search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96604"

    இணைய வழி வர்த்தகம் மூலம் பணம் கட்டி செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி வந்தது தொடர்பாக இணையவழி வர்த்தக நிறுவன அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #OnlineMobile
    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் இணைய வழி வர்த்தக நிறுவனத்திடம் குறிப்பிட்ட ரக செல்போன் கேட்டு கடந்த 23-ந்தேதி ஆர்டர் செய்தார். அடுத்த 4 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழியாக அவருக்கு ஒரு பார்சல் வந்தது.

    அதை பிரித்துப் பார்த்தவருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் பணம் கட்டி கேட்டிருந்த செல்போனுக்கு பதிலாக அந்த பார்சலுக்குள் சோப்புக் கட்டி ஒன்று இருந்தது. இதுபற்றி அந்த வாடிக்கையாளர், அருகில் உள்ள பிஸ்ரா போலீஸ் நிலையத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித் அகர்வால், தர்ஷிதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பிரதீப் குமார், ரவிஸ் அகர்வால் மற்றும் பார்சலை கொண்டு வந்த அனில் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தை உறுதி செய்த அமேசான் இந்தியா நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி அளிக்க சம்மதம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுபற்றி அந்த நிறுவனம் கூறுகையில், “இதுபோன்ற மோசடிகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று தெரிவித்து உள்ளது. 
    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. #BSNL
    சென்னை:

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

    ‘தனலட்சுமி’ என்ற இத்திட்டத்தின்படி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக் கான பில்களை கடைசி தேதிக்குள் செத்துபவர்களுக்கு சேவை வரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும்.

    வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கும் இந்த தள்ளுபடி உண்டு.

    பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம்.

    அவ்வாறு செலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில் தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் ஒரு சதவீதம் தள்ளுபடி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.


    இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி அடுத்து வரும் இரண்டாவது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

    இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பி.எஸ்.என்.எல். எண்டர்பிரைசஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் தலைமை பொது மேலாளர் வி.ராஜீ மற்றும் சென்னை டெலிகாம் துணை பொது மேலாளர் ஜி.விஜயா ஆகியோர் தெரிவித்துள்ளனர். #BSNL
    வில்லியனூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு காசிவிஸ்வநாத நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் நாகர்கோவிலில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது20) இவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் டிப்ளமோ 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    இவர் வீட்டில் சரியாக படிக்காமல் எப்போதும் செல்போனில் பேசியபடி இருந்தார். நேற்றும் அதுபோல விஜயகுமார் செல்போனில் பேசியபடி இருந்தார். இதனை அவரது தாய் அருந்ததி கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் அங்கு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செல்போன் வாங்கியதாக கணவர் திட்டியதால் மனைவி குழந்தையுடன் மாயமானார்.

    மதுரை:

    மதுரை பாலமேடு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 24). இவரது கணவர் கணேசன். இவர்களுக்கு தர்‌ஷன் (4) என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் நந்தினி சமீபத்தில் புதிதாக செல்போன் வாங்கினார். அதற்கு கணேசன் ‘எனக்கு தெரியாமல் நீ எப்படி செல்போன் வாங்கலாம்?’ என்று கண்டித்தார்.

    இதையடுத்து கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நந்தினி சம்பவத்தன்று காலை மகன் தர்‌ஷனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக கணேசன் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகனை தேடி வருகிறார்.

    சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.#TNRain #RedAlert #NDRF

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மண்டல அலுவலர்களுக்கான ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளை துவங்க உள்ளார்கள்.

    1. கே.நந்தகுமார் (1-வது மண்டலம், திருவொற்றியூர்) 9499956201, 9445190001.

