search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96604"

    பிரான்ஸ் நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளின் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #France #school #phones
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளின் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனினும் பேரிடர் காலங்களிலும் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பள்ளிகளுக்கு செல்லும் போது மாணவர்கள் தங்களது செல்போன்களை அனைத்து வைப்பதுடன் அவற்றை பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



    இந்த சட்டத்தை உயர் நிலைப்பள்ளிகளும் தாமாக முன்வந்து செயல்படுத்தலாம். தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.#France #school #phones
    மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள துவரிமான் கணேசபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீமன். இவர் பெரியார் பஸ் நிலையம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

    உடனே ஸ்ரீமன் கூச்சலிட்டதால் பொதுமக்கள் விரட்டிச்சென்று 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் திடீர்நகரைச் சேர்ந்த முபாரக்அலி (51), ஒத்தப்பட்டி வைத்திய நாதபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20) என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கோரிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (51). இவர் பள்ளிவாசல் தெருவில் நடந்து சென்றபோது கே.புதூரைச் சேர்ந்த நாகவேலு (28), கோரிப்பாளையம் இப்ராகிம் (32) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். #tamilnews
    தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. சில கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றி வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சாருமதி இதற்கான உத்தரவை அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு பிறப்பித்துள்ளார். அவர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உயர் கல்வித்துறை செயலாளர் (பொறுப்பு), பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை பொறுப்பாளர் ஆகியோர் தலைமையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாணவ-மாணவிகள் இணைந்து படிக்கும் கல்லூரிகளில் இருந்து பல்வேறு புகார்கள் வருகின்றன. மாணவர்கள் தங்களது செல்போன் மூலம் மாணவிகளை வீடியோ எடுப்பதாகவும், புகைப்படம் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

    மேலும் பரீட்சையின் போது செல்போனை பயன்படுத்தி முறைகேடுகள் நடக்கிறது. செல்போனால் மாணவ-மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதன் காரணமாக கல்லூரிகளில் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டை பின்பற்றி மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்போன்களை கொண்டுவர மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2005-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு இருந்ததால் மாணவ- மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடு நாளடைவில் தளர்த்தப்பட்டது.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
    மதுரையில் 7 கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    அவனியாபுரம்:

    மதுரை தெற்குவாசல், அவனியாபுரம், வில்லாபுரம் மற்றும் மாநகரப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, செல்போன்கள் பறிப்பு போன்றவை தொடர் சம்பவங்களாக நடைபெற்று வந்தன.

    இது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தர விட்டார்.

    அதன் பேரில் திருப்பரங்குன்றம் உதவி போலீஸ் கமி‌ஷனர் பீர் முகமது, அவனியாபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டுகள் முனியாண்டி, ராஜபாண்டி, இளங்கோ, மகாலட்சுமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    தனிப்படையினர் மாநகரின் பல பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

    அப்போது அவன் செல்போன்-மோட்டார் சைக்கிள் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவன் என்பதும், அவனியாபுரம் வெள்ளபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (வயது 19) என்பதும் தெரியவந்தது.

    இவனுடன் வேறு சிலரும் சேர்ந்து கொண்டு மாநகரின் பல பகுதிகளில் சாலையில் செல்போன் பேசிக் கொண்டு செல்பவர்களிடம் இருந்து செல்போன்களை பறிப்பது, மோட்டார் சைக்கிள்கள் திருடுவது போன்றவற்றில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    சரவணன் கொடுத்த தகவலின் பேரில் எம்.எம்.சி. காலனி மருதுபாண்டி மகன் செந்தில்குமார் (19), அவனியாபுரம் அம்மாசி மகன் அஜித்குமார் (19), காளிமுத்து மகன் ஜெயக்குமார் (19), சோலையழகுபுரம் திருநாவுக்கரசு மகன் தினேஷ் (19), ஜீவாநகர் தங்கப்பாண்டி மகன் கார்த்திக் குமார் (19), ஜெய்ஹிந்துபுரம் கணேஷ் மகன் அய்யப்பன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள், 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சரவணன் போலீசாரிடம் கூறுகையில், வீட்டு முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி வெளி மாவட்டங்களில் விற்பதும், அங்கு திருடி வரும் மோட்டார் சைக்கிள்களில் மதுரையில் வலம் வருவதும் வாடிக்கை என்றான்.

