search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி சாந்திமதி (வயது 45). இவர்களுக்கு பொன்னி, தாமரை ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ரங்கநாதனின் தாயார் பார்வதி (70) என்பவரும் வசித்து வருகிறார்.

    பொன்னியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ஆஸ்பத்திரி செலவுக்காக பொன்னி தனது நகைகளை புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள வங்கியில் அடகு வைத்து விட்டு ரூ.6 லட்சம் பெற்றார். பின்னர் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தாயார் சாந்திமதியுடன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள். ஸ்கூட்டியின் பின்னால் சாந்திமதி இருந்தார். அப்போது யாரோ அவர் மீது அரிப்பு பொடியை தூவியதாக தெரிகிறது.

    இதனால் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும் பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு சாந்திமதி ஒரு அறைக்கு சென்று விட்டார். கட்டிலில் ரங்கநாதனின் தாயார் பார்வதி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்து தண்ணீர் கேட்பது போல் நடித்து கட்டிலில் இருந்த பணப்பையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

    பின்னார் அவர் அங்கு நின்ற மற்றவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் சாந்திமதி புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் சூப்பிண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் பொன்னி வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வருவதை பார்த்து நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையொட்டி அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் ஒரு வங்கியின் அருகே 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது கட்டிட காண்டிராக்டர் ரங்கநாதன் வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த அருண்பாண்டி (22), மூர்த்தி (48) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீட்டில் சோதனை செய்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் பெரும்பாலும் அரிப்பு பொடியை தூவி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

    மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    வடபழனியில் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வடபழனி குமரன் காலனி 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 51). ஆதம்பாக்கத்தில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.

    மகேஸ்வரி நேற்று மாலை தனது பயிற்சி வகுப்பில் வசூலான பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து பெற்ற பணம் என மொத்தமாக சேர்த்து ரூ.2 லட்சத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் கைப்பையை வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்த மகேஸ்வரி கைப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். வெளியே ஓடி வந்து பார்த்தபோது கைப்பை மட்டும் கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ.2லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வடபழனி போலீசில் மகேஸ்வரி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலுசாமி வழக்குப் பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    திருத்தணி அருகே கொள்ளை முயற்சியில் தாய்- மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூரை சேர்ந்தவர் வனப்பெருமாள். இவர் தனியார் டயர் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வீர லட்சுமி (வயது 40). மாற்றுத்திறனாளி. இவர்களது மகன் போச்சிராஜ் (10) அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு வனப்பெருமாள் பணிக்காக வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீரலட்சுமி, மகன் போச்சிராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்குள்ள அறையில் மனைவி வீரலட்சுமியும், மகன் போச்சிராஜிம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வீரலட்சுமியின் தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது. இதேபோல் அவரது மகன் போச்சிராஜ் ‘அயர்ன் பாக்ஸ்’ வயரால் கழுத்து இறுக்கப்பட்டு கிடந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 21 பவுன் நகை கொள்ளை போய் இருந்தன.

    இது குறித்து திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

    கொலையுண்ட தாய்- மகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியை தடுத்ததால் இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கொலை நடந்த வீடு திருத்தணி-அரக்கோணம் சாலை ஓரத்தில் உள்ளது. வீட்டில் வனப்பெருமாள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.

    கொள்ளையை தடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீர லட்சுமியும், அவரது மகன் போச்சிராஜையும் கொள்ளையர்கள் கொடூரமாக வெட்டியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்து இருக்கிறார்கள். வீடு முழுவதும் ரத்தக்கறை சிதறிக் கிடந்தது.

    இந்த வீட்டின் அருகே நெருக்கமாக மற்ற வீடுகளும் உள்ளன. ஆனால் கொலை நடந்த நேரம் நள்ளிரவு என்பதால் அவர்களது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்க வில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

    கொலை-கொள்ளை நடந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மெயின் ரோடு பகுதியில் நள்ளிரவில் வந்த வாகனங்கள் பற்றி விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் வனப்பெருமாளிடம் விசாரணை நடக்கிறது.

    திருச்சி அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    திருச்சி பெரியகடை வீதி ஜாபர்ஷா தெருவில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை ரெங்கநாதன் (56) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும் நிறுவனத்தை பூட்டி சென்றார்.

    இன்று காலை நிதி நிறுவனத்தை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது‌. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெங்கநாதன் நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மாயமாகியிருந்தது.

