search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாம்"

    அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
    அல்லாஹ் மூன்று வகையான படைப்புகளை தன் ஆற்றலின் மூலமாக படைத்தான். அவற்றில் முதல் வகை படைப்புகள், சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிவரும் பிற கோள்கள்.

    அடுத்தது, மலக்குகள் மற்றும் ஜின்கள். மலக்குகளை ஒளியினாலும், ஜின்களை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ஜூவாலைகளாலும் இறைவன் படைத்தான்.

    மூன்றாவது, உயிரினங்கள். இதில் மனிதன், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என பூமியில் மட்டுமின்றி இந்த அண்டத்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் இறைவன் படைத்தான்.

    இந்த மூன்று படைப்புகளும் இறைவனின் கட்டளைப்படி அவனை வணங்கி, தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றன.

    இதன்படி, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, அவனை எந்த நிலையிலும் வணங்குபவர்களாகவும், தொடர்ந்து அவனைப் புகழ்ந்தவர்களாகவும் மலக்குகள் உள்ளனர். அந்த மலக்குகளில் சிறந்த மலக்குகளை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, சில குறிப்பிட்ட பணிகளை அவர்களிடம் கொடுத்து, அதனை செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.

    அத்தகைய சிறப்பு பெற்ற மலக்குகளில் குறிப்பிடத்தக்கவர் ஜிப்ரில் (அலை). நபிகளுக்கு ‘வஹி’யை (இறைச்செய்தியை) அறிவிக்கும் பணியை இவர் செய்தார்.

    மனிதர்களின் உயிரை கைப்பற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மலக்கின் பெயர் இஸ்ராயில். மறுமைநாள் ஏற்படுவதை அறிவிக்க ‘சூர்’ என்ற குழல் ஊதுபவராக இஸ்ராபீல் என்ற மலக்கும், காற்று மழையை கட்டுப்படுத்துபவராக மீக்காயீல் என்ற மலக்கும் இறைவனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாடம் மனிதன் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதும் பணியை கிராமுன், காத்தீபன் என்ற மலக்குகளிடமும், ஒரு மனிதன் மரணித்த பின் மண்ணறையில் அவனிடம் கேள்வி கேட்கும் பணியை முன்க்ர், நக்கீர் என்ற மலக்குகளிடமும் இறைவன் ஒப்படைத்துள்ளான்.

    மலக்குகளைத் தொடர்ந்து, ஜின்களை அல்லாஹ் படைத்தான். ஜின்களின் தலை வனாக ‘இப்லீஸ்’ என்ற ஜின்னை நியமித்து, அவனுக்கு பல சிறப்பு அம்சங்களைக் கொடுத்தான்.

    ஜின்களைத் தொடர்ந்து, முதல் மனிதரான ஆதமை களிமண்ணினால் அல்லாஹ் படைத்தான். அவரின் வழித்தோன்றலாய் ஆண்-பெண் கொண்ட மனித இனத்தை உருவாக்கினான். எல்லா மலக்குகளையும், ஜின்களையும் மனிதனுக்கு சிரம் பணிந்து வணங்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான்.

    அல்லாஹ்வின் ஆட்சியின் கீழ் இருந்த போதிலும், தன் கர்வத்தின் காரணமாக இதை ஏற்க ஜின்களின் ஒருவனான இப்லீஸ் மறுத்தான். இதையடுத்து, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி சொர்க்கத்தை விட்டு தூக்கி எறியப்பட்டான்.

    இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்கள் வருமாறு:-

    “காய்ந்தபின் ‘கன் கன்’ என்று சப்தம் கொடுக்க கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால், நிச்சயமாக நாமே உங்கள் மூலப் பிதாவாகிய முதல் மனிதனைப் படைத்தோம்” (திருக்குர்ஆன் 15:26).

    “அதற்கு முன்னதாக ஜின்களை கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்” (திருக்குர்ஆன் 15:27)

    “அவ்வாறே வானவர்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த சிரம் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர. அவன் சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்” (திருக்குர்ஆன் 15:30,31).

    “அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி, இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன? என்று கேட்டான்” (திருக்குர்ஆன் 15:32)

    “அதற்கு அவன், ‘காய்ந்த பின் சப்தம் கொடுக்க கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு, நெருப்பால் படைக்கப்பட்ட நான் சிரம் பணிய தயாரில்லை. ஏனென்றால் நான் அவனை விட மேலானவன்’ என்று கூறினான்” (திருக்குர்ஆன் 15:33).

    ‘தான்’ என்ற கர்வம், இப்லீசை அழிவுப் பாதையில் தள்ளியது. இறைக்கட்டளைக்கு மாறு செய்ததால் ‘சைத்தான்’ என்ற பெயர் அவனுக்கு கிடைத்தது.

    மனிதர்கள் போன்றே ஜின் வர்க்கத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் உண்டு. மனிதர் களுக்கென பூமியை இருப்பிடமாக படைத்த இறைவன் ஜின்களுக்கென இருப்பிடம் எதனையும் படைக்காமல் மரங்களிலும், மலை களிலும், வானவெளிகளிலும் சஞ்சரிக்க கூடியதாக அமைத்தான்.

    அதே சமயம் மனிதனை விட ஜின்களை அதிக ஆற்றலும், சக்தியும் கொண்டவர் களாக இறைவன் படைத்தான். காற்று, ஒளியை விட மிக விரைவில் தான் விரும்பிய இடங்களுக்குச் செல்லும் ஆற்றலை அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான்.

    மூஸா நபி காலத்திலும், சுலைமான் நபி காலத்திலும் ஜின்கள் மனிதர்களுக்கு கட்டுபட்டவர்களாக, அவர்கள் இடும் கட்டளைக்கு அடி பணிந்தவர்களாகவும் இருந்தனர்.

    மூஸா நபி காலத்தில் பரவலாகவும், வெளிப்படையாகவும் ஜின்கள் பற்றிய விவரங்களை மக்கள் அறிந்திருந்தனர். ஆனால், ஜின்களை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளவே பலரும் முயன்றனர். இறுதியில் அவர்களை தெய்வங்களாக வணங்கவும் முற்பட்டனர். இறை சக்தியில்லாத ஒன்றுக்கு இறைவன் அந்தஸ்த்தை கொடுத்து இணை வைத்தனர். அதனையும் திருக்குர்ஆன் மிக கடுமையாக கண்டித்தது. இதுபற்றிய திருக்குர்ஆன் வசனம் வருமாறு:-

    “எங்கள் இறைவனே, நீ மிக பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக அவர்கள் ஜின்னை வணங்கி கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள் என்று வானவர்கள் கூறுவர்” (திருக்குர்ஆன் 34:41).

    ஜின்களிலும் அல்லாஹ்வை அறிந்து கொண்ட நல்லவர்களும், மனித இனத்தை கெடுக்கும் தீமைகளைச் செய்யும் தீயவர்களும் இருந்தனர். அந்த நல்லவர்கள், திருக்குர்ஆன் வசனங்களை செவியுற்று தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியதாகவும் திருக்குர்ஆன் இவ்வாறு அறிவிக்கிறது:

    “நபியே! இந்த குர்ஆனை கேட்கும் பொருட்டு ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில், அவர்கள் தங்கள் மக்களை நோக்கி, ‘நீங்கள் வாய்பொத்தி இதைக் கேட்டுக்கொண்டு இருங்கள்’ என்று கூறினார்கள். இது ஓதி முடிவு பெறவே தங்கள் இனத்தாரிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்” (திருக்குர்ஆன் 46:29)

    அதுமட்டுமல்ல, ‘திருக்குர்ஆன் உண்மையான வேதம், அதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்’ என்று ஜின்கள் தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியது. அது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “எங்கள் இனத்தாரே, நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம். அது மூஸாவிற்கும் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது தனக்கு முன்னுள்ள வேதத்தையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும் நேரான வழியிலும் செலுத்துகிறது” (திருக்குர்ஆன் 46:30),

    “எங்கள் இனத்தாரே அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்” (திருக்குர்ஆன் 46:31).

    திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டு, அதன்படி நடந்து, நல்ல செயல்களைச்செய்யும் ஜின்கள் மற்ற ஜின்களுக்கு இந்த அறிவுரைகளை வழங்கி திருக்குர்ஆனை ஏற்றுக்கொண்டு, நேர்வழியில் வருமாறு வேண்டின.

