search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96359"

    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றியாகும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்றிரவு சுமார் 8 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த்தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
     
    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றி. இந்த வெற்றி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    ’சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றானவை, பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டவை.

    காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கான புதிய முதல் மந்திரிகளை தேர்வு செய்வது பெரிய காரியமல்ல. அது சுமுகமாக முடிந்துவிடும். எங்களை வெற்றிபெற வைத்த மாநில மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்து, அவர்கள் பெருமைப்படும் வகையில் அவற்றை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்.

    இந்த நாட்டின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுத்தபோது, ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயிகள் பிரச்சனை ஆகிய மூன்று விவகாரங்களை முன்வைத்து தேர்வு செய்தனர். பிரதமர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என்று மக்கள் மனதில் இருந்தது. ஆனால், இப்போது பிரதமரே ஊழல்வாதி என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.



    பா.ஜ.க.வை பற்றி நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை இந்த தீர்ப்பின் மூலம் பிரதமருக்கு மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு என்றொரு சித்தாந்தம் உள்ளது. அதை எதிர்த்து போராடி நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று அவர்களை நாம் தோற்கடித்து இருக்கிறோம். 2019-பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம். ஆனால், யாரையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    கடையத்தில் 78 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பற்றி துப்பு துலக்கியதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் வாசுகிரி நகரை சேர்ந்தவர் திருமால் (வயது 60), விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகளுடன் பாவூர்சத்திரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று முன்தினம் இரவு திருமால் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 78 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    எனவே, யாரோ மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருமால் கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளை பற்றி துப்பு துலக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கொள்ளை குறித்து துப்பு துலங்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் அருகில் உள்ள பாரதி நினைவுநகர் பகுதியில் விஜிலா ஐசக்(60) என்பவரது வீட்டில் 51 கிராம் நகை, ரூ.20 ஆயிரம், பான் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கொள்ளை போயின. இரு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் கடையம் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். #tamilnews
    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து வெங்காயம் பயிட்ட விவசாயிக்கு வெறும் 6 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்ததால், வெறுத்துப்போன அவர் அந்த பணத்தை முதல்வருக்கு அனுப்பினார். #MaharashtraFarmer #FallingOnionPrices
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. வெங்காயத்தை சும்மா கொடுத்தால் கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலைதான் மராட்டியத்தில் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக நாசிக் மற்றும் அகமத் நகர் மாவட்டங்களில் வெங்காயத்தை பயிரிட்ட விவசாயிகள் கடும் இழப்புக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    அகமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சிரேயாஸ் அப்கலே என்பவர் தனது வயலில் பயிரிட்டிருந்த 3 ஆயிரம் கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய கொண்டு சென்று இருந்தார். சங்கம்நர் மொத்த விற்பனை சந்தையில் அவர் வெங்காயத்தை விற்க கடை அமைத்திருந்தார்.

    ஆனால் யாரும் வெங்காயத்தை விலைக்கு வாங்க முன்வரவில்லை. 2 நாட்கள் காத்திருந்தும் ஒரு வெங்காயம் கூட விற்கவில்லை.

    நேற்று அவரது 2657 கிலோ வெங்காயத்தை ஒருவர் வாங்க முன் வந்தார். ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்று விற்கப்பட்டது.

    2657 கிலோ வெங்காயமும் ரூ.2,916-க்கு விற்பனையாகி இருந்தது. இதையடுத்து வெங்காயம் கொண்டு வர, விற்க உதவிய தொழிலாளர்களுக்கு உரிய சம்பள பணத்தை கொடுத்தார்.

    தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்த வகையில் ரூ.2,910 செலவாகி விட்டது. இதனால் சிரேயாஸ் கையில் வெறும் 6 ரூபாய்தான் மிஞ்சியது.

    வெங்காயம் பயிரிட அவர் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்தார். ஆனால் கிடைத்த வருவாயோ வெறும் 6 ரூபாய்.


    6 ரூபாயுடன் வீடு திரும்பிய சிரேயாஸ் வெங்காய விலை வீழ்ச்சியால் மிகவும் வேதனை அடைந்தார். 6 ரூபாய் லாபத்தையும் வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

    உடனடியாக அவர் அந்த 6 ரூபாயை மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிசுக்கு அனுப்பி வைத்து விட்டார். #MaharashtraFarmer #FallingOnionPrices
    750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் கிடைத்த விரக்தியில், தனது வருமானத்தை பிரதமர் அலுவலகத்துக்கு மகாராஷ்டிரா விவசாயி அனுப்பி வைத்துள்ளார். #MumbaiFormer #PMModi
    மும்பை:

    மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு வந்தார்.