    இது குறித்து உடனடியாக அவர் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருட்டு சம்பவம் நடைபெற்ற நிதி நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து தாய்-மகளிடம் சங்கிலியை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15¼ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கண்டியூரை சேர்ந்தவர் வைத்தியநாதன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் 4 மர்மநபர்கள், இவருடைய வீட்டின் பின்புறமாக தாழ்பாள் மற்றும் கதவுகளை நூதன முறையில் திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது தூங்கி கொண்டிருந்த வைத்தியநாதனின் மனைவி அனுசுயா, மகள் கர்ப்பிணியான சிந்துஜா ஆகியோரின் கழுத்தில் கிடந்த 15¼ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து வைத்தியநாதன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தன்று அப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நாச்சியார்கோவில் கடைத்தெருவில் உள்ள கேமராவில் 4 பேர் மோட்டார் சைக்கிள்களில் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மன்னார்குடி தாலுகா பெருகவாழ்ந்தான் சித்தமல்லி மல்லிகை தெருவை சேர்ந்த துரைசாமி மகன் கார்த்திக் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ஆனந்தராஜ் (வயது 19), தஞ்சை மாவட்டம் பந்தல்லூர் செருகுடி மேலத்தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் ரஞ்சித் (18), அதே பகுதியை சேர்ந்த ராயமுத்து மகன் விஜயகுமார் (32) என்பதும், வைத்தியநாதனின் வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகளிடம் சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. 

    இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ஆனந்தராஜ், ரஞ்சித், விஜயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, வலங்கைமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15¼ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
    கும்மிடிப்பூண்டியில் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி மா.பொ.சி.நகரில் வசித்து வருபவர் மார்டீன் (வயது 52). கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் எலக்ட்ரிக்கல் மற்றும் மோட்டார் ரீவைண்டீங் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி அங்கு வைக்கப்பட்டிருந்த காப்பர் வயர் பண்டல்களை திருடிச் சென்றான். திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். சி.சிடி.வி. கேமிராவில், மர்ம ஆசாமி நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே வருவதும், பொருட்களை திருடுவதும் பதிவாகி உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் லட்சுமி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அனந்தபத்மநாபன் (வயது58). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் 16-ந் தேதி மாலை சென்னை திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    தியாகராய நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணண் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தேடி வந்த நிலையில் மதுரவாயல் அருகே நேற்று இரவு இலங்கையைச் சேர்ந்த சிவராஜன் (43), அவனது கூட்டாளி தருண் (31) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 87 பவுன் தங்க நகைகள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவராஜன் கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து மதுரை ஆனையூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி அங்கு பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் சக்கரபாணி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி மீன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் மதுரவாயல், வளசரவாக்கம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    சிவராஜன் மீது ஏற்கனவே மதுரை கூடல்நகர் பகுதியில் 6 கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடலோர காவல்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளையடித்து தப்பி ஓடிய 3 கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57). இவர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் உள்ள குபேரன்நகர் டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு 11 மணி அளவில் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடையில் விற்பனையை முடித்து கடையை பூட்டியுள்ளார். விற்பனையான பணம் ரூ.84 ஆயிரத்து 950 ஐ ஒரு பேக்கில் வைத்து தனது மொபட் பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவருக்கு பின்னால், அதே டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் அய்யப்பன் (39) என்பவர் தனியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    டாஸ்மாக் கடையை விட்டு சிறிது தூரத்தில் ஆறுமுகம் வந்த போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். திடீரென அந்த மோட்டார்சைக்கிள் ஆறுமுகத்தின் மொபட் மீது, ஓவர்டேக் செய்து மோதியபடி வழி மறித்தது. இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அரிவாள் மற்றும் கத்தியுடன் மொபட் பெட்டியை அரிவாளால் வெட்டி திறந்து பணப் ‘பை’ யுடன் ரூ,84 ஆயிரத்து 950 ஐயும் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

    அப்போது ஆறுமுகத்துக்கு பின்னால் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த பார் ஊழியர் அய்யப்பன் சத்தம் போட்டபடி கொள்ளையர்களை மறித்தார். அப்போது ஒரு கொள்ளையர்கள் அரிவாளால் அய்யப்பன் தொடையில் வெட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த ஆறுமுகமும், அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அய்யப்பனும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews
    நிலக்கோட்டையில் ஏ.டி.எம். மையம் முன்பு கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த இடத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். கார்டை பெற்று பணம் எடுத்து தருவதாக கொள்ளையடித்து செல்வது கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    அழகாபுரியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தை தாலுகா அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். முன்னாள் ராணுவ வீரர் உள்பட பலரிடம் இதுபோன்ற கொள்ளை நடந்து உள்ளது. இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டபோதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.

    கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடையில் உள்ள விற்பனை மேலாளர் சதீஷ்குமார் கடையில் விற்பனையான ரூ.3 லட்சம் பணத்தை வங்கியில் கட்டுவதற்காக காரில் வந்தார். அந்த பணத்தை கட்டிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து சதீஷ்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் முன்பு இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மதுரையில் வியாபாரியை தாக்கி பணம்-செல்போன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் 2-வது பால்பூத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது46). இவர் மொத்தமாக செருப்புகளை கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டு மீதி இருந்த ரூ.61 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

    அவர்கள் பேசுவதற்கு செல்போன் தருமாறு கேட்டு உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மர்ம நபர்கள் குமாரை அடித்து கீழே தள்ளி விட்டு பையில் இருந்த ரூ.61 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கோவையில் ஜோதிடரை தாக்கி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி உள்பட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தெக்குபாளையத்தை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி காயத்ரி. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் புளியூரை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பாலமுருகன் (33) என்பவரை பார்க்க சென்றனர்.