    ஜின்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்ட நிகழ்வு ‘சூரத்துல் அல்ஜின்னு’ என்ற அத்தியாயத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்று செய்தியின் மூலம் ஜின் இனத்தாரிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் உண்டு. அவர்கள் அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
    நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.
    ‘அதிகாரம்’ என்பதை ‘ஆள்வது’ என்ற பொருளில் மட்டுமே மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அதிகாரம் என்பது ‘சேவை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு’ என்பதுதான் உண்மை.

    மக்களுக்காக சேவை செய்ய இறைவன் தேர்ந் தெடுத்துள்ளவரே தலைவராவார். அவர் ‘தலைவர்’ என்பதையும் தாண்டி ‘பொறுப்பாளர்’ என்பதே சரியானதாகும்.

    இவர்கள் மட்டுமல்ல, யார் யாரெல்லாம் யார் யாருக்கு சேவகம் செய்ய விதிக்கப்பட்டு இருக் கிறார்களோ அவரவர்கள் தங்கள் கடமையை பொறுப்பாக செய்ய வேண்டும்.

    இறையச்சம் கொண்ட ஒருவர், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரத்திற்காக பயன் படுத்த மாட்டார். மாறாக, சேவையாகவே அந்த வாய்ப்பை பயன்படுத்துவார்.

    ‘அதிகாரம்’ என்ற சொல் நாட்டை ஆள்பவர்களை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, குடும்ப தலைவர் களையும் குறிக்கும்.

    ‘நாடோ, வீடோ, எங்கு ஆள்பவராக இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்று மறுமை நாளில் கேள்வி கேட்கப்படும்’ என்று இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ‘நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித்தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளர் ஆவார். அவர் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவார். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு பணியாள் தன் எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான், அவன் அதுகுறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க. உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்’. (புகாரி)

    அதிகாரம் என்பது பொறுப்பை நிறைவேற்ற கொடுக்கப்பட்டுள்ள அமானிதமாகும். அதை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்தக் கூடாது.

    ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து மறுமைநாளில் விசாரிக்கப்படும் என்பதால், பொறுப்பை எடுத்துக்கொள்ள யார் ஆசைப்படுகிறார்களோ அவர் களுக்கு முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும் அறிவுரை என்னவெனில், ‘நீங்கள் ஆட்சிப்பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை(தரும் சுகங்)களிலேயே பதவி(ப்பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது தான்) மோசமானது’ (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), புகாரி).

    ஆட்சிப்பொறுப்பை நாமாக விரும்பி கேட்பதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) குறிப்பிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    ‘நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) அப்துர் ரஹ்மானே, ஆட்சிப்பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில் நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப் படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களது சத்தியத்(தை முறித்துவிட்டு, முறித்த)திற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள் என்று சொன்னார்கள்’. (புகாரி)

    நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.

    வி.களத்தூர் கமால் பாஷா.
    “நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)
    திருக்குர்ஆனில் ஆலஇம்ரான் என்ற மூன்றாம் அத்தியாயத்தில் மர்யம் (அலை) அவர்களைப் பற்றியும், ஈஸா (அலை) அவர்களைப் பற்றியும் மிக சுருக்கமாகச் சொன்னாலும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இம்ரான்-ஹன்னா வாரிசாக பிறந்தவர் மர்யம் (அலை). ஹன்னா, ஆண் பிள்ளை பெற விரும்பி அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்தார். அந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “இம்ரானுடைய மனைவி (கர்ப்பமான பொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘என் இறைவனே, நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக. நிச்சயமாக நீதான் (பிரார்த் தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன் கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்”.

    “அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘என் இறைவனே, நான் ஒரு பெண்ணையே பெற்றேன்’ என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட சைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்’ என்றார்”. (திருக்குர்ஆன் 3:35,36).

    பெண் குழந்தையைப் பெற்றெடுத்த போதும் அன்னை ஹன்னா தான் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டினார். அந்த நோக்கத்தின் அடிப்படையில் அந்த பெண் மகவை ‘பைத்துல் முகத்தஸ்’ என்ற ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். அப்போது அதன் தலைவராக இருந்த ஜக்கரிய்யா நபிகளிடம் மர்யம் (அலை) அவர்கள் ஒப்படைக்கப்பட்டார்.

    அக்கால வழக்கப்படி அந்த குழந்தை யார் பராமரிப்பில் விடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, எழுதுகோல்களை பெயர் சொல்லி ஆற்றில் வீசி எறிய வேண்டும். யார் பெயர் சொல்லி எறியப்பட்ட எழுதுகோல் எதிர்நீச்சலிட்டு வீசியவரிடமே திரும்பி வருகிறதோ, அவர் அந்தக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

    அப்படி செய்த போது ஜக்கரிய்யா நபிகளின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் மற்றவர்கள் அதை ஏற்க மறுத்ததால் மீண்டும் இரண்டு முறை எழுதுகோல் ஆற்றில் எறியப்பட்டது. மூன்று முறையும் ஜக்கரிய்யா நபிகளின் பெயருக்கே அனுமதி கிடைத்தது. அதன் அடிப்படையில் மர்யம் (அலை) ஜக்கரிய்யா நபியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    ஜக்கரிய்யா நபிகளின் பராமரிப்பில் மர்யம் (அலை) சீரும் சிறப்புமாக வளர்ந்து வாலிபப்பருவத்தை அடையவே, அல்லாஹ் ஈஸா நபியை படைக்க நாடினான். இறை வனின் இந்த கட்டளையை வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவில் தோன்றி அன்னை மர்யமிடம் சொன்னார்கள். அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “மர்யமே, நிச்சயமாக அல்லாஹ் தன் ‘ஆகுக’ என்ற ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு ஒரு குழந்தையை அளிக்க நற்செய்தி கூறுகிறான் என்றும், அதன் பெயர் அல்மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், இறைவனுக்கு மிக்க நெருங்கிய ஒருவராகவும் இருப்பார்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 3:45)

    இந்த செய்தி கேட்டு மர்யம் (அலை) அவர்கள் திடுக்கிட்டார். என்னை ஒரு ஆடவனும் தீண்டாதிருக்க எனக்கு எப்படி குழந்தை ஏற்படும். என் கன்னித்தன்மையின் புனிதம் கெட்டதாக போய் விடுமே. மேலும் எனக்கு களங்கமும், அவதூறும் வந்து சேருமே என்று பயந்தார்கள். வானவர் தலைவர் அவருக்கு ஆறுதல் சொன்னார். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “இப்படி தான் அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை படைக்க நாடினால் அதை ஆகுக என அவன் கூறிய உடனே அது ஆகி விடும்” என்று கூறினார்கள் (திருக்குர்ஆன் 3:47).

    அல்லாஹ்வின் அருள் வாக்குப்படி, அவன் நாடியபடியே நடந்தது. ஈஸா நபிகளும் பிறந்தார். ஊரார்கள் வசைபாடி தூற்றிய போது, ஈஸா நபிகள், தொட்டில் குழந்தையாக-பிறந்த பாலகனாக இருந்த போதே பேசத் தொடங்கினார்கள். தன் தாயின் புனித தன்மை பற்றி அத்தாட்சி கூறினார்கள்.

    பிறந்த பிள்ளை பேசும் அதிசயம் கண்டு, அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அல்லாஹ்வும் தன் அருள்மறையிலே ஈஸா நபியின் அதிசயப் பிறப்பை பற்றிச் சொல்லும் போது, ஆதியில் முதல் மனிதனாக ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் போது, களிமண்ணால் மனித உருவைச் செய்து அதில் அல்லாஹ்வின் மூச்சுக்காற்றை ஊதி முதல் மனிதனைப் படைத்தான். அதே பாரம்பரியத்தில் ஈஸாவை தகப்பனின்றி படைக்க நாடிய அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பத்தில் தனது மூச்சுக்காற்றை ஊதினான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே. அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து மனிதனாக ஆகுக என்று கூறினான், உடனே அப்படி ஆகி விட்டது” (திருக்குர்ஆன் 3:59).

