search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97412"

    • சிலாதரின் புதல்வன் ஆனதால் “சைலாதி” என்றும் அழைக்கப்பெற்றார்.
    • நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது.

    முனிவர் ஒருவர் பலகாலம் தவம் புரிந்தார். அதன் பயனாக உலகங்கள் பலவற்றைக் காணும் பேறு பெற்றார். யமனுலகு சென்றபோது, முனிவர் அங்கிருந்த கல்மலை ஒன்றைப் பார்த்தார். "இது என்ன?" என்று யமனிடம் கேட்டார்.

    "முனிவரே! நீர் சிறுவயதில் சிவனடியார் ஒருவர் உண்ணும்போது அவருடைய அன்னத்தில் சிறிய கல்லைப் போட்டீர்கள். அது நாள் தோறும் வளர்ந்து வருகிறது. பூவுலகில் உம் காலம் முடிந்து இங்கே வரும் போது இந்த மலையை உண்ணச் சொல்வோம்" என்று யமன் கூற முனிவர் நடுங்கினார்.

    "நான் செய்த தவறுக்கு வேறு பரிகாரமே இல்லையா?" என்றார் முனிவர். "உள்ளது. பூவுலகில் இதே அளவு மலையை நாள்தோறும் பொடித்து உண்டு வந்தால், இங்குள்ள மலை மறைந்து விடும்." என்று யமன் கூற, அவ்வாறே செய்வதாக முனிவர் வாக்களித்தார். முனிவர் பூவுலகுக்கு வந்தார். மலை ஒன்றைத் தேடிக் கண்டறிந்து அதன் கல்லைப் பொடியாக்கி உண்டுவந்தார். ஆகையால் அவரை அனைவரும் சிலாதர் என்று அழைத்தார்கள்.

    சிலாதர் பிரம்மசாரியாக வாழ்ந்து வந்தார். அதனால் அவருடைய முன்னோர் நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த சிலாதர், ஒரு நங்கை நல்லாளை மணம் புரிந்து கொண்டார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சிவபெருமானை வேண்டி பலகாலம் சிலாதர் தவம் புரிந்தார். அவர் மனைவியும் நாள்தோறும் சிவபூஜை செய்து பிள்ளை வரம் வேண்டினாள். உடலெல்லாம் திருநீறு, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள் அணிந்து, சிவபெருமானையே உடலால், மனத்தால், வாக்கால் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

    சிவபெருமான் அருளிய வண்ணம் ஸ்ரீசைலத்துக்குச் சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்யத் தொடங்கினார். முனிவர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாகத்திற்கான பொருள்களையெல்லாம் சேகரித்தார். தானங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சிலாதரும் அவருடன் இணைந்து பல ரிஷிகளும் யாகத்தை மிகவும் நியமத்துடன் செய்யலானார்கள். யாக பூமியை சிலாதர் கலப்பையால் உழுதபோது, கலப்பை நுனியில் ஒரு பெட்டி இடித்தது. உடனே சிலாதர் அப்பெட்டியை பூமியிலிருந்து வெளியில் எடுத்துத் திறந்து பார்த்தார். பொன்னாக ஒளிர்ந்த அப்பெட்டியினுள்ளே பால சூரியனைப் போல் ஒளி வீசிய சிறு குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டார். குழந்தையின் மேனியிலே திவ்ய ஆபரணங்கள் ஒளிர்ந்தன.

    சிலாதர், 'சிவபெருமான் அருளிய தவப்புதல்வர் இவரே' என ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுவிட்டு, மனைவியிடம் அளித்தார். அவள், புதல்வனை இறுக அணைத்து உச்சி முகர்ந்தாள். பாலூட்டி, சீராட்டினாள். அப்போது பிரம்மா, முனிவரை நோக்கி "அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய இக்குழந்தைக்கு "நந்தீசன்" என்ற திருநாமம் சூட்டுவோம்" என்றருளினார்.