    2. ஆர்.கண்ணன், (2-வது மண்டலம், மணலி) 9499956202, 9445190002

    3. சந்தோஷ்பாபு, (3-வது மண்டலம், மாதவரம்) 9499956203, 9445190003

    4. டி.என்.வெங்கடேஷ், (4-வது மண்டலம், தண்டையார்பேட்டை) 9499956204, 9445190004

    5. டாக்டர். பி.உமாநாத், (5-வது மண்டலம், ராயபுரம்) 9499956205, 9445190005.

    6. சி.காமராஜ், (6-வது மண்டலம், திரு.வி.க.நகர்) 9499956206, 9445190006

    7. எம்.பாலாஜி, (7-வது மண்டலம், அம்பத்தூர்) 9499956207, 9445190007

    8. டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார், (8-வது மண்டலம், அண்ணாநகர்) 9499956208, 9445190008

    9. ‌ஷன்சோங்கம் ஜடக் சிரு, (9-வது மண்டலம், தேனாம்பேட்டை) 9499956209, 9445190009

    10. சி.விஜயராஜ் குமார், (10-வது மண்டலம், கோடம்பாக்கம்) 9499956210, 9445190010

    11. ஆர்.சீதாலட்சுமி, (11-வது மண்டலம், வளசரவாக்கம்) 9499956211, 9445190011

    12. கிரண் குர்ராலா, (12-வது மண்டலம், ஆலந்தூர்) 9499956212, 9445190012

    13. கே.பாலசுப்பிரமணியம், (13-வது மண்டலம், தண்டையார்பேட்டை அடையாறு) 9499956213, 9445190013

    14. டாக்டர்.ஆர்.நந்த கோபால், (14-வது மண்டலம், தண்டையார்பேட்டை, பெருங்குடி) 9499956214, 9445190014

    15. டாக்டர்.தாரேஸ் அகமது, (15-வது மண்டலம், சோழிங்கநல்லூர்) மண்டலம்) 9499956215, 9445190015

    மேலும், சென்னை மாநகரில் 2015ம் ஆண்டு வெள்ளப் பெருக்கிற்கு பிறகு ரூ.150 கோடி மதிப்பீட்டில் 50 கி.மீ. நீளத்திற்கு பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சி நிதி 2018ன் கீழ், ரூ.290 கோடிமதிப்பீட்டில் 117 கி.மீ. நீளத்திற்கு 347 இணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.150 கோடி மதிப்பீட்டில் 51 கி.மீ. நீளத்திற்கு 130 விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவளம் வடிநிலப் பகுதிகளில் குறிப்பாக சோழிங்கநல்லூர், பெருங்குடிமற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 326 கி.மீ. நீளத்திற்கு ரூ.1250 கோடிமதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழை நீர் வடிகால்பணிகள் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலும், ஜெர்மன் நாட்டுநிதியும் கிடைத்தவுடன் இப்பணிகள் துவங்கப்படும். இதனால் இப்பகுதிகளில்வாழும் சுமார் 8 லட்சம் மக்கள் பயனடைவார்கள். #TNRain #RedAlert #NDRF

    இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதில் கூட சங்கடப்படுகிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாற்றி விட்ட செல்போன் ஒவ்வொரு மனிதர்களிடமும் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
    தகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கும் சம்பவங்களை நம்மால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இன்று நாம் போகவேண்டிய இடத்துக்கு கூட யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த அளவு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பம் என்பது தேவை தான். ஆனால் இந்த தகவல் தொழில் நுட்பத்தால் இன்று இளைய சமுதாயம் சீர்கெட்டு வருகிறது. செல்போனில் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அதிநவீன வசதிகளும் உள்ளன.

    ஒரு வீட்டில் 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் 5 பேருக்கும் செல்போன்கள் உள்ளன. இது தவிர சிலர் 2 செல்போன்கள் கூட பயன்படுத்துகிறார்கள். ஆக எந்த நேரமும் செல்போனில் தான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இரவு தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செல்போனை நோண்டாமல் இருக்க முடியாத நிலைக்கு அதற்கு அடிமையாகி விட்டார்கள்.