    அப்படி வரும்போது தனியாக யாராவது செல் போனில் பேசிக்செல்வதை கண்டால் அவர்களிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விடுவோம் என்றும் தெரிவித்துள்ளான்.

    கைதான 7 பேரும் மதுரையில் எந்தப்பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளனர். எத்தனை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாரிமுனையில் செல்போன் பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் ராஜா பிள்ளை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மின்ட் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுக் கொண்டே அவர்களை துரத்தினர். பாரிமுனையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி அருகே சென்றபோது பூக்கடை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை விரட்டினார்கள்.

    அப்போது ஒருவன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குள் தப்பி ஓடினான். அவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவனது பெயர் சந்தோஷ்குமார் என்றும், புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் மற்றொரு கொள்ளையனை புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த அபிமன்யு என்பவனை கைது செய்தனர்

    அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய அரவிந்த் என்பவரை பூக்கடை போலீசார் தேடி வருகிறார்கள்.

    போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். நேற்று மதியம் அவர் வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் கார்த்திகேயனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி செல்ல முயன்றான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செல்போன் பறித்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா அவனிடம் விசாரணை நடத்தினார்.

    அவன் குன்றத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த அருண்குமார் என்ற பச்சை என்பதும் ஏற்கனவே பல முறை சிறை சென்றவர் என்பதும் தெரிய வந்தது. ஒரு வழப்பறி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்த பச்சை குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தான்.

    அவன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சென்ற போது மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவனிடமிருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். #Tamilnews

    தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். #MobileKillsYoung
    ஐதாராபாத்:

    வயது பாரபட்சம் இன்றி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் செல்போன் மோகத்தால் சிறுவன் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தாகே பிரேமை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்ற கட்டாம் பிரேம் சாகர், நடுவழியில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.



    தாகே பிரேம் சுயநினைவை இழந்ததை அடுத்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளார். தனது மகன் மாயமானதாக தாகே பிரேமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை கட்டாம் பிரேம் சாகர் ஒப்புக்கொண்டார்.

    மேலும், தமக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைக்க தாகே பிரேமின் செல்போனை எடுக்கவே அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    செல்போன் மோகத்தால் வாழ்வை இழந்த வாலிபர் மீது கொலை, ஆள்கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MobileKillsYoung
    நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிர்க்கவும்.
    பெற்றோர்களின் பொறுமையின்மையும், நேரம் செலவழிக்க முடியாத போக்குமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாவதற்கு பிரதான காரணங்கள். டி.வி.யை போட்டுவிட்டு நம் வேலையை செய்யலாம் என்ற வி‌ஷயத்தில் ஆரம்பிக்கின்றது விபரீதம். தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் நுழைந்துவிட்டால் அது அவர்களை இழுத்து சாப்பிட்டுவிடும். அவ்வளவு திறமையான வஸ்துகள் உள்ளே இருக்கின்றன.

    இதனால் நாள் ஒன்றிற்கு இத்தனை மணி என்ற கட்டுப்பாடு ஆரம்பத்தில் இருந்தே அமலுக்கு வர வேண்டும். இது மிக அவசியம். என்ன நிகழ்ச்சி, எந்த சேனலைக் குழந்தைகள் பார்க்கலாம் என்ற தேர்வு பெற்றோர் கையில் உள்ளது. அதனை பார்க்க மட்டும் அனுமதிக்க வேண்டும். அந்த சேனலை டி.வி. பெட்டியில் ட்யூன் செய்து வராமல் செய்துவிடலாம். சில நிகழ்ச்சிகளில் மொழி மிக மோசமாக உள்ளது. சில நிகழ்ச்சிகள் இன்னும் வளர்ந்துவிட்ட பின்னரே பார்க்கலாம் என்றும் இருக்கும்.

