search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    மதுரையில் அரசு பஸ்சில் 12 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    சென்னை கிழக்கு முகப்பேர் நக்கீரன் சாலையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது60). இவரது மனைவி கவுசல்யா. சில நாட்களுக்கு முன்பு மதுரை திருநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் வந்திருந்தனர்.

    சம்பவத்தன்று இரவு சென்னை செல்வதற்காக கணவன்-மனைவி திருமங்கலத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் நின்று கொண்டே பயணித்தனர்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் கவுசல்யா வைத்திருந்த கைப்பையை நைசாக திருடிக் கொண்டு தப்பினர். அதில் 12 பவுன் நகை இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பெரியார் பஸ் நிலையத்தில் இறங்கிய கவுசல்யா நகை இருந்த கைப்பை திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (54). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினான்.

    இதுகுறித்து கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாத்தான்குளம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ஆல்வின் விமலா. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் அமெரிக்காவிலும், இன்னொரு மகள் சென்னையிலும் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜெய ராஜும், அவரது மனைவியும் கடந்த 11-ந்தேதி சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று அவர்கள் ஊர் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பீரோவில் ½ பவுன் தங்க கம்மல், ரூ.2 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    திருவெறும்பூர் பகுதியில் மளிகை கடை மற்றும் பேன்சி ஸ்டோரில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் பகவதி புரத்தை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 70). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் முன்பு தனது சகோதரி மும்தாஜிடம் கடையின் பொறுப்பை விட்டுச்சென்றார்.

    இதையடுத்து மும்தாஜ் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள் திருடு போயிருந்தது.

    இதேபோல் திருவெறும்பூர் வேங்கூர் சாலையில் புவனேஸ்வரி என்பவர் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

    இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளையில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கோட்டூர் ரோட்டில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவில் கொடை விழா நடந்து முடிந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டதோடு, காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு கோவிலில் வழிபாடு முடித்து அனைவரும் சென்று விட்டனர். நள்ளிரவு யாரோ மர்ம நபர் அங்கு வந்துள்ளான். கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அவன் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றான்.

    கொடை விழா முடிந்ததால் உண்டியலில் ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும் என தெரிகிறது. அதை மர்ம நபர் அள்ளி சென்றான். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் முன்பக்க கதவும், உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தார்கள். கொள்ளை நடந்த கோவில் அருகே கண்காணிப்பு கேமிராக்கள் ஏதும் உள்ளதா? அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருடிய கடை ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் நகை அடகு கடை நடத்தி வருபவர் ராஜேந்திரகுமார், ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடையில் மூர்த்திங்கர் தெருவை சேர்ந்த ரகு (வயது 23). கடந்த 5 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். கடை உரிமையாளருக்கு நம்பிக்கையாக பணியாற்றி வந்தார்.

    ரகு அடிக்கடி கடை உரிமையாளர் வீட்டுக்கு சென்று வந்தான். 3 மாதத்துக்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்த சென்றபோது அங்கிருந்த பணம் ரூ. 7 லட்சம் நகை 33 பவுன் ஆகியவற்றை திருடிக் கொண்டு வந்துவிட்டான்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நகை-பணம் திருடப்பட்டது அவருக்கு தெரிந்தது. இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணை நடத்தி கடை ஊழியர் ரகுவின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது மறுநாள் வீட்டில் இருந்து நகை, பத்திரத்துடன் ரகு தப்பிச் செல்ல முயன்றான்.

    போலீசார் அவனை பிடித்து சோதனையிட்டனர். அப்போது ரூ. 2 லட்சம் பணம், 33 பவுன் நகை, பத்திரங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    அவனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்த போது 3 மாதத்துக்கு முன்பே கடை உரிமையாளரின் வீட்டில் ரூ. 7 லட்சம் பணம், 33 பவுன் நகை திருடியதாக கூறினான். திருடிய பணத்தில் ரூ. 5 லட்சத்துக்கு விழுப்புரத்தில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கியதாகவும் தெரிவித்தான். அந்த பத்திரம் மற்றும் ரூ. 2 லட்சம் பணம், 33 பவுன் நகை ஆகியவற்றை போலீசார் மீட்டு அவனை கைது செய்தனர்.

