search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97155"

    மூதாட்டியை மீண்டும் பராமரிக்காமல் விரட்டி அடித்தால் அவரிடம் புகார் மனு பெற்று மகன்களிடம் இருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத்பீவி(வயது 90). கணவரை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அஷ்ரப் அலியுடன் வசித்து வந்தார். மகன் வெளிநாடு சென்றதும் தாவூத்பீவியை அவரது மருமகள் கடந்த மாதம் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அதே ஊரில் வசித்து வரும் தனது மூத்த மகன் ஷேக் அலாவுதீனிடம், தாவூத்பீவி சென்றார். அங்கும் அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தன்னை பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் என்றும் பாராது அவரும் தாவூத்பீவியை விரட்டி விட்டுள்ளார். இதனால் வேறுவழியின்றி தாவூத்பீவி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரும் தனது தாயை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதை அறிந்த வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் தாவூத்பீவியை தங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்ளுமாறு கூறியும் மகன்கள் இருவரும் கேட்கவில்லை.

    இதனால் ஆதரவு இல்லாமல் நிர்கதியான தாவூத்பீவி அக்கம், பக்கத்தினர் அளித்த உணவை உண்டு தனது வாழ்நாளை கழித்து வந்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறையில் கடந்த மாதம் 4-ந் தேதி மாவட்ட கலெக்டரின் மனு நீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்துகொண்ட தாவூத்பீவி தனது நிலையை எடுத்துச்சொல்லி தன்னை தனது பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

    எனது வீட்டை பிடுங்கிக்கொண்டு அதில் அவர்கள் வசித்து வருகின்றனர். ஒருவேளை உணவுகூட கொடுக்க விருப்பம் இல்லாமல் என்னை துரத்தி விட்டுள்ளனர். எனக்கு உரிய சொத்தை அளித்தாலே இறுதி வரை நான் நிம்மதியாக வாழ்வேன். இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறினார்.

    இதனையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் தாவூத்பீவியை அவரது இளைய மகன் அஷரப் அலி வீட்டில் ஒப்படைத்து அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டுச்சென்றனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்து கொண்டு இருந்த நேரத்தில் தாவூத்பீவியை வீட்டை விட்டு வெளியேற்றி வாசற் கதவை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் இருக்க இடம் இல்லாமல் தெருவில் மழையில் நனைந்தபடியே தாவூத்பீவி அக்கம் பக்கத்தினர் கொடுத்த உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இதுகுறித்த தகவல் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கவனத்திற்கு சென்றது.

    இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் மனோகர் மற்றும் குத்தாலம் போலீசார், வாணாதிராஜபுரம் ஊர் ஜமாத்தார்கள் மூதாட்டி தாவூத்பிவீயை அவரது மூத்த மகன் ஷேக் அலாவுதீன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை விட்டுச்சென்ற போலீசார், அவருக்கு அறிவுரைகள் கூறி பெற்ற தாயை இறுதி வரை நல்லமுறையில் பராமரிக்குமாறு கூறினர். இதனால் பல நாட்களாக இருக்க இடமின்றி, சாப்பிட வழியின்றி தவித்து வந்த மூதாட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மீண்டும் மூதாட்டியை பராமரிக்காமல் விரட்டி அடித்தால் மூதாட்டியிடம் புகார் மனு பெற்று மகன்களிடம் இருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஆம்பூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள மேல்கிருஷ்ணாபுரம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் மணி இவரது மனைவி பத்மாவதி (வயது 62). இவர் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த பத்மாவதி கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். #UStownpopulationofone
    வாஷிங்டன்:

    உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரம் உள்ளது. இப்பகுதியில் எல்சி எய்லர்(84) எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இது குறித்து எல்சி எய்லர் கூறியதாவது:-

    இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனது பெற்றோர் இந்த நகரத்தை தாண்டி உள்ள விவசாய நிலப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள சென்றனர். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இருவரும் நான் இங்கு இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர். மேலும் 1971 முதல் காபி, டீ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த கடையை திறந்த போது , இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகை கடையும் மூடப்பட்டது. இந்தப்பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர்.