    சிலாதரின் புதல்வன் ஆனதால் "சைலாதி" என்றும் அழைக்கப்பெற்றார். நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது. குருகுலவாசம் செய்து, அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ந்தார். கற்று முடித்ததும் நந்தீசருக்கு மணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்கள். ஆனால் நந்தீசர் அதற்கு இணங்கவில்லை.

    "சிவத்தைத் துதிப்பேன், பவத்தை விடுவேன்" என்று பெற்றோரிடம் விடைபெற்று தவம் செய்யச் சென்றார். சிலாதரும் அவர் மனைவியும் தடுத்தபோது, அவர்களிடம் தவத்தின் மேன்மையை எடுத்துரைத்து விடை பெற்றார்.

    காட்டில் பஞ்சாக்னி-சுற்றிலும் நான்கு திக்குகளிலும் எரியும் நெருப்பு-வானத்தில் எரிக்கும் சூரியன் ஆகியவற்றின் மத்தியில் நூறாண்டுகள் தவமியற்றினார். அவருடைய கடுமையான தவத்தின் சக்தியால் தேவருலகும் தவ ஒளியால் ஒளிர்ந்தது.

    "எதைக்குறித்து நந்தீசன் தவம் செய்கிறாரோ?" என்று தேவர்கள் கவலை கொண்டனர். பல்லாண்டு காலத் தவத்தின் பயனாக பனிமலைப் பரமேஸ்வரன், நந்தீசன் முன்பு தோன்றினார். விடை மீது வந்து தரிசனம் தந்த ஈசனை நந்தீசர் வணங்கினார்; தொழுதார்; பாதம் பணிந்தார். ஆனந்தப் பரவசமெய்தியவராக "பரமனே! ஈசனே! எந்தையே! எனக்கருள் புரிய வந்த தேவனே!" என்று தோத்திரம் புரிந்தார்.

    "குழந்தாய்! என்ன வரம் வேண்டும்?" என்று இறைவர் குழைந்து கனிவு ததும்பக் கேட்டார்.

    "வேறென்ன வேண்டுவேன்? உம் பாதத்தில் மாறாத பற்றுடன் சிவபக்தியில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்பதுதான் யான் வேண்டுவது" என்றார்.

    "அப்படியே விளங்குவாயாக! எம் கணங்களுக்கு அதிபனாக இருப்பாய். என்னுடைய ஆணை எங்கெங்கு செல்லுமோ அங்கெல்லாம் உன் அதிகாரமும் செல்வதாக! அதிகார நந்தியாக விளங்குவாய்" என்றருளினார்.

    "நந்தீசர் எமக்கு மகன், கணாதிபன், அனைவராலும் பூஜிக்கத் தக்கவன். 'சிவஞானத்தை' போதிக்கும் குருவும் இவனே" என்று தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமான் அறிவித்தார்.

    அது முதல் திருநந்தித் தேவராக நந்தீசர், கயிலைமலையின் வாயிலில் நின்று காத்து வருகிறார்.

    அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மைபூண்டு

    நங்குரு மரபிற்கெல்லா முதற்குரு நாதனாகி

    பங்கயத் துளவ நாளும் வேத்திரப்படை பொறுத்த

    செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம்போற்றி

    • பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
    • தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

    ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விசேஷமானது.

    ஸ்ரீசைலம் மலையில் வசித்த சிலாதர் என்ற ரிஷி, குழந்தை வரம் வேண்டி சிவனை வணங்கி வந்தார். அவருக்கு நந்தி, பர்வதன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், சிலாதரிடம், "உங்களுக்கு பிறந்திருக்கும் நந்தி சில காலம் தான் பூமியில் வாழ்வார்'' என்றனர். வருந்தினார் சிலாதர். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, "சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்!'' என்று சபதம் செய்து, தவத்தை துவங்கினார்.