    முதலியார்பேட்டையில் 3 வீடுகளில் கொள்ளையடித்தவனிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் காந்தி திருநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25). கார் டிரைவர். இவரது மனைவி லட்சுமி.

    இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனது அண்ணன் ரஞ்சித் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள ரஞ்சித் சம்பவத்தன்று வீட்டில் இருந்த லட்சுமியை தாக்கினார். இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த ரமேஷ் தனது நண்பர் தினேஷ் என்பவருடன் மைத்துனர் வீட்டுக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சித்தை பேனா கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில், படுகாயம் அடைந்த ரஞ்சித் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ரமேஷ் பற்றி திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கொடைக்கானலை சேர்ந்த ரமேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனியை சேர்ந்த தனது நண்பர்கணேசுடன் சேர்ந்து முதலியார் பேட்டை பகுதியில் 3 வீடுகளில் நகைகளை கொள்ளையடித்ததாக திடுக்கிடும் தகவலை ரமேஷ் தெரிவித்தார்.

    இதையடுத்து காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த ரமேஷ் மீது கொள்ளை சம்பவம் குறித்து முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் இந்த கொள்ளை தொடர்பாக ரமேசை காவலில் எடுத்து விசாரிக்க முதலியார் பேட்டை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரமேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ரமேசின் சொந்த ஊர் கொடைக்கானல். அவர் தேனியை சேர்ந்த தனது நண்பர் கணேசுடன் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதலியார் பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்த கணேஷ் (43) என்பவர் வீட்டிலும்,

    2016-ம் ஆண்டு முதலியார் பேட்டை ரமணன் நகரை சேர்ந்த மதுக்கடை உரிமையாளர் கோபி கண்ணன் (45) என்பவர் வீட்டிலும், இந்த ஆண்டு முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் அன்பே சிவம் (52) என்பவர் வீட்டிலும் நகைகளை கொள்ளையடித்ததாக ரமேஷ் தெரிவித்தார்.

    இதையடுத்து ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொடைக்கானலில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    ரமேசுடன் சேர்ந்து கொள்ளையடித்த அவரது கூட்டாளி கணேஷ் ஒரு திருட்டு வழக்கிலும் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    வளசரவாக்கம், சாலிகிராம், விருகம்பாக்கம் பகுதிகளில் கார் கண்ணாடியை நூதனமாக உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம், சாலிகிராம், விருகம்பாக்கம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கார் கண்ணாடிகளை நூதனமாக உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதையடுத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலிகிராமத்தில் கார் கண்ணாடியை உடைத்து கெள்ளைச்சம்பவம் நடந்தது. அந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் சந்தேகத்திற்கிடமான வாலிபரை பிடித்து இன்ஸ்பெக்டர் வேலுமணி விசாரணை நடத்தினார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தேவராஜ் என்பதும், வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரிந்தது.

    அவர் நூதன முறையில் கார் கண்ணாடிகளை உடைத்து பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையில் ஈடுபட்டது குறித்து தேவராஜ் போலீசாரிடம் கூறும்போது, “கல்உப்பை வாயில் மென்று காரின் கண்ணாடியில் துப்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து அந்த கண்ணாடியை நூதன முறையில் உடைத்து பணத்தை திருடிச்செல்வேன்” என்று கூறி உள்ளார்.

    அவர் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும், அவரது கூட்டாளிகள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அலங்காநல்லூர், உசிலம்பட்டியில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அலங்காநல்லூர்:

    உசிலம்பட்டி அருகில் உள்ள நக்கலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி கலாதேவி (வயது 34). இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    எனவே அவர் வீட்டை பூட்டிவிட்டு கா.விலக்கு பகுதியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார்.

