search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96528"

    மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். #LSPolls #DMDK #VijayaPrabhakaran #Vijayakanth
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. குன்னம் அருகே உள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல் வாடி, எழுமூர், சித்தளி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து சித்தளியில் நடைபெற்ற கட்சி உறுப்பினரின் இல்ல விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தே.மு.தி.க.வை அழிக்க நினைப்பவர்கள் இந்த தேர்தலுடன் அழிந்து விடுவார்கள். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க. குறித்து பேசியதால், தே.மு.தி.க.வின் திருஷ்டி அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது தே.மு.தி.க. பாசிட்டிவ் எனர்ஜியாக வளர்ந்து வருகிறது.


    மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக எழுமூரில் கட்சி கொடியினை ஏற்றிய விஜயபிரபாகரன், இந்த தேர்தலில் நாம் யார்? என்பதை விஜயகாந்த் வழியில் செயல்பட்டு நிரூபிக்க வேண்டும். தேர்தலில் நம்முடைய நோக்கம் வெற்றியடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றார். #LSPolls #DMDK #VijayaPrabhakaran #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்ய போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் மூலம் பணம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #vaiko #parliamentelection #dmk #premalathavijayakanth

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ம.தி.மு.க. நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ. 55 லட்சமும், நாமக்கல் மாவட்டம் சார்பில் ரூ. 10 லட்சமும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது.

    பாராளுமன்றம் மற்றும் 21 சட்ட சபை தொகுதிகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். கடந்த 2004-ம் ஆண்டு தி.மு.க. அணி 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோ அது போல் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது.

    தற்போது ஆட்சியில் உள்ள மத்திய அரசானது அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள எத்தகைய தவறான முறைகளையும் கையாள வாய்ப்பு உள்ளது.

    போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றில் பணம் கொண்டு செல்ல அதிகார வர்க்கம் திட்டமிட்டுள்ளது.

    தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அணியினர் ஒரு ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்வார்கள்.

    நீட் தேர்வு விவகாரம், உயர் மின்னழுத்த கோபுரம், முல்லை பெரியாறு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது.

    முதன்மை மாநிலமாக செழித்து வளர்ந்துள்ள தமிழகத்தை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராணுவத்தினரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். அபிநந்தனை நினைத்து பெருமைப்படுகிறோம்.

    ஆனால் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீதான சந்தேகம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

    பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் கவர்னரும், தமிழக அரசும் இதுவரை முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 130 இடங்களை மட்டுமே பாரதீய ஜனதா பெறும். மாநில அரசுகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

    கருணாநிதியை மருத்துவமனைக்கு சென்று பார்க்க விரும்பிய விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் பார்க்க அனுமதிக்கவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமானம் உள்ளவர். அவர் அவ்வாறு நடந்து இருக்க மாட்டார்.


    அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. பத்திரிகையாளர்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஒருமையில் பேசியிருப்பது தவறானது. இவ்வாறு பேசுவது முறையல்ல. இதனை அவர் தவிர்க்க வேண்டும்.

    கட்சி நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநகர செயலாளர் சிவபாலன், மாவட்ட துணை செயலாளர் முத்து ரத்தினம், பல்லடம் நகர செயலாளர பாலு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம்,பொங்கலூர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #vaiko #parliamentelection #dmk #premalathavijayakanth

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்காக விஜயகாந்தை இழுக்க அதிமுக அணியும், திமுக கூட்டணியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. #DMK #ADMK #Vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகம் எடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. நிலை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஜயகாந்தை இழுக்க அ.தி.மு.க. அணியும், தி.மு.க. கூட்டணியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் தே.மு.தி.க. எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யாமல் காலம் கடத்துவதால் அவர்களது முடிவுக்காக பிற கட்சிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் மட்டுமே உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டு கட்சிகள், ம.தி.மு.க.வுக்கு எத்தனை இடம் என்பது உறுதியாகவில்லை. தே.மு.தி.க. வந்தால் அதற்கான சீட்டை உறுதிப்படுத்திவிட்டு மற்ற கட்சிகளுக்கான சீட்டை முடிவு செய்யலாம் என தி.மு.க. தலைமை நினைக்கிறது. விஜயகாந்த் முடிவுக்காக திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் காத்திருக்கின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம் என்று தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூறிவிட்டனர். நமது கட்சியில் இருந்து இதுவரை ஒருவர் கூட பாராளுமன்றத்துக்கு சென்றது இல்லை. அதற்கான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அதனை இழக்க வேண்டாம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

    கூட்டணி வி‌ஷயத்தில் சிலர் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவும் சிலர் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களிடம் சுதீஷ் கூறும்போது,



    ‘தி.மு.க கூட்டணியில் இருந்து ஸ்டாலினும் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசி வருகிறார்கள். எனவே மற்றவர்கள் நம் கட்சியை பற்றி பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறி இருக்கிறார்.

