search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போன்று வோடபோன் ஐடியாவும் புதிதாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது. #VodafoneIdea #Apps



    பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை வழங்கி வரும் நிலையில், வோடபோன் ஐடியா சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சொந்தமாக வின்க் மியூசிக் மற்றும் சாவன் செயலிகளை வழங்கி வரும் நிலையில் வோடபோன் புதிதாக செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐடியா மியூசிக் செயலியின் சேவையை நிறுத்தப்பட இருப்பதாக தெரிகிறது.

    ஐடியா மியூசிக் செயலியின் சேவை நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து விரைவில் புதிய மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்வோம். புதிய செயலி ஒப்பந்த அடிப்படையில் அறிமுகமாகும். இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என வோடபோன் ஐடியா நிறுவனத்தை சேர்ந்த பலெஷ் சர்மா தெரிவித்தார்.



    வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மொத்தம் 547.2 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    முன்னதாக ரூ.1699 சலுகையில் இதேபோன்ற பலன்களை வழங்கும் சலுகையை வோடபோன் அறிவித்தது. எனினும், ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் சேவையில் பிழை கண்டறிந்த 14 வயது சிறுவனின் கல்விக்கு உதவி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் செயலியில் பயனர் விவரங்களை ஒட்டுக்கேட்கும் பிழை கடந்த வாரம் கண்டறியப்பட்டது. பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டதும் ஃபேஸ்டைமில் வீடியோ காலிங் வசதி நிறுத்தப்பட்டு, பிழையை சரி செய்வதற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், பிழையை சரிசெய்வதற்கான அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்துடன் பிழையை கண்டறிந்த சிறுவனின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. மேலும் தாம்ப்சன் மற்றும் டேவென் மோரிஸ் குடும்பத்தாருக்கு ஆப்பிள் நன்றி தெரிவித்துள்ளது.

    க்ரூப் ஃபேஸ்டைம் கோளாறு முதலில் அரிசோனாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கண்டறிந்தான். ஜனவரி 19 ஆம் தேதி தனது நண்பருக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது அவரது நண்பர் அழைப்பை ஏற்கவில்லை எனினும் அவரது உரையாடல்களை கேட்க முடிந்ததாக தெரிவித்தார்.



    பின் சிறுவனின் தாயார் மிஷல் தாம்ப்சன் பாதுகாப்பு கோளாறு பற்றி ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். பின் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வேகமாக பரவியது. ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஓ.எஸ். மோஜேவ் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தில் குறைபாடு ஏற்பட்டது.

    பிழை சரி செய்யப்பட்டது மட்டுமின்றி ஃபேஸ்டைம் சேவை முழைமையாக சோதனை செய்யப்பட்டு அதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மென்பொருள் பிழை சார்ந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விதத்தை மாற்ற இருப்பதாக ஆப்பிள் கடந்த வாரம் அறிவித்தது.
    ஆப்பிள் ஐபோன்களில் வாடிக்கையாளர் தரவுகளை திருட ஐ.ஓ.எஸ். செயலிகள் புது யுக்தியை கையாள்வது தெரியவந்துள்ளது. #iPhone #Apps



    ஐ.ஓ.எஸ். செயலிகளை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளையும் சில செயலிகள் ரகசியமாக பதிவு செய்கின்றன. இந்த செயலிகள் உங்களது ஐபோன் ஸ்கிரீனினை உங்களின் அனுமதியின்றி பதிவு செய்வது கண்டறியப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். செயலிகள் உங்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதை உங்களால் கண்டறியவே முடியாது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் பல்வேறு பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகள் கிளாஸ்பாக்ஸ் வழிமுறையில் செஷன் ரீபிளே எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்தும் போது பயனரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துவிடும். இதில் பயனரின் மிகமுக்கிய விவரங்களும் அடங்கும். 