    தொலைக்காட்சியை பார்த்து என்ன உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். அது பரிசோதனை என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. நிகழ்ச்சியின் பெயரைக்கூறி அதில் வரும் கதையினை கூறச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அவர்கள் பார்த்ததை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உள்வாங்கியதில் கதை, வார்த்தைகள், கருத்துகள், புதிய மிருகங்கள், பெயர்கள் ஆகியவை பெற்றோருக்கு விளங்கும்.



    அவற்றை பற்றிய புரிதலும் பெற்றோருக்கு அவசியம். கார்ட்டூன் கேரக்டர்கள் மீது மோகம் வராமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். நமக்குத் தெரியாமல் அது ஒரு வியாபார பொருளாகி வருகின்றது. டோரா, சோட்டா பீம், வேர்டுகேர்ள் போன்றவை பொதிந்த பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து தினமும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன.

    நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை சுயநினைவுடன் தவிர்க்கவும். முடிந்தமட்டில் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது பெற்றோர் யாரேனும் ஒருவர் உடன் அமர்வது சிறந்தது. உங்கள் இருப்பு அங்கே முக்கியம். டி.வி.யில் காட்சி ஓடும்போதே கண்களை மூடிக்கொண்டு, குழந்தையை விவரிக்கச் சொல்லுங்கள். ஆரம்பத்தில் கடும் தடுமாற்றம் இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தை கண்ணை மூடிவிட்டு, பெற்றோர் விவரிக்க வேண்டும். அந்த விவரிப்புகள் குழந்தைகள் என்னென்ன கவனிக்கலாம் என்பதை விளக்க வேண்டும்.

    தொலைக்காட்சியை கொண்டு நிச்சயம் இந்த உலகின் விஸ்தாரத்தை, பிரமாண்டத்தை, அழகினை, தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, வாழ்க்கையில் வேண்டிய நம்பிக்கையை குழந்தைகளுக்கு காட்டலாம். கற்பனை வளத்தை கூட்டலாம். உடனடியாக நேரில் காண முடியாததை காட்சிகளைக் காட்டலாம். 
    சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம். அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது.
    முன்பு தொலைக்காட்சிகள் மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நேரத்தை விரயமாக்கும் சாதனமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு “முட்டாள் பெட்டி” என்ற பெயருண்டு. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடக் கூடியதாக இருந்தது தொலைக்காட்சிகள்.

    இன்று தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துக் கொண்டன. சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைவிட நவீனமாக நம்மை கட்டிப் போட்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளம் மாணவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றே கூறிவிடலாம்.

    அதனால் அவர்களை அறியாமலே படிப்பில் ஈடுபாடு குறைகிறது. இதை கண்டித்தால் பெற்றோரின் மீது வெறுப்பு காட்டுகிறார்கள் மாணவர்கள். கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் பலர்.

    ஸ்மார்ட்போன்களை கல்விக்கு உகந்த வகையில் பயன்படுத்த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் உலவுதல், விளையாட்டு அப்ளிகேசன்களில் மூழ்குதல், இசை கேட்டல் என பலவிதங்களிலும் நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால் வகுப்பில் ஒருமுகத்துடன் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. எப்போது வகுப்பு முடியும் என்ற ஏக்கமும், மன உளைச்சலும் தொற்றிக் கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் யார், என்ன பதிவிட்டார்களோ? என ஏங்கத் தொடங்கிவிடுகிறது மனம்.



