search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    தவளக்குப்பத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    புதுவை ஏம்பலத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது28), வேன் டிரைவர். இவரது தம்பி யோகேஷ் சென்னையில் தங்கி வேலைபார்க்கிறார். வாரவிடுமுறையில் நல்லாத்தூருக்கு வந்து செல்வார்.

    அதுபோல நேற்று இரவு யோகேஷ் வீட்டுக்கு வருவதாக தனது அண்ணன் ராஜ்மோகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து யோகேசை அழைத்து வர ராஜ்மோகன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.

    நோனாங்குப்பம் பழைய பாலம் என்.ஆர். நகர் அருகே வந்த போது 2 வாலிபர்கள் ராஜ்மோகனிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர். மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டதால் கை காட்டுகிறார்கள் எண்ணி ராஜ்மோகன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் கத்தியை எடுத்து ராஜ்மோகனின் கழுத்தில் வைத்து பணம்- நகைகயை கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கு ராஜ்மோகன் தன்னிடம் பணம் மற்றும் நகை எதுவும் இல்லை. தன்னிடம் செல்போன் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த செல்போனை பறித்து கொண்டு அவர்கள் அங்கிருந்து ராஜ்மோகனை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து ராஜ்மோகன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், திருமுருகன் மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கத்தியை காட்டி ராஜ்மோகனிடம் செல்போனை பறித்தவர்கள் இவர்கள்தான் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பரத் (26) மற்றும் நைனார்மண்டபம் புதுநகர் சோழன்வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் (21) என்பதும் இவர்கள் இதுபோன்று உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் பகுதிகளில் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 5 செல்போன்களும், 2 தங்க செயின்- தங்கமோதிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அரசு பேருந்து ஓட்டுநர் வங்கியில் இருந்து லோன் வாங்கிய ரூ 2 லட்சம் பணத்தை மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்து இருந்தார். அந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள வீரப்பநாய்க் கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (47), இவர் அரசு பேருந்து ஓட்டுநராக அரூர் பணி மனையில் பணிபுரிந்து வருகிறார். 

    காலை 11 மணியளவில் அரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பர்சனல் லோன் ரூ. 2 லட்சம் வாங்கி கொண்டு வங்கியின் முன்புறம் நிறுத்தியிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துவிட்டு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்க்கு சென்றுவந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ. 2 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர்கள் இதனை நோட்டமிட்டு திருடிச் சென்றுள்ளனர்.

    இதனையடுத்து அரூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் வண்டியில் வைத்த பணம் 2 நிமிடத்தில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் மங்கல விநாயகர்கோவில் தெருவில் வசிப்பவர் லாரன்ஸ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 59) மகள் ‌ஷன்மதியுடன் இரவில் வீட்டில் படுத்திருந்தார்.

    அப்போது அவர்களது வீட்டு பின்பக்க கதவை உடைத்து யாரோ உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மாடக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த பிச்சைராஜன் (65) தனது மனைவி பொற்செல்வியுடன் அங்குள்ள கோவிலுக்குச் சென்றார். அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொற்செல்வி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடபழனியில் பெண் பார்க்க அழைப்பது போல நடித்து வாலிபரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி திருக்குறளார் தெருவைச் சேர்ந்தவர் காளிசரண்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் திருமணம் செய்ய பெண் தேவை என தனியார் திருமண தகவல் மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்திருந்தார்.

    நேற்று மாலை காளிசரணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தங்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் பார்த்து விட்டோம் நேரில் வந்தால் பெண்ணை பார்த்துவிட்டு பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் வடபழனியில் உள்ள வீட்டிற்கு உடனடியாக வருமாறு அழைத்தார்.

    இதை நம்பிய காளிசரண் நேற்று இரவு வடபழனி நூறடி சாலை அருகே உள்ள பொன்னம்மாள் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கு கீழே காத்து நின்ற பெண் ஒருவர் காளிசரணை மேலே உறவினர்கள் இருப்பதாக கூறி அழைத்து சென்றார்.

    அங்கிருந்த 2 பெண்கள் நாங்கள் போலீஸ் உன்னை சோதனை செய்ய வேண்டும் உன் மீது ஏராளமான புகார்கள் உள்ளது என்று கூறி அவரிடமிருந்துவிலை உயர்ந்த ஐபோன், செயின் மோதிரம் உள்பட 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து விட்டு காளிசரணை அனுப்பிவிட்டனர்.

    இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தனியார் விடுதி மேலாளர் மற்றும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்ற பெண்களை தேடி வருகின்றனர். #tamilnews
    தென்தாமரைகுளம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பறித்து சென்று விட்டார்.
    நாகர்கோவில்:

    சாமிதோப்பை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). இவர் மார்பிள் கற்கள் பதிக்கும் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி (34). இவர் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு பகல் 12 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒரு வாலிபர் வந்தார். ஜெயலட்சுமி அருகே சென்றதும் அந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் மூலம் அந்த கொள்ளையனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதேபோல் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள் (78).
    சம்பவத்தன்று அந்தோணியம்மாள் வெளியூர் சென்று விட்டு பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    இதை பயன்படுத்தி யாரோ அவரது கழுத்தில் கிடந்த 9 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். அஞ்சுகிராமம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது தான் அவருக்கு அது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு பற்றி அஞ்சுகிராமம் போலீ சில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பாப்பம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ளது பாப்பம்பட்டி. இங்குள்ள ஜானகி நகரில் உள்ளது விநாயகர் கோவில். நேற்று இரவு பூஜைகளை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை சிறப்பு வழிப்பாட்டுக்காக பக்தர்கள் மற்றும் பூசாரி கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலில் இருந்த வேலால் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உண்டியலை பார்த்தபோது அதில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும், இந்த ஆண்டு சுற்றுச்சுவர் கட்ட உண்டியல் திறப்படாமல் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். அதில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் காணிக்கை இருந்திருக்கும் என்று கூறினார்.