    இப்படி ஈஸா நபியைப் படைத்து எல்லா ஞானங்களையும், மூஸா நபிக்கு அருளிய தவ்ராத் வேதத்தின் அறிவையும், அவர்களுக்கென பிரத்யேகமாக இன்ஜீல் என்ற வேதத்தையும் இறைவன் அருளினான்.

    ஈஸா நபிகள் தனக்கு அருளிய இன்ஜீல் என்ற வேதத்தை மக்கள் முன் போதித்து, ‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரிய இறைவன், நான் அவனால் அனுப்பப்பட்ட தூதுவன். எனக்கு எந்த இறை சக்தியும் கிடையாது, நான் இறைவனின் மகனும் அல்ல, என்னை நீங்கள் வணங்காதீர்கள். என் போதனைகளைச் செவிமடுத்து அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய இறைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணில்இருந்து பறவை போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது பறக்கும் பறவையாக ஆகிவிடும். பிறவி குருடனையும், வெண் குஷ்ட ரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும் உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்” என்று சொன்னார். (திருக்குர்ஆன் 3:49)

    “நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)

    இவ்வசனங்கள் நமக்கு சொல்வதெல்லாம் ஈஸா நபிகள் அல்லாஹ்வின் வல்லமையால் படைக்கப்பட்டார்களே தவிர அவர்கள் இறைவனும் அல்ல, இறைவனின் மகனும் அல்ல. அவர் மிக பரிசுத்தமானவர் என்பதைத்தான்.

    நான் அல்லாஹ்வின் தூதன் தான். மனிதர்களே, நேர்வழி பெற அல்லாஹ்வையே வணங்குங்கள் என்று அவர் கூறினார். இதன் மூலம் அல்லாஹ் ஏக இறைவன் என்பதை அவர் உண்மைப்படுத்தி இருக்கிறார்.
    இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது? இறைவன் கூறுகின்றான்...
    வணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர். பள்ளிவாசலில் குனிந்து எழும்புவது மட்டுமே வணக்கம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். அத்துடன் நமது கடமை முடிந்துவிட்டது என்று வேறுசிலர் கருதுகின்றனர்.

    இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது?

    இறைவன் கூறுகின்றான்:

    “நான் ஜின்களையும், மனிதர்களையும், என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை” (திருக்குர்ஆன் 51:56)

    இந்த வசனத்தைப் படித்தபின் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பமும் தவறான கற்பிதமும் தோன்றும். யோசித்துப் பார்த்தால்... இவற்றை மட்டும் நிறைவேற்றுவதற்கா இறைவன் நம்மைப் படைத்தான் என்ற ஐயமும் கூடவே எழும்.

    இவைதான் வணக்கம் என்று நாம் கருதும் இந்தத் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுக்கு அன்றாட வாழ்வின் ஒருநாளில் எத்தனை மணி நேரங்களை நாம் ஒதுக்குகின்றோம் என்பதை யோசித்துப் பார்த்தாலே, வணக்கம் என்பது இவை மட்டுமல்ல என்பது தெரியவரும்.

    உண்மையில் ஐந்து வேளை தொழுகைக்காக 24 மணி நேரத்தில் 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்..?

    மாதங்களைக் கணக்கிட்டால் 8.5 சதவீதம் மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்?

    ஜகாத் என்பதோ வருடத்தில் ஒரு முறை மட்டுமே. எனில் மீதி நேரம்..?

    வாழ்நாளில் ஒரு முறை தான் ஹஜ். எனில் மீதி நேரம்?

    ‘என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி உங்களை நான் படைக்கவில்லை’ என்ற இறைக்கூற்றின் அடிப்படையில் பார்த்தால்; 24 மணி நேரமும் தொழுது கொண்டோ, நோன்பு நோற்றுக்கொண்டோ அல்லது ஜகாத் கொடுத்துக்கொண்டோ அல்லவா இருந்திருக்க வேண்டும்?

    இதுநடைமுறை சாத்தியம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல. மாறாக அறிந்துகொள்ளுங்கள்...

    ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    மத, இன, மொழி வேறுபாடு பார்க்காமல் கவலை சூழ்ந்த மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    அமானிதம் பேணி, அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    நாவால் பிறர் மனதை நோகடிக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    தேவையற்றை கோபத்தையும் அவசியமற்ற ஆத்திரத்தையும் கட்டுப்படுத்தும்போதும் நீங்கள் வணக்கத்தில்தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

    லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உண்மையை உரக்கச் சொல்லும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    வியாபாரத்தின்போதும், கொடுக்கல் வாங்கலின்போதும் நீதியுடனும் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடனும் நடந்துகொள்ளும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உங்கள் வேலையையும் உங்களது பணியையும் ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் செய்யும்போதும், வாங்கும் ஊதியத்திற்கு உகந்த முறையில் உழைக்கும்போதும் நீங்கள் வணக்கத்தில் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உண்ணும் உணவும் அருந்தும் பானமும் அனுமதிக்கப்பட்ட வழிமுறையினூடாக இருந்தால் அதுவும் வணக்கமே.

    அணியும் ஆடையும், அத்தியாவசியப் பொருட்களும் அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதித்தவையாக இருந்தால் அதுவும் வணக்கமே.

    இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் உழைப்பதும் சிலபோது வணக்கத்தில் கட்டுப்படும்.

    வயலில் உழைப்பவரும், தொழிற்சாலையில் இயங்குபவரும், கடைவிரிக்கும் வியாபாரியும், அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியரும், துறைசார் நிபுணர்களும் தங்களுடைய பணிகளை வணக்கமாகவும், மறுமை வெற்றிக்கான ஆதாரமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

    ஆயினும் அதற்கென சில நிபந்தனைகள் உள்ளன.

    ஒன்று: இஸ்லாம் அனுமதித்த தொழிலாக அது இருக்க வேண்டும்.

    இரண்டு: நோக்கம் (நிய்யத்) நல்லதாக இருக்க வேண்டும்.

    மூன்று: செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அதைச் செவ்வனே செய்வதை இறைவன் விரும்புகின்றான்”. (பைஹகி).

    நான்கு: அந்தப் பணியில் இறை வரம்புகளை மீறக்கூடாது. (மோசடி, திருட்டு, துரோகம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது).

    ஐந்து: இறைக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அந்தப் பணி தடையாக இருக்கக் கூடாது.

    இந்த வரம்புகளை பேணும்போது யார் எப்பணி செய்தாலும் அப்பணியை வணக்கமாகவே இஸ்லாம் கருதுகிறது.

    பலசாலியான ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் கடந்து சென்றார். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர் மட்டும் இறைப் பாதையில் போராட முன்வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?” என்று கூறினர்.

    அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள்! தமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் இவரும் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். தமது வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். அடுத்தவரிடம் கையேந்தாமல் தமது சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைக்கச் செல்கின்றார் என்றால், அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். ஒருவர் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதுதான் இவர் சைத்தானின் பாதையில் இருக்கின்றார்”. (தபரானி)

    இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர, வெறும் தொழுகையையும் நோன்பையும் மட்டும் வைத்தல்ல.

    இந்த வணக்கங்கள் தான் மற்றவர்களைக் கவர்ந்திழுக்குமே தவிர, வெறும் பரப்புரைகளும், பேருரைகளும் அல்ல.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.
    ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அதன்மூலம் உலகில் மனித இனத்தைப் பல்கி பெருகச் செய்தான், அல்லாஹ். ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் பற்றிய அறிவை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவ்வப்போது அவனுடைய அதிகாரம் பெற்ற தூதுவர்களை அனுப்பி வைத்தான். கிட்டதட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் தூதுவர்களை இறைவன் அனுப்பி வைத்துள்ளான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    உலகின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு கூட்டத்தாருக்குமாக ஒரு தூதரை இறைவன் அனுப்பி வைத்தான். ஒவ்வொரு தூதரை அனுப்பும் போதும், அம்மக்களுக்கு அக்கால கட்டத்தில் பொருந்தக்கூடிய நல்வாழ்வியல் தத்துவத்தைப் போதித்து வந்தான். எந்த கட்டளையை எடுத்து செயல்படுத்த வேண்டும், எதனை தடுத்து, விடுத்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. அத்தனை நபிமார்களும் ஏதோ ஒரு கூட்டத்திற்காகவோ, ஏதோ ஒரு ஊருக்காகவோ அனுப்பப்பட்டவர்கள்.