    அந்த வகையில் ஐ.ஓ.எஸ். செயலிகளில் செஷன் ரீபிளே வசதியை செயலிழக்கச் செய்ய ஐ.ஓ.எஸ். டெவலப்பர்களுக்கு ஆப்பிள் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 



    இவற்றில் எந்த செயலியிலும் பயனரிடம் ஸ்கிரீனினை பதிவு செய்வதற்கான அனுமதியை கோருவதில்லை. பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகளான ஏர் கனடா மற்றும் எக்ஸ்பீடியா உள்ளிட்டவை கிளாஸ்பாக்ஸ் அனாலடிக்ஸ் கொண்டு இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதில் தங்கும் விடுதிகள், பயண வலைத்தளங்கள், வங்கி, விமான சேவை மற்றும் இதர சேவை வழங்கும் செயலிகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    செஷன் ரீபிளே தொழில்நுட்பம் செயிலில் பயனர் மேற்கொள்ளும் ஒவ்வொரு க்ளிக், கீபோர்டு பதிவு, பட்டன் புஷ் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும். எனினும், பயனர் செயலியை பயன்படுத்தும் போது மட்டுமே இவ்வாறு செய்யப்படும் என்பது பயனருக்கு சற்று ஆறுதலான விஷயம் எனலாம்.

    செயலிகளை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்யவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என கூறப்பட்டது. எனினும், இவ்வாறு செய்யும் போது பயனரின் மிகமுக்கிய விவரங்களும் ஆப் டெவலப்பர் அறிந்து கொள்ள முடியும். 

    பொதுவாக ஐ.ஓ.எஸ். செயலிகளை இயக்கும் பயனரின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் பதிவு செய்யப்பட்டதும், அவை ஆப் டெவலப்பரின் சர்வெர்களுக்கு அனுப்பப்படும். இதன்மூலம் எவர் வேண்டுமானாலும் பயனர் விவரங்களை இயக்க முடியும். செஷன் ரீபிளே தொழில்நுட்பத்தினை கிளாஸ்பாக்ஸ் போன்று பல்வேறு இதர நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
    வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் மற்றும் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்த தொழில்நுட்பம் வழக்கத்தை விட அதிகளவு குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் பல்வேறு அக்கவுண்ட்களை உருவாக்கி தீங்கு விளைவிக்கும் போலி தகவல்களை பரப்புவோரை கண்டறியும். இதுபோன்ற அக்கவுண்ட்களை செயலி முழுக்க வெவ்வேறு தளங்களில் முடக்குவதாக வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

    அந்த வகையில் போலி தகவல்களை பரப்புவதற்கென உருவாக்கப்படும் அக்கவுண்ட்கள் பதிவு செய்யப்படும் போது, குறுந்தகவல் அனுப்பும் போது அல்லது மற்றவர்கள் புகார் எழுப்பும் போது என பல்வேறு தளங்களில் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் செயலியில் சுமார் இருபது லட்சம் அக்கவுண்ட்கள் இவ்வாறு முடக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



    வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கும் மெஷின் லேர்னிங் மென்பொருளால் தற்சமயம் 20% அக்கவுண்ட்களை பதிவு செய்யப்படும் போதே முடக்கமுடிகிறது. அக்கவுண்ட்களை முடக்க பயனரின் ஐ.பி. முகவரி, அவர் வசிக்கும் நாடு, அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர், அக்கவுண்ட் எவ்வளவு பழையதாக இருக்கிறது என பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    ஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கும் விசேஷ மென்பொருள் உள்பட செயலியை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும் பல்வேறு வழிகளை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்கானிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

    போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிக்க பயனர் ஒரு குறுந்தகவலை மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதுதவிர ரேடியோ, தொலைகாட்சி, வலைதளம் உள்ளிட்டவற்றில் போலி செய்திகள் பரப்புவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.
    கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு பியூட்டி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் பயனர் விவரங்களை தவறாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. #Google #beautyapps



    கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் பல்வேறு பியூட்டி கேமரா செயலிகள் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட விளம்பர சர்வர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவற்றில் சில செயலிகள் அதிகளவு பிரபலமானதால் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இவ்வாறு டவுன்லோடு செய்தவர்களில் பலர் ஆசியாவில் வசிக்கின்றனர்.