    இந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.36 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக கலாதேவி உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு முல்லை நகரைச் சேர்ந்த முத்துச்சாமி மனைவி சவுந்தரம் (63). இவர் மகனுடன் சோழவந்தான் கோவிலுக்குச் சென்றார்.

    அப்போது யாரோ சிலர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சவுந்தரம் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    உத்தமபாளையம் அருகே வீட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    உத்தமபாளையம் தாமஸ் காலனியை சேர்ந்தவர் அந்தோணிபிச்சை. இவர் தனது மனைவி சகாயசீலாவுடன் வெளியூர் சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் அருகில் இருந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. இது குறித்தும் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழக்கரையில் பேராசிரியர் வீட்டுக்குள் புகுந்து நகை- பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை:

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 44). இவர் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி யாற்றி வருகிறார். இவரது மனைவியும் அதே கல்லூரியில் உதவி பேராசி ரியையாக உள்ளார்.இவர்கள் கீழக்கரை கோகுல் நகரில் தங்கி உள்ளனர்.

    வார விடுமுறை நாட்களில் கணவன், மனைவி சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 11-ந் தேதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு கோவில்பட்டிக்கு சென்று விட்டனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 தங்க நாணயங்கள், 1 பவுன் செயின், 2 ஜோடி வெள்ளி கொலுசுகள், 5 வெள்ளி குத்து விளக்குகள், செல்போன், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    விடுமுறை முடிந்து கீழக்கரை திரும்பிய விஜயராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை-பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவெறும்பூரில் பெல் ஊழியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எழில்நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் முருகன்( வயது 43). பெல் ஊழியர். கடந்த 16-ந்தேதி அதிகாலை இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் மற்றும் கொழுசுகளை எடுத்தனர்.  

    அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த முருகனின் மனைவி வாணியின் முகத்தில் துணியை வைத்து அழுத்தி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிசெயினை பறித்தனர். பின்னர் 18 பவுன் நகை, மற்றும் வெள்ளி கொழுசுகளுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த பெல் ஊழியரான டென்சிலின் வீட்டு பூட்டையும் உடைத்து பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர் இச்சம்பவம் குறித்து முருகன் மற்றும் டென்சிலின் ஆகியோர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் . அதன் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அவர்களிடம் திருவெறும்பூர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது வடக்கு துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோவிலை சேர்ந்த சோலை மகன் பிரபு(26), அவரது நண்பர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த பசிம் பாலன் மகன் ராஜா(32) என்பதும், இருவரும் முருகன் மற்றும் டென்சிலின் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. 

    இதையடுத்து 2 பேரையும் போலீசார்  கைது செய்து திருச்சி 6 வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #JewelryTheft
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 78). விவசாயி. இவரது மனைவி அனுசுயா (57). இவர்களுக்கு சரவணன், கோபால் ஆகிய 2 மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சரவணன் சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். கோபாலும், பிரியாவும் தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியாவை பார்ப்பதற்காக பக்தவச்சலமும், அவரது மனைவி அனுசுயாவும் வீட்டை பூட்டி விட்டு கடந்த 7-ந்தேதி சென்னைக்கு சென்றனர்.



    இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தவச்சலம் வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சென்னையில் உள்ள பக்தவச்சலத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பக்தவச்சலம், கோபால் ஆகிய 2 பேரும் கவரப்பாளையத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த மர பீரோவின் கதவு உடைக்கப்பட்ட நிலையில், துணிகள் சிதறிக் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவின் உள்ளே பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பக்தவச்சலம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டிலிருந்து சிறிது தூரம் போய் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    கவரப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளில் இதுபோன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடப்பது வாடிக்கையாகி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மர பீரோவின் பக்கத்தில் இருந்த இரும்பு பீரோவை மர்ம நபர்கள் உடைக்காததால் அதில் இருந்த தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது. 
    ×