    ஆது, சமூது, மத்யன் வாசிகள், எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் என்று பல கூட்டத்திற்கான நபிமார்கள் வந்தனர். ஆனால் இறுதி நபி முகம்மது (ஸல்) அவர்களை, உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நல்வழியை எடுத்துச் சொல்லும் நபியாக இறைவன் அனுப்பி வைத்தான். ‘முகம்மது நபியை படைக்கவில்லை என்றால், இந்த உலகத்தையே படைத்திருக்க மாட்டேன்’ என்று திருக்குர்ஆனில் ஓர் இடத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

    அப்படிப்பட்ட பூரணத்துவம் வாய்ந்த நபிகள் நாயகத்திற்கு திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அருளினான். அதில் சொல்லப்பட்ட அத்தனை கட்டளைகளும் மறுமைநாள் ஏற்படும் வரை எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.

    அதே சமயம் நபி பெருமானார் (ஸல்) அவர்கள், தன் சுய விருப்பத்தின் பேரில் சிலவற்றை வேண்டுமென்றோ, சிலவற்றை வேண்டாம் என்றோ ஒதுக்குவதற்கு கூட அவர்களுக்கு உரிமைத் தரப்படவில்லை. அது போன்ற சம்பவம் ஒன்று அண்ணலாரின் வாழ்வில் நடந்தது. அதுபற்றி காண்போம்...

    அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல திருமணங்களை முடித்தார்கள். அதற்கு காரணம் விவாகத்தின் மீதுள்ள விருப்பம் அல்ல. மாறாக, திருமணம் குறித்த சில சட்டதிட்டங்களை வழிமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர நபிகளாரின் அத்தனை மனைவிகளும் விதவைகள். சிலர் நபிகள் நாதரை விட அதிக வயதுடையவர்கள்.

    போர் காலங்களில் ஏற்படும் இழப்புகள், மற்றும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் பிரச்சினைகளால் தனித்து தவித்துக் கொண்டிருக்கும் பெண்களை ஆதரிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தில் தான் அத்தனை திருமணங்களை தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டார்கள். சட்டங்களைச் சொல்வது மட்டுமல்ல, சட்டங்களை வாழ்வில் ஏற்று வாழ்ந்து காட்டிய ஒரே மார்க்கப் போதகர் நபிகள் நாயகம் மட்டும் தான்.

    தன் வாழ்நாள் முழுவதும் அத்தனை மனைவிகளிடமும் ஒரே மாதிரியாய் அன்பும் பாசமும் கொண்டு அவர்களிடையே நீதி செலுத்தி வாழ்ந்தார்கள். மனைவியர், தனித்தனி வீடுகளில் இருந்தாலும் ஒவ்வொரு நாளை ஒருவருக்காக ஒதுக்கி அவர்களோடு தங்கி அவர்கள் சுக துக்கங்களில் பங்கேற்று வந்தார்கள்.

    அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அஸர் தொழுகைக்குப் பின் ஒவ்வொரு மனைவியரையும் சந்தித்து அவர்களோடு அளாவளாவி அன்றைய தினம் ஏதாவது முக்கிய பிரச்சினை இருந்தால் அதைத்தீர்த்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்கள்.

    அதுபோன்று ஒவ்வொரு நாளும் நபிகளார் அன்னை ஜைனப் பின் ஜஹல் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லும் போது அவர்களின் உபசரிப்பில் மகிழ்ந்தவர்களாக கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் பரிமாறப்படும் தேனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இது அன்றாட நிகழ்வாய் நடந்தேறி வந்தது.

    ஆனால் இது நபிகளாரின் மற்ற மனைவியரான, ஆயிஷா (ரலி), ஹப்ஸா (ரலி) ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. எனவே இருவரும் அதை எப்படியாவது தடை செய்து விட வேண்டும் என்ற கருத்தில் ஆலோசனை செய்தனர்.

    “நாயகம் உங்கள் வீட்டிற்கு வரும் போது நீங்கள் நபிகளிடம் ‘உங்கள் வாயிலிருந்து விரும்பத் தகாத மணம் ஒன்று வீசுகிறதே, என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று கேளுங்கள், என் வீட்டிற்கு வரும் போதும் அதே கேள்வியை நான் கேட்கிறேன். அதனால் அருமை கணவர் நம்மை திருப்திப்படுத்தும் நோக்கில், ஜைனப் (ரலி) வீட்டில் தேன் அருந்துவதை நிறுத்தி விடுவார்கள்” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அதன்படியே நபிகளாரிடம் கேட்கவும் செய்தார்கள். இதையடுத்து நபிகளார் இவ்வாறு கூறினார்கள்: ‘ஹப்ஸாவும் இதையே சொன்னார், ஆயிஷாவே நீங்களும் இதையே சொல்கிறீர்கள். நான் தேனருந்துவதால் உங்களுக்கு இப்படி ஒரு சங்கடம் விளைகிறது என்றால் நான் இனிமேல் தேன் அருந்த மாட்டேன்’ என்று சத்தியம் செய்து விட்டார்கள்.

    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டால் அனைவரும் அதனையே பின்பற்றுவர். தேனின் அற்புத குணத்தைப் பற்றி அல்லாஹ் சொன்னது அத்தனையும் வீணாகிடுமே. இந்த நிலையில் அதனை மறுத்து அல்லாஹ் உடனே இந்த இறைச்செய்தியை இறக்கினான்.

    “நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்ததை எடுத்துக் கொள்வது இல்லை என்று நீர் ஏன் சத்தியம் செய்து அதை ஹராம் என்று விலக்கி கொண்டீர். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகாகிருபையுடையவனும் ஆவான்” (திருக்குர்ஆன் 66:1)

    அதாவது, ‘நான் ஹலாலாக்கிய தேனை நபிகளார் எப்படி ஹராமாக்கி கொண்டு சத்தியம் செய்ய முடியும். உடனே அந்த சத்தியத்திற்கான பரிகாரம் செய்து சத்தியத்திலிருந்து மீண்டு விடுங்கள்’ என்று இதன் மூலம் நபிகளுக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “ஆகவே உங்கள் அந்த சத்தியத்திற்கு நீங்கள் பரிகாரம் கொடுத்து அதை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். அல்லாஹ் தான் உங்கள் எஜமானன் அவன் அனைவரையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.” (திருக்குர்ஆன் 66:2)

    கண்மணி நாயகம் சத்தியத்திலிருந்து மீண்டதும். தன் மனைவிமார்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட ரகசியத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டினான்.

    இதன் மூலம் நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.

    ஷரிஅத் சட்டதிட்டங்கள் மிக நுட்பமாக அல்லாஹ்வால் அருள்மறையில் அருளப்பட்டது. அதன் நுணுக்கங்களை ஆழமாக அறிந்து அதன்படி செயலாற்றும் போது வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டு. மாறு செய்யும் போது மறுமையில் நிச்சயம் தண்டனையுண்டு. இதனை முழுமையாய் உணர்ந்து வாழும் போது தான் ஒருவன் உண்மை முஸ்லிமாக முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருளி கிருபை செய்வானாக, ஆமின்.

    மு. முஹம்மது யூசுப்,
    உடன்குடி.
    நீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது.
    பழகுவதற்கு இனிமையானவன் மனிதன். ஒருவரது நற்குணங்கள் தான் அவனை நல்லவன் என்று இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சிலர் ஆசை அல்லது வறுமை காரணமாக சமநிலையை இழக்கத் தொடங்குகிறார்கள். அதுவே பின்னர் நேர்மையற்ற தன்மைக்கு அவனை அழைத்துச் செல்கிறது.

    நீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு), அதில் நேர்மையாக நீடித்திருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’.

    நமது வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் வேதம் திருக்குர்ஆன். அது உண்மையானது, உறுதியானது, நிலையானது, நீதியானது என்று முழுயாக நம்பிச்செயல்பட வேண்டும். அது தான் நமது வேதத்திற்கு நாம் செய்யும் முதல்கடமை.

    அந்த வேதம் சொல்கிறது, ‘நீங்கள் நபிகள் நாயகத்தையும் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும்’ என்று. அப்படியானால், குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் இருக்கிறார்கள் என்பது தானே பொருள்.