    இதுபோன்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் செயலிகளை கண்டறிவது வாடிக்கையாளர்களுக்கு கடினமான விஷயம் ஆகும். இந்த செயலிகள் இன்ஸ்டால் ஆனதும் இவை பயனர் ஸ்மார்ட்போனில் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கி அதனை மறைத்து வைத்துவிடும். செயலி மறைக்கப்பட்டிருப்பதால் இவற்றை பயனரால் கண்டறியவே முடியாது. மேலும் இவை பேக்கர்களை பயன்படுத்தி எவ்வித பாதுகாப்பு வலையிலும் சிக்காத வகையில் உருவாக்கப்படுகின்றன.

    இதுதவிர இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் முழு ஸ்கிரீனை மறைக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிடும். இவற்றில் பல்வேறு விளம்பரங்கள் பயனரின் பிரவுசர் வழியே திறக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த விளம்பரங்கள் பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் இருக்கும். இடையூறை ஏற்படுத்தும் செயலி மறைந்திருப்பதால், வாடிக்கையாளர்களால் எங்கிருந்து விளம்பரங்கள் வருகின்றன என்பதையே கண்டறிய முடியாது. 



    பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் தீங்கிழைக்கும் வலைதளங்களை திறக்கச் செய்து அவற்றின் மூலம் பயனரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி அல்லது மொபைல் போன் விவரங்களை சேகரிக்கும். இந்த செயலிகள் ரிமோட் சர்வெர்கள் அல்லது வெளிப்புற இணைய முகவரிகளில் இருந்து டவுன்லோடு ஆகி விளம்பரங்களை இயக்க ஆரம்பிக்கும்.

    முதற்கட்ட ஆய்வில் போட்டோ ஃபில்ட்டர் சேவைகளை வழங்கும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கண்டறியப்பட்டன. இந்த செயலிகள் பிரத்யேக சர்வெர் மூலம் பயனர் புகைப்படங்களை அழகுப்படுத்துகின்றன. எனினும், அழகுபடுத்தப்பட்ட புகைப்படத்துன் போலி விவரங்களும் சேர்ந்து வரும்.

    செயலியில் அப்லோடு ஆன புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படும். எனினும், கூகுள் சார்பில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டு விட்டது. 
    இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். #Instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அவரவர் ஃபாளோவர்களிடம் தெரிவிக்க ஏதுவாக ஸ்டோரிஸ் அம்சம் சேர்க்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அம்சத்தை தற்சமயம் ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார்.

    ஃபேஸ்புக் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டு பேசிய மார்க் சூக்கர்பர்க், "இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்," என தெரிவித்தார். 

    இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தினர். அந்த வகையில் ஆறு மாதங்களில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்திருக்கிறது.



    இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளிலும் ஸ்டோரிஸ் அம்சம் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை ஸ்டோரிக்களாக பதிவு செய்யலாம்.

    முன்னதாக இதேபோன்ற அம்சம் ஸ்னாப்சாட் செயலியில் மெமரிஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் இந்த அம்சத்தை கொண்டு வருவாய் ஈட்டத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் விளம்பரங்கள் தோன்ற துவங்கின. #Instagram #Apps
    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் அனுப்ப டைப் செய்வதற்கு மாற்றாக குரல் மூலம் குறுந்தகவல் அனுப்பும் வழிமுறையை பற்றி தொடர்ந்து பார்ப்போம். #Whatsapp



    வாட்ஸ்அப்பில் டைப் செய்து குறுந்தகவல் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. டைப் செய்வதால் அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் பலரும் மைக் மூலம் குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜாக அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    பேசுவதை எழுத்துகளாக சைப் செய்து வழங்கும் நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதுபோன்ற பயன்பாடு வாட்ஸ்அப்பில் வராதா? என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. 