    முன்பெல்லாம் பயணத்தின் போது நாளிதழ்கள், நல்ல கதை புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிப்பது உண்டு. இப்போது அப்படி படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஒரு நாளிதழை அருகில் பயணிப்பவர்கள் என அனைவரும் படித்து முடித்து விடுவார்கள். அதில் நல்ல விஷயங்களையும், அரிய பல தகவல்களையும் தெரிந்து கொண்டு ஞானம் பெற்றார்கள். இன்று அந்த காட்சிகளை எல்லாம் நமது பயணத்தில் காண முடியவில்லை.

    மாறாக, அனைவரும் பேசுவதை கூட குறைத்துக் கொண்டு செல்போன்களில் மூழ்கி இருக்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். வயது வித்தியாசமின்றி இப்போது செல்போன்களை பயன்படுத்துகிறோம். அதில் நமது பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம்.செல்போன்களில் இப்போது வாட்ஸ்-அப் பார்த்து அதில் நேரத்தை செலவிடும் முதியோர்களும் இதில் அடங்குவர்.

    செல்போனை 20 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தினால் அதில் உள்ள கதிர்வீச்சுக்கள் உடலுக்கும், மூளைக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதன் பாதிப்புகள் குறித்து பக்கம், பக்கமாக எழுதினாலும் அதை எல்லாம் படித்து தங்களை மாற்றிக்கொள்ளாமல் வீணடித்து வருகிறார்கள். என்று செல்போன் பயன்பாடு அதிகரித்ததோ அன்று முதல் வாசிப்பு பழக்கத்தை பெரும்பாலானோர் கைவிட்டு விட்டனர்.



    வாசிப்பு பழக்கம் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றக்கூடிய ஆயுதம். அத்தகைய அறிவாற்றலை புறந்தள்ளி விட்டு இப்போது செல்போன் உலகத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதில் கூட சங்கடப்படுகிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாற்றி விட்ட செல்போன் ஒவ்வொரு மனிதர்களிடமும் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வாசிப்பை நேசிக்க வேண்டும். அப்போது தான் அறிவு படைத்தவர்களாவோம். இந்த சமுதாயமும் நல்ல சமுதாயமாக மாறும். ஆனால் அதை விடுத்து வாசிப்புக்கு விடை கொடுத்தோம் என்றால் இனி வருங்கால சந்ததிகளை கூட நம்மால் காப்பாற்ற முடியாது.

    செல்போன் பயன்பாட்டால் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஒவ்வொரு மனிதர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதில் முதன் முதலில் இருப்பது கண் தான். இன்று கண் மருத்துவமனைகளில் அதிக அளவு நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி கண் பாதிப்பினால் வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். டாக்டர் கூறிய பின்னர் தான் ஞானம் வந்ததை போன்று வருந்துகிறார்கள்.

    உள்ளே நுழைந்ததும் கண் டாக்டர் கேட்கும் முதல் கேள்வி என்ன வென்றால் நீங்கள் செல்போனில் வாட்ஸ்-அப் பார்க்கிறீர்களா? என்பது தான். இந்த கேள்விக்கும் அங்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் ஆமாம் என்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்த சமுதாயமும் அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கண்ணையும், மூளையும், உடலையும் பாதுகாக்க நல்ல சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலும் செல்போன் பயன்பாட்டை நிறுத்தாமல் தொடர்ந்தீர்கள் என்றால் அந்த சத்துள்ள உணவின் பயன்பாடு கிடைக்காமலே போய்விடும்.

