search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

    திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூரிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கழிவு நீருடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள நல்லம்மாள் தடுப்பணை, ராயபுரம் தடுப்பணை, அணைக்காடு மண்ணரை தடுப்பணை, காசிபாளையம் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் நிரம்பி வழிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆனைமேடு, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இருபுறமும் பொதுமக்கள் நுழைந்து விடாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

    வருவாய்த்துறையினர் 24 மணிநேரமும் நொய்யல் ஆற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை கடந்த 2 நாட்களாக வலுவடைந்தது. இதையொட்டி அருவி மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    களக்காடு தடுப்பணையே தெரியாதவாறு, தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. ஆற்றுக்கு இறங்கி செல்லும் முதல்படி வரை வெள்ளம் கரை புரண்டது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. சப்பாத்தில் உள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் கடந்த 9-ந் தேதி திருமலை நம்பி கோயிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீ அணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை, போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி களக்காடு புலிகள் காப்பகத்தை மூட, களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன் ஆலோசனையின் பேரில், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார்.

    எனவே 10-ந் தேதி புலிகள் காப்பகம் மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, அங்கு வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது. இதனால் நம்பிகோவிலுக்கு பக்தர்கள் செல்லத்தொடங்கினர்.

    இந்நிலையில் களக்காடு தலையணையில் வெள்ளபெருக்கு குறையாததால் அங்கு செல்ல விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது.

    குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    பெங்களூரு:

    குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல் ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வருகிறது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னட, உடுப்பி, உத்தரகண்டா பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமாரதாரா, நேத்ராவதி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குற்றால மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    தென்காசி:

    குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும். குற்றா லத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. சீசன் தொடங்கிய 4 நாட்கள் கழித்து, சாரல் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

    இதற்கிடையே குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இடையிடையே இதமான வெயிலும் அடிக்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கினாலும் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மெயின் அருவியை போன்று பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

    ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    அருவியில் விழும் தண்ணீரின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் ஐந்தருவிக்கு வந்து சென்றனர். மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் இரவில் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று மாலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலை முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் தொடர்ந்து இன்று காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்ந்தது. இன்று காலையும் குற்றால மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதாலும், சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசுவதால் இன்னும் ஒருசில நாட்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும் என்று அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இன்று (சனிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.


    மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டடுக்கு மாடி வீடு சரிந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MizoramLandslide
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையினால் சில மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.

    இந்நிலையில், லுங்கேலி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளின் வழியாக பாய்ந்தோடிய வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, இரண்டு மாடிகளை கொண்ட ஒரு வீடு குவியலாக சரிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  #MizoramLandslide 
    ஊட்டியில் கன மழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. பின்னர் காலை 11.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டியில் இடி, மின்னலுடன் தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.



    இதனால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மழை நின்ற பின்னர் படகு சவாரி தொடங்கியது. ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, மெயின் பஜார், கூட்ஷெட் சாலை, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட், நொண்டிமேடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.

    ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். பலத்த மழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அங்கு ஒரு சில கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடை வியாபாரிகள் கால்வாயில் அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றினர்.

    ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தண்ணீர் பெருகி கிடந்தது. ஊட்டி படகு இல்லத்தில் இருந்து வந்த வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் திரும்பி மாற்று வழியில் சென்றன.

    சில வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் மழைநீரை தள்ளிக்கொண்டு சென்றதை காண முடிந்தது. அப்போது ஒரு கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. பின்னர் அந்த கார் கயிறு கட்டி இழுக்கப்பட்டது. அங்கு மழைநீர் வடிந்தவுடன் போக்குவரத்து சீரானது. ஊட்டி ரெயில்வே போலீஸ் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழைக்கு ஒதுங்கி நின்றனர். அவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். பலத்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். பின்னர் மழை விட்டதும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான லவ்டேல், கேத்தி, எச்.பி.எப்., தலைகுந்தா, முத்தோரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் அருகே உள்ள பழுதடைந்த கண்ணாடி மாளிகையை முழுமையாக புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக கண்ணாடி மாளிகைக்குள் தண்ணீர் புகுந்தது.

    அந்த தண்ணீரை தொழிலாளர்கள் வாளியில் எடுத்து ஊற்றி அகற்றினர். ஊட்டியில் பலத்த மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மழையை தொடர்ந்து குளிர் நிலவியதால் ஊட்டி நகரில் இதமான காலநிலை நிலவியது. 
    ×