search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நியமித்தார். வடக்கு தொகுதி பொறுப்பாளராக அவைத்தலைவர் செல்வகுமார், தெற்கு தொகுதி பொறுப்பாளராக பொருளாளர் தனசேகர், மேற்கு தொகுதி பொறுப்பாளராக துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

    இதன் அறிமுக கூட்டம் சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம், கிச்சிப்பாளையம் விஜி, நடராஜன், சேகர், செந்தில், ஜெயக்குமார், ராஜி, சேலம் ஒன்றிய கோவிந்தராஜ், கேப்டன் மன்றம் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dmdk

    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரச்சினையை தீர்க்காவிட்டால் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எல்கே சுதீஷ் பேசினார். #lksudhish #dmdk #farmersstruggle

    சூலூர்:

    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டையில் 5-வது நாளாக பல்வேறு கட்டமாக போராட்டம் நீடிக்கிறது.

    விவசாயிகள் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று தே.மு.தி.க. மாநில துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் சுல்தான் பேட்டை வந்தார். போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- விவசாயிகளின் பிரச்சினை பற்றி கவலைப்படாத முதல்- அமைச்சரும், பிரதமரும் உள்ளனர்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவை நிலத்தடியில் மூலம் செல்லும் போது மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல முடியாதா? விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    உயர் மின் கோபுரங்களால் ஏற்கனவே 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுர பிரச்சினையை உடனடியாக தீர்க்க விடில் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் போல் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, பனப்பட்டி தினகரன், மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில்இ தியாகராஜன், எஸ்.எம். முருகன் மற்றும் மாவட்ட துணை செயலர்கள் ஒன்றிய நகர ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #farmersstruggle 

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2ம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 மாத சிகிச்சைக்கு பிறகு பிப்ரவரி மாதம் சென்னை திரும்புவார் என்று நிர்வாகிகள் கூறினார்கள். #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று திரும்பினார். 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்தார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    2017 நவம்பர் இறுதியிலும் சிங்கப்பூர் சென்று இருந்தார். பின்னர் குரல் மோசமானதை அடுத்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

    சில நாட்களுக்கு முன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபகாரன் விஜயகாந்துக்கு மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்த மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறினார்.


    அதன்படி நேற்று மாலை விஜயகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவரது மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதாவும் உடன் சென்றார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் இருவரும் திரும்புவார்கள் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூறினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு வருவதையொட்டி விஜயகாந்த் மீண்டும் உடல் நலத்துடன் வந்து புத்துணர்வுடன் தமிழ்நாடு முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் அவர் உடல்நலம் தேறி வந்த பிறகு பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.

    விஜயகாந்தும் பிரேமலதாவும் திரும்பும் வரையில் அவர்களது மகன் விஜய பிரபாகரன் கட்சி பணிகளை கவனிப்பார். #DMDK #Vijayakanth
    டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய அவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். விழாவில் பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்த பின்னர் விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- கட்சியில் பொறுப்புக்கு வருவீர்களா?

    பதில்:- கட்சியில் பொறுப்பு தேடி வரவில்லை. விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதில் என்னுடைய பங்கை நான் செய்கிறேன். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் அமெரிக்கா செல்கிறோம்.


    அதன்பிறகு அவர் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுவார். சிங்கத்துக்கு நிகரான தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்பார்.

    கே: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்வீர்களா?

    ப:- இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது. ஏனெனில் முதலில் அரசியலுக்கு வந்தது விஜயகாந்த் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக பணியாற்றி உள்ளோம். எனவே தே.மு.தி.க.வை லேசாக எடை போட வேண்டாம்.

    கமலாவது கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர்களுடைய வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது கூற முடியுமா? எதுவுமே இல்லாதபோது கூட்டணி என்றால் ஒரு நாள் செய்தியுடன் முடிந்துவிடும்.

    எனவே அவர்கள் களத்திற்கு வரட்டும். நாங்கள் தேர்தல் களத்தில் எங்களை நிரூபித்துள்ளோம். ஆனால் இருவரும் தங்களை இன்னும் நிரூபிக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க பொறுப்பாளர்கள் நியமக்கப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்திரவின் பேரில் மாவட்ட பொருளாளர் கவியரசன் அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட துணை செயலாளர் தெய்வசிகாமணி ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமக்கப்பட்டுள்ளனர். 