    சிவபெருமானும் மனம் ஒருமித்த அந்த பிரார்த்தனையை ஏற்று, நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அவருக்கு அருள்புரிந்த சிவன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரில் இங்கு அருளுகிறார். நேரடியாக பக்தர்களே இவருக்கு பூஜை செய்யலாம் என்பது விசேஷம்.

    பிரதோஷத்தன்று நம் ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை.

    முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. குருக்ஷத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.

    நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து, அதன் மீது சிவன் ஆட்சி புரிவதாகவும் ஐதீகம். இக்கோவிலிலுள்ள நந்தி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

    இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள் எனப்படுகிறாள். 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சிவன் சன்னதி கீழே இருக்க, அம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.

    மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்சபாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடமும் இங்குள்ளது. பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பக்தர்கள் தங்க சத்திரங்கள் உள்ளன. திங்கள், வெள்ளியில் கூட்டம் அதிகமாக இருக்கும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

    காலை 5.00 மணி முதல் – மதியம் 3.00 மணி வரையும், மாலை 5.30- முதல் இரவு 10.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதியுண்டு. கட்டணம்,700 ரூபாய்.

    சென்னையில் இருந்து ரெயிலில் செல்பவர்கள் ஓங்கோல் சென்று, அங்கிருந்து பஸ்சில் ஸ்ரீசைலம் செல்லலாம்.

    பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம்.

    மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. தனியார் வாகனங்கள் இரவு 8.00 மணியிலிருந்து காலை 6.00 மணிவரை மலைப்பாதையில் செல்ல அனுமதி கிடையாது; அரசு பஸ்கள் மட்டுமே செல்லும்.

    • பிரதோஷ கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.
    • ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.

    தஞ்சாவூர் ஓவிய மரபில் நந்திதேவரின் உருவம் மைசூர் சாமுண்டி மலையில் நந்தி சிலை சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

    "செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து

    நம் பவமறுத்த நந்திவானவர்"

    எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

    பிரதோஷ கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

    • கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார்.
    • சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார்.

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன.

    கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

    தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

    சிவன் கோவில்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

    • அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது.
    • போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார்.

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    விஷ்ணு நந்தியாக மாறிய கதை

    அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும், தேவர்களும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் சிவபெருமான் போரிட புறப்பட்டார்.

    அவர் அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். இதனால் ரிஷபாரூடர் என்ற பெயர் சிவபெருமானுக்கு வந்தது. அவ்வாறு விஷ்ணு ரிசபமாக மாறியதால் சிவாலயங்கள் அனைத்திலும் விஷ்ணு நந்தி அமைக்கப்பெறுகிறது.

    இருப்பினும் நான்கு நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த விஷ்ணு அவதார நந்தி பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை.

    • கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும்.
    • ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷ வழிபாடு.

    பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.

    வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    சோமசூத்தகப் பிரதட்சணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

    எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனையும் நந்தி தேவனையும் வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும் காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும். பிரதோஷ கால நேரங்களில் சிவ பெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக புராணங்களில் நம்பிக்கை . எனவே நந்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

    மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

    நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் பெற்றவர். பொதுவாக கோவிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள்.

    ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோவில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம். ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வதால் இவர் 'போக நந்தி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார்.

    அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே 'வேத நந்தி'யும் ஆனார்.

    முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் 'தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது' என்று கர்வம் கொண்டது தேர். இதனை அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார்.

    தேர் உடைந்தது. அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை தாங்கினார். அவர்தான் 'மால் விடை' என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி.

    மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் 'தர்ம விடை' எனப்படும் தர்ம நந்தி.

    கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி 'ஆன்ம நந்தி' எனப்படும். இந்த நந்தியை 'சிலாதி நந்தி' என்றும் சொல்வர்.

    கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார்.

    சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர். பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார்.

    நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்.

    • ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
    • காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபிதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    இந்த சன்னதி ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி திருநாளில் இவ்விஜய விநாயகருக்கு காலை அபிஷேகம், சந்தன காப்பு மாலை ஸ்ரீமூஷிக வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி அன்று நடைபெற்று வருகிறது.

    பவுர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாள் தேய்பிறையில் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை அபிஷேகமும் தூப தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்று, சுவாமி உற்சவ மூர்த்தி திருக்கோவிலை வலம் வருவார்.

    இத்திருக்கோவிலின் மூலவரான அருள்மிகு அருணாசலேசுவரருக்கு, ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

    இத்திருக்கோவிலில் பிரதோஷ வேளையில் நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பெருமானுக்கு நிவேதிக்கிறார்கள்.

    அருகம்புல் ஆராதனையும், வில்வதளத்தில் அர்ச்சனையும் அலங்காரமும் வெகு விமரிசையாக பிரதோஷ காலத்தில் பக்த கோடிகளால் நடைபெறும். இத்திருக்கோவிலில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ நாயனார் ரிஷப வாகனத்தில் குடை மற்றும் வெண்சாமரங்களுடன் தேவாரம் மற்றும் மங்கல பண் இன்னிசையோடு திருக்கோவிலினை பக்தர்கள் சூழ பவனி வருவர்.

    பக்த கோடிகள் பவுர்ணமியில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இயலாதோர் இவ்அருணாசலேசுவரரை தரிசித்து வேண்டும் வரத்தினையும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவதாக நம்புகின்றனர்.

    இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. இரவு நான்கு கால பூஜைகளும் வில்வத்தால் அர்ச்சிக்கப்பட்டு அனைத்து வித அபிஷேகங்களும், நடைபெற்று ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வஸ்திரங்களுடன் ஈசன் காட்சி அளித்து அருள்பாளித்து வருகிறார்.

    அருள்மிகு அபிதகுசாம்பாள் சன்னதி

    இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அருள்மிகு அபீதகுசாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத்தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.

    வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது.

    அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது.

    காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.

    இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலியனவற்றை பெறலாம்.

    • நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார்.
    • 16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.

    Thiruporur Kandaswamy temple

    தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருத்தலங்களில் எல்லாம் இன்று ''கந்தனுக்கு அரோகரா'', ''முருகனுக்கு அரோகரா'', ''வெற்றி வேல்'', ''வீரவேல்'' போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் கோஷங்கள் கேட்டபடி உள்ளன.

    முருகப்பெருமான் இப்பூலவுகில் அவதாரம் எடுத்ததன் நோக்கமே, அசுரர்களை சம்ஹாரம் செய்து அழிப்பதற்குதான். அந்த அவதார நோக்கம் நிறைவு பெறும் திருநாளாக இன்றைய தினம் திகழ்கிறது.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதுவது போல முருகன் வீற்றிருக்கும் இடங்களில் எல்லாம் (திருத்தணி தவிர) இன்று சூரன் சம்ஹாரம் செய்யப்படுவான்.

    இந்த சூரன் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய 3 வடிவங்களில் தோன்றி கடும் அட்டகாசம் செய்து வந்தான்.

    திருச்செந்தூரில் சூரபத்மன் எனும் மாயையை முருகன் அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. அடுத்து திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் போரிட்ட முருகப்பெருமான் வினைப்பயன் எனும் கன்மத்தை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது.

    நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார். இந்த போர் விண்ணில் நடந்தது. இப்படி முருகப்பெருமான், தனது அவதார லட்சியத்தை திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகிய மூன்று தலங்களில் நிறைவேற்றினார்.

