search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96528"

    தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்ததாகவும், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #Vijayakanth #Rajinikanth
    சென்னை:

    உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என பேசப்பட்டது.


    இந்நிலையில், விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது:-

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம்  குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது.

    நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியபோது என்னை சந்தித்து நலம் விசாரித்த முதல் நபர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதர். அவர் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vijayakanth #Rajinikanth
    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். #DMDK #Vijayakanth #Rajinikanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். இதன்பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    விஜயகாந்தை அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதா கட்சிக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து விஜயகாந்துக்கு 3 முதல் 4 இடங்கள் வரை கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தமிழக பா.ஜனதா பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜயகாந்த் தரப்பில் பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் இழுபறி நீடிக்கிறது.

    இதன் காரணமாக விஜயகாந்த் அ.தி.மு.க. அணியில் இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.



    இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்த் அவரை சந்தித்தார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ரஜினி, அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். எனினும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    தற்போது விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார். அவரை சமாதானம் செய்வதற்கு ரஜினி சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் இன்று விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் இப்போது கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக களம் இறங்கி உள்ளார். அதனால் அவர் விஜயகாந்தை கூட்டணிக்கு சேர அழைப்பு விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #DMDK #Vijayakanth #Rajinikanth
    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் நம் இந்திய நாட்டில் 17-வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.



    பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

    மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.20ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இழுபறி முடிவுக்கு வருமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் அல்லது ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் இன்னும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #KamalHaasan #Vijayakanth
    சென்னை:

    சினிமாவில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். இவர்களுக்கு பின்னர் பல சினிமா நட்சத்திரங்கள், அரசியலில் குதித்திருந்தாலும் யாரும் நிலைக்கவில்லை.

    அதே நேரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், அரசியல் களத்தில் வேகமாக முன்னேறினார். கட்சியை தொடங்கிய அடுத்த ஆண்டே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தனி ஆளாக விஜயகாந்த் களம் இறங்கினார். அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. கணிசமான ஓட்டுகளை அள்ளியது. விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி அனைவரின் புருவங்களையும் உயரச் செய்தார்.

    முதல் தேர்தலிலேயே தே.மு.தி.க. வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று ஆச்சரியப்படுத்தினர். இதுவே 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டது.

    இதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.

    இதன் மூலம் தே.மு.தி.க., 2-வது தேர்தலிலேயே 16 அடி பாய்ந்தது.

    இதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி உதயமான மக்கள் நலக் கூட்டணி மண்ணை கவ்வியது. 2 தேர்தல்களில் ஏறுமுகமாக இருந்த விஜயகாந்தின் செல்வாக்கு 2016-ம் ஆண்டு தேர்தலில் அடியோடு சரிந்தது. அதில் இருந்து மீள்வதற்கு விஜயகாந்த் போராடிக் கொண்டிருக்கிறார்.

    கட்சியை தொடங்கி ஓராண்டில் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது போல கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கிறார்.



    தேர்தல் களத்தில் கமலின் இந்த முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனை பொறுத்த வரையில், புதிய கட்சியை தொடங்கிய பின்னர் கிராமப்புறங்கள் தொடங்கி, நகர்ப் பகுதிகள் வரையில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

    புதிய வாக்காளர்களான இளைஞர்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்பி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே கமலின் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.

    இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசவும் கமல் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளையும் ஊழல் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் கமல், தேர்தல் களத்தில் அதனை வேகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

    விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல். ஆனால் கமல் சந்திப்பதோ பாராளுமன்ற தேர்தல். மாநில கட்சியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அதே வேளையில் புதிய மாற்றத்துக்காக எங்களை ஆதரியுங்கள். “நாளை நமதே” என்கிற கோ‌ஷத்துடன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மத்தியில் யாருக்கு ஆதரவு? யார் பிரதமர்? என்பது போன்ற வி‌ஷயங்களை பற்றி பிரசாரத்தின் போது கமலால் பேச முடியாது என்பது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    எது எப்படி இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் களம் நிச்சயம் கமலுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் முன்னுக்கு வந்ததை போல கமலும் கவனிக்கப்படும் புதிய அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பாரா? இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Vijayakanth
    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Vijayakanth
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கி கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்பின்னர் இதர கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.



    இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த சந்திப்பு நட்பு ரீதியானது என்றும், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய தனது நண்பர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார்.

    அரசியல் ரீதியாக பேசப்பட்டதா? என்று கேட்டதற்கு, “அவர் ஒரு கட்சியின் தலைவர், நானும் ஒரு அரசியல் தலைவர். இது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கும்போது, அரசியல்  பேசாமல் இருக்க முடியுமா? பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கூறினேன்” என்றார் திருநாவுக்கரசர். #Thirunavukkarasar #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்தார். #DMDK #Vijayakanth #Premalatha
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.  அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார்.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    அப்போது பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-


    கேப்டன் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பயண களைப்பால் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வேறு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தனது முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.

    யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் அவர் அறிவிப்பார். பெரிய கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை இடம், எந்த தொகுதி என்பது குறித்தெல்லாம் கலந்து ஆலோசித்து தெரிவிப்பார்.

    இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எந்த கட்சியும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. அப்படியிருக்கும் போது தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இப்போது எப்படி சொல்ல முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

    அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச குழு ஒன்றையும் அறிவித்து இருந்தார்.

    அதன்படி துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் நாடு திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார். மகன் விஜய பிரபாகர் மட்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.



    காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் வெளியில் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

    இதற்கிடையே விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் காலை 9.05 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து மகன் விஜயபிரபாகர் 9.20 மணிக்கு விமான நிலையத்திற்குள் சென்றார்.

    காலை 11 மணி அளவில் மியாட் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர், 3 நர்சுகள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்துக்குள் சென்றதாக தகவல் வெளியானது.

    அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலையை பரிசோதனை செய்ததாகவும். விமான பயணத்தினால் விஜயகாந்த் சோர்வடைந்து உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளித்ததாகவும் தெரிகிறது.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
    கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் வரும் 16-ந்தேதி காலை சென்னை திரும்புவதாக தேமுதிக அறிவித்துள்ளது. #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி அமெரிக்கா சென்றார்.

    அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வருகிறார்.

    விஜயகாந்தும், பிரேமலதாவும் அமெரிக்காவில் இருப்பதால் கட்சி பணிகளை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.



    கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் சுதீஷ் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? எந்த தொகுதிகளில் நிற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விஜயகாந்த் ஆலோசனைப்படி நடப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன் என்றும் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். #DMDK #BJP #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் 2 வாரத்தில் அவர் சென்னை திரும்பியதும் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும்.



    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன்.

    இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி உள்ளது. #DMDK #BJP #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்து. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

    அதன் பிறகு கூட்டணியில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கினார். தற்போது பாராளுமன்ற தேர்தல் வருவதால் விஜயகாந்த் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

    கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி அமைய இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு தனியாக தொகுதிகள் ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகிறது.

    அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் தான் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்கள் முடிவு செய்யப்படும் என்று தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர மறுத்து தனி அணியாக போட்டியிட்டது. அதன் பிறகு இந்த கூட்டணி கட்சிகள் பிரிந்து விட்டன. விஜயகாந்துடன் கூட்டணி வைத்த வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. தனியாக இருக்கும் தே.மு.தி.க. இந்த முறை அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.



    பாராளுமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராக அறிவிக்க தே.மு.தி.க. திட்டமிட்டு உள்ளது. அவர் மதுரை தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அவருக்கு மதுரை தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது.

    மதுரை விஜயகாந்துக்கு சொந்த ஊர் அங்குதான் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதால் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் ஆதரவுடன் மதுரையில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakath #LKSudhish
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

    இதன்காரணமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் பா.ஜனதா கட்சியுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-



    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இந்த தேர்தலில் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும். மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதியில் போட்டியிட்டோம். அதுவேதான் இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

    விஜயகாந்த் வந்த பின்னர்தான் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். அந்த கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakath #LKSudhish
    ×