search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96359"

    பரமத்திவேலூர் அருகே நடந்து சென்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தெற்கு நல்லியாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 65). விவசாயி. இவர் நேற்று இரவு 7.30 மணிக்கு பரமத்திவேலூர் பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த லோகேஸ் (27) என்பவர் சாலையில் நடந்து சென்ற தங்கமணி மீது மோதினார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. லோகேசுக்கு மூக்கு, கையில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள், உடனடியாக அங்கு ஆம்புலன்சை வரவழைத்து 2 பேரையும் அதில் ஏற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தங்கமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து லோகேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர் கடைக்கு சென்ற சிறுமியை திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம்(வயது 59) என்பவர், வழிமறித்து அருகில் வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி சண்முகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கொடைக்கானல் அருகே உள்ள கல்லக்கிணறு பகுதியில் விவசாய பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் கவலையடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரியூர், பெருங்கானல், பள்ளத்துகால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    அவை தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் சில தினங்களாக 4 காட்டு யானைகள் கல்லக்கிணறு பகுதியில் புகுந்தது. நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டம் கல்லக்கிணறு பகுதியில் உள்ளன. அந்த தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, காபி போன்ற பயிர்களை சேதப்படுத்தின. காட்டு யானைகள் தொடர்ந்து இந்த பகுதியில் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    புதுவை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலில் தனது விவசாய நிலத்தில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டதை கண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரை பாராட்டினர். #MinisterKamalakannan
    காரைக்கால்:

    புதுவை வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

    இவர் அமைச்சராக இருந்தாலும் எளிமையாக காணப்படுவார். அமைச்சர் பணி ஒருபுறம் இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்று விவசாய பணிகளில் ஈடுபடுவார். அதன்படி அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று காரைக்கால் அம்பகரத்தூரில் இருக்கும் விவசாய நிலத்துக்கு சென்றார். வேட்டி- சட்டையை கழற்றி விட்டு சாதாரண விவசாயி போல் கைலி அணிந்து கொண்டார்.



    பின்னர் வயலில் இறங்கி மண்வெட்டியால் நிலத்தை சீர் செய்தார். அதனை தொடர்ந்து நாற்று கட்டுகளை தூக்கி சென்றார். அந்த நாற்றுகளை நடும் பணியிலும் ஈடுபட்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரை பாராட்டினர்.

    இது குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் கூறும்போது, நான் அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். விவசாயம் செய்வது எனக்கு பிடிக்கும்.



    உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில், உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்ற பாரதியார் பாடல்களுக்கேற்ப நான் விவசாயப்பணியில் ஈடுபடுகிறேன் என்றார். #MinisterKamalakannan
    ஆம்பூர் அருகே இரு உடல் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்யை அப்பகுதியினர் திரளாக வந்து பார்த்து சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மோதகபல்லியை சேர்ந்தவர் உமாபதி(60), விவசாயி. இவர் தனது வீட்டில் 5 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று மதியம் ஒரு வெள்ளாடு 2 பெண் குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி சாதாரணமாகவும், மற்றொரு குட்டி ஒரு தலையில் இரு உடல்களுடன், எட்டு கால்களுடனும் பிறந்திருந்தது. இதை அறிந்த அப்பகுதியினர் திரளாக வந்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்த்து சென்றனர்.

    ஆனால் பிறந்த சில மணி நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி பரிதாபமாக இறந்தது.இறந்த அந்த ஆட்டுக்குட்டியை உமாபதி அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தார்.

    பொதுவாக எட்டு கால்களுடன் பிறக்கும் ஆட்டுக்குட்டிக்கு உலக அளவில் ஆக்டா கோட் என்ற பெயரில் அழைக்கப்படுவது வழக்கம்.

    கடந்த 2014ம் ஆண்டு குரோஷியா நாட்டில் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவின.

    இத்தகைய ஆட்டுக்குட்டிகள் பிறந்து ஒருவாரம் வரை உயிர் வாழ்ந்து விட்டால் பின்னர் தங்களது வாழ்நாளை எளிதாக கழித்து விடும் என்றனர்.

    திருவாரூரில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 50). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது சகோதரர் இறந்து விட்டார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அருணாசலம் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அருணாசலத்தின் மகள் லாவண்யா திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பூதலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    பூதலூர்:

    பூதலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும்பாரபட்சமின்றி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்கடன் வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளில்விவசாயிகள் வைத்துள்ள நகைகளை ஏலம் விடக் கூடாது. விவசாய உரங்களின் விலை உயர்வைரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன்.டாக்டர் அம்பேத்கார்,தந்தை பெரியார் சமுக நீதி பாசறை பொதுச்செயலாளர் அருண் மாசிலாமணி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பு. தி.மு.க.வின் ஆல்பர்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், தமிழ்தேசிய பேரியக்க ஒன்றிய செயலாளர் தென்னவன். பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் உதயகுமார் மற்றம் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. இரவு வரை நீடித்த இந்த மழையால் ராமநாதபுரம் நகரின் சாலையில் மழை நீர் குழம்போல் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    இதேபோல் பரமக்குடி, மண்டபம், உச்சிப்புளி, கமுதி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதோடு விவசாயத்துக்காக வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் குடிநீர் பிரச் சினை தீரும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லிமிட்டரில் வருமாறு:-

    கமுதி -18.40, முதுகுளத்தூர் -6.20, பாம்பன் -1.40, பரமக்குடி -5.20, பள்ளமோர்குளம்-4.50, வாலிநோக்கம் -1.60 மாவட்டத்தின் மொத்த மழையின் அளவு 143.70 மில்லிமிட்டர் ஆகும்.

