search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ரஞ்சித்"

    கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து, விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தின் இயக்குனர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர குதிரைவால், ரைட்டர் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார்.

    விக்ரம்
    விக்ரம் - பா ரஞ்சித்

    இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் நடிக்கும் 61வது படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
    சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய் பீம் படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், சூர்யாவிற்கு ‘ஜெய் பீம்’ படத்தின் தலைப்பை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.சூர்யா, ஞானவேல் மற்றும் குழுவினர்களுக்கு பெரும் நன்றிகள். JaiBhim’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

    ரஞ்சித்தின் பதிவு
    பா.ரஞ்சித்தின் பதிவு

    ஜெய் பீம் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
    அமெரிக்காவில் நடைபெறும் தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழாவில் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களும், கக்கூஸ் என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal #Kaala #Kakkoos
    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரும் 23, 24-ந் தேதிகளில் முதலாவது ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ நடைபெற இருக்கிறது.

    சர்வதேச அளவில் வெளியான தலித் சமூகம் சார்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

    இதில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தமிழ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சாய்ரத், ஃபான்றி படங்களை இயக்கிய மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் இந்தியாவில் இருந்து கவுரவிக்கப்படுகிறார்கள்.

    தமிழில் வெளியான காலா, பரியேறும் பெருமாள் படங்களும், கக்கூஸ் ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கின்றன. மலையாளத்தில் இருந்து ‘பபிலியோ புத்தா’ திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில், ‘மாசான்’, ‘ஃபேண்ட்ரி’, ‘போலே இந்தியா ஜெய் பீம்‘ ஆகிய திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளன.

    ‘காலா’ திரைப்படத்தில் தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட சாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள் அப்படியே முன்வைக்கப்பட்டன.



    காலா படத்தை இயக்கிய ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து இருந்தார்.

    இத்திரைப்படங்களுக்கு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ கவுரவம் வழங்கியுள்ளது. மலம் அள்ளும் தொழில் பற்றி திவ்யபாரதி இயக்கத்தில் ‘கக்கூஸ்’ தமிழ் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ‘வி ஹேவ் நாட் கம் ஹியர் டூ டை’, ‘தி பேட்டில் ஆப் பீமா கோரேகான்’ உள்ளிட்ட மேலும் பல ஆவணப்படங்களும் இங்கு திரையிடப்பட உள்ளன. இதுதான் முதலாவது ஆண்டு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா’ ஆகும்.

    இதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான் சட்ட மேதை அம்பேத்கர், 1927-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பி.எச்டி பட்டம் பெற்றார். 1952-ம் ஆண்டு, அம்பேத்கருக்கு இந்த பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி கவுரவித்தது. #PariyerumPerumal #Kaala #Kakkoos #USInternationalFilmFestival

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PariyerumPerumal #Kathir
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். 

    கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்.


    சாதியை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படமும் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #PariyerumPerumal #Kathir #KayalAnandhi
     
    சென்னையில் ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் பேட்டி அளித்த பா.ரஞ்சித், கதைத்திருட்டை கண்டுபிடிப்பது சவாலான செயல் என்றார். மேலும் ‘மீ டூ’ இயக்கத்திற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். #PaRanjith #MeToo
    மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ஆழ்வார்பேட்டையில் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி:- திரையுலகை கதை திருட்டு என்ற வி‌ஷயம் அச்சுறுத்துகிறதே?

    பதில்:- இதில் நிறைய வி‌ஷயங்கள் இருக்கின்றன. உண்மை பொய் இரண்டுமே இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். படைப்பாளி என்பவன் யார், உண்மையிலேயே அங்கிருந்து திருடினாரா என்ற கேள்வி இருக்கிறது.

    அப்படி திருடிய பின்பும் அதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வியும் இங்கிருக்கிறது. தான் எழுதிய கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிடல் யாரிடமும் இல்லை. தற்போது அந்தச் சூழல் உருவாகி எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது. இனி கண்டிப்பாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

    கே:- சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை பற்றி?

    ப:- ராஜலட்சுமி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை மேலோட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாதி, நிர்பயா விவகாரத்தில் இருந்த அரசியல் அழுத்தம் ராஜலட்சுமி கொலை வழக்கில் இல்லை.