    ‘நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:20)

    உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (திருக்குர்ஆன் 8:1)

    வேதத்தின் மொழிக்கும், தூதரின் வழிக்கும் நேர்மையாக நாம் நடந்து கொண்டால் அடுத்து நாம் செய்ய வேண்டியது நம்மைச் சுற்றி வாழும் மக்களுடன் நேர்மையாக நடந்து கொள்வது தான்.

    ‘அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:7)

    நாம் எல்லோருடனும் நேர்மையாக நடந்து கொண்டால் தான் மற்றவர்களும் நம்மிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைத்தானே நாம் பதிலாகப் பெறமுடியும்.

    எனவே நமது சொல், செயல், உடை, நடை, பாவனை, கொடுக்கல், வாங்கல் என அனைத்திலும் நமது நேர்மையை வௌிப்படுத்திக் காட்டவேண்டும். எங்கே நாம் நேர்மை தவறுகிறோமோ அங்கே அநீதி ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறது. எனவே நாம் எப்போதும் மிகக்கவனமாகவே இருக்க வேண்டும்.

    ‘நம்பிக்கையாளர்களே, அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 5:8).

    நீதியும், நேர்மையும் என்றைக்கும் தவறவிட்டு விடக்கூடாத ஒன்று. அது நமது வாய்ச் சொல்லிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அது குறித்தும் திருக்குர்ஆன் இப்படி குறிப்பிடுகிறது:

    ‘நம்பிக்கையாளர்களே, நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான சொற்களையே கூறுங்கள். அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து, உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்து விட்டார்’. (திருக்குர்ஆன் 33:70,71)

    நேர்மையான ஒரு சொல் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள் என்னென்ன என்பதை இவ்வசனம் தௌிவாக விளக்கிக் காட்டுகிறது. முக்கியமாக நமது காரியங்கள் அனைத்தும் சீர்பெறும், நமது குற்றங்கள் மன்னிக்கப்படும்,

    நேர்மை எனும் குணம் எங்கெல்லாம் இணைந்திருக்கிறதோ அங்கெல்லாம் நிம்மதி மலர்கள் நீடித்து மணம் பரப்புவதை கண்கூடாகக் காணலாம். இந்த உலகில் இறைத்தூதர்கள் பலர் இடைவிடாது வந்து சென்றதுக்கு முக்கியக் காரணம் நேர்மை எனும் மனிதப்பண்பு அவனை விட்டும் அறுந்து போய்விடக்கூடாது என்பதற்காகத் தான். ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை (திருக்குர்ஆன் 10:47).

    “மத்யன் (எனும் ஊர்)வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘என்னுடைய மக்களே, அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையும் நிறுவையையும் குறைத்து ஏன்மோசம் செய்கிறீர்கள்?. அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயபடுகிறேன்”.

    “என்னுடைய மக்களே, அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள்”.

    “நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் லாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ் தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)” என்றும் கூறினார். (திருக்குர்ஆன் 11:84-86)

    இன்றைக்கு நம்மைச் சுற்றி நடக்கும் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?, பொய்யும்-புரட்டும், லஞ்சமும்-மோசடியும், அநியாமும்-அட்டகாசமும், கொள்ளையும் திருட்டும், ஊழலும்-ஏய்ப்பும் என எங்கு திரும்பினாலும் நேர்மையற்ற நிலை தான் காணப்படுகிறது. இதை நாம் சீர் செய்ய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் தான் நம்மிடம் இருந்து தான் தொடங்கி வைக்க வேண்டும்.

    எந்தவொரு நற்காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும், அல்லது தீயதொரு காரியத்தை விடுவதாக இருந்தாலும் அது நமது மனஉறுதியில் தான் நிலைத்திருக்கிறது. எண்ணம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பார்கள். அதுதான் உண்மை. நேர்மைப் பண்பு என்பது வௌியிலிருந்து வருவதல்ல, நம் மனதுக்குள்ளிருந்து தோன்றுவது.

    நம் மனதை எப்போதும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் வாழ்க்கை என்றென்றைக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஒருவனின் வாழ்க்கை நலமானதாக அமைந்து விட்டால் அதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.

    வாருங்கள், நேர்மைப் பண்பைப் போற்றுவோம், நேர்மையின்மையை மாற்றுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது.
    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது. இதனையொட்டி கொடி மரங்கள் அழைக்கப்பட்டு பள்ளி வாசலுக்கு வந்தன.

    பின்னர் பொது கொடிமரம், சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இன்னிசை முழங்க ஒயிலாட்டத்துடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது.

    அத்துடன் மற்ற கொடிமரங்களும் ஒன்றாகவே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
    ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது.
    இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸாத் (ரலி). இவர் போர் தந்திரங்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற வீரர். குறிபார்த்து அம்பெய்துவதில் மிக வல்லமை பெற்றவர்.

    உஹது போரில் அண்ணல் எம்பெருமானாரை பாதுகாக்கும் பொறுப்பு ஸாத் (ரலி) மற்றும் அபுதர் (ரலி) ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

    நபி (ஸல்) அவர்களை பாதுகாக்கின்ற அந்தப் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டே எதிரிகளையும் எதிர்த்துப் போரிட்டு வெட்டி வீழ்த்தினார் ஸாத் (ரலி). முடிவில் வெற்றிக்கனியையும் பறித்து அண்ணலாரின் கரங்களில் பரிசாய் அளித்தார்கள்.

    அதுமட்டுமல்ல, நபி (ஸல்) அவர்களால் சுவனத்துப்பூக்கள் என்று சுபச்செய்தி சொல்லப்பட்ட பத்து பேர்களில் ஸாத் (ரலி) அவர்களும் ஒருவர். அந்த பெருமை மிகு சிறப்பு கொண்டிருந்தும் இஸ்லாம் விதித்த வழிமுறைகளில் சிறிதும் மாற்றம் இன்றி வாழ்ந்து வந்தார்.

    ‘இறைவா, ஸாத் (ரலி) அவர்களின் நியாயமான பிரார்த்தனைகளை நீ ஏற்றுக்கொள்வாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதன்காரணமாக ஸாத் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் பல கட்டங்களில் அவர் செய்த பிரார்த்தனைகள் இறைவனால் உடனே ஒப்புக்கொள்ளப்பட்டு அத்தாட்சிகள் வெளியானதை அன்றைய காலத்தில் வாழ்ந்த அத்தனை நபித்தோழர்களும் அறிந்திருந்தனர்.

    அதனால்தான் ஸாத் (ரலி) அவர்களின் துஆவிற்குப் பயந்து கொண்டிருந்தனர். இஸ்லாமிய கொள்கைகளுக்கோ, கோட்பாடுகளுக்கோ முரண்பாடாக நடக்க முயன்றால் அது ஸாத் (ரலி) அவர்களுக்கு தெரியும் பட்சத்தில் நம்மை சபித்து விடுவாரோ என்று அஞ்சி அதனை விட்டும் தவிர்த்து வாழ்ந்தனர். இந்த சிறப்பும் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட மாபெரும் அருட்கொடையாகும்.

    இஸ்லாமிய படையினர் மாபெரும் வெற்றி பெற்ற கன்தக் போரின் மூலம் கிடைத்த பொருட்களை நபிகளாரிடம் கொண்டு வந்திருந்தனர். அதில் ஒரு வாளும் இருந்தது. போரில் கிடைத்த பொருட்கள் பங்களித்து கொடுப்பதற்கு முன்பாகவே அதனை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு பெற்றுவிட வேண்டும் என்று ஸாத் (ரலி) விரும்பினார். இதுபோல மற்ற நபித்தோழர்களும் தனக்கென தான் விரும்பிய பொருட்களை தருமாறு நபிகளாரிடம் வேண்டி நின்றார்கள்.

    அப்போது ஸாத் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், “யா! ரஸூலுல்லாஹ், நான் அம்பெய்வதில் வல்லவன். இருந்தும் வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்க நாடுகிறேன். போரில் கிடைத்த பொருளில் இந்த வாளை எனக்கு அன்பளிப்பாக தருவீர்களா?” என்று வினவினார்.

    ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து, “ஸாதே அந்த வாளை இருந்த இடத்திலேயே வைத்துவிடுவீராக” என்றார்கள்.

    அந்த வாளை இழக்க தயாரில்லாத தன் மனதின் தூண்டுதலால் மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் தன் ஆசையை வலியுறுத்தினார். அப்போது நபி (ஸல்) அவர்களின் குரலில் கடுமையை உணர்ந்தார் ஸாத் (ரலி).