    தனது நிலத்தில் விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்தார். மொத்தம் 750 கிலோ இருந்தது. அவற்றை நாசிக் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் மட்டுமே விலை போனது.

    இதனால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார். அதில் கிடைத்த பணத்துடன் வீடு வந்து சேர்ந்தார். கடந்த 4 மாத காலமாக கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என கடும் விரக்தியில் இருந்தார்.

    உடனடியாக அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் பணம் விவசாயிகளின் வாழ்க்கையை எப்படி கரை சேர்க்கும் என்பதை அதிகாரிகளுக்கு புரிய வைக்க முடிவெடுத்தார்.

    இந்நிலையில், வெங்காயம் விற்று கிடைத்த பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்தார். அருகிலுள்ள  
    தபால் அலுவலகம் சென்ற அவர், அங்கு மணியார்டர் மூலம் பிரதமர் நிதிக்கு அந்த தொகையை அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், 4 மாதம் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன் கிடைக்கவில்லை. எங்கள் கஷ்டம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. எனவேதான் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன் என விரக்தியுடன் தெரிவித்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறையினரால் தேர்வு செய்யப்பட்டவர் சஞ்சய் சாதே என்பது குறிப்பிடத்தக்கது.
    விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ayyakannu #FarmerStruggle #Delhifarmerprotest


    எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினோம். டெல்லியில் நிர்வாணமாக ஓடியும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். நாங்கள் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதற்கு காரணம் இருக்கிறது.

    விவசாய கடன்களை கட்ட முடியாமல் திணறிய விவசாயிகளின் வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் சென்று நெருக்கடி கொடுத்தனர். வங்கி கடன்களை கட்டாத விவசாயிகளின் வீட்டு பெண்களை மானபங்கம் செய்ய வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் பேசினார்கள். அதனால்தான் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தினோம்.

    நாங்கள் போராட்டம் நடத்தி ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் எங்களின் போராட்டத்துக்கு பிரதமர் மோடி செவி சாய்க்க வில்லை.


    1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது ஒரு மூலைக்கும் போதாது. விவசாயிகள் மேலும் மேலும் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    புயலால் சரிந்த தென்னை மரங்களுக்கு குறைவான இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும். எல்லாவித போராட்டங்களையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #FarmerStruggle #Delhifarmerprotest

    வல்லபாய் பட்டேல் பிரதமராகி இருந்தால் விவசாயிகளுக்கு கஷ்டம் நேர்ந்து இருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். #PMModi #BJP

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று மன்ட்சார் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதற்கு கடந்த கால காங்கிரஸ் அரசுகளே காரணம்.

    நாட்டில் 55 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். அவர்கள் வகுத்த விவசாய கொள்கைகளால் விவசாயிகளுக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் அவர்களை பாழாக்கும் நிகழ்வுகள்தான் நடந்தன.


    சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் முதல் பிரதமராக பதவி ஏற்று இருந்தால் இந்த நிலைமைகளை எல்லாம் மாற்றி இருப்பார். விவசாயிகள் இந்த கஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது.

    காங்கிரஸ் அரசின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மேம்பாட்டுக்கு கொண்டு வர நாங்கள் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

    ஆனால், அவர்கள் 50, 60 ஆண்டுகளாக செய்த தவறுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய முடிய வில்லை. அதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் தான் ஆகிறது. காங்கிரஸ்காரர்களுக்கு ஆளுவதற்கு கிடைத்த காலங்களில் பாதி அளவு காலம் எங்களுக்கு கிடைத்தால் விவசாயிகள் விவகாரத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

    பாரதிய ஜனதா அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு அதை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

    ஆனால், நாங்கள் தவறான வாக்குறுதிகள் எதையும் கொடுக்கவில்லை. இந்திரா காந்தி ஆட்சியில் வறுமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

    இது சம்பந்தமாக பெரிய கோ‌ஷம் எல்லாம் எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர்கள் தான் இப்போது பாரதிய ஜனதாவை குறை கூறுகிறார்கள்.

    இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். #PMModi #BJP

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயல் தாக்குதலால் 15 ஆயிரம் ஏக்கர் காபி, மிளகு, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. #Gajastorm

    பெரும்பாறை:

    இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட கொடைக்கானலை ரசிக்க வருடம் தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு காரணம் இங்கு மலைகளும், அருவிகளும், நீர் வீழ்ச்சிகளும், மலர் கூடங்களும், விவசாய நிலப்பரப்பும் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

    ஆனால் இயற்கையே புயலாக மாறி இயற்கையை சூறையாடியது போல கஜா புயல் கடந்த 16-ந் தேதி கொடைக்கானலை கபளீகரம் செய்தது. புயல் தாக்கும் என சற்றும் எதிர்பார்க்காத கொடைக்கானலில் சுழன்று அடித்த சூறைக்காற்று பல ஆயிரம் ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியது.

    இதனால் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கொடைக்கானல் கீழ் மலை பகுதியான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மஞ்சள் பரப்பு பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காபி, மிளகு, சில்வர் ஓக், ஆரஞ்சு, அவக்கோடா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இதில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி மற்றும் மிளகு செடிகள் தரைமட்டம் ஆகின. மிளகு கொடியை சில்வர் ஓக், சவுக்கு மரங்களில் படர விட்டு உயரமான ஏணியில் ஏறி விவசாயிகள் அறுவடை செய்வார்கள்.

    மிளகு கொடி மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மகசூல் கிடைக்கும். ஒரே தோட்டத்தில் 10 முதல் 500 வரை மரங்கள் விழுந்ததால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மிளகு பயிரிட்ட விவசாயிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப 12 ஆண்டுகள் ஆகும் என கண்ணீருடன் தெரிவித்தனர்.

    ஏனெனில் முதலில் மரத்தை நட்டு அந்த மரம் வளர்ச்சியடைய 7 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு அந்த மரத்தின் மீது மிளகு கொடியை படர விட்டு அறுவடை செய்ய 5 ஆண்டுகள் ஆகும். இதே போல்தான் காபி செடிகளும் கஜா புயலால் வேரோடு சாய்ந்து விழுந்தது.கே.சி.பட்டி, பெரியூர், கவியக்காடு, தடியன்குடிசை, பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் புயலின் தாக்கம் விவசாயிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கொடைக்கானல் மலை கிராமங்களில் பயிரிடப்படும் மற்றொரு முக்கியமான விவசாயம் ஆரஞ்சு மற்றும் அவக்கோடா பழங்கள் ஆகும். பணப்பயிர்களாக உள்ள இவை வருடம் தோறும் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்தது. குறிப்பாக அவக்கோடா பழங்கள் ஆப்பிள் பழத்தை விட விலை அதிகமாகும். தற்போதைய நிலவரப்படி 1 கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்தது.

    இந்த பழங்கள் இங்கிருந்து பறிக்கப்பட்டு தரமாக பேக்கிங் செய்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது அவக்கோடா மற்றும் ஆரஞ்சு செடிகளில் மழை நீர்தேங்கி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவை தவிர பீன்ஸ், வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களும் பயிரிடப்படுள்ளன. இவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. அதிகாரிகள் இன்னும் பார்வையிட்டு நிவாரண உதவி குறித்த அறிவிப்பை தெரிவிக்க வில்லை. காபி மிளகு, ஆரஞ்சு போன்ற நிரந்தர பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரமும், நீர் பாய்ச்சும் காய்கறிகளுக்கு ரூ.12 ஆயிரமும், மானாவாரி காய்கறிகளுக்கு ரூ.7410-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிவாரணம் போதாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானலில் மொத்த பாதிப்பு ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். ஆனால் ரூ.10 கோடிக்கும் குறைவாகவே நிவாரணம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் எதிர்பார்க்கும் முழு நிவாரணம் கிடைக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது. #Gajastorm

    விவசாயி பேரில் கடன் மோசடி செய்த புகாரில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மீது உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மேலூர்:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் கடன் பெற்று வருகின்றனர்.

    குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகு என்ற விவசாயி வங்கியில் ரூ.45 ஆயிரத்து 620 கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாயழகு, தான் கடன் எதுவும் பெறவில்லை என தெரிவித்தார். மேலும் தனது பெயரில் மோசடியாக கடன் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    அதன் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தினார். கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ராமசாமி, உறுப்பினர் சின்னகண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan #Storm #Gajastorm

    சென்னை:

    த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்தபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது.

    பல மாவட்டப்பகுதிகளில் நகரம் முதல் குக்கிராமம் வரை மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது.

    விவசாயிகள், மீனவர்கள் போன்ற பல தரப்பட்ட மக்களும் இப்புயலினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.


