search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96528"

    உடற் பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது வீடு திரும்பி உள்ளார். #Vijayakanth #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதையடுத்து விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விரைவில் அவர் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் தெரிவித்தது.

    இதே போல் விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் உருக்கமாக பேசிய வீடியோவை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.

    அமெரிக்காவில் முதல்கட்ட சிகிச்சையை முடித்துவிட்டார். அடுத்த கட்ட சிகிச்சைக்காக 4 மாதத்தில் செல்ல உள்ளார். வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று கூறி இருந்தார்.

    இதற்கிடையே இன்று காலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுக்கும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.  #Vijayakanth #DMDK
    சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். நேற்றிரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்தது.

    சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேப்டன் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சீரியசாக இருப்பதாக தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அவர் நன்றாக இருக்கிறார். அவர் மருத்துவமனையில் நலமுடன் ராஜாபோல இருக்கிறார். அவருக்கு எதுவும் இல்லை. அவர் சீரியசாக இருந்தால் நான் அவருடன் இருக்க வேண்டும். ஆனால் நான் வேலை விசயமாக நெல்லூர் வந்து இருக்கிறேன். தேவையில்லாமல் தவறான தகவலை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை?


    இந்த மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்த அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால் வயதானவர் போல படுக்கையில் இருப்பதாக இஷ்டத்திற்கு பேசி வருவது வேதனை அளிக்கிறது. என் தந்தையை இப்படி கூறுவதன் மூலம் எந்த விதத்திற்கு எனக்கு வலிக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் வீட்டில் இப்படி யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டால் இப்படித்தான் பேசுவீர்களா, தேவையற்ற பேச்சுக்களால் மனவேதனை அடைகிறோம்.

    என் தந்தையை அம்மாவும் நாங்களும் அக்கறையுடன் பார்த்து வருகிறோம். அப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. மீண்டும் கேப்டன் வருவார் எல்லோர் முன்பும் நிற்பார். அவருக்கு ஒன்றும் ஆகாது, என் உயிரே போனாலும் அது நடக்கும். அதனால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    அவரவருக்கு சுமை, வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை போல ஆயிரம் மடங்கு நலமுடன் அவர் சீக்கிரம் வருவார். எனக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ்வாக நினையுங்கள். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். நம்பிக்கை வையுங்கள். அவர் திரும்ப வருவார்.

    இவ்வாறு பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran



    தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Vijayakanth #DMDK
    சென்னை:

    நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவரது உறவினரும் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுதீஸ் பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். #Vijayakanth #DMDK
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரை சந்தித்து நடிகர் பார்த்திபன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vijayakanth #Parthiban
    சென்னை:

    தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

    நடிகர் பார்த்திபன் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார்.


    படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்’ என நம்பிக்கை அளித்தார் என்று பதிவிட்டுள்ளார். #Vijayakanth #Parthiban
    தி.மு.க. தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vijayakanth #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் பாதையில் ஸ்டாலினும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழி நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுத்தமைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் அது பாராட்டுக்குறியது. அவர் நாளைய தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க வழிவகை செய்ய உறுதுணையாக இருப்பார்.

    தமிழர்களின் கனவு நனவாகும் காலம் விரைவாக நெருங்கி கொண்டே இருக்கிறது. தி.மு.க.விற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்க வாருங்கள் என வேண்டி விரும்பி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அழைக்கின்றேன்.

    தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம்:-

    திராவிட பாரம்பரியத்தில் உதித்த புதிய சூரியனே, தளபதியாய் வீற்றிருந்தது செயல் தலைவராய் பணியாற்றி இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான மு.க.ஸ்டாலினை விஜிபி குடும்பத்தின் சார்பில் வாழ்த்தி பெருமையடைகின்றோம்.