    இந்த மூன்று தலங்களில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் இரண்டும் அறுபடை வீடு தலங்களாகும். திருப்போரூர் தலம் படை வீடுகளில் ஒன்றாக இடம் பெறா விட்டாலும் அவற்றுக்கு நிகரான சிறப்பும், மகிமைகளும் கொண்டது. சென்னை அருகில் இருக்கும் இத்தலம், மிக மிக தொன்மையானது. பிரளயத்தால் 6 தடவை அழிந்த இத்தலம் 7-வது தடவையாக கட்டப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானே, சிதம்பரசாமி என்பவரை ஆட்கொண்டு, இங்கு தற்போதுள்ள கோவிலை கட்ட வைத்தார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயம் நடந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார். தண்டபாணி சுவாமிகள், சீரடி சாய்பாபா போன்றே இவரது பெற்றோர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

    மதுரை மீனாட்சி அம்மையின் குழந்தை போல இவர் வளர்ந்தார். ஒருநாள் இவர் தியானம் செய்தபோது மயில் ஒன்று தோகை விரித்தாடுவது போன்ற காட்சியைக் கண்டார்.

    அதற்கு விடை காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று 45 நாட்கள் கடும் தவம் செய்தார். பிறகு மதுரை மீனாட்சி கலி வெண்பா பாடினார்.

    இதனால் மனம் மகிழ்ந்த மீனாட்சியம்மை, சிதம்பரசாமிக்கு காட்சி கொடுத்து, ''வடக்கில் யுத்தபுரி என்று ஒரு ஊர் உள்ளது. அங்கு குமரனின் திருமேனியையும், பழைய ஆலயத்தையும் கண்டுபிடித்து புதிய கோவில்கட்டு'' என்று உத்தரவிட்டாள்.

    உடனே சிதம்பர சாமிகள் யுத்தபுரி எனப்படும் திருப்போரூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் அந்த இடம் பனை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    அங்கு பெண் பனைமரம் ஒன்றின் கீழ் முருகப்பெருமான் ஒரு புற்றுக்குள் சுயம்பு உருவில் இருப்பதை கண்டுபிடித்தார். அதை எடுத்து சென்று தன் குடிலில் வைத்து பூஜை செய்து வந்தார்.

    ஒருநாள் அவர் கனவில் பழைய முருகன் கோவில் அமைப்பும், அது பூமியில் புதைந்துகிடக்கும் இடமும் தெரியவந்தது. சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் திருப்பணி செய்த அந்த இடத்திலேயே சிதம்பரசாமிகள் புதிய கோவிலை கட்ட முடிவு செய்தார்.

    அந்த இடம் அப்போது ஆற்காடு முஸ்லிம் நவாப் மன்னரின் சொத்தாக இருந்தது. மன்னரின் மகளுக்கு தீராத வயிற்று வலி இருந்தது.

    அந்த வியாதியை சிதம்பரசாமிகள் குணப்படுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆற்காடு நவாப், அங்கு முருகனுக்கு கோவில் கட்ட, 650 ஏக்கர் நிலத்தை கொடுத்து கோவில் கட்ட உதவிகள் செய்தார்.

    சிதம்பரசாமிகள் கோவில் கட்டும் தகவல் அறிந்ததும், நிறைய பேர் தாமாகவே முன் வந்து பொருள் உதவி செய்தனர். கோவிலை கட்டி முடித்த பிறகு, அந்த ஆலயத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிதம்பர சாமிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

    அப்போது ஒரு சிறுவன் அவரிடம் வந்தான். ''என்ன பெயர் வைப்பதில் குழப்பமாக உள்ளதா?'' என்றான். சிதம்பரசாமிகள் ஆச்சரியத்துடன் அந்த சிறுவனை பார்க்க அவன், ''என் பெயர் கந்தன். உங்கள் பெயர் சிதம்பரசாமி. இரண்டையும் சேர்த்து ''கந்தசாமி கோவில்'' என்று வைக்கலாமே என்று கூறியபடி கோவில் கருவறைக்குள் சென்று மறைந்து விட்டான்.