    நபித்தோழர்களின் ஆசையையும் பிடிவாதத்தையும் விரும்பாத இறைவனும் ‘வஹி’ எனப்படும் இறைச்செய்தியை இறக்கினான்.

    “(நபியே!) ‘அன்ஃபால்’ (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் யாதொன்றையும் மறைத்துக்கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்”. (திருக்குர்ஆன் 8:1).

    இந்த இறைச்செய்தியை அறிந்த ஸாத் (ரலி) பயந்து நடுங்கியது மட்டுமில்லாமல் தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு, ஷைத்தானுடன் கை கோர்த்துக் கொண்ட நிலையை எண்ணியும் வருந்தினார்கள்.

    இது, நபித்தோழர்களுக்கு பொதுவாக இறக்கப்பட்ட வசனமாக இருந்தாலும் ஸாத் (ரலி) தனக்காக அது இறக்கப்பட்டதாக எண்ணி பயந்தார்கள்.

    ஒரு சந்தர்ப்பத்தில் ஸாத் (ரலி) அவர்கள் மிகவும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நோயின் கடுமையைக் கருதி தனக்கு மரணம் நெருங்கி விட்டதோ என்று கவலை கொண்டார். மேலும் அப்போது தனக்கு ஆறுதல் சொல்ல வந்த நபி (ஸல்) அவர்களிடம் “நபியே! ரசூலே! எனக்கு மரணம் நெருங்கிவிட்டதோ என சந்தேகிக்கிறேன். அதற்கு முன்னால் என் செல்வம் முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விடுகிறேன்” என்றார்கள்.

    ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

    ஆனால் ஸாத் (ரலி) அவர்கள் விடவில்லை, “என் செல்வத்தில் பாதியையாவது அல்லாஹ்வின் பாதையில் செலவிடலாமா?” என்று மீண்டும் வினவிய போது அதையும் அண்ணலார் மறுத்து விட்டார்கள்.

    “அப்படியானால் என் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியையாவது இறைவனுக்கு பொருத்தமான காரியத்தில் செலவிடலாமா?” என்று அடுத்து கேட்டபோது அண்ணலார் அவர்கள் அமைதி காத்தார்கள்.

    இந்த சந்தர்ப்பத்திற்குப் பிறகு தான், ‘ஒருவன் தன் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியை தான தர்மங்களில் செலவிடலாம். தன் தேவைக்குப் போக மீதியை குடும்பத்தினருக்காக விட்டுச் செல்லலாம்’ என்ற நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டது.

    அண்ணலாரின் மறைவிற்கு பின்பும் கூட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னால் உமர் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் ஸாத் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் கொள்கையில் உறுதி கொண்டு கலீபாக்களுக்கு உறுதியான துணையாக இருந்தார்கள்.

    ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது. அந்த வரிசையில் காதிஹிய்யா ஜலூலஸ் போர்களின் வெற்றியும் அடங்கும்.

    வீரம், வேகம், விவேகம், துடிப்பு, ஆர்வம், துணிவு, தியாகம், திட்டமிடும் நுண்ணறிவு போன்ற அருங்குணங்களைக் கொண்டவர் ஸாத் (ரலி). இஸ்லாத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அந்த பெருமகனார் தனது 82 வது வயதில் மரணம் அடைந்தார்.

    ஸாத் (ரலி) அவர்கள் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிரீன்களில் இறுதியாக மரணம் எய்தியவர், நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்த நபித்தோழரும் ஆவார். அவரைப்போன்ற நபித்தோழர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி வாழும் நல்லறிவை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் புரிவானாக, ஆமின். 
    “உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திரும்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள்.
    கடன் இல்லாமல் வாழவே முடியாது என்ற உலகில் வாழ்ந்து வருகிறோம். பணம் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி, எல்லோருமே கடனுடனே தங்கள் வாழ்வை பிணைத்துக்கொள்கிறார்கள்.

    திருமணத்திற்கு, தொழில் தொடங்க, தொழிலை விரிவுபடுத்த, அன்றாடத் தேவைகளுக்கு, வீடு கட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, அவசர மருத்துவ செலவுகளுக்கு என பல்வேறு தேவைகளுக்கு கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    எப்படி தண்ணீர் இல்லாமல் வாழ முடியாதோ, அதுபோல் கடன் இல்லாமலும் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பலருக்கு கடன் வாங்கும்போது இருக்கும் அக்கறை, திருப்பி செலுத்துவதில் இருப்பதில்லை. அதனாலேயே பலர் கடன் கொடுக்க தயங்குகின்றனர். பல கடைகளில் ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று எழுதியிருப்பதை பார்த்திருக்கலாம். கடன் கொடுத்து சிக்கிக்கொண்டதின் விளைவால் வந்ததுதான் அந்த வாசகம். கடன் கொடுக்கல்-வாங்கலில் பிரிந்த எத்தனையோ குடும்பங்கள் உண்டு, நண்பர்கள் உண்டு.

    கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதற்கு கடன் உதவுகிறது. ஆனால் கொடுத்த கடனை திருப்பி வாங்குவதில் உள்ள பிரச்சினையால் கடன் கேட்டாலே பலரும் அலறியடித்து ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கடன் ஓர் அமானிதம் ஆகும். நம்பிக்கை, நேர்மை, நீதி, உண்மைத்தன்மை ஆகியவற்றுடன் நடந்துகொள்வது அமானிதம் என்ற சொல்லின் பொருள். இறையச்சம் கொண்ட ஒவ்வொரு மனிதரும் இந்த அமானிதத்தை தங்கள் சொல்லிலும், செயலிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

    கடனும் அப்படிப்பட்ட அமானிதம் தான். ஆனால் அந்த விஷயத்தில் பலர் அலட்சியமாக இருக்கிறார்கள். கடன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் திருக்குர்ஆனின் நீண்ட வசனம் கடனைப் பற்றியே பேசுகிறது. அந்த வசனம், கடன் பற்றிய சட்டதிட்டங்களை மிக விளக்கமாக குறிப்பிடுகிறது.

    கடன் விஷயத்தில் போதிய புரிதல் பலரிடம் இல்லை. தன்னிடம் பணமிருந்தாலும் கடனை அடைக்காமல் இழுத்தடிப்பதில் பலருக்கு பேரானந்தம். “வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த அநியாயத்தைத்தான் சிறிதுகூட சிந்திக்காமல் பலரும் செய்து வருகிறார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது அவர் சற்று கடுமையான வார்த்தைகளில் பேசினார். இதைக்கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபிகள் நாயகம் “அவரை விட்டுவிடுங்கள். பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு” என்று கூறினார்கள். (புகாரி).

    கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்கும்போது உரக்க பேசினாலும், கடன் வாங்கியவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கடன் கொடுத்தவர் பொறுமையாக கேட்கிறார். கடன் வாங்கியவர் கோபமாக பதிலளிக்கிறார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார்கள். ஏனென்றால் கடனை திருப்பி கொடுக்காமல் இருப்பது மன்னிக்க முடியாத பாவமாக இருப்பதால். இதனால் தான் கடன் விஷயத்தில் இறைவனிடம் அதிக பாதுகாப்பை வேண்டினார்கள்.

    “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

    இதைச் செவியுற்ற ஒருவர், நபிகள் நாயகத்திடம் “இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்கு காரணம் என்ன?” என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள், “மனிதன் கடன்படும்போது பொய் பேசுகின்றான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கின்றான்” என்று பதிலளித்தார்கள் (புகாரி).

    பொய் சொல்வதும், சொன்ன தேதிக்கு கடன் பணத்தை தராமல் தனது வாக்குறுதியை மீறுவதும் சகஜமானதாக ஆகிவிட்டது. கடன் வாங்கும்போது திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கொண்டிருக்க வேண்டும். நிறைய நபர்கள் ‘வாங்குவோம், திருப்பி கேட்டா பேசிக்குவோம்’ என்ற எண்ணத்துடனே இருக்கிறார்கள். கடனை அடைப்பதில் துளி அக்கறைகூட அவர்களிடம் இருப்பதில்லை. அப்படி ஏமாற்றி சேர்க்கும் அந்த செல்வம் நீடித்து நிலைக்காது என்பதை ஏமாற்ற நினைப்பவர்கள் உணர்வது நல்லது.

