தேர் வலம் வந்தபோது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    • அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார்.
    • நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    சங்க காலத்தில் கோவில்கள் இலக்கியங்களை தோற்றுவிக்கும் பாடு களங்களாக விளங்கின. கோவிலின் சிறப்பு, வரலாறு போன்றவற்றை விளக்க தல புராணம் இருந்தது. காலப்போக்கில் கோவில்களை மையப்படுத்தி பல சிற்றிலக்கியங்களும் தோன்றியது. தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் பெரும்பாலும் பக்தியை பறைசாற்றுபவையாக உள்ளது. எனவே தான் பக்தி இலக்கிய காலத்தில் சிற்றிலக்கியங்கள் வளர்ந்தோங்கின.

    இறைவனை பாடுபொருளாக கொண்ட பிள்ளைத்தமிழ், உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, கோவை, பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் பக்தி சார்ந்தவைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இதில் எட்டு பாடல்களில் வரும் அட்டமங்கலம், ஒன்பது பாடல்களால் வரும் நவமணிமாலை, பத்துப்பாடல்களால் வரும் பதிகம், இருபது பாடல்களால் வரும் இருபா, முப்பது பாடல்களால் வரும் மும்மணிமாலை, மும்மணி கோவை, நாற்பது பாடல்களால் வரும் நான்மணி மாலை, அறுபது பாடல்களால் வரும் மணிமலை, நூறு பாடல்களால் வரும் இணை மணிமாலை போன்றவை பக்தியை பற்றி பாடப்பட்டு உள்ளது.

    அதன்படி பழனியில் குடிகொண்ட முருகப்பெருமானை பற்றி பதிகம், மாலை, ஒருபா, அந்தாதி, விருத்தம் முதலிய பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்று உள்ளன. இலக்கியத்தில் 3-ம் படைவீடாக குறிப்பிடும் திருஆவினன்குடியின் சிறப்பு பத்துப்பாட்டின் முதல் பாட்டான திருமுருகாற்றுபடை விளக்குகிறது. அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார். இதேபோல் வையாபுரிப்பள்ளு, பழனி பிள்ளைத்தமிழ், பழனியாண்டவர் சமயமாலை போன்றவை பழனியை பற்றி பாடப்பட்டுள்ள சிற்றிலக்கியங்கள் ஆகும்.

    இலக்கிய மரபு மட்டுமல்லாமல் வாய்மொழி மரபும் பழனி முருகன் கோவிலை மையமாக கொண்டு வளர்ந்துள்ளன. இதை கோவில் திருவிழாக்களின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வெளிப்படுத்தும் காவடிப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டம், வழிநடை சிந்து பாடல்கள் போன்றவற்றில் காணலாம். நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    • 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • 16 வகை தீபாராதனை நடந்தது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் "காவடி திருவிழா" என்று அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனிசிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினந்தோறும் மண்டகப்படி நடந்து வருகிறது. மேலும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, ஸ்கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன.

    முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணதிர கோஷமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.

    • செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடக்கிறது.
    • 4-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முன்னதாக அன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    அப்போது முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5.45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளித்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

    பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வர தொடங்கியுள்ளனர். மயில் காவடி எடுத்து பக்தர்கள் ஆடி வருகின்றனர்.

    இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கிரிவீதிகளில் மேள, தாளத்துடன் ஆடிப்பாடி உலா வருகிறார்கள். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று தீர்த்த அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில் பழனியில் கடும் வெயில் நிலவுவதால் மதிய நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    • பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.
    • தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

    பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டளை தரிசனம், முடிக்காணிக்கை, தங்கரத புறப்பாடு, தங்கத்தொட்டில் உள்ளிட்டவற்றில் பணம் செலுத்தி கலந்துகொள்கின்றனர். இதில் தங்கரத புறப்பாடு மிகவும் சிறப்பு பெற்றது. பழனி மலைக்கோவிலில் தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் செலுத்தி பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுகின்றனர்.

    இந்தநிலையில் பழனியில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்களின்போது தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி வரை என 5 நாட்கள் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதேவேளையில் நாளை ஒருநாள் மட்டும் கோவில் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ந்தேதி கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

    மேலும் கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று தீர்த்த காவடி எடுத்து பழனிக்கு வந்து அபிஷேகம் செய்வது பழனி முருகன் கோவிலில் சிறப்பு அம்சமாகும்.

    புகழ்பெற்ற இந்த திருவிழா, உபகோவிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் அன்றையதினம் மலைக்கோவிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டும் நடைபெறுகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம், 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் தொடர்ச்சியாக தீர்த்தக்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர்.
    • பழனி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா, விசேஷம், விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரம் வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    பங்குனி உத்திர திருவிழா என்பது கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். 10 நாட்கள் திருவிழா நடைபெற்று முடிந்தாலும், அதன்பிறகும் பக்தர்கள் தொடர்ச்சியாக தீர்த்தக்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலும் படிப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு சென்று கோவில் வெளிபிரகாரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பழனி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் வேளையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு வடக்கு, மேற்கு வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காப்பதற்காக வெளிப்பிரகாரத்தில் உள்ள தரை பகுதியில் "கூலிங் பெயிண்ட்" அடிக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் கயிற்றால் ஆன விரிப்பு விரிக்கப்படுவதால் வெயிலின் தாக்கத்தை இன்னும் தணிக்க முடியும் என கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • தேரோட்டம் 4-ந்தேதி நடைபெறுகிறது.
    • 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகன் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    மேலும் கோடைவெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்த காவடி எடுத்து வந்துஅபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும். சிறப்பு வாய்ந்த இத்திருவிழா வருகிற 29-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் மலைக்கோவிலில் உச்சிகாலத்தில் காப்பு கட்டு நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி தினசரி தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியாலான காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளிரதத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதுதவிர சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். சாதாரண நாட்களை தவிர்த்து முகூர்த்தம், வாரவிடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக மலைக்கோவிலில் வெளிப்பிரகாரம் வழியாக பக்தர்கள் செல்லும், சுட்டெரிக்கும் வெயிலால் அவதியடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்க உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் அவதியடைவதை தவிர்க்க பழனி முருகன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு வெளிப்பிரகாரத்தில் பந்தல் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேற்கு வெளிப்பிரகாரத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பந்தல் அமைக்கப்பட்டதால் வெளியூர் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்னர் அவற்றின் நிழலில் இளைப்பாறி செல்கின்றனர். அதேபோல் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

    ×