search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96359"

    வயல் பகுதியில் விவசாயியை கடிக்க முயன்ற பாம்பை கொன்று நாய் உயிரைவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50) விவசாயி, இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த 4 வருடங்களாக பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.

    பப்பியை தனது குடும்பத்தில் ஒருவராக பார்த்துக்கொண்டார். அதன் மீது அவரது குடும்பத்தினர் அதீத பாசம் கொண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் பகுதிக்கு சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி நாய் பின்னே சென்றது.

    அப்போது 5 அடி நீளமுள்ள ஒரு பாம்பு வயலில் இருந்து ஊர்ந்து வந்துள்ளது. அதனை பார்த்த நடராஜன் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுள்ளார். அப்போது அந்த பாம்பு நடராஜனை கடிப்பதற்காக சீறியுள்ளது. இதனை பார்த்த பப்பி பாய்ந்து சென்று பாம்பை கடித்துள்ளது. இதில் நாய்க்கும் பாம்புக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. நடராஜன் உடனே வீட்டிற்கு சென்று கம்பை எடுத்துக்கொண்டு பாம்பை அடிப்பதற்காக ஓடிவந்துள்ளார்.

    அப்போது முட்புதற்குள் சென்ற பாம்பை நாய் விடாமல் சென்று பிடித்து வெளியில் கொண்டுவந்து கடித்துகுதறியது. இதில் பாம்பு இறந்தது. உடனே நடராஜன் நாயை கட்டியணைத்து தூக்கிகொண்டு வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால் பாம்பை கடித்ததால் உடலில் வி‌ஷம் பரவி நாயும் சிறிது நேரத்தில் இறந்தது அதனை கண்டு அவரது குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து பாம்பை கடித்து உயிர்விட்ட நாயை பார்த்து சென்றனர்.பின்னர் நாயை வீட்டின் அருகில் குழிதோண்டி புதைத்தனர். 

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டுத் தொகை பதிவு செய்த விவசாயிகளுக்கு வங்கிகளில் வந்துள்ள காப்பீட்டுதொகையை உடனே வழங்க வேண்டும் என்று தி.மு.க. விவசாயஅணி கோரிக்கை விடுத்துள்ளது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாயஅணி துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    2017-ம் ஆண்டு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பிரதமர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர்.

    15 மாதங்கள் கழித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 32 கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தியுள்ளது.

    அதனை வழங்க போதிய அலுவலர்கள் இல்லாமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். போதிய அலுவலர்களை நியமித்து விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கடலாடி தாலுகா கே.வேப்பங்குளம் பிர்கா உள்பட 40-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் காப்பீடு பதிவு செய்த விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை வங்கிகணக்குகளில் அரசு செலுத்தாமல் உள்ளது.

    அந்த விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை கிடைப்பதற்கும் கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக, விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார். #Farmer #Nonrepayment #RahulGandhi
    ஜலோர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    5 ஆண்டுகளுக்கு முன்பு, ‘நல்ல நாள் வரும்‘ என்ற கோஷத்தை எழுப்பினார்கள். ஆனால், இப்போது ‘காவலாளியே திருடன்‘ என்ற கோஷம்தான் எங்கும் ஒலிக்கிறது. அந்த அளவுக்கு 5 ஆண்டுகளும் மக்களுக்கு மோடி அநீதி இழைத்துள்ளார்.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை ஏழைகள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் பணத்தை பறிக்கும் திட்டங்கள் ஆகும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ‘நியாய்‘ திட்டம் ஏழைகளுக்கு பலன் அளிக்கும்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்படும். ஆண்டுக்கு 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும். முதல் 3 ஆண்டுகளில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அனுமதி பெறத் தேவையில்லை.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக எந்த விவசாயியும் சிறையில் தள்ளப்பட மாட்டார்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.  #Farmer #Nonrepayment #RahulGandhi 
    சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்தபோது முதலை இழுத்துச் சென்ற விவசாயியை தீயணைப்பு படையினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வருவது வழக்கம். ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பலர் கரைக்கு வரும் முதலைகளை பார்த்து அச்சம் அடைந்து வந்தனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 45), விவசாயி. நேற்று அவர் தனது மனைவி முத்து லட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கணவனும், மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெயமணியின் காலை திடீரென்று ஒரு முதலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனே ஜெயமணி கூச்சல் போட்டார். அங்கு குளித்து கொண்டிருந்த முத்துலட்சுமியும் தனது கணவரை முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்வதை பார்த்து அவரும் கூச்சலிட்டார்.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி ஜெயமணியை தேடினர். ஆனால் அவர்களால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கி ஜெயமணியை இரவு 7 மணிவரை தேடினர். வெகுநேரம் தேடியும் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு அவர்கள் கரை திரும்பினர்.