    பாலமுருகன் நீர்ஜோதிடம் பார்த்து வருகிறார். ஜோதிடர் தம்பதியின் நிலையை ஆராய்ந்த பின்னர் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். குறிப்பாக பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் அவதி மற்றும் அவமானப்பட்டு வருகிறீர்கள் என்று கூறினார்.

    ஆமாம் என்று ஒப்புக்கொண்ட தம்பதி இது எப்போது சரியாகும். பரிகாரம் உள்ளதா? என்று கேட்டனர். ரூ.3 ஆயிரம் கொடுத்தால் பரிகாரம் செய்து தருகிறேன். அதற்கு பின்னர் உங்கள் பணப்பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கூறினார். தற்போது அவ்வளவு பணம் இல்லை என்று கூறி விட்டு கோவை திரும்பினர்.

    சிறிது நாட்கள் கழிந்து ஜோதிடரை போனில் தொடர்பு கொண்ட தம்பதி பரிகாரம் செய்ய பணம் தயாராக உள்ளது வீட்டிற்கு வந்து பரிகாரம் செய்து தரவேண்டும் என்று கூறினர்.

    இதனையடுத்து கடந்த 14-ந்தேதி ஜோதிடர் பாலமுருகன் கோவை வந்தார். காந்திபுரத்தில் காத்திருந்த அவரை தம்பதி வந்த காரில் ஏற்றிக்கொண்டனர். பரிகாரம் செய்வது அக்கம் பக்கத்தினருக்கு தெரியக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதற்கும் ஜோதிடர் சம்மதித்தார்.

    காரில் இருந்து இறங்கிய பின்னர் வீட்டுக்குள் சென்றனர். வீட்டில் தம்பதி உறவினர்கள் போத்திராஜ், சதீஷ் உள்பட 4 பேர் இருந்தனர். கதவை சாத்திய பின்னர் குபேரன் ஜோதிடரை தாக்கினார். நாங்கள் பணகஷ்டத்தில் இருப்பது உனக்கு தெரியும். பரிகாரம் எல்லாம் வேண்டாம். நீயே ரூ.40 லட்சம் கொடு என்று மிரட்டினர்.

    பரிகாரம் செய்ய வந்த ஜோதிடர் அதிர்ச்சியடைந்தார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் ஜோதிடரை சரமாரியாக தாக்கியது. வலி தாங்கமுடியாத ஜோதிடர் ரூ.40 லட்சம் முடியாது. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்.

    ரூ.5 லட்சத்துக்கு ஒப்புக்கொண்ட கும்பல் உனது தந்தையை மதுரை மாட்டுத்தவணியில் காத்திருக்கும் எங்கள் நண்பர் பாண்டி என்பவரிடம் கொடுக்க சொல் என்று மிரட்டினர். அதன்படி ஜோதிடர் தனது தந்தையிடம் அவசர தேவை என்று கூறி ரூ.5 லட்சத்தை மதுரை மாட்டுத்தாவணியில் காத்திருக்கும் பாண்டி என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார்.

    ஜோதிடர் தந்தையும் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு மாட்டுத்தாவணியில் காத்திருந்த பாண்டி என்பவரிடம் கொடுத்தார். பணம் பெற்றுக்கொண்ட பாண்டி கோவை கும்பலுக்கு பணம் பெற்றுக்கொண்டாக தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து காரில் ஜோதிடரை ஏற்றி மெயின் ரோட்டில் இறக்கி விட்டனர். மேலும் இது பற்றி வெளியே கூறினால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜோதிடர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்த பின்னர் நரசிம்மநாயக்கன்பாளையம் போலீசில் இது குறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து தம்பதி உள்பட 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ஆவடியில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, மாடர்ன்சிட்டி 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ். ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவியும், மகளும் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மாலை லோகேஷ் இரவு பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதேபோல் அருகில் பூட்டி இருந்த கோபி என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் 3 கிலோ வெள்ளிப் பொருட்களை சுருட்டி சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். கோபி மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.

    மேலும் அதே பகுதி 5-வது தெரு, 6-வது தெருவில் உள்ள மொத்தம் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. அந்த வீடுகளில் ஆட்கள் இருந்ததால் மர்ம கும்பலின் கொள்ளை திட்டம் நிறைவேறவில்லை.

    இதுகுறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளை நடந்த லோகேஷ் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பழுதாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகவில்லை.


    ×