search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97441"

    • முடியின் வளர்ச்சி தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது.
    • சிலருக்கு தலை முடியை பிடித்து இழுத்தாலே முடி கொத்தாக வரும்.

    முடியின் வளர்ச்சி மிக முக்கியமானதாக எப்போதும் கருதப்படுகிறது. மேலும் முடியின் வளர்ச்சி தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது. அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகம் கொட்ட வைக்கிறது. முடிகள் அதிகமாக கொட்டுகிறது என்றால், நீங்கள் உங்கள் முடியிற்கு அதிக அழுத்தத்தை தருகிறீர்கள் என்று அர்த்தம்.

    சிலருக்கு தலையை சீப்பால் சீவினால் முடி கொத்து கொத்தாக கொட்டி கொண்டேயிருக்கும். இன்னும் சிலருக்கு தலை முடியை பிடித்து இழுத்தாலே முடி கொத்தாக வரும். இன்னும் சிலர் தலை குளித்து விட்டு வந்தால் பாத்ரூம் முழுவதும் முடி உதிர்ந்து காணப்படும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் முடி கொட்டி இளம் வயதிலேயே தலையில் வழுக்கையுடன் காணப்படுவர். இதற்கு சில முக்கிய காரணங்களை பட்டியலிட்டுள்ளோம்

    1. அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பது முடி உதிர காரணமாக அமைகிறது

    2. எப்போதும் அதிக சூடுள்ள சுடுநீரில் குளிப்பது கூட தலை முடி உதிர வழி வகுக்கும்

    3. நீச்சல் குளம் போன்ற இடங்களில் குளோரின் நிறைந்த தண்ணீர் இருக்கும் அதில் குளித்தால் முடி உதிரும்

    4. சில இடங்களில் உப்பு நீர் இருக்கும். இந்த தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலைமுடி உதிரலாம்.

    5. நம் உடலுக்கு தேவையான சரியான அளவு வைட்டமின் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் இல்லாவிட்டால் கூட முடி உதிரலாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    6. தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாதோருக்கு முடி உதிரும்

    7. தினமும் தலைக்கு குளித்து தலையில் பேன், பொடுகு, சிக்கு இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் முடி உதிரவே உதிராது.

    இயற்கையான பொருட்கள் பயன்படுத்தினாலே முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், தலையில் அழுக்குகள் சேர்ந்தால் தலையை உடனே அலசிவிட வேண்டும்.

    சத்தான உணவுகளை தவிர்த்து வந்தால், அது உங்கள் உடல் நலனை மட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தையும் முற்றிலுமாக குறைத்து விடும். உண்ணும் உணவில் ஊட்டசத்துக்கள் இல்லையென்றால், அதில் எந்த நன்மையையும் இல்லை.

    தலை குளித்து முடித்த பின்னர் கூந்தலை காய வைக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், முடியை அவை உடைய செய்து விடும். முக்கியமாக இந்த ஹேர் ட்ரையர்கள் முடியின் அடி வேரையே பாதித்து முடி கொட்ட செய்து விடும். எனவே, முடியில் ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

    • தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.
    • சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

    அசைந்தாடும் அழகான சுருள் முடியை தற்போது பல இளம் பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக அழகு நிலையங்களில் பல மணி நேரம் செலவிடுவார்கள். தலைமுடியை இவ்வாறு அலங்கரிப்பதற்கு ஸ்ட்ரெயிட்னர், கேர்லர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இவற்றை அடிக்கடி உபயோகிப்பதால் தலைமுடி வலுவிழக்கும். இவற்றை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான குறிப்புகள் இங்கே...

    சுருள் முடி பராமரிப்பு: தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். பருத்தி துணிக்கு மாற்றாக, சாட்டின் துணியால் தயாரிக்கப்பட்ட தலையணை உறைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உடைவதைத் தடுக்க முடியும். தலைமுடி வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். பெரிய பற்கள் கொண்ட சீப்பு அல்லது கை விரல்களால் நிதானமாக சிக்கு எடுக்கவும். மரத்தால் ஆன சீப்பு பயன்படுத்துவது நல்லது.

    கூந்தல் சீரம் என்றால் என்ன?

    கூந்தல் சீரம் என்பது 'சிலிக்கான்' என்ற பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் திரவமாகும். இது முடியின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, கூந்தலை சிக்கு இல்லாமல் ஈரப்பதத்துடன் மென்மையாக வைத்திருக்க உதவும். இதற்கு முதலில் தலைக்கு குளித்து, கூந்தலை நன்றாக உலரவைத்து சிக்கு இல்லாமல் வாரிக் கொள்ள வேண்டும்.