    ஏறத்தாழ போன் அடிமையாகிவிட்ட இந்த மனநிலை வாழ்க்கையில் பலவிதங்களில் எதிரொலிக்கும். பெற்றோர் மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரும். வலைத்தளங்களில் தம்மை ஆதரிக்காதவர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். இன்னும் நிறைய ஆதரவை பெற வேண்டும் என்ற ஏக்கமும் அதிகரிக்கும். இது தீவிர மனஅழுத்த பாதிப்பில் தள்ளிவிடும். இரவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தூக்கமும் கெடுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கல்வியையும், சுமுகமான வாழ்க்கை முறையையும் முற்றிலும் பாதிக்கிறது.

    இதில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்றாகும். அதிக மன உறுதி கொண்ட வெகுசிலரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்து நல்வழிக்குத் திரும்புகிறார்கள். பலர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திற்கு சிகிச்சை பெறும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பெற்றோர் ஸ்மார்ட்போன்களை படிக்கும் குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அளவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும். சிறிது நேர பயன்பாட்டிற்குப் பிறகு போனை அணைத்துவிட்டு, படிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, வெளியில் விளையாடச் செல்வது, தியானம் செய்வது, கலைப் பணியில் ஈடுபடுவது, செய்முறை பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்துவது போன்ற பயிற்சிகளால் மனதை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கலாம். இளமைப் பருவம் கல்விக்கானது என்பதை உணர்ந்தால் மற்றவற்றின் மீதான மோகத்தை குறைத்து வெற்றிபெற உங்களால் முடியும்! 
    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திலும், ரெயிலில் வரும் பயணிகளிடமும் தொடர்ச்சியாக செல்போன் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு பயணியிடம் பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தல் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 37). சமையல் மாஸ்டர்.

    சம்பவத்தன்று இரவு இவர் கோவையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரெயிலில் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

    ஆனால் அந்த ரெயிலை அவர் தவறவிட்டார். எனவே மறுநாள் அதிகாலையில் வரும் ரெயிலில் செல்லலாம் என்று நினைத்து ரெயில் நிலையத்தில் தங்கினார்.

    அங்கு டிக்கெட் வழங்கப்படும் இடத்தின் அருகே படுத்து தூங்கினார். திடீரென எழுந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த ரூ. 3700 பணம் மற்றும் செல்போனை காணவில்லை.

    கவியரசன் தூங்கியதை சாதகமாக வைத்து அவரிடம் இருந்து யாரோ மர்ம நபர் பணம், செல்போனை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் நிலையத்தில் இது போன்று தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டு சம்பவங்கள் ரெயில் பயணிகளையும், மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.
    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

    குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிப்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

    குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.



    கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

    இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க "பாஸ்வேர்ட்" உதவும்.

    வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் "சைபர் கஃபே"களுக்கு செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதைவிட கண்காணிப்பது சிறந்தது.

    குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.
    நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.
    வித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

    படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.

    அத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

    அந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.

    காரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.

    நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.

    அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.

    ‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.

    நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.



    அதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.

    விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.

    மனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.

    ஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.

    மீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.

    தூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.

    கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.

    கேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    ஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

    எனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.

    உதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்
    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே.
    தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. உண்மை அறிவியலின் உச்சத்தை அடைந்து விட்டான் மனிதன். ஆனால் அத்தனை அறிவுசார் கண்டுபிடிப்புகளும் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனவா? அவனது கண்டுபிடிப்புகளின் ஆளுமை ஒரு எல்லையை அடையும் போது சுயநலம் தலைத்தூக்கி, அதனை தான் மட்டும் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தானே கவனம் செல்கிறது.

    அந்த அறிவியல் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் காணும்போது ஏற்கனவே இன்னொருவன் கண்டுபிடிப்பதை எப்படி அழிக்க முடியும் என்ற அச்சுறுத்தலைத் தானே அது தருகிறது. தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமானவற்றுக்கு பயன்படும் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது அது அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் அளவுதான் அதிகம் இருக்கிறது.