    கே:- மீ டூ பற்றி உங்கள் கருத்து?

    ப:- வரவேற்கக்கூடிய ஒன்று, அது சரியா, தவறா என்பதைப் பின்னர் பார்க்க வேண்டும். பொது வெளிகளில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினை குறித்துப் பேசக்கூடிய ஒரு தளமாக மீ டூ பயன்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #PaRanjith #Plagiarism #MeToo #RajalakshmiMurder

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - ஆனந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் `பரியேறும் பெருமாள்' படத்தின் விமர்சனம். #PariyerumPerumalReview #Kathir #KayalAnandhi
    திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சாதாரண குக் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் நாயகன் கதிர். ஆங்கிலம் மீது அதீத ஈடுபாடு இல்லாத கதிருக்கு தாய்மொழி மீது பற்று அதிகம். தனது ஊர் மக்களை யாருமே மதிப்பதில்லையே என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்.

    ஊருக்காக போராட வேண்டுமென்றால், ஊருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டுமென்றால் வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஒருவர் கூற, தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவோடு அரசு சட்டக்கல்லூரியில் சேர்கிறார். எதையும் வெளிப்படையாக பேசும் கதிருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. அவரது வகுப்பில் படிக்கும் யோகி பாபுவுக்கும் ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. இந்த காரணத்தாலேயே இருவரும் நண்பர்களாகின்றனர்.



    அதே வகுப்பில் படிக்கும் ஆனந்திக்கு, கதிரின் வெளிப்படைத் தன்மையால் அவர் மீது அன்பு கலந்த பாசம் வருகிறது. மற்றவர்களை விட கதிருடன் பேச ஆவல் கொள்கிறார். கல்லூரியில் மட்டுமில்லாது வீட்டிற்கு சென்றாலும் கதிர் புராணமே பாடுகிறார் ஆனந்தி.

    இந்த நிலையில், ஆனந்தி வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும்படி கதிர் அழைக்கப்படுகிறார். தனது நண்பனிடம் ஒரு நல்ல துணியை வாங்கி போட்டுக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்லும் கதிருக்கு, அங்கு அவமரியாதை ஏற்படுகிறது. கயல் ஆனந்தியை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பிவிட்டு, அவரது தந்தையான மாரிமுத்து மற்றும் ஆனந்தியின் அண்ணன் கதிரை ஒரு அறையில் பூட்டிவைத்து அடித்து அவமானப்படுத்துகிறார்கள்.

    இதனால் மனம்நொந்து போகும் கதிர் அவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறார். ஆனால் விடாத கருப்பாக கதிருக்கு தொடர்ந்து தொல்லை அளிக்கும் அவர்களது தொல்லை தாங்காமல், ஒருநாள் கல்லூரிக்கு மதுஅருந்திவிட்டு வந்து மாட்டிக் கொள்கிறார் கதிர்.



    இந்த பிரச்சனை கல்லூரி முதல்வர் வரை செல்கிறது. அந்த கல்லூரி முதல்வர், தனது அனுபவத்தை கதிருக்கு அறிவுரையாக கூறி, கதிரை தேற்றிவிடுகிறார். மேலும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி கதிரை ஊக்கப்படுத்தி அனுப்புகிறார். 

    கல்லூரி முதல்வரின் ஊக்கம் கதிருக்கு புது உத்வேகத்தை கொடுக்க, புதிய கனவோடு வெளியே வரும் கதிர், தனது அப்பா உடைகளை களைந்து அவமானப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். மேலும் கதிரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்கள்.



    கடைசியில், தனக்கு எதிராக கிளம்பிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதே கல்லூரியில் படித்து கதிர் வழக்கறிஞர் ஆனாரா? தனது ஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா? ஆனந்தியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதிருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு படமாக பரியேறும் பெருமாள் அமையும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தான் அசிங்கப்படும் காட்சிகளில், அதாவது ஒவ்வொரு முறை அவமானப்படுத்தப்பட்டு மனதளவில் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மொட்டை வெயில்களில் கஷ்டப்பட்டு நடித்தது, அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். கருப்பி என்ற நாயுடன் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் மனதில் பதியும்படியாக இருக்கிறது.