    இந்நிலையில், கூகுளின் ஜி-போர்டு ‘கீபோர்டு’ அப்ளிகேசனை பயன்படுத்தி பயனர் தங்களது பேச்சை டைப் செய்துவிட முடியும். இதுவரை வாட்ஸ்அப்பில் அந்த வசதி அறிமுகம் செய்யப்படாவில்லை என்றாலும், ஜிபோர்டு வசதியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலிலும் குறுந்தகவலை டைப் செய்யலாம்.



    இதை செயல்படுத்த வாட்ஸ்அப் செயலியின் புதிய பதிப்புக்கு உங்களது செயலியினை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஜிபோர்டு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து நிறுவிக் கொள்ள வேண்டும். 

    பின் டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்அப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் குறியீடு தோன்றும். அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும். இந்த வகையில் பாஸ்வேர்டு மற்றும் சில ரகசிய குறிகளை மட்டும் டைப் செய்ய முடியாது. இந்த வசதியை வாட்ஸ்அப் செயலியில் சேர்ப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

    குறுந்தகவலை எழுத்துக்களாக டைப் செய்யும் பணியினை ஜிபோர்டு பார்த்துக் கொள்ளும் என்றாலும், குறுந்தகவலை அனுப்பும் முன் பிழை இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும். #Whatsapp
    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் வழங்கப்பட்ட பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #Apps



    வாட்ஸ்அப் வெப் பதிப்பில் 0.3.2041 அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் சில புதிய வசதிகளையும், பாதுகாப்பு குறைபாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கதாக பி.ஐ.பி. மோட் பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்டிரீமபிள் போன்ற சேவைகளுக்கு பி.ஐ.பி. (பிக்சர் இன் பிக்சர்) மோட் வசதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வாட்ஸ்அப் வெப் 0.3.1846 பதிப்பில் பி.ஐ.பி. மோட் வசதி வழங்கப்பட்டது.

    இந்த அம்சத்தினை சோதனை செய்ய வீடியோ லின்க் ஒன்றை நீங்கள் அனுப்ப வேண்டும். அல்லது உங்களுக்கு எவரேனும் அனுப்பியிருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீடியோ லின்க் உடன் வீடியோ பிரீவியூ வாட்ஸ்அப் சாட் திரையில் தோன்றும். இதனை க்ளிக் செய்யும் போது வீடியோ சாட் ஸ்கிரீனுள் ஓடத்துவங்கும்.



    இதனுடன் பி.ஐ.பி. திரையை மூடாமல் சாட் ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒருவேளை பி.ஐ.பி. மோட் உங்களுக்கு இயங்காத பட்சத்தில் நீங்கள் வாட்ஸ்அப் வெப் பழைய பதிப்பை பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த உங்களது பிரவுசரின் கேச்சிக்களை அழித்து விட்டு பின் பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் உங்களது வாட்ஸ்அப் வெப் அப்டேட் ஆகியிருக்கும். இந்த நிலையில் பி.ஐ.பி. மோட் சீராக இயங்கும். #WhatsApp #Apps
    மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. #Facebook #WhatsApp



    ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். 

    வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தொடர்ந்து தனித்தனியே இயங்கினாலும், இதன் உள்கட்டமைப்பு கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். 

    இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மூன்று செயலிகளுக்கிடையே நடைபெறும் சாட்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான ஒப்புதலை ஃபேஸ்புக் இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவைகளை அதிகளவு பயன்படுத்த வைக்கலாம் என ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



    குறுந்தகவல் அனுபவத்தை பொருத்தவரை மக்களுக்கு வேகமான, எளிமையான, நம்பத்தகுந்த மற்றும் தனியுரிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எங்களது குறுந்தகவல் செயலிகளை முழுமையாக என்க்ரிப்ட் செய்து அவற்றை ஒவ்வொரு நெட்வொர்க் மூலம் மிக எளிமையாக தகவல் பரிமாற்றம் செய்ய வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இவ்வாறு செய்லபடுத்தும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் மற்ற இரு செயலிகளை நிச்சயம் பயன்படுத்துவர் என கருதமுடியாது. சில பயனர்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டு மெசஞ்சரை இன்ஸ்டால் செய்யாமல் இருக்கலாம். 