    கண்டுபிடிப்புகளின் வழி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ரசாயன குண்டுகள், அதனை இட்டுச் செல்லும் வான ஊர்த்திகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தவனை அழிக்கவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வியாபாரம் தான் உலக வர்த்தகத்தில் உச்சத்தில் இருக்கிறது.

    பூமியில் தண்ணீரை இல்லாமல் செய்துவிட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரைத் தேடும் அவலநிலையை என்ன சொல்வது? உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிற்கூடங்களை அனுமதித்துவிட்டு புதிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பது எந்த அறிவுடைமையைச் சார்ந்தது?

    அறுபதுகளில் வாழ்பவர்களை விட இருபதுகளில் வாழும் இன்றைய இளைஞர்கள் அறிவு ஜீவிகள். ஐக்கூ அதிகம் நிறைந்தவர்கள். ஆனால், என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள்? இயற்கையை மறந்த எந்திரத்தனமான ஒரு வாழ்க்கை என்ன சுகத்தை தந்துவிடும்? ரோபோக்கள் போன்று உணர்ச்சியற்ற வாழ்க்கையில் என்ன லாபம் கிடைத்துவிடும்?

    அன்பு, அறம், வீரம், ஞானம், நகைச்சுவை என்று எத்தனையோ பண்புகளோடு, குணாதிசயங்களோடு வாழவேண்டிய நிலைமை மாறி, ‘அழுத்தம்’ என்றே ஒரே அச்சில் சுழன்று வருகிறார்கள். இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலால், மன அழுத்தத்தால் மாய்ந்து போகிறார்கள்.

    இன்றைய இளைய தலைமுறையினர் அத்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்ற பாசப் பிணைப்பு கொண்ட உறவுகளையே யார் என்று அறியாமல் வாழ்கிறார்கள். அலைபேசி, வலைத்தளம், முகநூல்கள் என்று ஏதோ ஒரு வேற்று உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்.

    உறவுகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; யாரையும் மதிப்பதும் இல்லை; அவர்களை சுற்றி எது நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உலகம் கைபேசியில் தான் சுழல்கிறது. நெருங்கிய உறவுகள் இறந்தாலும் கூட அவர்களுக்கு அழத் தெரியவில்லை. உணர்வுகள் மரத்துப்போய்விட்டன.

    அத்தை மகள், மாமன் மகள் என்ற அனிச்சப் பூக்களின் அருமை தெரியாமல் எந்த நாடோ, எந்த ஊரோ, எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவரை மனைவியாக்கி கொண்டு மனமாச்சரியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது பிரிந்து மனஅழுத்ததில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    தான் நிர்ணயித்த இலக்கை அடைந்து திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத வெற்றிடம் தான் தெரிகிறது. என்ன வாழ்க்கை? எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தோம்? விடையே தெரியவில்லை. நம் அறிவை மனிதநேயத்திற்காக, மனிதகுல மேம்பாட்டிற்காக எப்படி பயன்படுத்தினோம்? எங்கோ வேற்றுக் கிரகத்தில் உள்ளவர்களை இங்கு ஆராய்கிறோம். தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்க தவறிவிட்டோம்.

    அன்றாடம் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுகொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி சிந்தித்தோமா? பரம்பரை பரம்பரையாய் ஆல மரங்களாய் வாழ்ந்த உறவுகள் ஒற்றை மரமாய் விரைவில் விழப் போவதை கவனத்தில் கொண்டோமா? சூனியம் ஒன்று சூழவிருப்பதை, சூழ்நிலைகளின் தாக்கம் நம்மை பாதிக்கபோவதை உணர்ந்திருக்கிறோமா?

    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே. இந்த கலாசார சீரமைப்புக்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். உங்கள் வாரிசுகளின் எதிர்காலம் அதில் தான் அடங்கி இருக்கிறது.

    எழுத்தாளர் மு.முகமது யூசுப்
    ×