    2-வது நாளாக இன்று காலை தீயணைப்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடி வருகிறார்கள். முதலை இழுத்து சென்ற விவசாயி ஜெயமணியின் கதி என்ன என்று தெரிய வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

    ஆற்றில் குளித்த விவசாயியை முதலை இழுத்து சென்ற சம்பவம் பெராம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நத்தம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நத்தம்:

    நத்தம் சேர்வீடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது 62). விவசாயி. இவர் நேற்று இரவு தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு சென்று விட்டனர். இன்று காலையில் பார்த்தபோது செல்லப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்லப்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அதன் பேரில் அவரை படுகொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்படடு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மெலட்டூர் அருகே விவசாயிடம் வங்கி அதிகாரிபோல பேசி ரூ.24ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயியான இவர் மெலட்டூரில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    கார்த்திகேயனிடம் செல்போனில் பேசிய ஒருவர், வங்கி மேலாளர் பேசுவதாக கூறி உங்கள் வங்கி கணக்குக்கான ஏ.டி.எம். காலாவதியாகிவிட்டது. இதனை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்காக ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க பின் நம்பரையும், அடுத்துவந்த ஓடிபி நம்பரையும் கூறுமாறு கேட்டுள்ளார்.

    இதனை நம்பிய கார்த்திகேயன் நம்பரை கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கார்த்திகேயன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். வங்கி சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.23 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. கார்த்திகேயன் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.23ஆயிரத்து 500 டெல்லியில் உள்ள ஒருவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து மெலட்டூர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி.யிடமும் கார்த்திகேயன் புகார் செய்தார்.

    நெல் அறுவடை செய்த பணத்தில் செலவு போக மீதி இருப்பு தொகை ரூ.24ஆயிரம் இருந்தது. அதனை விவசாயி பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வங்கிக்கு கொடுக்கப்பட்ட செல்போன் நம்பர் மோசடி கும்பலுக்கு எப்படி கிடைத்தது? வங்கி ஊழியர்களுக்கும் ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் தொடர்பு உள்ளதோ? என சந்தேகம் எழுகிறது. பணம் எடுக்கப்பட்டது குறித்து விபரம் கேட்க போன என்னை பார்த்து தனியார் வங்கி ஊழியர்கள் சிரித்ததன் அர்த்தம் என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

    இதேபோன்று கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி பாபநாசம் தாலுக்கா மேல் செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர் வங்கி கணக்கில் இருந்து 35ஆயிரம் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் எடுத்துள்ளது அதுவும் விவசாயிகளை குறிவைத்து மோசடி கும்பல் தொடர்ந்து இதுபோன்ற பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள் வாடிக்கையாளர் பணத்தை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    வடமதுரை அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

    வடமதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் அதனை ஒப்படைத்து வருகின்றனர்.

    வடமதுரை அருகே விவசாயி ஒருவர் வீட்டில் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்து பயன்படுத்தி வருவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது. அதன்படி டி.எஸ்.பி. ரவிக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் ரகசிய சோதனை நடத்தினர்.

    நாடு கண்டனூரைச் சேர்ந்த முருகன் (41) என்பவர் கள்ளத்தனமாக வீட்டில் துப்பாக்கி வைத்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இவருக்கு திருமணம் ஆகி ராஜலெட்சுமி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். தனது விவசாய நிலத்தில் விலங்குகள் உள்ளே வராமல் இருப்பதற்காக நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இருந்த போதும் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததால் அதனை பறிமுதல் செய்த போலீசார் முருகனையும் கைது செய்தனர்.

    விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் என்று சுமலதா ஆவேசமாக கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
    பெங்களூரு :

    நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மாண்டியா கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மஞ்சுஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் நடிகர் தர்ஷன், யஷ் உள்பட கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு மாண்டியா சில்வர் ஜூப்ளி பூங்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை சுமலதா கலந்துகொண்டு பேசியதாவது:-

    நான் இன்று (அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கணவர் மாண்டியாவுக்கு செய்ய வேண்டிய பணிகளில் இன்னும் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளார். அது என்ன என்பது எனக்கு தெரியும்.

    அந்த பணிகளையும், அம்பரீசின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் இங்கு வெற்றி பெற்றுவிட்டால், வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

    நான் ஏற்கனவே எல்லா நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். நான் கன்னடம் உள்பட 5 மொழி படங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் இருந்து போதுமான அளவுக்கு புகழ் கிடைத்துள்ளது. அதனால் அரசியலுக்கு வந்து தான் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

    மாண்டியா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். நான் மாண்டியாவில் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டேன். அவர்கள், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். அதை ஏற்று நான், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினேன்.

    மக்களின் விருப்பப்படி நான் மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். ஆனால் கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும், டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.

    அதனால் நான் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளேன். இன்று (நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் யார் என்று கேட்கிறார்கள். நான் அம்பரீசின் மனைவி. இந்த மண்ணின் மகள், மருமகள். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, என்னை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தன. எனக்கு அவமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே (மக்கள்) பதில் சொல்லுங்கள்.



    என் முன்னால் இமயமலை அளவுக்கு பெரிய சவால் உள்ளது. அந்த சவாலை உங்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை இந்த தொகுதியில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    அம்பரீஷ் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். மாண்டியா மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது அவர் தான். பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தார். கிராமங்களில் சமுதாய கூடங்களை கட்டினார். இப்படி பல்வேறு பணிகளை செய்துள்ளார். கிராமங்களுக்கு சென்று மக்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள்.

    வேறு தொகுதியில் டிக்கெட் தருவதாகவும், எம்.எல்.சி. பதவி, மந்திரி பதவி தருவதாக என்னிடம் கூறினர். மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கூறினர். பதவி ஆசை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு போய் இருப்பேன். இங்கு போட்டியிட்டு இருக்கமாட்டேன். மாண்டியா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் உள்ளது. அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கள் ஆதரவாளர்களை மிரட்டுகிறார்கள். உங்களின் அன்புக்கு முன்னால் அது எடுபடாது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன். விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றி பேசுவேன்.

    நடிகர்கள் தர்ஷன், யஷ் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் எனது குழந்தைகளை போன்றவர்கள். ஒரு தாய்க்கு ஆதரவாக குழந்தைகள் பிரசாரம் செய்வது தவறா?. உங்கள் (குமாரசாமி) மகனுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா?.

    அம்பரீஷ் விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தபோது, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.

    இவ்வாறு சுமலதா பேசினார்.

    இதில் சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரைத்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். #Sumalatha #MandyaConstituency 
    விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram
    புதுடெல்லி:

    சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். தேர்தல் நேரத்தில் இந்த நிதியுதவியை வழங்குவதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விவசாயிகளின் நிதியுதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மேலும் அனுமதிக்கப்படுமா? என்று அனைவரின் பார்வையும் தேர்தல் கமிஷன் மீதே இருக்கிறது. தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது நிதியுதவி அளிப்பது, ஓட்டுக்கு அளிக்கும் லஞ்சம் என்பது வெளிப்படையாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பணமதிப்பு நீக்கத்தை அனுமதித்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை சீரழிந்ததாக கூறியுள்ள ப.சிதம்பரம், அதைப்போல விவசாய நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
    தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறி விவசாயியிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

    மெலட்டூர்:

    காலத்துக்கேற்ப மோசடியில் புதுபுது யுக்திகளை கையாள்கின்றனர். படிக்காத பாமர மக்களிடம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுகிறோம் என்று நடித்தும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று ஏ.டி.எம். ரகசிய எண்களை அறிந்தும் மோசடியில் ஈடுபடும் கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வருகிறது.

