search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையப்பர்"

    கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறையில் இருந்து தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார்.
    கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறையில் இருந்து தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார்.

    பின்னர் மேளதாளத்துடன், திருவனந்தல் வழிபாட்டுக் குழுவினரின் திருமுறையுடன் அழைத்துச் சென்று சுவாமி நெல்லையப்பர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கஜபூஜை, கோபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆனித் திருவிழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆனித்திருவிழா வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை மாதம் 14-ந்தேதி நடக்கிறது. ஆனித் திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் பந்தல்கால் நடும் விழா நேற்று நடந்தது.

    இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் நெல்லையப்பர் கோவில் சன்னதியில் கொடிமரம் அருகே பந்தல்கால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் அதற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவில் வெளியே பந்தல்கால் நடப்பட்டது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ரோஷிணி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் எழுந்தருளும் வகையில் 5 தேர்கள் உள்ளன. இந்த தேர்கள் நெல்லையப்பர் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டு உள்ளன.

    நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேர்கள், கண்ணாடி பேழையால் மூடி வைக்கப்பட்டு உள்ளது.

    ஆனித் திருவிழாவை முன்னிட்டு, கண்ணாடி பேழைகளை அகற்றி, தேர்களை சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும்.
    தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாள், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் ரதவீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் திருநாளான கடந்த 14-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு 8 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் உள்ள உடையவர் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இை-யொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    கோவில் அர்ச்சகர், நிர்வாக அலுவலரும், செயல் அலுவலருமான ரோஷினிக்கு செங்கோலும், தக்கார் சங்கருக்கு பாதமும் வழங்கினார். தொடர்ந்து அவர்கள் நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தக்கார் சங்கர் சுவாமி பாதத்தை தலையில் சுமந்த படி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலர் ரோஷினியும், சுவாமி பாதத்தை தக்கார் சங்கரும் அம்பாள் எழுந்தருளிய ஆயிரம்கால் மண்டபத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் தல வரலாறு திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று கோவில் உருவான தல வரலாறு திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதாவது ராமகோன் என்பவர் பாண்டிய மன்னருக்கு தினமும் பால் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் காடு வழியாக ராமகோன் பால் கொண்டு செல்லும்போது ஓரிடத்தில் மூங்கிலால் தட்டிவிடப்பட்டு, அந்த மூங்கில் மீது பால் கொட்டியது. இது தொடர்ந்து நடைபெற்றதை அறிந்த மன்னர், மூங்கில் மரத்தை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். அவ்வாறு செய்தபோது சுவாமி காட்சி கொடுத்தார். அவர் வேணுவன நாதர், வேணுவன ஈசுவரன் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் நெல்லுக்கு வேலியிட்ட மற்றொரு திருவிளையாடலால் நெல்லையப்பர் என்ற பெயர் பெற்றார் என்று புராண வரலாறு கூறுகிறது.

    இத்தகைய சிறப்புவாய்ந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஹோம பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சன்னதியில் உள்ள தல விருட்சம் மூங்கிலுக்கு சிறப்பு பூஜையும், அங்கு அமைக்கப்பட்டு உள்ள ராமகோன் சிலைக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை வழிபட்டனர். 
    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    அந்த கொடி மரத்துக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் 7 மணி அளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் திருநாளான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணி அளவில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது.

    20-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாறுக்கிணங்க பாடல் பெற்ற சைவ சமய திருத்தலமான நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான அப்பர் பெருமான் தெப்ப திருவிழா வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
    முன்னொரு காலத்தில் சைவ மதத்துக்கும், சமண மதத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சமண மதத்தினர், சைவசமய குறவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் பொருட்டு, அவரை கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான், “கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

    அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது.

    அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாறுக்கிணங்க பாடல் பெற்ற சைவ சமய திருத்தலமான இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான அப்பர் பெருமான் தெப்ப திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    அன்று இரவு 7 மணி அளவில் அம்மன் சன்னதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் பத்ர தீபவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பத்ர தீபவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் வேணுவனநாதருக்கு (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது.

    ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நெல்லையப்பர் கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று மாலை பத்ர தீபம் ஏற்பட்டது. இதையொட்டி ஆறுமுக நயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் தங்க விளக்கு தீப ஒளியில் இருந்து சுவாமி சன்னதி உள் பிரகாரம், வெளி பிரகாரம், அம்மன் சன்னதி உள்ளிட்டவைகளில் தீபம் ஏற்றப்பட்டது. கோவிலில் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டன.

    நந்தி சன்னதி முன்பு பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்தனர்.

    பத்ர தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் அரங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை இந்து ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து செய்து இருந்தனர். 
    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 4-வது திருநாளான 15-ந் தேதியன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 21-ந்தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    11-வது நாளான நேற்று முன்தினம் மதியம் நெல்லையப்பர் கோவில் சவுந்திரசபையில் நடராஜர் திருநடன காட்சி நடைபெற்றது.

    விழாவின் இறுதியாக தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அப்போது சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால் தெப்பம் சுற்றி வராமல், பக்தர்களுக்கு சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் முக்கியமானது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தியுடன் வீதி உலா நடக்கிறது.

    வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தைப்பூச தீர்த்தவாரி விழா நெல்லை கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவி ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு செல்கிறார்கள். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது.

    பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமிகள் புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்து அடைகிறார்கள்.

    தொடர்ந்து 22-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜ திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 23-ந் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது.
    நெல்லையப்பர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றத. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    உலக நன்மைக்காகவும், சமுதாயத்தில் நல்லிணக்கம் ஓங்கி மக்கள் சகோதர உணர்வுடன் வாழவும், நெல்லையப்பர் கோவிலில் நேற்று மகா மிருத்யூஞ்சய மந்திர சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சன்னதி முன்பு கணபதி ஹோமத்துடன் மகா மிருத்யூஞ்சய மந்திரவேள்வி பூஜை நடந்தது. அப்போது கும்ப பூஜையும், யாகசாலை பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து காலை 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த கும்பங்களில் இருந்த புனிதநீரால் நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த சிறப்பு வேள்வி பூஜையில் சாரதா கல்லூரி நிர்வாகி பக்தானந்தா மகாராஜ் சுவாமிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் பக்தர் பேரவையினர் செய்து இருந்தனர். 
    நெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி, மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.

    இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை, நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் பெரியசபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வருதல் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 22-ந்தேதி இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 23-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு தாமிரசபை முன்பு உள்ள கூத்தபிரான் சன்னதி முன்பு பசு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    ×