    இத் தகவலை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தெரிவித்துள்ளார். #dmdk
    தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் சென்னை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #dmdk

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென் சென்னை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வி.சி.ஆனந்தன் சிபாரிசின் பேரில், மைலாப்பூர் சட்ட மன்ற தொகுதி மாவட்ட துணை செயலாளராக எஸ். இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை தொகுதி மாவட்ட துணை செயலாளராக ஆர்.சுப்பு என்கிற சுப்பிரமணி, தியாகராயநகர் தொகுதி துணை செயலாளராக ஏ.பாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இவர்களுக்கு தென் சென்னை மாவட்ட வடக்கு பகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dmdk

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தி.மு.க.தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #DMDK #PremalathaVijayakanth #DMK
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து தே.மு.தி.க. அறிவித்த ரூ.1 கோடி நிவாரண பொருட்களை வழங்கினோம். மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

    புயல் பாதித்த இடங்களில் ‘டாஸ்மாக்’ மதுக்கடை மூடப்பட்டுள்ளது. ஆனால் பின்புற கதவு வழியாக வியாபாரம் ஜோராக நடக்கிறது. மீனவர்களின் படகு சேதத்துக்கு அரசு ரூ.5 லட்சம் அறிவித்து உள்ளது. ஆனால் மீனவர்கள், படகை சரி செய்ய ரூ.25 லட்சம் கேட்கிறார்கள். இந்த தொகையை அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் அரசியல் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரம் உள்பட ‘கஜா’ புயல் வரையும் அரசியல் செய்கிறார்கள்.


    புயல் பாதித்த பகுதிகளில் தி.மு.க.தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுகிறது.

    ஜெயலலிதா கைதின் போது அப்பாவி 3 மாணவிகளை எரித்து கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ராஜீவ்காந்தி கொலையில் 25 வருடம் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்யலாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு தங்களது விருப்பப்படி மூடலாம், திறக்கலாம் என்று நினைக்க கூடாது. அப்படி மீண்டும் ஆலையை திறந்தால் அங்கு போராட்டம் வெடிக்கும்.

    தமிழகம் பாலைவனமாக மாறிவருகிறது. மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. அங்கு தடுப்பு அணை கட்டுவதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது.

    மக்கள் பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டால் முதலில் தே.மு.தி.க. பங்கேற்கும். தற்போது தி.மு.க. நடத்தும் அனைத்துகட்சி கூட்டத்தை ஒரு பொது இடத்தில் நடத்த வேண்டும். அறிவாலயத்தில் நடத்தக்கூடாது. அப்போது தான் அனைத்து கட்சியினரும் அதில் கலந்து கொள்ள முடியும்.

    தி.மு.க. தங்களை முன்னிறுத்துவதற்காக அவர்களுக்கு வேண்டிய இடங்களில் கூட்டத்தை நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #DMK
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க உள்ளதாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth
    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் துறவிக்காடு, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட் பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணிச் செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் 1000 நபர்களுக்கு நிவாரண பொருள்களை நேற்று மாலை வழங்கினார்.

    துறவிக்காட்டில் நிவாரணப் பொருள்களை வழங்கிய பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரமே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து தரவேண்டும்.

    தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி என்பது இதுவரை எந்த ஒரு மக்களுக்கும் வந்து சேரவில்லை. புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை மத்திய அரசு பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து, தமிழக அரசுக்கு உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும். அதற்கு முன்னதாக, தமிழக அரசு அறிவித்த ரூ.1000 கோடி முதல் கட்ட நிவாரண உதவியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

    ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இதுவரை மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை தொண்டு நிறுவனங்கள்தான் உதவிகள் செய்து வருகின்றன. தே.மு.தி.க. சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை 4 மாவட்டங்களிலும் வழங்கி வருகிறோம்.

    அடுத்தகட்டமாக 1 லட்சம் தென்னங்கன்றுகளை வாங்கி நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். இதற்காக அரசு மானிய விலையில் தரமான தென்னங்கன்றுகளை வழங்கவேண்டும். மேலும் தென்னைக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை என்பது விழுந்த மரத்தை அகற்றவே போதாது. எனவே குறைந்தபட்சமாக ஒரு தென்னைக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth

    மேம்பால பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 தே.மு.தி.க. வினரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை நேரு நகர் முதல் எழில் நகர் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறி தே.மு.தி.க. சார்பில் இன்று கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினார்கள். தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களில் 200 பேரை கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #DMDK
    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது தே.மு.தி.க மட்டும்தான் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #GajaCyclone #Premalathavijayakanth
    நத்தம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரண உதவி வழங்க நத்தம் பகுதிக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா வந்திருந்தார். அங்குள்ள காந்தி கலையரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நேரடியாக நிவாரண உதவிகள் வழங்க கேப்டன் அவர்கள் ஆணையிட்டார்.

    அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது தே.மு.தி.க மட்டும்தான். இதற்காக ரூ.1கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களது துயரத்தில் நாங்களும் பங்கேற்போம். ஆளுங்கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் மக்களை முறையாக சந்திக்கவில்லை.

    அடுத்து வர இருக்கும் தேர்தலை சந்திப்பதற்காக மட்டுமே மற்ற கட்சியினர் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால் தே.மு.தி.க. எப்பொழுதும் மக்களைச் சந்திக்கும் கட்சியாகும். வெறும் அறிவிப்பு அரசியலை மட்டுமே ஆளும்கட்சியினர் செய்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக அரசு செய்யவில்லை. எனவே வரும் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்த சாரதி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில பொதுகுழு உறுப்பினர் வக்கீல் லெட்சுமணன், நத்தம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஆண்டிச்சாமி, தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். #GajaCyclone #Premalathavijayakanth
    புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் ஆசையில் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். சென்றுள்ளனர் என பிரேமலதா குற்றம்சாட்டினார். #GajaCyclone #PremalathaVijayakanth #EPS #OPS
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கஜா புயல் தாக்குதலால் சேதமடைந்த அப்சர்வேட்டரி, புதுக்காடு, கல்லறை மேடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் எதிர்கட்சி வரிசையில் கூட இல்லாவிட்டாலும் புயல் பாதிப்பை நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். முதல் கட்டமாக நாகை, வேதாரண்யம், தஞ்சை ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டோம்.

    இன்று கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது மக்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட வராத நிலையில் நாங்கள் வந்து பார்வையிட்டது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இதே தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் சென்றது வேதனையளிக்கும் வி‌ஷயம். மக்களை சந்திக்காத துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை மக்கள் வரும் தேர்தலில் கண்டிப்பாக தோற்கடிப்பார்கள்.


    புயலில் பாதித்த மக்களை நேரடியாக சந்திக்க முடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஹெலிகாப்டரில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்றது மக்கள் பிரச்சனைகளை கேட்பதற்காக அல்ல. ஜெயலலிதாவைப் போல் தாங்களும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசைபட்டு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.

    புயல் தாக்குதல் முடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அரசு கேட்ட இடைக்கால நிவாரணத்தை கூட மத்திய அரசால் வழங்க முடியவில்லை. நிவாரணத்தை கேட்க கூட பயந்து எடப்பாடி பழனிசாமி அடிமை அரசு நடத்தி வருகிறார்.

    விஜயகாந்த் தற்போது 2-ம் கட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழு உடல் தகுதி பெற்றவுடன் மக்களை சந்திப்பார். அவர் பேச ஆரம்பித்தவுடன் தற்போது உள்ள கட்சிகள் காணாமல் போய் விடும். மக்கள் செல்வாக்கு எங்களுக்கு உள்ளது என்பதை கண்டிப்பாக நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #PremalathaVijayakanth #EPS #OPS
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று திருச்சி விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #DMDK #Vijayakanth #GajaCyclone #TNGovt
    திருச்சி:

    கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும், சேதத்தை பார்வையிட்டு தே.மு.தி.க. சார்பில் உதவிகள் செய்யவும் இன்று காலை தே.மு.தி.க.பொருளாளர் பிரேமலதா அங்கு சென்றார்.

    முன்னதாக திருச்சிக்கு விமானத்தில் வந்த அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். போக்குவரத்து இல்லை. மின்சாரம் 4-வது நாளாக இல்லை. மக்களுக்கு குடிக்க தண்ணீருக்கு கூட வழியில்லை.

    பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் புயலில் சிக்கி அழிந்து விட்டன. மக்கள் தத்தளிக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளில் மெத்தனமாக செய்வது சரியல்ல. நிவாரணப்பணிகளில் அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதிகளை உடனடியாக வழங்குவது தான் தீர்வாக அமையும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணத்தை வழங்க வேண்டும். அமைச்சர் ஓ.எஸ். மணியன் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடவேண்டிய நிலை உள்ளது.


    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணத்தை ரத்து செய்யவேண்டிய நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொது மக்களும் இதுபோன்ற நேரங்களில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு செயல்பட்டதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார். ஆனால் புயலுக்கு பிறகான நிவாரண நடவடிக்கையில் அரசு மெத்தனமாக உள்ளது. நாங்கள் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தே.மு.தி.க. சார்பில் உதவிகள் செய்கிறோம். இன்று அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட பிறகுதான் புயல் நிவாரணப்பணிகள் குறித்து தேவைகள் குறித்து கருத்து கூற முடியும்.

    இவ்வாறு பிரேமலதா கூறினார். #DMDK #Vijayakanth #GajaCyclone #TNGovt
    ×