    இப்போதைக்கு தி.மு.க கூட்டணியில் 6 சீட்டுகள் வரையும் அ.தி.மு.க கூட்டணியில் 5 சீட்டுகள் வரையிலும் இறங்கி வந்துள்ளனர். தே.மு.தி.க.வுக்கு 6 சீட்டுகள் கொடுத்தால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது’

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #ADMK #Vijayakanth

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ஜனதா மீண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. #ADMK #Vijayakanth #BJP

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த அணியில் இடம் பெறும் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு முதன் முதலில் அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்தனர்.

    அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற சம்மதித்த விஜயகாந்த் முதலில் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 5 இடங்களும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன. இதன் காரணமாக தே.மு.தி.க.வுக்கு அதிக இடங்களை ஒதுக்க இயலாத நிலைக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது.

    இதன் காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி உருவானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் அடுத்தடுத்து விஜயகாந்தை சந்தித்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு சுமார் 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க. கூட்டணியிலும் சுமூக நிலை உருவாகவில்லை.

    அ.தி.மு.க.-தி.மு.க. இரு கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்குமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 23 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதியை வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

     


    அதுபோல தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 22 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதிகளை வைத்துக் கொண்டு 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தே.மு.தி.க. குறைந்தபட்சம் 7, அதிகப்பட்சம் 9 என்ற எண்ணிக்கையில் இரு அணிகளிடமும் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

    தே.மு.தி.க. விரும்பும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., தி.மு.க. இரு கூட்டணியிலும் தொகுதிகள் இல்லை என்பதே எதார்த்தமான நிலையாக உள்ளது. என்றாலும் 5 முதல் 7 தொகுதிகளையாவது பெற்று விட வேண்டும் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் 40 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் விருப்ப மனு வாங்கும் அறிவிப்பை தே.மு.தி.க. மேலிடம் வெளியிட்டுள்ளது. விருப்ப மனு வாங்கும் கால கட்டத்துக்குள் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிடமும் தொடர்ந்து பேசி எந்த அணியில் சாதகமான நிலை வருகிறதோ அங்கு சேரலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே எந்த கட்சி அதிக தொகுதிகளை தருகிறதோ அங்கு சேர்ந்து விடலாம் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் அனைவரும் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே எந்த கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பது தே.மு.தி.க.வின் இலக்காக உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி தி.மு.க.- அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் தே.மு.தி.க.வுக்கு குறைவான தொகுதிகளை கொடுத்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே திட்டமாக உள்ளது. அதற்கேற்ப தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க., தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் இதுவரை தே.மு.தி.க. பிடி கொடுக்கவில்லை. இதனால் இழுபறி நீடித்தப்படிதான் உள்ளது.

    இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜனதா தலைவர்கள் தற்போது மும்முரமாகி உள்ளனர். நேற்று சிறு-குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல் இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், “எப்படியாவது தே.மு.தி.க.வை நமது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடுங்கள். இதற்காக மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். விஜயகாந்தை விட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

    தே.மு.தி.க.வை இழுப்பது பற்றி சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி பியூஸ்கோயல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் தே.மு.தி.க.வுடன் மீண்டும் புதியதாக பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கலாம் என்று பியூஸ்கோயல் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் மூலம் விஜயகாந்தை திருப்தி செய்து தங்கள் அணிக்குள் கொண்டுவர முடியும் என்று பியூஸ்கோயல் கருதுகிறார்.

    கூடுதல் தொகுதிகளுக்கு தே.மு.தி.க. சம்மதிக்கும் பட்சத்தில் தொகுதி பங்கீட்டை உடனே முடிக்கவும் அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் விரைவில் மீண்டும் சென்னை வர உள்ளார்.