    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை கயல் ஆனந்தி இன்முகத்தோடு வருகிறது. தன்னை சுற்றி அசம்பாவித சம்பவங்கள் பல நடந்தாலும் அதை அறியாமல், வெகுளித்தனமான நடிப்பால், ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். கயல் ஆனந்தியை இனிமேல் ஜோ ஆனந்தி என்று கூறும் அளவுக்கு அவரது கதாபாத்திரமும், நடிப்பும் இயல்பாக, பதியும்படியாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். 

    மற்றபடி மாரிமுத்து, சண்முகம், லிங்கேஸ்வரன், கராத்தே வெங்கடேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஊர் மக்களும் கலைஞர்களோடு ஒன்றி பயணித்திருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

    பரியேறும் பெருமாள் ஒரு அற்புதமான படைப்பு. கலைஞர்களின் நடிப்பு, இடம் தேர்வு, கேமரா என அனைத்திலும் வெற்றியடைந்த படம் என்று கூறலாம். அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். நடிகர், நடிகைக்கு இடையேயான காதலும் ஆத்மார்த்தமானதாக உள்ளது. சமீபகாலமாக வரும் படங்களில் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது இதையெல்லாம் தாண்டி, ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இப்படி இருக்க ஆண், பெண் இருவருக்கிடையேயான காதலை நாகரிகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள். எந்த இடத்திலும் சினிமாத்தனமாக இருப்பதாக உணரமுடியவில்லை. 



    தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை, அவர்களின் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநராக மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். பா.ரஞ்சித் தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல்களை பதிய வைத்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் அது எதிரொலித்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வர, என்ன தான் முயற்சி செய்தாலும், மேலே இருப்பவர்கள் அவர்களை கீழே தள்ள தான் முயற்சி செய்வார்கள் என்பதை பதிய வைக்கிறார் ரஞ்சித். ஆனால் அதுபற்றி அறியாதவர்களின் மனதில் அது தவறாக விதைகப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    படத்தை காட்சிப்படுத்திய விதம் அற்புதம், ஒளிப்பதிவில் ஸ்ரீதர் மெனக்கிட்டிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி இருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது. 

    மொத்தத்தில் `பரியேறும் பெருமாள்' சிறப்பான படைப்பு. #PariyerumPerumalReview #Kathir #KayalAnandhi

    கதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் நாளை ரிலீசாகவிருக்கும் நிலையில், பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் தான் என்று நடிகர் கதிர் கூறினார். #Kathir #PariyerumPerumal
    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு தயாராகி விட்டார் கதிர். அவர் அளித்த பேட்டி...

    ‘பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக மாரி செல்வராஜிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது. அது புதிதாக இருக்கிறது. இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது. திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. கடும் வெயிலில் பொட்டல்வெளி என்பதால் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும். அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பரவாயில்லை என உட்கார்ந்து விடுவேன்.



    படத்தில் கருப்பி என்ற நாய்க்கு அதிக முக்கியத்துவம் போல?

    ஆமாம், அதன் நிஜப்பெயரே கருப்பி தான். இயக்குனரின் அண்ணன் வீட்டு நாய். அது நம் நாட்டு இனத்தை சேர்ந்த வேட்டை நாய்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில் அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக் கொண்டதால் தான் நடக்கவே முடிந்தது.



    சிகை, சத்ரு என்று நீங்கள் கஷ்டப்பட்டு நடிக்கும் படங்கள் கூட ரிலீசில் பிரச்சினைகளை சந்திக்கின்றன. இது வருத்தம் இல்லையா?

    சினிமாவில் பின்புலம் மிக அவசியம். நான் எந்த பின்புலமும் இல்லாமல் கோவையில் இருந்து வந்தவன். என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும், படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான். ஆனால் அதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது. வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம். ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும். ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும். அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல் ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்.

    சினிமாவில் உங்கள் பாதை விஜய்யா? விக்ரமா?