    ‘மக்களின் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை எவன் கொண்டிருக்கிறானோ, அவன் சார்பாக அல்லாஹ்வே திருப்பி செலுத்துவான். எவன் ஏமாற்ற நினைக்கிறானோ, அதை அழித்துவிட எண்ணுகிறானோ அவனை அல்லாஹ்வே அழித்துவிடுவான்’ என்ற எச்சரிக்கையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

    கடன் இருப்பவர்களுக்கு ஜனாஸா தொழுகையைகூட நபிகள் நாயகம் அவர்கள் நிறைவேற்ற முன்வரமாட்டார்கள். ஒருமுறை தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?” என்று கேட்கிறார்கள். “இல்லை” என்றனர் நபித்தோழர்கள். அவருக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது “இவர் கடனாளியா” என்று கேட்டார்கள் நபிகள் நாயகம். நபித்தோழர்கள் “ஆம்” என்றனர். “அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) “இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு” என்று கூறியதும் அவருக்கு நபிகள் நாயகம் தொழுகை நடத்தினார்கள் (புகாரி).

    கடன் என்பது மன்னிக்க முடியாத பாவமாகும். அதனால்தான் கடனாளியின் ஜனாஸா தொழுகையை நடத்தக்கூட நபிகள் நாயகம் மறுத்தார்கள். கடன் என்பது ஒருவரை மட்டும் பாதிக்கச் செய்யாது. தனக்கு உதவிய மற்றொருவரையும் அது பாதிக்கச் செய்கிறது. அவர் மன்னிக்காத வரை அதன் பாவத்தை சுமந்துதான் ஆக வேண்டும்.

    இறைவனின் வழியில் போரிட்டு கொல்லப்படுபவர்களுக்கு ‘சஹீத்’ என்ற அந்தஸ்து கிடைக்கும். ‘அவனுடைய ஒரு சொட்டு ரத்தம் கீழே விழுவதற்குள் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்பது அதன் சிறப்பு. ஆனால் அந்த சஹீதிற்குகூட எல்லா பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், கடனிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. கடனை அடைக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

    “உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திரும்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள். மனிதர்களில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றால் கடன் விஷயத்தில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். தேவைக்கு எப்படி அக்கறையுடன் கடன் பெறுகிறோமோ அதனைவிட அதிக அக்கறையை கடனை திருப்பி செலுத்துவதிலும் காட்டிட வேண்டும். அப்படி ஒரு அக்கறையை காட்டுபவனே சிறந்தவன்.

    வி.களத்தூர் எம்.பாரூக்.
    எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்ற அல்லாஹ், இணை வைத்தலை மன்னிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பாடமாய் சொல்லித் தருகின்றான்.
    நபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை, தன் பெற்றோரை விட மிக அதிகமாக நேசித்தவர், அதிகம் பாசம் கொண்டவர்- அஷ்ரத்துல் முபஷ்ஷரா ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

    நபிகளாரின் ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கிய காலத்தில் ஆரம்ப நிலையிலேயே தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்ட நபித்தோழர்களில் முதன்மையானவர், மிக முக்கியமானவர் ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி). அதுபோல, நபி (ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

    மக்கா மாநகரில் தன் செல்வத்தாலும், செல்வாக்காலும் மிகவும் பிரசித்தி பெற்றவர் ஸாத் (ரலி). இஸ்லாத்தில் இணைந்த அந்த இளமைப் பருவத்திலேயே மிகவும் துடிப்போடும், துணிவோடும் ஏக இறைத் தத்துவத்தை எடுத்தியம்புவதில் வல்லமை பெற்றிருந்தார்.

    பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால் அவருக்கு வெளியில் எதிர்ப்புகள் அவ்வளவு கடுமையானதாக இல்லை. அதே சமயம் சொந்த குடும்பத்தில் அவர் சொல்லொண்ணா வேதனைகளையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் கடைப்பிடித்து வந்த ஏக இறைக்கொள்கைக்கு மாற்றமாக அவரது பெற்றோர்கள் இருந்தனர்.

    தன் பெற்றோர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்த காரணத்தால் அவர்களை கடிந்து கொள்ள மனமின்றி, அதே சமயம் அண்ணலாரின் சமதர்ம மார்க்கத்தையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தார். ஒரே வீட்டில் தன் பெற்றோருடன் வசித்தாலும், தாமரை இலை தண்ணீர் போன்று ஒட்டுதல் இருந்தும் இல்லாமல் ஒரு விசித்திர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

    ஸாத் (ரலி) தன் தாயார் மீது அளவு கடந்து பிரியம் வைத்திருந்தார். தாயாரும் தன் அன்பு மகனை எந்த நிலையிலும் இழந்து விட மனமில்லாதவராக இருந்தார்.

    இதனால், மகனை பல முறை கண்டித்தார். ஆனால், ஸாத் (ரலி) ஈமானை இழக்கத் தயாராக இல்லை.

    ‘ஸாதே! உன்னைப் பெற்றெடுத்த தாய் சொல்கிறேன். நம்முடைய முன்னோர்கள் நமக்கு செல்வங்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. நம்முடைய குலப் பெருமையையும் அவர்கள் வழிபட்ட வணக்க வழிபாடுகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பாதையிலிருந்து திரும்பி நீ உனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொள்ளலாமா? அது நம் குடும்ப பெருமைக்கு இழுக்கையல்லவா ஏற்படுத்தும். நீ சொல்கின்ற புதிய மார்க்கத்தை விட்டு நீ எங்களோடு இணையவில்லை என்றால் இந்த கணம் முதல் நான் உண்ண மாட்டேன், பருக மாட்டேன். என் உயிர் போயினும் சரியே. நான் உன்னை நம் பழைய மார்க்கத்தில் இணைக்காமல் விட மாட்டேன், இது சத்தியம். அப்படி எனக்கு ஏதாவது ஏற்படுமாயின் தாயைக் கொன்ற தனயன் என்ற பழிச்சொல் உன் வாழ்நாள் முழுவதும் உன்னை இழிவுபடுத்தி கொண்டிருக்கும். அந்த அவப்பெயரை உன்னால் எந்த நிலையிலும் துடைத்தெறிய முடியாது’ என்று கூறிவிட்டு தன் உண்ணா நோன்பை தொடங்கினார்.

    சில நாட்கள் கழிந்தன. தாயாரின் பிடிவாதம் கொஞ்சம் கூட தளர்ந்த பாடில்லை. ஸாத் (ரலி) அண்ணலார் மீது கொண்ட அன்பும், இஸ்லாமிய மார்க்கம் மீது கொண்ட பற்றும் தாய்ப்பாசத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் அவர் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டார். இருந்தும் தாய் மீது இருந்த அன்பும் பாசமும் அவரை வேதனை அடையச் செய்தது.

    ‘அன்னையே! உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். என் பொருட்டால் நீங்கள் உங்களை வருத்திக் கொள்வதில் எந்தவித பயனும் விளையப் போவதில்லை. உங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஏதாவது கொஞ்சமேனும் உண்ணுங்கள்’ என்று ஸாத் (ரலி) தன் தாயிடம் கெஞ்சினார்.

    ‘நீ நம்முடைய பழைய மார்க்கத்திற்கு வரவேண்டும், இல்லையெனில் என் உயிர் இப்படியே பிரிய வேண்டும், எதை விரும்புகிறாய் என்பதை நீயே முடிவு செய்து கொள்’ என்று கூறி அவரது தாயார் மறுத்துவிட்டார்.

    தாயாரின் உறுதியை கண்ணுற்ற ஸாத் (ரலி), “அன்பு தாயே! என் நபி மீது நான் என் அன்னையை விட ஏன் என் உயிரைவிட அதிக அன்பு செலுத்தவில்லையானால் நான் முழுமை பெற்ற மூமினாக முடியாது. அந்த தத்துவத்தை தான் அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். நீங்கள் தவறான வழியில் இருப்பதை கண்ணுற்றும் உங்களை சத்தியத்தின் பக்கம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் நாளை மறுமையில் நானும் இறைவன் முன் குற்றவாளியாகத்தான் நிற்க வேண்டியதிருக்கும். ஆனால் நீங்களோ என்னை இறைவனுக்கு இணை வைத்தலின் பக்கம் அழைக்கிறீர்கள், நான் எப்படி அதற்குச் செவிசாய்க்க முடியும்? அல்லாஹ் மீது ஆணையாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். உங்களுக்கு ஓர் உயிர் என்ன? ஓராயிரம் உயிர் இருந்து அவை ஒவ்வொன்றாய் உங்களை விட்டுப் பிரிந்து சென்றாலும் நான் கொண்ட ஈமானை விட்டுவிட மாட்டேன்” என்றார்.