    கோவை அருகே என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை அடுத்த கோவில்பாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் பிரவின்குமார். என்ஜினீயர். இவரது மனைவி சரண்யா (வயது 32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரவின் குமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று சரண்யா சேரன் மாநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகளுடன் சென்றார். மறுநாள் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சரண்யாவிடம் கூறினர்.

    உடனே வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த 20 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது 2 இடங்களில் பதிவாகியிருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதன்மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்தே மர்மநபர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டி உள்ளனர். எனவே சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி அருகே 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி:

    பழனி திருநகரைச் சேர்ந்தவர் அப்துல். இவர் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கீழ் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாடிக்கு தூங்கச் சென்று விட்டார். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

    மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.500 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலையில் கீழே இறங்கி வந்த அப்துல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் அப்துல் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

    மற்றொரு சம்பவம்...

    பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி தாசரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். காளியப்பன் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் முன்புறம் வைத்து செல்வார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சாவியை எடுத்து உள்ளே புகுந்து நகையை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    நீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. மேலும் கோவிலுக்குள் 2 அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலிகளை காணவில்லை.



    நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்டிருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு என்ன? என்பது பற்றி தெரியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு கமலநாதன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பழையநீடாமங்கலம் கிராம தலைவர் பரமசிவம் அளித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    பட்டாபிராம் அருகே ஆசிரியை வீட்டில் 51 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த பட்டாபிராம் மார்டன் சிட்டி 4-வது தெவை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மனைவி சாந்தி.ஆசிரியையாக உள்ளார்.

    நேற்று சாந்தி தனது மகள் எஸ்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு இரவு வந்த போது முன்பக்க கிரீல் கேட் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவில் இருந்த 51 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து பட்டாபிராம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பட்டாபிராம் உதவி கமி‌ஷனர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வேப்பம்பட்டு எஸ்.பி. பெருமாள் கோவில் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். வில்லிவாக்கத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் உத்திரமேரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    பெருமாள் கோவிலில் கொள்ளைபோன 4 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. அதனை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று நேரில் ஆய்வு செய்தார். #Statuesmuggling #PonManickavel

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குரு ஸ்தலமான இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்வது வழக்கம்.

    சமீபத்தில் குருப்பெயர்ச்சி விழா இங்கு விமரிசையாக நடந்தது. இந்த கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் கொள்ளை போனது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, 2 மர்ம நபர்கள் கோவிலின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து சிலைகளை திருடிச் சென்றது சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் தெரியவந்தது.

    இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டி பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 சிலைகளும் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

     

    மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 4 சிலைகளையும் மீட்டு விசாரணை நடத்திய போது இவைகள் குருவித்துறை கோவிலில் திருடு போனது என தெரியவந்தது.

    இது குறித்து சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் போலீசாருடன் சென்று சிலைகளை பார்வையிட்டார். பின்னர் 4 சிலைகளும் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அதிகாரிகள் மற்றும் கோவில் ஸ்தபதிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது பெருமாள், சீனிவாச பெருமாள் சிலைகளின் கை சேதமடைந் திருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று காலை சோழவந்தான் போலீஸ் நிலையம் வந்தார். அவர் மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கோவிலில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    சிலை கடத்தல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் கொள்ளையர்கள் 4 ஐம்பொன் சிலைகளையும் ரோட்டில் வீசிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. #Statuesmuggling #PonManickavel

    மதுரை குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன 4 ஐம்பொன் சிலைகள் நிலக்கோட்டை அருகே மீட்கப்பட்டது. #Statuesmuggling

    நிலக்கோட்டை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் அருகே குருபகவான் கோவிலும் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசபெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் திருடுபோனது.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் செந்தில் குமார் காடுபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 4 தனிப்படைகள் அமைத்து சிலைகளை கொள்ளையடித்த நபர்களை தேடி வந்தனர்.

    உசிலம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டு நேற்று இரவு தனது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

     


    இரவு 11.45 மணி அளவில் நிலக்கோட்டை அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலை யோரம் ஏதோ மின்னுவது போல் தென்பட்டது.

    உடனே தனது வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது அங்கே சாமி சிலைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தார். அவரது தலைமையில் போலீசார் அங்கு வந்து சிலைகளை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இது சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கெள்ளை போன சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி. மோகன் குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவரது தலைமையில் விளாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். விசாரணையில் அந்த சிலைகள் குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன சிலைகள் என தெரிய வந்தது.

    இதனையடுத்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு 4 சிலைகளை போலீசார் எடுத்து சென்றனர்.

    சிலைகளை கடத்தி சென்ற கும்பல் அதனை இப்பகுதியில் மறைத்து வைத்து விட்டு பின்னர் எடுத்து செல்லலாம் என்ற நோக்கத்தில் வைத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிலைகளின் உண்மைதன்மை குறித்து ஆய்வு நடத்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. #Statuesmuggling

    ×