    விஜய்சேதுபதி பாதை. #Kathir #PariyerumPerumal

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் முன்னோட்டம். #PariyerumPerumal #Kathir #KayalAnandhi
    நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

    இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

    இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ஸ்ரீதர், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, தயாரிப்பு - பா.ரஞ்சித், எழுத்து, இயக்கம் - மாரி செல்வராஜ். ராமிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகியவற்றை எழுதியவர்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்.

    மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் படக்குழு யோகி பாபு பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் நானும் கல்லூரி சென்று படிச்சிருக்கலாமோ என்று வருத்தப்பட்டதாக கூறினார். #PariyerumPerumal #YogiBabu
    யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் ஆகிவிட்டார். கதாநாயகனாக நடிக்கிறார் என்று செய்தி வந்தபோது அதை மறுத்தார். ஆனால் கூர்கா என்னும் படத்தில் கதையின் நாயகனாக நடிப்பது உறுதியாகி உள்ளது. 

    யோகிபாபு நடிப்பில் அடுத்து பரியேறும் பெருமாள் படம் வர இருக்கிறது. கதிர், ஆனந்தி இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் படம் உருவான விதத்தோடு யோகி பாபு படம் பற்றிய தனது கருத்துகளையும் கூறியுள்ளார். 



    “நான் பத்தாவது வரை தான் படித்துள்ளேன். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். 32 நாட்கள் கல்லூரியிலே வலம் வந்தது நானும் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. காமெடி காட்சிகள் மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் நடித்துள்ளேன். நடித்து முடித்து மானிட்டரைப் பார்க்கும்போது எனக்கும் இத்தகைய காட்சிகளில் நடிக்க வருகிறதே என்று நினைத்தேன். மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திரைக்கதையை உருவாக்கியிருப்பார் என நினைக்கிறேன். நெல்லை மக்கள் வீரமாகவும், பாசமாகவும் உள்ளனர். 

    படப்பிடிப்பின்போது அவர்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று கட்டிப்பிடித்து பாராட்டினார்” என்று யோகி பாபு கூறி உள்ளார். செப்டம்பர் 28-ஆம் தேதி பரியேறு பெருமாள் திரைப்படம் வெளியாக இருக்கிறது. #PariyerumPerumal #YogiBabu

    யோகி பாபு பேசிய வீடியோவை பார்க்க:

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கயல் ஆனந்தி முதல்முறையாக டப்பிங் பேசியுள்ளார். #PariyerumPerumal #Kathir
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. 

    இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
    முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். 

    இந்த படத்திற்காக முதல்முறையாக கயல் ஆனந்தி தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். கயல் ஆனந்தி சினிமாவில் நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், படத்தில் அவரது கதாபாத்திரம் பூரணத்துவம் அடைய வேண்டும் என்பதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் கேட்டதற்கு இணங்க, முதல்முறையாக தனது சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்க்கது.



    சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசையை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #PariyerumPerumal #Kathir #KayalAnanthi

    அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும் என்று பரியேறும் பெருமாள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராம் பேசினார். #PariyerumPerumal #PaRanjith
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இயக்குநர் ராம் பேசியதாவது,

    எனக்கு ஒரு கவிதையில், நான் வாசித்த காட்சி ஞாபகம் வருகிறது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.

    மாரி செல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். திருநெல்வேலி என்ற ஊரையும் எனக்கு அறிமுகப்படுத்தியவன் மாரி செல்வராஜ். என் பாட்டன் அப்பன் வாழ்ந்த அந்த திருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும், என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.



    இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.

    அம்பேத்கர் இழுத்து வந்த தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன், அதற்கான ஆரம்பமே இந்த பரியேறும் பெருமாள் என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது பா.இரஞ்சித் பேசினார். #PariyerumPerumal #PaRanjith
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் பேசுகையில்,

    “ தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். நான் கஷ்டப்பட்டு ஒரு தேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம். 



    எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை, முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா - மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது.

    என் மனைவி கொடுத்த தைரியத்தால் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் உருவாகி இருக்கிறது.. கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.



    யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.

    அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது" என்று உணர்ச்சிகரமாக பேசினார். #PariyerumPerumal #PaRanjith #Kathir

    ×