    செய்முறை - 1 கூந்தலில் சீரம் தடவி சற்று ஈரப்பதமாக இருக்குமாறு செய்யுங்கள். பின்பு கூந்தலை 4 பகுதிகளாகப் பிரியுங்கள். பின்னர் ஒவ்வொன்றையும் மேலும் சிறு பகுதிகளாகப் பிரித்து, மெல்லிய சடைகளாகப் பின்னி விடுங்கள். அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். அடுத்த நாள் இதனை ஒவ்வொன்றாக பிரித்து விட்டால், லேசான சுருள்கள் பார்க்க அழகாக இருக்கும்.

    செய்முறை - 2 தலையில் பெரிய 'ஹெட் பாண்ட்' போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சிறு சிறு பகுதியாக கூந்தலைப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக சுருட்டுங்கள். அவை கலைந்துவிடாதவாறு ஹேர் பின் கொண்டு பொருத்துங்கள். இந்த நிலையில் தலைமுடி சற்று ஈரப்பதமுடன் இருப்பதற்காக கூந்தல் ஸ்பிரே பயன்படுத்தலாம். மறுநாள் காலையில் ஹேர்பின்களை நீக்கிவிட்டு, லேசாக முடியை பிரஷ் செய்யுங்கள்.

    செய்முறை - 3 நீளமான கூந்தலில் சுருள் அலங்காரம் செய்வதற்கு 'ரெடிமேட் கர்லிங் ஸ்டிக்'குகளை உபயோகிக்கலாம். தலைமுடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை கர்லிங் ஸ்டிக் வைத்து சுருட்டி வைக்கவும். இவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம். மறுநாள் காலை தலைமுடியை பிரித்து விட்டு பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் வாரிவிடவும்.

    குறிப்பு: இவ்வாறு அலங்காரம் செய்யும்போது கூந்தலில் எண்ணெய் பூசக்கூடாது. தலையில் ஹேர் சீரம் தடவிக் கொண்டால், சுருள்கள் நீண்ட நேரம் இருக்கும். இவ்வாறு அலங்கரித்த சுருள் அமைப்பு 3 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும்.

    • குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
    • தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும்.

    'நம்மை முதலில் பார்க்கும்போது, அடுத்தவர்களுக்குத் தோன்றும் எண்ணம் தான் நிலையானது' என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.

    குறைவான, அழகான மேக்கப்புடன், ஆர்ப்பாட்டம் இல்லாத, முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம் நீங்கள் சிறந்த தோற்றம் பெற்று விளங்க மிகவும் முக்கியமானதாகும்.

    நீங்கள் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து கொள்ளக்கூடிய மூன்று எளிய கூந்தல் அலங்காரங்களை உங்களுக்காகத் தேர்வு செய்து வழங்குகிறோம்.

    * கொண்டை ( ஸ்லீக் லோ பன்)

    கொண்டை, அலுவலக நோக்கிலான உடைகளுடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கூந்தல் அலங்காரம். ஏனெனில் இது சிக்கல் இல்லாதது மற்றும் காற்றில் பறக்கும் முடியையும் கட்டுப்படுத்துகிறது. கழுத்து அளவில் தாழ்வாகக் கொண்டை அமைத்துக்கொள்வது, சிக்கென, நவீனத்தன்மையோடு இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை தன்மையையும் கொண்டிருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    நல்ல சீப்பு கொண்டு தலைமுடியை வாரி, தலை முடி அனைத்தையும் ஒன்றாக்கி, உங்கள் கழுத்து அளவில் குதிரை வாலாக அமைத்துக்கொள்ளவும். இந்த குதிரை வால் பின்னலைச் சுருட்டி கொண்டையாக்கி, 'பின்' குத்திக்கொள்ளவும். சிடுக்கு உள்ள முடி எனில், செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி சீராக்கி கொள்ளவும்.

    * குதிரை வால் (போனி டெயில்)

    சரியான முறையில் அமைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு நேர்காணலுக்குக் குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காரத்திற்கு நேர்த்தியான தோற்றம் தேவை. ஆன்டி பிரிஸ் கிரீம் (anti frizz cream) அல்லது ஸ்டலிங் பொருள் மூலம் இதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை நேராக்கி, தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும். தலைமுடியை மொத்தமாக இறுகப்பற்றி குதிரை வாலாக்கி, உங்களுக்கு விருப்பமான உயரத்தில் அதை சுற்றி இறுக்கமாக்கிக் கொள்ளவும். உங்கள் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கொஞ்சம் முடி எடுத்து, அதை கூந்தல் அலங்காரத்தைச் சுற்றி அமைத்து நேர்த்தியான தோற்றத்தை உண்டாக்கிக் கொள்ளவும்.