    திருவள்ளூர் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர் நீலமேகம். விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் மேல் நல்லாந்தூர் வழியாக வந்தார்.

    அங்கு போக்குவரத்து போலீஸ் சீருடையில் நின்ற வாலிபர் ஒருவர் நீலமேகத்திடம் வாகனத்தின் ஆவணங்களை கொடுக்கும்படி கேட்டார்.

    அப்போது போதிய ஆவணம் இல்லாததால் ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் கட்டவேண்டும் என்று கூறி பணத்தை வசூலித்தார். பின்னர் இதற்கான ரசீதை போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுபற்றி நீலமேகம் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது மர்ம நபர் போலீஸ் போல் நடித்து பணம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் கன மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் இறந்தனர். #ChennaiRain
    சென்னை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கம்மாபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (வயது 60) மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ராமச்சந்திரன் உடல் கருகி பலியானார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ரெட்டியபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி கலா (44). நேற்றுமுன்தினம் இரவு திடீரென்று பெய்த கன மழையால் கண்மாயில் கட்டி இருந்த மாடுகளை மீட்டு வருவதற்காக ஜெயராஜூம், கலாவும் சென்றனர். மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கலா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குப்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சுப்புத்தாய் என்பவர் மின்னல் தாக்கி தனது கணவர் கண்முன்னே பலியானார்.

    திருப்பூரை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). இவர் தனது உறவினர் சந்தோஷ்குமார் (21) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி உயிரிழந்தார். சந்தோஷ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருப்பூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் தங்களது வீட்டின் மாடிகளில் உள்ள அறைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    நம்பியூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையால் செட்டியம்பதி குளம் நிரம்பி, அந்த குளத்தில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகே நம்பியூர் பெரியார்நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

    கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பூசாரிவலசு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஈரோடு-சத்தி மெயின்ரோட்டில் உள்ள தரைப்பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. பொலவக்காளிபாளையத்தில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் பெய்த மழையில் வீடு இடிந்து சேதம் அடைந்தது. மேலும் சங்கரன்கோவில் அருகே ஒரு வீடும், கடையத்தில் ஒரு வீடும் இடிந்தது.

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன் இலந்தைகுளத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவருடைய வீட்டின் மாடி அறை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் அருகே இருந்த மின்கம்பமும் சேதம் அடைந்தது.

    அம்பை மேலப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வீடு மழையால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

    இதேபோல் அம்பை பண்ணை சங்கரய்யர் நகரில் ஓடு தயாரிக்கும் ஆலையின் காம்பவுண்டு சுவர் இடிந்து, பக்கத்தில் வசிக்கும் இளங்கோ என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது விழுந்தது. இதில் அவர் வீட்டுக்கு வந்திருந்த சங்கர் தெருவை சேர்ந்த ஐசக் (38) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

    ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினத்தில் உள்ள ஜெபக்குமார் என்பவருடைய வீட்டின் ஒரு பகுதி மழையில் இடிந்து விழுந்தது.

    அம்பை தீயணைப்பு நிலைய கட்டிடத்தை மின்னல் தாக்கியதில், மின்கம்பிகளில் தீப்பிடித்து மின் விசிறிகள், மின்விளக்குகள், டி.வி., டெலிபோன் இணைப்புகள் சேதம் அடைந்தன.

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த மாயாண்டி (40) என்பவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.

    கனமழையில் மதுரையில் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது.

    ஈரோட்டில் திங்களூர் அருகே உள்ள போலநாயக்கன்பாளையம், பாப்பம்பாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பின.

    விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    குன்னத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையில் 17 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த 3 வீடுகளிலும் வசித்த 9 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் தப்பினார்கள்.

    குன்னத்தூர் அருகே கருமஞ்செறை ஆதிதிராவிடர் காலனியில் கனமழையால் 38 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கருக்குப்பாளையத்தில் கனமழையால் 15 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 
    சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதிஉதவி வழங்கி பாதுகாக்கவும், 2018-19-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் ரபி பருவத்தில் நெற்பயிர் (சம்பா) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி, நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 520 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்.கடன்பெறாத விவசாயிகள் சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறாக சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் மாதம் 30-ந்தேதி ஆகும். நெல் பயிருக்கான காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.24ஆயிரம் ஆகும்.

    காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.360 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. எனவே, விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி பயன்பெமாறும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது
    செந்துறை அருகே கடன்தொகை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல் செய்த டிரைவரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யபட்டார்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள கோசுகுறிச்சியை சேர்ந்தவர் பக்கீர்அகமது (வயது 23). விவசாயி. இவர், கம்பத்தை சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். இதற்காக, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை நிதிநிறுவனத்துக்கு செலுத்தி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக அவர் கடன்தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிதிநிறுவனத்தினர் 4 பேர், டிராக்டரை பறிமுதல் செய்வதற்காக நேற்று முன்தினம் கோசுகுறிச்சிக்கு வந்தனர். அப்போது பக்கீர்அகமது, அவருடைய தம்பி மீரான் (21) ஆகியோருக்கும், நிதிநிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்களுடன் வந்திருந்த டிரைவர் சரவணன் என்பவர், அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கீர்அகமது, தான் வைத்திருந்த அரிவாளால் சரவணனை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து பக்கீர்அகமதுவை கைது செய்தார். இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் மீரான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    ×