search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்"

    கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் 27 வயது இளைஞருக்கு ஊர் முதலாளி பட்டம் சூட்டி கிராம மக்கள் மரியாதை செய்தனர்.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் முதன் முதலாக குடியேறிய மண்ணாடியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பூர்வகுடிகளாகவும் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் மண்ணாடியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பட்டம் சூட்டி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் பூம்பாறை கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வேலமண்ணாடி, ஊர் முதலாளி பட்டத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இறந்ததன் காரணமாக இவரது மகனான செல்வேந்திரன் (வயது 27) என்ற இளைஞருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றாக சேர்ந்து வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் சூட்டினர். இவர் 7வது தலைமுறையாக பட்டம் பெறும் நபராவார்.

    மேலும் இவ்விழாவில் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க இவருக்கு பட்டு சட்டை மற்றும் பட்டு வேஷ்டி அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊரின் மைய பகுதியில் உள்ள மந்தையில் வைத்து மகுடம் சூட்டினர். இவர் இறக்கும் வரை இந்த கிராமத்தில் நடைபெறும் அனைத்து சமுதாய சுபகாரியங்களுக்கும், ஊர் பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் முன் நின்று நடத்துவார் என்றும், கிராமத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் இவரது ஆலோசனை பெற்ற பிறகே நடைபெறும் என இந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் இவ்விழாவில் கொடைக்கானலை சுற்றியுள்ள கிளாவரை, வில்பட்டி, தாண்டிக்குடி, குண்டுபட்டி, வடகவுஞ்சி, போளூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களிலிருந்து அனைத்து பட்டயக்காரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டம் சூட்டப்பட்ட இளைஞருக்கு மாலை அணிவித்தும் பாராட்டுகளை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

    கொடைக்கானல் மலைக்கிராமங்களில் முதன் முறையாக திருமணம் ஆகாத 27 வயதான இளைஞருக்கு வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் சூட்டப்பட்டது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
    காஷ்மீரில் பேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டிய பெண்ணை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #KashmiriWoman #Militancy #Facebook
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த, 2 குழந்தைகளுக்கு தாயான சாஷியா என்கிற பெண் ‘பேஸ்புக்’ மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சாஷியாவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் அவருடைய ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி அவரை கைது செய்தனர்.

    அவருடைய வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாஷியாவின் சகோதரர்கள் 2 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சாஷியா தனது ‘பேஸ்புக்’ மூலம் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேரவும், ஆயுதங்களை வாங்கவும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து வந்தது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் இருந்து அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சமீபத்தில் ஆயுதங்கள் வாங்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    சாஷியாவுக்கு பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #KashmiriWoman #Militancy #Facebook 
    பெரம்பலூர் அருகே காதல் தோல்வியால் அரசு ஊழியரின் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். அரசு ஊழியர். இவரது மகன் ராஜகுமாரன் (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் அருகே ராஜ குமாரன் எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகுமாரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இறந்து போன ராஜகுமாரன் காதல் தோல்வியால் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
    ×