    தந்தை கலைஞர் வழியில் நின்று தடம் புரளாமல் தடைகளையும், கரடு முரடான பாதைகளையும் மிசா கொடுமையை அனுபவித்து, காவல் தெய்வம் முத்தமிழ் அறிஞரின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு மிகச் சிறந்த சேவையை செய்ய வேண்டுமென எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #DMK #MKStalin #Vijayakanth
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டு முன்பு போல அரசியலில் ஈடுபடுவாரா? தொண்டர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். #DMDK #Vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியல் களத்தில் எவ்வளவு வேகமாக முன்னேறினாரோ, அதே வேகத்தில் வீழ்ச்சியையும் சந்தித்தார்.

    விஜயகாந்த் என்றதும் சினிமாவில் நாம் பார்த்த அவரது கம்பீர தோற்றமும், கணீர் குரலும்தான் நினைவுக்கு வரும். சினிமாவில் அவர் அனல் தெறிக்க பேசிய வசனங்களே விஜயகாந்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனை மையமாக வைத்தே அரசியலில் குதித்த விஜயகாந்த் மக்கள் செல்வாக்கையும் பெற்றார். கட்சியை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே எதிர்க் கட்சி தலைவர் அந்தஸ்தையும் எட்டிப்பிடித்தார்.

    தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபித்த விஜயகாந்த் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 பெரிய தலைவர்களையும் எதிர்த்து அரசியலில் வெற்றி பெற்றவர் என்கிற பெயர் விஜயகாந்துக்கு உண்டு.

    பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை தே.மு.தி.க. சந்தித்தது. அப்போது வீசிய மோடி அலையை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம், பாராளுமன்றத்துக்குள் கட்சியை கொண்டு சென்று விடலாம் என்று விஜயகாந்த் கணக்கு போட்டார்.

    இதன் பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. முதல்-அமைச்சர் கனவோடு மக்கள் நலக்கூட்டணியுடன் கை கோர்த்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட போதும் தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்தது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் இப்போதே அறிவித்து விட்டார்.

    கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் தே.மு.தி.க.வின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலேயே தனித்து போட்டியிடும் முடிவை விஜயகாந்த் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்துக்கு உடல் ரீதியாக மட்டுமின்றி அரசியல் களத்திலும் கடுமையான பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

    அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வரப் போகிறார்? என்பதே மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

    வெளி நாடுகளுக்கு சென்று அடிக்கடி சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் குரல் முற்றிலுமாகவே மாறி விட்டது. அரசியல் பயணத்தை தொடங்கிய நேரத்தில் சினிமாவில் ஒலித்த அதே குரல் ஒலித்தது.

    மேடைகளில் மணிக்கணக்கில் நின்று விஜயகாந்த் பேசியுள்ளார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விஜயகாந்தின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.

    இதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் போது கட்சியினர் கைதாங்கலாக அவரை அழைத்து வந்தனர். விஜயகாந்தின் நடையில் தடுமாற்றம் காணப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய போதும் அதே தள்ளாட்டத்துனேயே காணப்பட்டார்.

    அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பும் போது விஜயகாந்த் நல்ல உடல் நலத்தோடு திரும்புவார் என்றே தே.மு.தி.க.வினர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் விஜயகாந்த்தின் உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது தே.மு.தி.க.வினரை சோர்வடைய செய்துள்ளது. இதில் இருந்து விஜயகாந்த் மீண்டு முன்பு போல அரசியலில் ஈடுபடுவாரா? உடல் நிலை அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டம் முழுவதும் கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வக்கீல் விசாகன் ராஜா ஏற்பாட்டில் எழும்பூர், சேப்பாக்கம், துறைமுகம் பகுதிகளில் 68 இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு 680 மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    680 முதியோருக்கு வேட்டி-சேலை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எழும்பூர் பகுதி செயலாளர் பூங்கா ரமேஷ், சேப்பாக்கம் பகுதி செயலாளர் செந்தில் நாதன், துறைமுகம் பகுதி செயலாளர் ஸ்பாட் ராஜா உள்பட மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஏழைகள், முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