    இதுபற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறி விவசாயியிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேலசெம்.மங்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. விவசாயி.

    இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் உங்களது வங்கி ஏ.டி.எம் காலாவதியாகிவிட்டது. அதனை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு நாராயணசாமியும் நான் வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் செல்போனில் பேசியவர் அவருடைய ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டுள்ளார், நாராயணசாமியும் பின் நம்பரை கொடுத்துள்ளார்.

    பின்னர் அம்மாபேட்டையில் உள்ள வங்கி கிளைக்கு சென்று ஏ.டி.எம். காலாவதியாகி விட்டது குறித்து வங்கி மேலாளரிடமும், தனக்கு வந்த செல்போன் தகவலையும் கூறியுள்ளார். அதற்கு உங்களது வங்கி கணக்கில் தற்போது பணம் இருப்பு இல்லை, பணம் வந்ததும் வாருங்கள் என கூறி அனுப்பிவிட்டார்.

    இந்நிலையில் நெல்அறுவடை செய்து அதனை கொள்முதல் நிலையத்தில் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 800 நேற்று காலை நாராயணசாமி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    இதனை அறிந்த நாராயணசாமியும் பாபநாசம் சென்று ஏ.டி.எம். மூலம் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்தார். பணம் எடுத்த சிறிது நேரத்தில் நாராயணசாமியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. வங்கியிலிருந்து வருவதாக நினைத்து வங்கிக்கு சென்று, அங்கு தன்னுடைய சேமிப்பு கணக்கு புத்தகத்தினை வரவு செலவை பிரிண்ட் எடுத்த போது, நாராயணசாமிக்கே தெரியாமல் அவருடைய கணக்கில் இருந்து ஐதராபாத்தில் இருந்து முதலில் ரூ.5 ஆயிரம், பின்னர் ரூ.9999, பின்னர் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.34,999 ஐ ஆன்லைன் மூலமாக எடுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தன்னுடைய வங்கி கணக்கை முடக்கி வைத்தார்.

    பின்னர் வங்கி கிளையிலும், மெலட்டூர் போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக நாராயணசாமி புகார் செய்தார். #tamilnews

    வத்தலக்குண்டுவில் விவசாயியிடம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவர் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக வத்தலக்குண்டுவில் இருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார்

    அப்போது பையில் 8 பவுன் நகை கொண்ட பெட்டியும் வைத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி நடராஜிடம் இருந்த நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    காளியம்மன் கோவில் அருகே வந்துபார்த்தபோது பையில் இருந்த நகை பெட்டி மாயமாகி இருப்பது கண்ட அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் விசாரித்தபோது யாரும் பார்க்க வில்லை என கூறி உள்ளனர்.

    இதனால் கவலையுடன் பஸ்சில் இருந்து இறங்கி வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள், பயணிகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் நபர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களளுக்கு முன்பு வத்தலக்குண்டுவில் இருந்து தொழில் அதிபரை மை வைத்து மயக்கி பணம் பறித்து அவரை திருச்சியில் விட்டு சென்றனர்.

    இதேபோல் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் பணம், செல்போன் பறித்த சேலத்தை பெண்களை பொதுமக்கள் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருந்தபோதும் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகூர்த்த நாட்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் உள்ளிட்ட கும்பல் நகை, பணம் பறித்து செல்கின்றன.

    எனவே இதுபோன்ற முகூர்த்தநாட்களில் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் பயணிகளுக்கு இடையூறாக சுற்று திரியும் நபர்கணை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான பிரதம மந்திரி யின் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டதின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விவசாய குடும்பத்திற்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் மூன்று சம தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 90 ஆயிரத்து 500 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து இதுவரை 63 ஆயிரத்து 251 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்ற பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரனும், கலெக்டர் விஜயலட்சுமியும் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதல் தவணையாக 45 ஆயிரத்து 518 விவசாயிகளுக்கு, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது. மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) நாகநாதன், கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளவரசன், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணை இயக்குனர் முருகன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ராஜசேகரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் இந்திரா மற்றும் வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×