search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96553"

    திருச்சி வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு குளு, குளு வசதியுடன் புதிய ரெயில் வருகிற 2-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    திருச்சி:

    ராமேசுவரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு குளு, குளு வசதி கொண்ட ஹம்சபார் எக்ஸ்பிரஸ் புதிய வாராந்திர ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளை கொண்டது. முன்பதிவு டிக்கெட் வினியோகம் மட்டுமே உண்டு. முன்பதிவில்லா டிக்கெட் வினியோகம் கிடையாது. அஜ்மீர் ரெயில் நிலையத்தில் நேற்று தொடக்க விழாவில் அங்கிருந்து ரெயில் வழியனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ரெயில் திருச்சி வழியாக நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ராமேசுவரத்தில் வழக்கமான சேவை இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் (வ.எண் 19604) இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 11.25 மணிக்கு அஜ்மீர் சென்றடையும்.

    இதேபோல அஜ்மீரில் இருந்து ராமேசுவரத்திற்கு வழக்கமான சேவை வருகிற 6-ந்தேதி முதல் தொடங்குகிறது. அஜ்மீரில் இருந்து சனிக்கிழமை தோறும் (வ.எண் 19603) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் மானாமதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், குண்டூர், நெல்லூர், விஜயவாடா, வாராங்கல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு வரும் போது திருச்சிக்கு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்படும். சென்னைக்கு காலை 8.50 மணிக்கு சென்றடைந்து காலை 9.05 மணிக்கு புறப்படும். அஜ்மீரில் இருந்து ரெயில் வரும் போது திருச்சிக்கு திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு வந்து இரவு 8.30 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்டு செல்லும்.

    இந்த புதிய ரெயிலானது திருச்சியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை போன்றதாகும். அஜ்மீரில் புகழ் பெற்ற தர்காவும், கோட்டையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமேசுவரம்-அஜ்மீர் புதிய ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடலை மருத்துவமனைக்கு வெளியே சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் அன்று மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பார்மெர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, நேற்று அவர்களது உடலுக்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்வதாக திட்டமிடப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு வெளியே இருந்த சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் அம்மாநில செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.



    இந்நிலையில், இன்று இதுதொடர்பாக பேசிய மாவட்ட கூடுதல் ஆட்சியர், செய்திகளில் வெளியானவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். #Rajasthan
    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தர ராஜேவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி மனைவி போட்டியிடுகிறார். #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட்சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்ராபதான் தொகுதியில் முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா போட்டியிட முடிவு செய்துள்ளார். 

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தர ராஜேவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி முகுல் சவுத்ரி போட்டியிட உள்ளார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் ஜல்ராபதான் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளேன். ஏனெனில் அங்கு தான் நான் பிறந்தேன். எனது கணவர் பங்கஜ் சவுத்ரி ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். முதலில் நான் இந்த மண்ணின் மகள். அடுத்துதான் எனது கணவருக்கு மனைவி.

    மாநிலத்தில் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் திறமையற்ற செயல்பாட்டை கண்டித்து சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
     
    முதல் மந்திரியின் தவறான ஆட்சி முறையால் ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து ஒட்டுமொத்த மாநிலமும் பாதிப்பு அடைந்துள்ளது. இவற்றை நீக்குவதற்கான நடவடிக்கையாகவே நான் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன் என தெரிவித்துள்ளார். #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    இந்தியாவில் விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துவந்தாலும் விபத்துக்களின் விகிதம் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ மதோபூருக்கும் ஜோராவார் நகர் பகுதிக்கும் இடையே உள்ள சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    இந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Rajasthan
    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வென்று காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். #RajasthanElections #Congress #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா பதவி வகித்து வருகிறார்.

    இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற  உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டார். அப்போது அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.   



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சியை உங்களது ஆட்சி போன்று நீங்கள் உணர்வீர்கள்.

    ராஜஸ்தானில் தினமும் 8 முதல் 10 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தலித்துகளுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

    முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா நடத்தும் கவுரவ யாத்திரை மிக பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. கடந்த தேர்தலில் மக்கள் தந்த அரிய வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மக்களை ஏமாற்றி விட்டார் என தெரிவித்துள்ளார். #RajasthanElections #Congress #SachinPilot
    ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ரெயில்வே தண்டவாளங்களை வாகன போக்குவரத்துக்காக அம்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோல்பூர் மாவட்டத்தில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், ரெயில்வே தண்டவாளங்களில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். வெள்ளம் ஓடும் பகுதிக்கு மேலே இந்த ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆபத்தான பயணத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்கின்றனர்.  #Rajasthan
    எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பியதால் அது நிறைவேறியது என பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து திரும்பியவரின் மனைவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். #GajanandSharma #Lahoreprison
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கஜானந்த் சர்மா, கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32-வது வயதில் காணாமல் போனார். அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கஜானந்த் சர்மாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

    வாழ்நாளில் ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் அவரது மனைவி மக்னி தேவி நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார்.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லைப்பகுதிக்கு அவர்கள் பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். விடுதலையானவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மாவை, அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர்.