    புத்தகத்தை படி அறிவை வளர்த்துக்கொள், நீ படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள். அப்போது தான் நல்ல விஷயங்கள் உன் மூலமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவி பாயும் என்று சொன்னது எல்லாம் அந்தக்காலம். இப்போது வாட்ஸ்அப்பில் வரும் உப்பு சப்பில்லாத கமெண்ட்டுகளை தான் பலர் ஷேர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பார்வையற்றவன் குருடன் அல்ல, கல்வி கற்காதவனும் பார்வையற்றவனுக்கு சமம் என்று போதனை செய்ததை இன்றைய சமுதாயம் மறந்து விட்டது. படித்தால் தான் அறிவு வளரும். எனவே வாசிப்பை பாதிக்கும் செல்போன் பயன்பாட்டை குறைப்போம். வாசிக்க தொடங்குவோம். மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்க தயாராவோம்.

    -மாயா, திருச்சி 
    தன்னிடம் பேச மறுத்ததால் பெண்ணை எரித்துக்கொன்றுவிட்டு நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 38). இவருடைய மனைவி அஞ்சலை(30). சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அஞ்சலை வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அஞ்சலையுடன் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(20) என்பவர் அதிக நேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் தங்கியிருந்த சங்கரை போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை சங்கர், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் சங்கரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அக்கராயப்பாளையம் காட்டுப்பகுதியில் சங்கர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அஞ்சலையை தீ வைத்து எரித்துக்கொலை செய்ததாக சங்கர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், அஞ்சலைக்கும் ஒரே ஊர் இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஞ்சலை என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். செல்போன் அழைப்பையும் ஏற்க மறுத்தார்.

    இதனால் சம்பவத்தன்று நான் அஞ்சலையின் வீட்டுக்கு சென்று, ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்? என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், வெளிநாட்டில் இருக்கும் தனது கணவர், ஊருக்கு வருவதால் என்னிடம் பேச முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கையால் தாக்கினேன்.

    உடனே அஞ்சலை தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். அப்போது நீ என்னை மிரட்டுகிறாயா என்று கேட்டேன். பின்னர் நானே உன்னை கொலை செய்து விடுகிறேன் என்று கூறி, அஞ்சலை மீது தீ வைத்து விட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அஞ்சலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உடனே நானும் வீட்டுக்குள் சென்று எதுவும் தெரியாதது போல் நடித்தேன். அஞ்சலையின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தேன். பின்னர் அஞ்சலையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அஞ்சலையை கொண்டு சென்றனர். அப்போது நான் செல்லவில்லை.

    இந்த நிலையில் அஞ்சலை ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    இதை அறிந்த நான் போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் பெங்களூரு சென்று விட்டேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெங்கல் அருகே செல்போன் டவரில் பேட்டரி திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள கரிகலவாக்கம் கிராமத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 பேட்டரிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

    இந்த நிலையில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியது அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கிருஷ்ணராஜ், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி கமலா நகரை சேர்ந்த மணிகண்டன், புதுக்கோட்டை மாவட்டம் கொரும்பட்டி கிராமம் நல்லுசாமி, அரும்பாக்கம், என்.ஜி.ஓ. காலனி ஷேக்தா வூத், அசோக்நகர் 11-வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பேட்டரிகளை கைப்பற்றினர். மேலும் திருட்டுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 5 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    திருப்பதி:

    திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் திருட்டு, வழிப்பறி நடப்பதாகவும், பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் செல்போன்கள், கேமராக்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்வதாகவும் போலீசாருக்குப் புகார்கள் வந்தன.

    திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மொகந்தி, திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.பாஸ்கர்ரெட்டி தலைமையில் போலீசார் திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருப்பதி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக ஊற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இருவரும், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தொண்டமநாதம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சிவாவேலுபிள்ளை (வயது 40) என்றும், ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொருவர் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் யாதவள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனு என்கிற ருத்ர‌ஷசீனு (23) எனத் தெரிய வந்தது.

    இருவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் செல்போன்களை திருடியதாக கூறினர். பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் விலை உயர்ந்த செல்போன்கள், கேமராக்கள், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடி வந்துள்ளனர். கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இருவரும் கூட்டாக சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த 30 செல்போன்கள், 3 கேமராக்கள், 93 கிராம் எடையிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    செல்போனில் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து பேசினால் 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. #CellPhone #BrainCancer
    புதுடெல்லி:

    செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மின்கதிர்வீச்சு பேராசிரியர்கள், நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    நாம் பயன்படுத்தும் செல்போனுக்காக லட்சக்கணக்கான செல்போன் கோபுரங்கள் மற்றும் வீடுகள் தோறும் இணைக்கப்பட்டுள்ள வை-பை போன்றவை 24 மணி நேரமும் கதிர்வீச்சுகளை வெளியேற்றுகின்றன. அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மனிதர்களை மிகவும் பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது. ஒருவர் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. 1985-ம் ஆண்டு செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை நடந்த ஆய்வில் மூளை புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து மக்களிடம் அதிகரித்து வருகிறது என ஆய்வில் தெரியவருகிறது.



    பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் குழந்தைகள் 12 வயது வரை செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது என பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகி உள்ளது. #CellPhone #BrainCancer

    பல மேம்பட்ட பாதுகாப்பு முறைகள் இருந்தாலும், அடிப்படை முறைகளை பின்பற்றினாலே பெரும்பாலான இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
    மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக உணவு, உடை, மற்றும் உறைவிடத்தை கூறுவார்கள். இன்று அதனுடன் இணைய தேவையும் இணைந்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த அளவுக்கு இன்று இணையம் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. நமக்கு தேவையான எந்த தகவலையும் இணையத்தின் மூலமாக ஒரு வினாடி பொழுதில் அறிந்து கொள்ளலாம்.

    அது மட்டுமின்றி இணையத்தின் மூலமாக வங்கி, மின்சாரம், வருமானவரி, பயணம் மற்றும் இதர பல சேவைகளை நம் வீட்டில் இருந்த படியே பயன்படுத்திக்கொள்ளலாம்.

    அப்படி இணையத்தை பயன்படுத்தும்போது நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துபவர்களை போல அதனை தீய செயல்களுக்கு (ஹேக்கிங்) பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

    அவர்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துகொள்ள நீங்கள் பின்வரும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    நாம் அன்றாட வாழ்வில் இணையத்தை பேஸ்புக், இ-மெயில், வங்கி சேவை, ரெயில் முன்பதிவு மற்றும் பல சேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். சிலர் அத்தனை இணையதளங்களுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஒரு தவறான செயல்.

    அதாவது, ஒருவர் உங்களின் ஒரு இணையதளத்தின் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டால் அவரால் உங்கள் வங்கி கணக்கு உள்பட அனைத்து கணக்குகளையும் தன் வசப்படுத்திகொள்ள முடியும். அதனால் முடிந்தவரை உங்களின் ஒவ்வொரு இணைய சேவைக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பாஸ்வேர்டு உங்கள் மனதில் பதியவேண்டுமே அன்றி டைரியிலோ அல்லது நோட்புக்கிலோ அல்ல.

    இப்படி ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தியதால் பல பேர் தங்களின் பணம் மற்றும் சுயதகவல்களை இழந்திருக்கின்றனர். அப்படி ஒரே பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்துபவராயின், இன்று முதல் வேலையாக உங்களின் அனைத்து இணைய கணக்கு பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிடுங்கள். யாரும் விரைவில் கண்டுபிடிக்க முடியாத, அதே நேரம் உங்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் இருக்கும்படி பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும்.

    உங்கள் வங்கியில் இருந்து வரும் தகவலை போல உங்களுக்கு ஒரு இ-மெயில் வரும். அதில் காட்டும் ஒரு ‘லிங்’கை கிளிக் செய்தால் அது உங்கள் வங்கியின் வெப்சைட் பக்கத்தை போல (உங்கள் வங்கி வெப்சைட் அல்ல ) ஒரு வெப்சைட்டை திறக்கும். அங்கு நீங்கள் உங்கள் வங்கி முகவரி, பாஸ்வேர்டை கொடுத்தால் ஹேக்கர்கள், அதை திருடி உங்கள் கணக்கினுள் நுழைந்து விடுவார்கள். அதன் மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எளிதில் எடுத்துக்கொள்ள முடியும்.