    இதன் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்ததோடு, அதற்கு பெயர் சூட்டியதும் முருகப்பெருமானே என்பதை அறியலாம். இத்தலத்துக்கு ஆதிகாலத்தில் தாருகாபுரி, சமராபுரி, போரியூர், செருவூர், சமரப்பதி, சமதளப்பூர் என்றெல்லாம் பெயர்கள் இருந்தன. அந்த காலத்து மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.691-ல் இரண்டாம் நரசிம்ம பல்லவன், 1076-ல் முதலாம் குலோத்துங்க சோழன் இத்தலத்தில் திருப்பணிகள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவர் சுயம்பு மூர்த்தி என்பதால், முக்கிய பூஜைகள் நடத்துவதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேல் உள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த யந்திரத்துக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். வியாபாரம் பெருகும் என்பது ஐதீகம்.

    கோவில் சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் எனும் சேவல் வடிவசிலை உள்ளது. இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பாஸ்போர்ட், விசா தொடர்பான சிக்கல்கள் தீரும்.

    மூலவர் சுயம்பு என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டும் சாத்துகிறார்கள். இவர் பிரம்மன் போன்று அட்சரமாலை, கண்டிகை கொண்டும் சிவன் போன்று வலது கையால் ஆசீர்வதிக்கும் அபயஹஸ்த நிலை கொண்டும், விஷ்ணு போன்று இடது கையை தொடையில் வைத்து ஊரு ஹஸ்த நிலையிலும் என மும்மூர்த்திகளின் அம்சமாக உள்ளார்.

    இதனால் ஐப்பசி மாதம் முருகனுக்கு அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி நாளில் 4 காலை பூஜை நவராத்திரி 9 நாட்களும் வள்ளி, தெய்வானைக்கு 9 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் எந்த முருகர் தலத்திலும் இத்தகைய வழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை.

    இத்தலத்தில் பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்றை புனிதமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள். முருகன் சிலையை கண்டெடுத்த சிதம்பர சுவாமிகள் இந்த பனை பாத்திரத்தில்தான் முருகன் சிலையை வைத்திருந்தாராம்.

    கோவில் பிரகாரத்தில் சிவபெருமான், வான்மீகநாதர் என்ற பெயரில் குடும்பத்தோடு உள்ளார். அங்குள்ள அம்பிகைக்கு புண்ணிய காரணியம்மன் என்று பெயர். தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதமான கேதார கவுரி விரத தினத்தன்று இந்த அம்மனுக்கு இளம்பெண்கள் அதிரசம் படைத்து வழிபட்டால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில்தான் அகத்திய முனிவர் பிரணவ பொருளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டார். இதனால் இத்தலத்து சன்னதிகள் ஓம் வடிவில் உள்ளன.

    ஒரு தடவை பெருமாள், லட்சுமி இருவருக்கும் கான்வ முனிவரால் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தை பெருமாளும், லட்சுமியும் இத்தலத்துக்கு வந்து நிவர்த்தி பெற்றனர். இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் விநாயகர் கிழக்கு நோக்கி உள்ளார். அவரை வழிபட்ட பிறகு ராஜகோபுரம் வழியே உள்ளே செல்ல வேண்டும். அதற்கு முன்பாகவே வட்ட வடிவிலான மண்டபத்தில் கொடி மரம், மயில் வாகனம், பலி பீடம் உள்ளது. பலி பீடம் முன்பு பக்தர்கள் உப்பு, மிளகு கொட்டி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    ராஜகோபுரத்தை கடந்து 24 கால் மண்டபம் வழியாக சென்றால் வலது பக்கம் தெய்வானை சன்னதி, இடது பக்கம் வள்ளி சன்னதியை காணலாம். தெய்வானை சன்னதி அருகில் கோவில் கட்ட நிலம் கொடுத்த ஆற்காடு நவாப் படம் வரையப்பட்டுள்ளது. கருவறை எதிரே வெள்ளை யானையான ஐராவதம் உள்ளது.