    இந்நிலையில், எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பியதால் அது நிறைவேறியது என பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து திரும்பியவரின் மனைவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நிச்சயம் அவர் திரும்பி வருவார் என கடந்த 36 ஆண்டுகளாக மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அவரை பிரிந்திருந்த காலங்கள் மிக கடினமானவை.

    அவர் வந்ததும் பாகிஸ்தானுக்கு எப்படி சென்றீர்கள் என்பது குறித்தும், இத்தனை நாள் எப்படி பொழுதை கழித்தீர்கள் என்பது குறித்தும் விசாரிக்க உள்ளேன்.

    எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பினேன். அதனால் தான் எனது நம்பிக்கை நிறைவேறியது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.#GajanandSharma #Lahoreprison
    பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #PakistaniWhatsApp
    ஜெய்ப்பூர்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரை சேர்ந்தவர் அயன். இவர் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஓடடலில் தங்கி வேலை தேடி வருகிறார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுவில் தொடர்புடைய நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 

    இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் கோட்வாலி போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு படைப்பிரிவினர் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது, ஓட்டலில் தங்கியிருந்த அயனின் செல்போனை சோதனை செய்ததில் அவருக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் குழுக்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நட்த்தி வருகின்றனர். #PakistaniWhatsApp
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தை ஜெய்ப்பூரில் இருந்து இன்று தொடங்குகிறார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். #RajasthanAssemblyElection #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பாஜக சார்பில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் கவுரவ் யாத்திரை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தை ஜெய்ப்பூரில் இருந்து இன்று தொடங்கிறார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

    இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சச்சின் பைலட் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைதேர்தல் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தலைநகர் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரசார யாத்திரையை இன்று தொடங்குகிறது. இதற்கான பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElection #RahulGandhi
    இந்துக்கள் புனிதமாக வணங்கும் பசுவை கொல்வது பயங்கரவாதத்தை விட பெரிய குற்றமாகும் என ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #GyanDevAhuja
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் ராம்கர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கியான் தேவ் ஆஜா. இவெ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

    பயங்கரவாத செயல்களால் இரண்டு அல்லது மூன்று பேர் பாதிக்கப்படுவார்கள். ஆனால், பசுவை கொன்று கொடுமைப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கிலான மக்களின் உணர்வுகள் புண்படுகிறது.

    எனவே, பசுவை கொல்வது என்பது பயங்கரவாதத்தை விட மிக பெரிய குற்றமாகும் என பேசினார். இவரது கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் பசுவை கொன்றதாக கூறப்படும் அக்பர் கானை தாக்கி கொன்ற விவகாரத்தில் தொடர்புடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #BJPMLA #GyanDevAhuja
    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கல்லூரி மாணவியை அவரது வீட்டிலேயே வைத்து கும்பல் கற்பழித்த சம்பவத்தில் பா.ஜனதா பிரமுகரின் மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் போபல் கர்த் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது காரில் வந்த 2 பேர் அந்த பெண்ணை இழுத்து காரில் போட்டனர். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அந்த பெண்ணை அவரது வீட்டுகே கொண்டு சென்று கற்பழித்தனர். மேலும் தனது 3 நண்பர்களையும் வரவழைத்தனர். அவர்களும் கல்லூரி மாணவியை கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். 5 பேர் சேர்ந்து கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் ஒருவர் உள்ளூர் பா.ஜனதா பிமுகர் மகன் ஆவார். கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை உருவானது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரசியல் தலையீடு காரணமாக கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    5 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் 22 வயது தலித் வாலிபரை கொடூரமாக தாக்கி கொலை செய்த கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    இந்தியாவில் கும்பல் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. மக்கள் சட்டத்தை கையில் எடுத்து தாங்களே தண்டனை அளிப்பதாக எண்ணி, பல அப்பாவிகளின் உயிரை பறிக்கின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க தலித் வாலிபர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Rajasthan
    ×