    மூன்று சேவைகளையும் இணைக்கும் போது வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற செயலிகளான மெசஞ்சர் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும். இதுதவிர ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களிடம் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்க முடியும்.

    இதன் மூலம் ஃபேஸ்புக் விளம்பர வருவாய் அதிகரிக்கும். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஃபேஸ்புக் தனது போட்டி நிறுவனங்களான ஆப்பிள் ஐமெசேஜ் மற்றும் கூகுளின் மெசேஜிங் சேவைகளுக்கு போட்டியை பலப்படுத்த முடியும்.
    ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia

     

    ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகின்றன. சமூக வலைதளங்களை பயன்படுத்தி உலகின் பல நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

    நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், செயல்பாடுகளையும், நட்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கி பணம் சம்பாதிக்கின்றனர். இது போன்று எத்தனையோ நன்மைகள் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுகின்றன.

    அதே நேரத்தில் இங்கு தனி மனித ரகசியங்களை எப்போதும் பாதுகாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைதளத்தில் ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மிகப் பெரிய தகவல் திருட்டு நடந்தது. இதை தொடர்ந்து பலர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள கணக்கில் இருந்து விலகினார்கள். இவற்றை பலர் தவறாக பயன்படுத்தியதாக கூறி நீக்கப்பட்டனர். 



    ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ஒருவர் விலகினாலும், நீக்கினாலும் அதில் அவர் பதிவிட்டு இருந்த தகவல்களை அழிக்க முடியாது. இதன் மூலம் தனி மனித ரகசியத்துக்கு ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகமும் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டது.

    ட்விட்டரில் 13,905 பேர் பதிவு செய்த 3 கோடி தகவல் திரட்டுகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதே போன்று ஃபேஸ்புக்கில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு கம்பெனியோ, அரசாங்கமோ அல்லது நடிகரோ, சாதாரண குடிமகனோ யாராக இருந்தாலும் இவற்றில் இருந்து விலகினாலும், நீக்கப்பட்டாலும் அவர்களின் தகவல்களை மீண்டும் பெற முடியும். ரகசியங்கள் பாதுகாக்க முடியாது என தெரியவந்துள்ளது.
    பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய பதிப்பின் இன்டர்ஃபேஸ் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Twitter #socialmedia



    ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

    புதிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளவோ அல்லது முந்தைய வடிவமைப்பிலேயே தொடரலாம். புதிய இன்டர்ஃபேசை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ‘opt-in’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். புதிய வடிவமைப்பில் இரண்டு அல்லது மூன்றடுக்குகளை கொண்டிருக்கிறது. 

    இத்துடன் எமோஜி பட்"ன், க்விக் கீபோர்டு ஷார்ட்கட்கள், மேம்படுத்தப்பட்ட டிரெண்ட்கள், அட்வான்ஸ்டு சர்ச் மற்றும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்டர்ஃபேஸ் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பழைய இன்டர்ஃபேசிற்கு மாற்றிக் கொள்ளலாம். 



    ட்விட்டரில் டார்க் மோட் சீராக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி, விரைவில் மேம்படுத்தப்பட்ட டார்க் மோட் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சில வாடிக்கையாளர்கள் டார்க் மோட் கருப்பு நிறத்திற்கு பதிலாக டார்க் புளு நிறத்தில் தோன்றுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.

    சமீபத்தில் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் அவரவர் விரும்பும் டைம்லைனை தேர்வு செய்து கொள்ளும் வசதியை சேர்த்தது. ட்விட்டர் இந்த வசசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக இந்த வசதி ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், விரைவில் வலைதளத்தில் வழங்கப்பட இருக்கிறது. 
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பீட்டா செயலியில் க்ரூப் கால் செய்வதற்கான ஷார்ட்கட் வழங்கப்பட்டுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது. 

    பயனுள்ள அம்சம் என்றாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி, பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தற்சமயம் சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை க்ளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம். பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.



    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் ஏற்கனவே க்ரூப் வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் லாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலர் தங்களது வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

    சில பயனர்கள் 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
    ×