    * முன்பக்க தலைமுடி (டிவிஸ்டட்)

    இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் நேர்த்தியாகத் தோன்றக்கூடியது, உடனடியாக தொழில்முறை தோற்றம் தரக்கூடியது. இந்த எளிதான கூந்தல் அலங்காரத்துடன், கண் அலங்காரம் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டால் இன்னும் அசத்தலாக இருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை டிரையர் கொண்டு நன்றாகக் காய வைத்து, கீழ்ப்பகுதியில் சுருள் முடியை உருவாக்கிக் கொள்ளவும். சீப்பு கொண்டு முன்பக்க முடியை அமைத்து, அதைப் பின்பக்கமாக இழுத்து, 'பின்' குத்திக்கொள்ளவும். செட்டிங் ஸ்பிரே மூலம் 'பினிஷ்' செய்யவும்.

    • ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம்.
    • அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது.

    முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் கூந்தல் அலங்காரம் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இது முடிக்கு நன்மை செய்யுமா என்பதை இதில் பார்ப்போம்.

    ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம், ஹேர் ஸ்டைல் கலையாமல் வைத்திருக்க உதவலாம். ஆனால் இதில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன என்பதை பற்றியும் அதனால் வரக்கூடிய பாதிப்புகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    ஹேர் ஜெல்களில் ஆல்கஹால் உள்ளிட்ட நச்சு இரசாயனங்கள் இருக்கிறது. இந்த ஆல்கஹால் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கி கூந்தலை வறண்டு போகச் செய்து விடும். இதனால் முடிகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

    இந்த ஹேர் ஜெல்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.

    ஹேர் ஜெல்களில் இருக்கும் இராசயனங்கள் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை உருவாக்குகிறது.

    ஹேர் ஜெல்லில் இருக்கும் நச்சு இராசயனங்களால் உங்களின் கூந்தல் பொலிவிழந்து கூந்தல் நிறமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக சீக்கிரமே நரைமுடி பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர்.

    அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. அது உங்கள் கூந்தலை பாதிக்க வாய்ப்புள்ளது. முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் படும் படி எப்போதும் அப்ளை செய்யக் கூடாது. உங்கள் கூந்தலுக்கு தகுந்த ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுப்பது அவசியம்.

    • தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.
    • தலைமுடி ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    தினமும் பல் துவக்குவது, குளிப்பது போன்று தலைமுடியையும் தவறாமல் சீவுவது அவசியம் மற்றும் முக்கியம் என்பது தெரியுமா?

    காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    தினம் சீப்பை வைத்து தலைமுடியை சீவினால் அது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து முடி வேர்களை பலமாக்கும்.

    உச்சந்தலையில் காணப்படும் செபாசியஸ் சுரப்பிகள் sebum-த்தை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாகவே முடியை நிலைநிறுத்தி பாதுகாக்க இந்த sebum உதவுகிறது. தினமும் 2 முறை அல்லது அதற்கு மேல் தலை சீவும் போது செபாசியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு சருமத்தில் இருந்து முடியின் வேர் வரை இயற்கை எண்ணெய்கள் சரியாக செல்வது உறுதி செய்யப்படுகிறது.

    தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.

    தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

    அவ்வப்போது தலைமுடியை சீவினால் அது முடியின் அளவை அதிகரிக்கவும், தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவி புரிகின்றது. 

    • கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
    • இந்த எண்ணெய் கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தரும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய் - 500 மி

    நல்லெண்ணெய் - 100 மி

    கரிசலாங்கண்ணி இலைகள் - 2 கைப்பிடி

    அரைக்க வேண்டியவை

    சின்ன வெங்காயம் - 20

    செம்பருத்தி இலை - 2 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கைப்பிடி

    கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

    மருதாணி - 1 கைப்பிடி

    நெல்லிக்காய் - 10

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கற்றாழை - 2 இதழ்.

    செய்முறை

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.

    இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

    குறிப்பு: சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

    • கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல.
    • இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.

    இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.

    செய்முறை:

    முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். கடாய் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.

    தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.

    எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

    • தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.
    • முடி உதிர்தல், சரும நோய்களுக்கு மனஅழுத்தமும் காரணம்.

    பெண்களுக்கு பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றால் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி.

    ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

    பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகை, தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்தச் சிக்கல்களை எளிமையாக சரிசெய்ய முடியும்.

    முடி உதிர்தல், சரும நோய்கள் என பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தமும் காரணம் என்கிறார்கள். புற உலகம் உருவாக்கும் பதற்றம், மனஅழுத்தம் கூந்தலையும் சருமத்தையும் எப்படி பாதிக்க முடியும்? என கேட்கலாம்.