    எனவே, உங்களுக்கு வங்கியிலிருந்து இ-மெயில் அல்லது குறுந்தகவல் வந்தால் அது நம்பகமானதா? என்று சோதித்து பின்னரே நீங்கள் உங்கள் விவரங்களை அளிக்க வேண்டும். அந்த வெப்சைட் ‘லிங்’கை இரண்டு முறை சரிபார்த்த பின்பே உங்கள் தகவல்களை அளிக்க வேண்டும்.

    மேலும், உங்கள் கம்ப்யூட்டரில் கட்டாயம் ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் இருப்பது மிக அவசியம். வைரஸ் என்பது இணையதளம் வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும் சாப்ட்வேர் ஆகும். இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து விவரங்களை உங்களுக்கு தெரியாமலேயே மற்றவர்களுக்கு அனுப்பி விடும்.

    அது மட்டுமன்றி உங்கள் கம்ப்யூட்டரேயே செயலிழக்க வைத்து விடும் அளவுக்கு திறன் கொண்டது. ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் அந்த வைரசிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. அது மட்டுமன்றி நீங்கள் பயனற்ற வெப்சைட்டுகளை அணுகாமல் இருப்பதும் உங்களை வைரசிலிருந்து காப்பாற்றும்.

    ஓ.டி.பி. எண் (ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு) பயன்பாட்டிலும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, ஆன்லைன் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரை அனுப்புவார்கள். அதாவது உங்கள் பாஸ்வேர்டை தவிர நீங்கள் இந்த ஓ.டி.பி. எண்ணையும் கூடுதலாக கொடுக்க வேண்டும்.

    ஒருவர் உங்களது பாஸ்வேர்டை தெரிந்து கொண்டாலும், அவரால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை இந்த ஓ.டி.பி. எண் இல்லாமல் எடுக்க முடியாது. அதனால் இந்த எண்ணை நீங்கள் யாருக்கும் பகிரக் கூடாது. உங்கள் வங்கியிலிருந்து பேசுகின்றோம் உங்கள் ஓ.டி.பி. எண்ணை கொடுங்கள் என்றாலும் நீங்கள் அதை பகிரக்கூடாது. ஏனேனில் ஓ.டி.பி. என்பது உங்கள் பாஸ்வேர்டை போன்றது.

    இன்னும் பல மேம்பட்ட பாதுகாப்பு முறைகள் இருந்தாலும், இந்த அடிப்படை முறைகளை பின்பற்றினாலே பெரும்பாலான இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம். இணையதளம் என்பது கடல் போன்றது. அதில் பாதுகாப்போடு நீந்தினால் உங்கள் அறிவை மட்டுமன்றி உங்கள் வாழ்வையே மேம்படுத்திக்கொள்ளலாம். விழிப்போடு இருக்க தவறினால், உங்கள் வாழ்வு நடுக்கடலில் தொலைந்துபோகவும் வாய்ப்புண்டு.

    த.கதிரவன்,

    மென்பொருள் பொறியாளர்,

    சியாட்டில், வாஷிங்டன்
    திருவொற்றியூரில் வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு ஈசான மூர்த்தி கோவில் தெருவில் பணி முடிந்து செல்போனில் பேசியபடியே நடந்து சென்றார்.

    அப்போது 2 வாலிபர்கள் அவரிடம் செல்போனை பறிக்க முயற்சித்தனர். ஆனால் கார்த்திக் போராடினார். ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கத்தியால் கார்த்திக்கின் வயிற்றில் குத்தி விட்டு செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். மயங்கி கீழே விழுந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலியை சேர்ந்த அஜித் (19) திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரத்குமார் (18)ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    ×