    கோவில்களில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் கோவிந்தன், வில்லிவாக்கம் பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பிரபு, அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் முத்துகுமார், தனசேகர், கோபிநாத், ராஜம்பாள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் ஏற்பாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை, கல்வி உதவி தொகை, முதியோர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.எம்.ரவிச்சந்திரன், திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் அரி, பெரம்பூர் பகுதி செயலாளர் எம்.வேல்முருகன், கொளத்தூர் பகுதி செயலாளர் அலெக்சாண்டர் உள்பட மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன் ஏற்பாட்டில் வடபழனி முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு சீருடை, கல்வி, உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சைதை அகமது, கூத்த பிரான், புண்ணியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம், ராஜ்குமார், மருவை சுப்பு, பிரஸ் பாஸ்கர், நித்யா பாரதி மற்றும் மாவட்ட, வட்ட இணை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி பி.பிரபாகரன் ஏற்பாட்டில் முதியோர் இல்லங்களுக்கு சென்று காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், நிதி உதவி, சுய உதவி குழு பெண்களுக்கு நிதி, மாணவ-மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் நாராயணன், விஸ்வநாதன், முருகேசன், சுப்பிரமணி, பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், நாராயணன், செல்வ ஜோதி லிங்கம், சூரியா, ரமேஷ், கலா, செல்வம், முருகன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #ParliamentElection #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2005-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

    மேலும் கடந்த காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 32 லட்சம் ரூபாய், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் திருமண வயதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட கேப்டன் இலவச கணினி பயிற்சி மையமும், ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 1300 தையல் எந்திரங்கள்.

    ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவி களும், சலவைத் தொழி லாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கி வருகிறோம்.

    இந்த உதவிகளை பெற்று படித்து, பட்டம் பெற்று பல்வேறு உயர்பதவிகளில் பலரும் இருக்கிறார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன், தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள சுமார் ஆயிரம் (1000) நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் (10,000) வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய், செம்மரக்கட்டை வெட்டியதாக ஆந்திரா வன பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லபட்டனர்.

    அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை “மக்களுக்காக மக்கள் பணி” என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம்.

    கடந்த வருடம் 234 தொகுதிகளிலும் 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள,2,50,000 மரக்கன்றுகள் பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நலிவுற்ற ஏழை எளிய 100 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து வழங்கம் போல் இந்த ஆண்டும் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில மக்களுக்கு தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் (1 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள்) வழங்கப்படும்.

    மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கியதைப்போல் இந்த ஆண்டும் வழங்கப்படும்.



    வழக்கம் போல் இந்த ஆண்டும் தே.மு.தி.க.வின் அமைப்பு ரீதியான 64 மாவட்டங்களிலும் இது போன்று பல நல உதவிகளை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அரசியல் என்பது பொதுநலமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லா துறைகளிலும் தலையீடு இருக்கக்கூடாது. லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

    ஆனால் ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்து கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் தீர்க்க வேண்டிய முயற்சியில் தே.மு.தி.க. தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நான் உறுதிபூண்டுள்ளேன்.

    என்னைப் போல் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எனது பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம் பிடித்துள்ளோம்.

    அதற்காக தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

    நான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது எனக்காக உடல் நலம் வேண்டி சாதி, மதம் பார்க்காமல் ஆலயங்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் பிரார்த்தனை செய்த “என் உயிரிலும் மேலான எனது அன்பு தொண்டர்களுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும்” மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.  #ParliamentElection #Vijayakanth

    கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தே.மு.தி.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #Vijayakanth #VijayakanthRs1croretoKerala
    சென்னை:

    மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தே.மு.தி.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய  நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என விஜயகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினாலும் வரலாறு காணாத கன மழையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது மனம் வேதனை ஏற்படுகிறது. 

    கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதியாக 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், உடனடி தேவையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். 

    முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் கேரளா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக அறிவித்த மத்திய அரசு, பின்பு ஹெலிக்காப்டர் மூலம் நேரடியாக சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்த பின், கேரளா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதுடன், மத்திய அரசின் நிதியாக இரண்டாம் கட்டமாக 500 கோடி ரூபாய் அறிவித்தார். 

    கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்ட கழகங்கள் சார்பில் கேரள மக்களுக்கு ரூபாய் 1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் வரும் 24.08.2018 தேதியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Vijayakanth #VijayakanthRs1croretoKerala
    திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். #Karunanidhideath #Karunanidhi #KarunanidhiFuneral #Vijayakanth
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:-

    டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,

    உலகமே உங்களை கலைஞரே ! என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.
    தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு!
    என்பதன் அர்த்தத்தை 'உழைப்பு'
    என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே !

    அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ ! என்று என்னும்வண்ணம்,இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே !

    உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.

    உங்களின் நினைவாக என்றென்றும்...

    தமிழன் என்று சொல்லடா!
    தலை நிமிர்ந்து நில்லடா!

    என்ற உங்கள் வாசகத்துடன்.

    இப்படிக்கு
    உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Karunanidhideath #Karunanidhi #KarunanidhiFuneral #Vijayakanth
    திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்ல இரங்கல் தெரிவித்துள்ளார். #கலைஞர் #RIPKarunanidhi
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருக்கும் விஜயகாந்த் கருணாநிதி மரணம் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் கருப்பு சட்டை அணிந்து வீடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் தனது வீடியோ இரங்கல் செய்தியில் ‘‘கருணாநிதி மறைந்தார் என்பது என்னால் நம்ப முடியவில்லை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    உடல் நிலை பற்றிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களை விஜயகாந்த் வெளியிடப்பட்டுள்ளார். #DMDK #Vijayakanth
    சென்னை:

    சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த், அதே வேகத்துடன் அரசியல் களத்திலும் கால் பதித்தார்.

    தே.மு.தி.க.வை தொடங்கிய பின்னர் அவரது மேடைப் பேச்சுக்களும் கவனம் ஈர்த்தன. கட்சி தொடங்கிய புதிதில் விஜயகாந்த் மேடைகளில் மணிக்கணக்கில் பேசினார். விஜயகாந்த் பொதுக்கூட்டம் என்றால் அவர் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. இப்படி ரசிகர்களை கவர்ந்திழுந்த அவரது பேச்சுக்கள் நாளடைவில் கிண்டலுக்குள்ளானது.

    விஜயகாந்த் என்ன பேசுகிறார்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது குரல் மாறிப்போனது. அதே நேரத்தில் பேச்சாலேயே பேசப்பட்ட விஜயகாந்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பேச முடியாத நிலையும் ஏற்பட்டது.

    அரசியல் பயணத்தில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று கூறிவந்த விஜயகாந்த் பின்னர், ‘‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இது அரசியல் பாதையில் அவருக்கு ஏறுமுகமாக பார்க்கப்பட்டது. பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் கனவுடன், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டார். ஆனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது கட்சிக்கு இறங்குமுகமானது. விஜயகாந்தின் உடல் நல குறைவும், கட்சிக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவும் தே.மு.தி.க. தொண்டர்களை சோர்வடைய செய்தது.


    இதற்கிடையே கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வீசிய மோடி அலையில் நாமும் நீந்தி கரை சேர்ந்துவிடலாம் என்று எண்ணிய விஜயகாந்த் பா.ஜனதாவுடன் கை கோர்த்தார். ஆனால் அதுவும் கையை கடித்துவிட்டது. ஒரு இடத்தில் கூட தே.மு.தி.க.வால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் விஜயகாந்தின் எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே நிலவுகிறது.

    தைராய்டு மற்றும் குரல் வளை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் 7-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 40 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற திட்டமிட்டுள்ள விஜயகாந்துக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.


    இதற்காக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தனது உடல் நிலை பற்றிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்தே இதனை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் விஜயகாந்த் புத்துணர்வோடு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று நாளையுடன் ஒரு மாதம் முடிகிறது. இன்னும்10 நாட்கள் அங்கேயே தங்கி இருக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.


    இதன் பின்னர் அவர் சென்னை திரும்புகிறார். உடல் ஆரோக்கியத்துடன், விஜயகாந்த் மீண்டும் அரசியல் பணிகளில் வேகம் காட்டுவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    இதன்படி இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பும் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    ×