    பக்கத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. நமது மனக்கவலைகள் தீர நாம் மறக்காமல் இந்த யந்திரத்தை வழிட வேண்டும். இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஆனால் சூரியன், சனி ஆகிய இரு கிரகங்களுக்கு மட்டும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிய மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இந்த மரத்தில் தொட்டி கட்டி சென்றால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

    திருமணம் வரம் கோரியும் இந்த மரத்தில் மஞ்சள் கயிற்றால் முடிச்சுப்போட்டு கட்டுகிறார்கள். அந்த வகையில் இத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் கோவிலை கட்டிய சிதம்பர சாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது. திருப்போரூர் முருகன் மீது 726 பாடல்கள் பாடிய இவர், ஒரு வைகாசி விசாக தினத்தன்றுதான் முருகனோடு இரண்டற கலந்தார். எனவே வைகாசி விசாகத்தன்று முருகன் எதிரே, சிதம்பரசாமி சிலையை வைத்து, அவர் மூலவருடன் இரண்டற கலப்பது போல பாவனை செய்வார்கள்.

    ஆண்டு முழுவதும் விழா கோலமாக காணப்படும் இத்தலத்தில் சஷ்டி, கிருத்திகை, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கந்த சஷ்டி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்.

    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    • சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர்கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர், ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது.
    • சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள்.

    சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

    இதேபோல், ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு திரயோதசி திதியில் பிரதோஷம் வரும். பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வது இதுவரை இழந்தவற்றை தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    திரயோதசி திதியில் பிரதோஷம். இதில் பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் எல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் விலகும். தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

    சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோசஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது. இன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    இன்று அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசியுங்கள். முடிந்தால் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல்லும் சிவனாருக்கு வில்வமும் சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் தென்னாடுடைய சிவனார்.

    • நாளை மாத சிவராத்திரி, பிரதோஷம் இணைந்து வருகிறது.
    • நாளை விரதம் இருந்து சிவனை வழிபட உகந்த நாள்.

    மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி.

    மாதந்தோறும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். சிவநாமம், ருத்ரம், சிவகவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வார்கள்.

    நாளை 17.5.2023 புதன்கிழமை சிவராத்திரி. மாத சிவராத்திரி, வைகாசி மாத சிவராத்திரி. இந்த அற்புதமான நாளில், விரதம் இருந்து காலையும் மாலையும் சிவனாரை வழிபடுங்கள். தேவாரத் திருவாசகம் படித்து வேண்டிக்கொள்ளுங்கள். பதிகம் பாராயணம் செய்து பரமனைத் தொழுவது பல உன்னதங்களைத் தந்தருளும்.

    அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாகவும் பிரதோஷம் வரும். திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். இந்தநாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த விசேஷம்.

    நாளை சிவனாருக்கு உகந்த சிவராத்திரியும் சிவனாருக்கு உரிய பிரதோஷமும் ஒரேநாளில் அமைவது கூடுதல் சிறப்பு.

    புதன் கிழமையைச் சொல்லும்போது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையில், மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒருசேர வருகிறது. இந்த வீரியமுள்ள நாளில், காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி சொல்லுங்கள். ருத்ரம் பாராயணம் செய்யுங்கள். அல்லது காதாரக் கேளுங்கள்.

    மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த நாளில், முடிந்தால் விரதம் மேற்கொள்ளுங்கள். முக்கியமாக, விரதத்தை விட தானம் உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள்.

    வீட்டில் விளக்கேற்றி, குடும்பமாக அமர்ந்து பூஜை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். குடும்பமாக நமஸ்கரித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

    உங்கள் இன்னல்களெல்லாம் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் தவிடுபொடியாகும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் போகும். துக்கங்களெல்லாம் பறந்தோடும். இதுவரை சந்தித்த மொத்த வேதனைகளில் இருந்தும் உங்களை மீட்டெடுத்து அருள்வார் சிவனார்!

    • வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர், வண்ணமலர்களால் சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில், குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×