    மேலும் இப்பகுதி இயற்கையுடன் கூடிய அமைதியுடன் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இது தற்போது ஹப் போலாகி விட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக எந்தவித போட்டியுமின்றி இந்த பகுதியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு 84 வயதாகிறது. இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என கூறினார்.  

    இவ்வாறு அவர் கூறினார். #UStownpopulationofone  

    சேலத்தில் இன்று உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் காந்திஸ்டேடியம் அருகே வசித்து வருபவர் மாரிமுத்து (85). இவரது மனைவி பாப்பாத்தி (75). இவர்களது வீட்டிற்கு இன்று காலை மர்மநபர் ஒருவர் சென்றார்.

    பின்னர் அங்கிருந்த பாப்பாத்தியிடம் நடக்க முடியாமல் உள்ள உனது கணவர் மாரிமுத்துக்கு அரசு உதவி தொகை பெற்று தருகிறேன், 3 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூறினார்.

    இதனை நம்பிய பாப்பாத்தி தற்போது 800 ரூபாய் தான் என்னிடம் உள்ளது என்றார். உடனே அந்த மர்ம நபர் 800 ரூபாயையும், சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து கொடுங்கள், செக் வாங்கியதும் மீதி பணத்தை கொடுங்கள்,

    தற்போது என்னுடன் வாருங்கள் என்று ஆட்டோவில் அழைத்து சென்றார். பின்னர் நாட்டாண்மை கட்டிடம் முன்பு மூதாட்டியை இறக்கி விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறிய படி அந்த பகுதியில் நின்றது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரத்தில் பஸ்சில் வைத்து மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #TambaramMurder #MotherMurder
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். முத்தம்மாளுக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

    முத்தம்மாளை சரியாக கவனிக்காததால் தேவராஜுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு முத்தம்மாளும், அவரது மகள் விஜயலட்சுமியும் நேற்று இரவு 7 மணி அளவில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தனர்.

    பின்னர் குன்றத்தூர் அருகே உள்ள கோவூருக்கு செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் ஏறிய தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தம்மாளையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் சொத்துக்காக தனது தாயை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    போரூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பக்கத்து வீட்டு பெண் மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    போரூரை அடுத்த காரம்பாக்கம் சமயபுரம், 5-வது தெருவை சேர்ந்தவர் பொம்மியம்மாள் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பொம்மியம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

    விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி என்பது தெரிந்தது. வீட்டு வேலைகள் செய்து வரும் அவர் குடும்ப வறுமையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    பட்டுக்கோட்டை அருகே ‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். #OldWoman #Youngsters
    பட்டுக்கோட்டை:

    பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த ‘நண்பன்“ என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் உயிருக்கு போராடும் ஜீவாவின் தந்தையை விஜய் ஸ்கூட்டரில் உட்கார வைத்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல ஒரு காட்சி இருக்கும்.

    இந்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோவில் குளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மீட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்த விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசிவிசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு (வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார்.

    படிக்கட்டுகள் வழியாக குளத்திற்குள் இறங்கி அங்குள்ள படிக்கட்டில் நின்று கொண்டு அந்த மூதாட்டி கை, கால்களை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார்.

    நீண்ட நேரம் குப்புற கிடந்த அந்த மூதாட்டியை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் குளத்திற்குள் இறங்கி அவரை மீட்டு வந்து குளத்தின் கரையில் போட்டனர். அவர் இறந்து விட்டார் என்று திகைத்து நின்றபோது மூதாட்டியின் உடலில் லேசான அசைவு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(வயது 23), ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்தனர். ஆனால் யாரும் அந்த மூதாட்டியை ஏற்றிச்செல்ல வரவில்லை.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் ஒரு கணம் திகைத்தனர். ஆனால் மறுகணமே சுதாரித்துக்கொண்ட அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மற்றொருவர் அந்த மூதாட்டியை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.

    உடனே மோட்டார் சைக்கிளை இயக்கி அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் அந்த மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சரியான நேரத்தில் சேர்த்ததால் அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார்.

    உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றதால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்கு காரணமாக இருந்த அந்த இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.  #OldWoman #Youngsters
    திருச்செந்தூரில் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சுகுமார். இவர் திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சுகுமாரின் மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

    மகன் வானுமாமலை பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வானுமாமலையின் இரண்டாவது மகளான 1½ வயது குழந்தை சுகஸ்னா அழுது கொண்டிருந்தாள். இதையடுத்து பாட்டி பிரேமா தனது பேத்தியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்.

    அவ்வழியாக சென்ற திருச்செந்தூர் பயணிகள் ரெயிலை பேத்திக்கு காண்பித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிரேமாவை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 15பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்குள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடிவிட்டான்.

    பிரேமாவிடம் இருந்த பறித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். தன்னிடம் மர்ம நபர் நகை பறித்தது குறித்து பிரேமா திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்டிதம் பேட்டை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மனைவி சரோஜா (வயது 65). இவர்களது 2 மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

    முருகையன் இறந்து விட்டதால் சரோஜா மட்டும் கீழத்தெருவில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. சரோஜா வால் விவசாயத்தை பார்க்க முடியாது என்பதால் வேலைக்கு தொழிலாளிகளை வைத்து விவசாய பணிகளை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சரோஜா வயலில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்த 2 பேர் நேற்று மாலை அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தன்னிடம் வேலை பார்த்த வர்கள் என்று சரோஜாவும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று காபி போட்டு கொடுத்துள்ளார்.

    அவர்கள் 2 பேரும் சரோஜாவிடம் பேசி கொண்டிருந்த நேரத்தில் திடீரென கட்டையால் சரோஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிவகிரி அருகே வாய்க்காலில் அடித்து வரப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையத்தில் கீழ் பவானி வாய்க்காலில் உள்ளது. தற்போது கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டு உள்ளது.

    இதனால் வாய்க்காலில் அதிக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கந்தசாமிபாளையம் ஓலக்கரை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் அடித்துவரப்பட்ட ஓரமாக ஒதுங்கி கிடந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவிகிரி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அங்கு இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாய்க்காலில் அடித்து வரப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாய்க்காலில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்துக்குடி புதுக்காலனியை சேர்ந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை(வயது 62) என்பவர், தனது மகன் குமாரவேலுவுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் மனு நகல்களின் மூட்டையையும், புதிதாக கொடுக்க இருந்த மனுவையும் கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, ஐவதுகுடி கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டனர். இதை மீட்டு தரக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் என இதுவரை நான் கொடுத்த மனுக்களின் மொத்த எடை 13 கிலோ ஆகும்.

    இதோ அந்த மனுக்களின் நகல்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தீக்குளிக்கத்தான் செய்யணும். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் குண்டாக இருந்தேன். மனுகொடுக்க அலைந்து மெலிந்து விட்டேன் என்றார்.

    உடனே கலெக்டர் தண்டபாணி, தீக்குளித்து விடாதீர்கள், மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அந்த மூதாட்டி மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    அவர்களில் ஒரு மகன் பால்பிரான்சிஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார். இவர் பாளை கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். ஞானப்பிரகாசமும், அந்தோணியம்மாளும் டி.வி.எஸ்.நகரில் வசித்து வந்தனர். நேற்று இரவு ஞானப்பிரகாசம் பணிக்கு சென்றுவிட்டார். அந்தோணியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மகன் பால் பிரான்சிஸ் தனது தாய்க்கு போன் செய்தார். வெகுநேரம் போன் அடித்தும் போனை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த பால் பிரான்சிஸ் வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு அந்தோணியம்மாள் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தில்லைநாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணியம்மாளை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தின்போது அந்தோணியம்மாள் கழுத்தில் கிடந்த நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் நகைக்காக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர். நிலத்தகராறு அல்லது வேறு பிரச்சினைகளில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலை பற்றி விசாரணை நடத்தவும், கொலையாளிகளை பிடிக்கவும் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×