    சீரமைப்புப் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களை வர வழைத்து நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தலாம். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாயும், சாய்ந்து போன வாழைக்கு ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கவேண்டும்.

    நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 அயிரம் ரூபாயும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்க வேண்டும். மீனவர்களின் படகுகளுக்கும், வலைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்திற்கேற்ப நிவாரணத்தொகையை அதிக அளவில் கொடுத்தால் தான் அவர்களால் மீன் பிடித்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியும்.

    நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக கொடுக்க வேண்டும். புயலின் பாதிப்பை முறையாக, சரியாகக் கணக்கெடுத்து அதற்கேற்ப நிவாரணத்தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.

    இயல்பு நிலை திரும்பும் வரை சீரமைப்புப்பணிகளை துரிதப்படுத்தி, நிவாரணப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கி, இழப்பீட்டுக்கான தொகையையும் அதிகமாக கொடுத்து மக்களை துயரத்தில் இருந்து மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #Storm #Gajastorm

    கஜா புயலின் போது தமிழக அரசின் நிவாரண நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Gajastorm #TamilisaiSoundararajan

    திருப்பரங்குன்றம்:

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை பார்வையிட நாளை செல்கிறேன். மத்திய சுகாதாரத்துறை விரைவாகவும், மாநில அரசுக்கு உதவி செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

    அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. புயலால் வாழை, தென்னை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் காப்பீடும் உள்ளது. இதற்கு தனித்தனியாக இழப்பீடு கொடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன்.


    பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் சந்திக்கும் போது சிலர் கோபப்படுவார்கள். இதை அதிகாரிகள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர். முதல் வரும் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.

    இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு உண்டு.

    மக்கள் துன்பப்படும் போது கோபப்படுவது இயல்பு தான். அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்துள்ளது. குற்றம் சொல்வது எளிது. எந்தெந்த நேரங்களில் எந்தெந்த உதவிகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கம் அந்தந்த நேரங்களில் செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது. மீட்பு நடவடிக்கையை விட்டு அரசை குறை சொல்லக் கூடாது தங்களால் உதவி செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #TamilisaiSoundararajan

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Vaiko #Gajastorm

    வாடிப்பட்டி:

    மதுரை அருகே உள்ள பரவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு கஜா புயல் பாதிப்பில் இருந்து விவசாயிகளுக்கு முதலுதவியை சிறப்பாக செய்து விட்டது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட உண்மை விவசாயிகள், மீனவர்களை கண்டறிந்து தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    கஜா புயலில் இருந்து விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாக்க, கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, சிறந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற் கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை மனதாரப் பாராட்டுகிறேன்.

     


    கஜா புயல் தாக்கிய நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் என வழி நெடுக அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டிருந்த வாழை, பலா, மா, தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரங்கள் பல ஆண்டு உழைப்பில் வளர்ந்தவை. தென்னை விவசாயிகளுக்கு நஷ்டஈடு, எவ்வளவு கொடுத்தாலும் மீண்டெழ முடியாத சோகம் சூழ்ந்த நிலையில் உள்ளனர்.

    கரூர் பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. மீட்பு பணியில் 296 மருத்துவ அவசர உதவிக் குழுக்கள், பல்லாயிரக்கணக்கான மின் ஊழியர்கள், தண்ணீரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #Gajastorm

    சரியான நேரத்தில் மழை பெய்யாதபோது, விவசாயிகள் தற்கொலை வழியை தேடுகிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் பெங்களூருவில் விவசாய கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கலந்து கொண்டு பேசியதாவது:-

    சரியான நேரத்தில் மழை பெய்யாதபோது, விவசாயிகள் தற்கொலை வழியை தேடுகிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம். இந்த முறை பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநில அரசு வறட்சி நிவாரண பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.

    பெங்களூரு விவசாய பல்கலைக்கழகம் நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. இங்கு புதிதாக 184 வகையான விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகத்தில் நானும் படித்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். முந்தைய காலங்களில் உணவு தானியங்களை நமது நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் இன்று நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறோம். இன்னும் ஏராளமான சாதனைகள் செய்ய வேண்டியது உள்ளன. இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    விவசாயிகள் ஆர்வமாக விவசாய பணிகளை மேற்கொண்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த வகையில் பங்களிப்பை அளிக்க முடியும்.

    இவ்வாறு பரமேஸ்வரா பேசினார். #Parameshwara
    ×