    அவர் தே.மு.தி.க. தலைவர்கள் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை சந்தித்து இன்னொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. அதன் பிறகு தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா சமரசம் செய்தாலும் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே பா.ஜனதா புதிய சமரச திட்டத்தை தே.மு.தி.க. ஏற்குமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

    இதுகுறித்து தே.மு.தி.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. முக்கிய அங்கம் வகிக்கும். அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பினரிடமும் பேசி வருகிறோம். 5 முதல் 8 தொகுதிகள் கிடைத்தால் கூட்டணி உறுதியாகி விடும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதும் கூட்டணி அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்” என்றார்.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்துக்கு தே.மு.தி.க. எந்த முடிவையும் அறிவிக்காது என்று கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் தே.மு.தி.க.வை சமரசம் செய்து தங்கள் அணியில் சேர வைப்பதற்கு தி.மு.க. மூத்த தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    எனவே தே.மு.தி.க. எந்த கூட்டணி பக்கம் சாயும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. #ADMK #Vijayakanth #BJP

    தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுபறியும் இல்லை என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். #kanimozhi #mkstalin #vijayakanth

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார். பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான். தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து மற்ற கட்சிகளுடன் கேட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால் தி.மு.க. சொல்லும் பெயர் ராகுல்காந்தியின் பெயர் தான்.


    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சுயமரியாதையுடன் வளர்த்து வந்த இயக்கத்தை தற்போது உள்ளவர்கள் மற்றவர்களுக்கு அடிபணிந்து செல்லும் நிலைக்கு மாற்றியுள்ளனர். இதனை அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் சிந்திக்க வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுபறியும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. எப்படி குட்டிகரணம் போட்டு கூட்டணியை உருவாக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜயகாந்த் உடல்நிலை குறித்து நேற்று சந்தித்து பேசிய ரஜினிகாந்த், விஜய பிரபாகரனின் அரசியல் பேச்சை பாராட்டினார். #VijayaPrabhakaran #rajinikanth #vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்கா சென்று திரும்பியதும் முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் இருவரும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்தனர். இந்த சந்திப்பில் அரசியல் இருந்ததாகக் கூறப்பட்டாலும், “ஒரு துளிகூட அரசியல் இல்லை” என இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.

    சமீபகாலமாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேடையிலும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவரின் அரசியல் பேச்சுகள் குறித்து சந்திப்பின்போது ரஜினி பேசியுள்ளார்.


    ரஜினி விஜயகாந்த் குடும்பத்துடன் பேசும் புகைப்படத்துடன் விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் அரசியல் மேடைகளில் பேசியதை பார்த்ததாக ரஜினி அங்கிள் என்னிடம் சொன்ன தருணம் சிறப்பான ஒன்று.

    மேடைகளில் நான் பேசியதை சொல்லி ஆச்சர்யப்பட்டார். அது குறித்து சந்தோ‌ஷமாகப் பகிர்ந்து கொண்டார். கண்டிப்பாக அங்கிள் இனியும் நான் நன்றாக வேலை செய்வேன்” என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. #VijayaPrabhakaran #rajinikanth #vijayakanth

    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    வேலூர்:

    வேலூர் ஊரிசு கல்லூரியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வேலூர் வந்தார்.


    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

    கூட்டணியை உருவாக்கி பல மாதங்களாக தி.மு.க.வுடன் செயல்பட்டு வருகிறோம். எனவே தி.மு.க. கூட்டணியில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    தி.மு.க கூட்டணியில் நாங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை வழங்கி உள்ளோம்.

    இறுதி பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என்று விஜய பிரபாகரன் பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    ‘காவிரி டெல்டா பகுதியில் கடந்த காலங்களில் 58 சதவீத விவசாயம் நடைபெற்றது. தற்போது 7 சதவீதம் தான் விவசாயம் நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் வராததால் 51 சதவீதம் விவசாயம் செய்ய முடியாமல் போய் விட்டது.



    விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் வரும். மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவிப்பார். அப்படி செய்யாவிட்டால் ஏன் செய்யவில்லை என சட்டையைப் பிடித்துக் கேட்கலாம். விஜயகாந்த்துக்கு வாய்ப்பு கொடுங்கள். தே.மு.தி.கவை சேர்ந்தவர்கள் யாருக்கும் பயப்படாதீர்கள்.

    வருங்காலத்தில் விஜயகாந்தின் ஆட்சி இல்லை என்றால் எதுவும் இல்லை. விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால் பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் உள்ளனர்.

    தே.மு.தி.கவுக்கு 2 சதவீதம் வாக்குகள்தான் உள்ளது, விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள். எங்களிடம் வைத்து கொள்ளாதீர்கள், நாங்கள் ஒதுக்கி கொடுக்கின்ற கட்சி. வருகிற எம்.பி தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை. தற்போது டெல்லிக்கு குரல் கொடுப்பதற்கு சரியான தலைவர் இல்லை.

    தமிழ்நாட்டுக்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டுவர வேண்டும். இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிகொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. இப்போதுள்ள கட்சியினரிடையே தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் உள்ளார்.

    அவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. வரும் எம்.பி. தேர்தலில் எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து அவர்களின் முகத்திரையை கிழிக்கணும். எனக்கும் விஜயகாந்த்துக்கும் தஞ்சாவூர் தொகுதி மேல் தனி பாசம் உண்டு.”

    இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணி அமைத்து இருப்பதை தலைவர்கள் விரும்பலாம். மக்கள் விரும்ப மாட்டார்கள். மோடி அரசு சரி இல்லை என்று 4 நாட்களுக்கு முன்பு வரை தம்பித்துரை விமர்சனம் செய்து வந்தார்.

    நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தோம். அ.தி.மு.க. அரசை பா.ஜனதா தான் இயக்குகிறது என்று. அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க. வெறும் சிப்பாய் தான். மத்தியில் என்ன சொன்னார்களோ அதைத் தான் எடப்பாடி அரசு செய்து வந்தது.

    இப்போது எப்படியாவது நாற்காலியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.


    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வுக்கு பூஜியத்துக்கு கீழ்தான் மதிப்பு கொடுக்க முடியும் என்றார். சூடு, சொரணை இல்லாதவர்கள் தான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பார்கள் என்று அன்புமணி சொன்னார். இப்போது எதுவும் இல்லாமல் கூட்டணி வைத்து, விருந்தும் வைக்கிறார்கள்.

    முரண்பட்ட இந்த கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று பா.ஜனதா முயற்சிக்கிறது. அதனால் தான் பா.ம.க.வை விட குறைவாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.

    கோட்டா கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை. எப்படியாவது தமிழகத்தில் நுழைய வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

    முன்பு தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது என்றேன். இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் எங்குமே தாமரை மலரப் போவதில்லை.

    தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பது பற்றி தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஒரு தலைவர் இந்த மாதிரி சூழலில் இருக்கும் போது தலைவர்கள் போய் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் அரசியல் கோணத்தில் பார்க்க கூடாது.

    எந்த கூட்டணியில் சேருவது என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்.

    எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும்.

    தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் நான் போட்டியிட போவதாக இப்படித்தான் தேர்தல் நேரத்தில் பரபரப்பு கிளம்பி விடும். அதேபோல் தான் இப்போதும் கிளப்பி விட்டுள்ளார்கள்.

    நான் எப்போதும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதில்லை. ராகுல் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். பிரசாரம் மட்டும் செய்ய சொன்னால் பிரசாரம் செய்வேன்.

    எங்கள் கூட்டணிக்கு தமிழகத்தில் 35 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பிட்ட தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற வேண்டும் என்பதல்ல. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

    அரசியலுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #MKStalin #Vijayakanth
    சென்னை:

    தேமுதிக  தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் கொண்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கலைஞர் மறைவு குறித்த செய்தி கேட்டு, வெளிநாட்டில் இருந்தபடி கண்ணீர் விட்டு அழுதது மறக்க முடியாது. என்னை எப்போதும் அண்ணன் என்றுதான் அழைப்பார்.



    இன்று அரசியல் பேசுவதற்காக அவரை சந்திக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உடல் நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன்.

    தற்போது அமெரிக்காவில் அவர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் தேறி வந்திருக்கிறார். அவர் இன்னும் நல்லமுறையில் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். #MKStalin #Vijayakanth
    தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். #MKStalin #Vijayakanth #StalinMeetVijayakanth
    சென்னை:

    உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், நாட்டின் நலன் கருதி கூட்டணி விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். எனவே, அவர் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், இதனை காங்கிரஸ் தலைமை உறுதி செய்யவில்லை. தேமுதிகவை சேர்க்கும் திட்டம் இல்லை என்றும் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.



    இந்த சூழ்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது. ஆனால், விஜயகாந்திடம் நலம் விசாரித்ததாகவும், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    எனினும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியாக இருக்கும் நிலையில், விஜயகாந்தை சமாதானம் செய்வதற்கு ரஜினி சென்றதாக தகவல் வெளியானது. அதிமுக தரப்பில் விஜயகாந்துக்கு 5 தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது. இதை தேமுதிக ஏற்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திடீரென சாலிகிராமம் சென்று, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதிமுகவுடன் தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #MKStalin #Vijayakanth #StalinMeetVijayakanth
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்தவித இழுபறியும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #DMDK #PremalathaVijayakanth
    சென்னை:

    விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவித இழுபறியும் இல்லை. எனவே விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும்.



    தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே உரிய முடிவை கேப்டன் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.

    தே.மு.தி.க. வின் நிலைப்பாடு பற்றிய முழு விவரமும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். கூட்டணியில் எங்களுக்கான தொகுதிகள் கிடைக்கும்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #DMDK #PremalathaVijayakanth
    ×