    பொதுவாகவே சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

    உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும் என்கிறார்கள், டாக்டர்கள்.

    • பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது.
    • இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 'அடர்த்தியான கூந்தல்' என்பது பல பெண்களின் ஆசைகளில் ஒன்று. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊட்டச்சத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால், பெரும்பாலான பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது. இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    முடி உதிர்வு, இயற்கையான நிகழ்வின் ஒரு பகுதியாகும். புதிய முடிகள் வளரும்போது அந்தப் பகுதியில் ஏற்கனவே இருக்கும் முடிகள் உதிர ஆரம்பிக்கும். இவ்வாறு அன்றாடம் 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது இயல்பானது. இவற்றைவிட அதிகமாக முடி உதிர்ந்தால், அது கவனிக்க வேண்டிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    உடல் நலக்குறைவு, மரபு ரீதியிலான பிரச்சினைகள், தூக்கமின்மை, மன அழுத்தம், சத்தான உணவு உட்கொள்ளாதது, ஹார்மோன் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதுமட்டுமில்லாமல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், புதிதாக பிரசவித்த பெண்கள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், தலை முடிக்கு அழுத்தம், இறுக்கம் தரும் வகையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் அதிகமான முடி உதிர்வு ஏற்படும்.

    அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வழிகள்:

     புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     இயற்கையாகவே முடியின் வேர்க்கால்களில் இருக்கும் சுரப்பிகள் எண்ணெய்யை சுரக்கும். இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் பூசுவது நல்லது.

     அடிக்கடி தலை வாரினால் முடிகள் உடைவதுடன் அடர்த்தியும் குறையும். நீங்கள் உபயோகிக்கும் சீப்பு, துண்டு, தலையணை உறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். ஈரமான தலைமுடியை சீப்பு கொண்டு வாருவது கூடாது.

     வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். சருமத்தைப் போலவே தலைமுடியும் புறஊதாக் கதிர்கள் மற்றும் வாகன மாசுக்களால் பாதிக்கப்படும். எனவே அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

     மன அழுத்தம் அல்லது கர்ப்பம் போன்றவற்றால் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முடி உதிர்வு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தானாகவே நின்றுவிடும்.

     இறுக்கமான ஜடை, போனிடெயில் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தும் சிகை அலங்கார முறைகளை தவிர்த்தால், முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

    • சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள்.
    • அவ்வப்போது மாறும் கூந்தல் கலர்கள் தான் அழகு என்று உலாவருகிறார்கள்.

    கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் பழைய காலச்சாரம். கூந்தலுக்கு என்ன கலர் அடிக்கலாம் என்பதே லேட்டஸ்ட் ஃபேஷனாக இருக்கிறது. அடர்ந்த கருங்கூந்தல் தான் பெண்களுக்கு அழகு என்று சொல்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. அவ்வப்போது மாறும் கூந்தல் கலர்கள் தான் அழகு என்று உலாவருகிறார்கள்.

    இயற்கையில் அழகு நிறைந்த கறுப்பு கூந்தல் தான் வயது ஆகும் போது வெள்ளி மின்னல் கீற்றுகளாய் வெள்ளை நிறமாய் மாறுகிறது. இயற்கையை இயற்கையாக ஏற்றுக்கொள்ளும் வரை உடலுக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லை. ஆனால் அழகுபடுத்துகிறேன் என்று ஆரஞ்சு, பிர வுன் கலர்களைப் பூசிக்கொள்ளும் போது கூந்தலின் அழகும் ஆரோக்யமும் கெட்டுவிடுகிறது என்பது தான் சரியாக இருக்கும்.

    சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள். அழகில் ஆபத்து நிறைந்திருந்தாலும் அழகு தேவை என்பதே பல பெண்களின் விருப்பமாக இருக்கிறது. பொதுவாக இளநரை, அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப் போனவர்கள் ஹேர் டை உப யோகிப்பார்கள். அவர்களும் தரமற்ற டைகளை உபயோகிப்பதன் மூலம் நரை மேலும் அதிகமாகவே செய்யும். இது ஒரு புறம் இருக்க இன்றைய இளம் தலைமுறையினர் இருபாலரும் கலரிங் செய்து கொள்வதை ஹாபியாக வைத்திருக்கிறார்கள்.

    ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது நீண்ட நாட்கள் என்று அவர்களது விருப்பத்துக்கேற்றவாறு அழகு நிலையங்கள் செல்கிறார்கள். இந்தக் கலர்களை உண்டாக்கும் சாயங்கள் உடலுக்குள் பல்வேறு கேடுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் சரும நிபுணர்கள். ஹேர் கலரிங் செய்யலாம். ஆனால் கூந்தலின் நிறத்திலிருந்து அதிக வேறுபாடு இல்லாமல் இலேசான மாற்றம் செய்யலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

    வித்தியாசமான கலரிங் செய்யும் போது கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். கூந்தலின் வளர்ச்சி தடுக்கப்படும். சிலருக்கு சாயங்களின் ஒவ்வாமை நாளடைவில் கண்களிலும் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். சருமம் சம்பந்தமான உபாதைகளும் உண்டா கும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

    • ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன.
    • அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது பெண்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. இருப்பினும் இது முடியின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த பின் விளைவுகள் வரும் என்று இல்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

    முடி நீட்டமாக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த ரசாயன கிரீம் நம்முடைய கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை எல்லாம் முதலில் சோதனை செய்துகொண்ட பிறகே முடிவு செய்ய வேண்டும்.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கை வீட்டில், பார்லரில் செய்து கொள்ளலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கும். பார்லரில் செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டியிருக்கும்.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் சிலருக்கு நிரந்தரமாக முடி இழப்பு ஏற்படலாம். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

    சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

    முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடிக்கு வறண்ட தன்மையை கொடுக்கும். சிலருக்கு முடி ஜீவனின்றி இருப்பது போல பொலிவிழந்து காணப்படும்.

    முடியில் உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு உள்ளது. அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே சிலருக்கு முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம்.

    வெயிலில் நடந்தாலே, குளிர்ந்த நீரில் குளித்தாலே, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும்.

    ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்றுவிடலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படலாம்.

    • மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
    • மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    மழை காலம் வந்துவிட்டது. மழையின் அழகை ரசிப்பதோடு நின்றுவிடாமல் அதில் நனைந்து ஆனந்த குளியல் போடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி மழையில் குளிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மழையில் குளிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு டெல்லியை சேர்ந்த தோல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாங்கிட் விளக்கம் அளிக்கிறார்.

    ''கோடை காலம் முடிவடைந்து தொடங்கும் முதல் மழை வெப்பத்தில் இருந்து ஆறுதல் அளிக்க உதவும். மழை பெய்யும் போது நனைவது, உளவியல் ரீதியாக நிம்மதியாக இருப்பது போன்ற உணர்வை தரும். இருப்பினும் காற்று மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு ரசாயனங்கள், வாகன உமிழ்வுகள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மழை குளியல் உகந்ததல்ல. ஏனெனில் மழைத்துளிகள் காற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள், நச்சுக்களுடன் கலந்து சருமத்தை சேதப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் அமில மழையில் குளித்தால் சருமம் சேதமடையக்கூடும். எனவே மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் மழையில் குளிப்பது பொடுகு, முகப்பருவை போக்க உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். உண்மையில் மழை நீரில் அதிக மாசுக்கள் கலந்திருந்தால் முகப்பரு, சரும தொற்றுகள், சரும வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்'' என்கிறார் டாக்டர் ஜாங்கிட்.

    மழையில் நனைந்த பிறகு சில சமயங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதை கவனித்திருக்கலாம். தலை முடியும் கடினமானதாக மாறும். மழை நீரில் பி.எச் அளவும் அதிகமாக இருப்பதால் சருமம் கடினத்தன்மை கொண்டதாக மாறக்கூடும். கூந்தலும் உலர்வடையக்கூடும். மழை நீரால் தக்கவைக்கப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக தலைமுடியில் பேன்கள் வளர்ச்சியும் அதிகரித்துவிடும்.

    மழைக்காலத்தில் பெண்கள் பின்பற்றவேண்டிய சில அழகு குறிப்புகள் பற்றி டாக்டர் ஜாங்கிட் விவரிக்கிறார்.

    "இந்தபருவமழையில், நீங்கள் எதிர்பாராதவிதமாக நனைந்தாலோ அல்லது மழையில் குளித்து மகிழ நினைத்தாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க மறக்காதீர்கள். பேஸ் வாஷை பயன்படுத்தி சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை நீக்கிவிடுங்கள். சருமத்தின் மேற்பரப்புக்கு சோப்பையும், தலைமுடிக்கு ஷாம்பூவையும் பயன்படுத்துங்கள்.

    குளித்து முடித்ததும் கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். ஆடை அணிவதற்கு முன்பாக டவல் கொண்டு உடலை நன்கு உலர்த்துவது மழைக்கால நோய்த்தொற்றுகளை தவிர்க்க உதவும்'' என்கிறார்.

    ×