    மேலும் தொடர்ந்து கூறும்போது, “தாயே, இது கடினமான செயல் தான். இருந்தாலும் நாளை மறுமையில் என் தாயை நரகத்திற்கு கொண்டு செல்லும் மாபெரும் கொடிய தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டியது என் தலையாய கடமை. அதனை ஒப்பிடும் போது இந்த தண்டனையை நான் மிக எளிதாகவே கருதுகிறேன்” என்றார்.

    ஸாத் (ரலி) கடைப்பிடித்த இந்த உறுதியைக் கண்டு அல்லாஹ் அண்ணலாருக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்புகிறான்.

    “எனக்கு நன்றி செலுத்து, உன்னுடைய தாய்-தந்தைக்கும் நன்றி செலுத்து. எனினும், இறைவன் என்று நீ அறிந்து கொள்ளாத ஒரு பொருளை, எனக்கு இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்பந்தித்தால், அவ்விஷயத்தில் நீ அவர்களுக்கு கீழ்படிய வேண்டாம். ஆயினும் இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு நிதானமாக உதவி செய்து அன்பாக நேசித்து வா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியே நீ பின்பற்றி நட” (திருக்குர்ஆன் 31:14,15).

    தன் பொருட்டால் இறக்கப்பட்ட இந்த இறைச்செய்தியை நபிகள் மூலம் கேள்வியுற்றதும் ஸாத் (ரலி) அகமகிழ்ந்து போனார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது ஈமானின் பிடிப்பு மேலும் அதிகமானது.

    திருக்குர்ஆனில் தன்னை எங்கெல்லாம் வணங்கச் சொல்கின்றானோ, அங்கெல்லாம் பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று பல இடங்களில் இறைவன் கட்டளையிட்டு இருக்கின்றான். அப்படிப்பட்ட கட்டளை அமுலில் இருக்க, ஸாத் (ரலி) தனது பெற்றோருக்கு அடிபணியவில்லை என்பதை குற்றமாக கருதாமல், அவரது செயலை நியாயப்படுத்தி, அதன் மூலம் உலக மக்களுக்கும் ஒரு படிப்பினையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.

    எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்ற அல்லாஹ், இணை வைத்தலை மன்னிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பாடமாய் சொல்லித் தருகின்றான்.

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
    உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம்.
    உயிர் நம் உடலில் எங்கே இருக்கிறது? அது எப்படி தான் இருக்கும்? என்பதை அறிய நாமெல்லாம் மிக ஆவல் கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.

    உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் உயிர் இப்படித் தான் இருக்கும் என்று விஞ்ஞானத்தால் கூற இயலவில்லை.

    கண்ணுக்கு தெரிகின்ற நம் உடலுக்கு கண்ணுக்கு தெரியாத உயிரே ஆதாரமாக நின்று செயல்படுகிறது.

    ‘உயிர் (ரூஹ்) என்றால் என்ன?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவிய போது அண்ணலாருக்கு இறைவசனம் இவ்வாறு அருளப்பட்டது.

    ‘நபியே, ரூஹை (உயிரைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (நீர் கூறும்) ரூஹ் (உயிர்) என்பது என்னுடைய இறைவனின் கட்டளையாகும். அதைப்பற்றிய அறிவுத்திறன் சிறிதளவே அன்றி, (மிகுதியாக) நீங்கள் வழங்கப்பட்டவர்களாக இல்லை (என்று)’. (திருக்குர்ஆன் 17:85)

    உயிரைப் பற்றிய திருக்குர் ஆன் கூறும் ரகசியம் இது தான், ‘உயிர் என்பது இறைவனின் கட்டளை என்பதேயாகும், அதை உணர்ந்து கொள்ளும் ஞானம் பொதுவாக மனிதர் களுக்கு மிகக்குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அறிவை கொண்டு இறையருளால் யார் அதனை உணர்ந்து கொள்கிறார்களோ அவர்களே பாக்கியம் பெற்றவர் களாக ஆகிவிடுகிறார்கள்’.

    அரசு இடும் ஒரு கட்டளை உடனே ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கிவிடுகின்றது. காசோலையில் ஒரு கையொப்பம் தான் அக்காசோலை மதிப்பு மிக்கதாக மாற்றுகின்றது.

    கட்டளைகளைக் கொண்டுதான் உலகில் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதைப்போல இறைவனின் கட்டளைதான் உடலோடு உயிரை பிணைத்து வைக்கிறது. அக்கட்டளை அவனால் வாபஸ் பெறப்படும் போது உடலை விட்டும் உயிர் விலகி, அது உடலை செயல் இழக்கச்செய்து விடுகிறது.

    இறைகட்டளையால் உயிர் வருவதைப் போன்றே, அது விலகிச்செல்வதும் அவனது கட்டளையால் தான் நடைபெறுகிறது. இவ்வாறு இறைக்கட்டளையை கொண்டு உடலில் சில காலம் தங்கியிருக்கும் அம்சமே உயிர் என்பதாகும்.

    உயிர், இறைவன் அவகாசம் கொடுக்கும் காலம் வரை அது உலகில் நம்மோடு தங்கி செய்கின்றது. அவனது கட்டளை வாபஸ் ஆகும் போது, அது மீண்டும் அவனிடமே சென்று அடைந்துவிடுகிறது என்பதை அருள் மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

    ‘அவன் (இறைவன் தான்) உயிரூட்டக் கூடியவன். இன்னும் அவனே மரிக்க செய்கின்றான். இன்னும் அவனிடமே நீங்கள் (மீண்டும்) மீட்டப்படுவீர்கள்’ (திருக்குர்ஆன் 10:56)

    உயிர் என்ற அம்சம் இறைவனின் கட்டளையால் வாபஸ் ஆகும் போது உயிரினங்கள் பல்வேறு விதமாக மரணத்தை தொட்டுவிடுகின்றது.

    எனவே உலகில் உயிருடன் வாழும் காலத்திலேயே உடலோடு ஒன்றி இருக்கும் உயிரையும் அதன் மகத்துவத்தையும் உணர்ந்து அதனை பரிசுத்த செயல்களால் மேன்மைப் படுத்தியவர்கள் வெற்றியடைந்து விடுகிறார்கள்.

    இதை உணராது உடலின் சுகபோகங்களுக்கு இரையாகி, தனது உயிரின் உன்னத நிலையை மறந்தவர்கள், தோல்வியில் விழுந்து விடுகிறார்கள்.

    நுட்பமான அறிவைக் கொண்டு கவனிக்கும் போது, என்றும் மாறாததும், மறையாததும், பிறவாததும், இறவாததும், ஆன தனித்துவம் பெற்றது இறையாற்றல். அந்த இறையாற்றல் இப்பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள எல்லாவற்றையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் படியாக செய்திருக்கின்றது. ஒன்றில் ஒன்று ஊடுருவி இருப்பதும், ஒன்று மற்றொன்றோடு பிணைக்கப்பட்டிருப்பதும் அவ்வாற்றலின் பேரருளாள் தான்.

    உயிர் குறித்து நபிகளார் கூறும் அற்புதமான வார்த்தை இது: ‘என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக’ என்பார்கள்.

    எல்லா உயிர்களின் பிடியும் இறைவன் கைவசம் உள்ளது என்பதைதான் இது நமக்கு உணர்த்துகின்றது.

    உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம்.

    -முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.

    ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.
    இஸ்லாத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக அமைத்துக் கொடுத்த அண்ணலாரின் அன்புத்தோழர்களில் மிக முக்கியமானவர்கள் யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி). இந்த குடும்பமே தன் இன்னுயிரை ஈந்து இஸ்லாத்தை காத்தது.

    ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் யாஸிர் (ரலி). அவர் தன் சொந்த நாட்டை விட்டு வந்து மக்காவில் குடியேறினார். அக்கால கட்டத்தில் குரைஷி குலத்தலைவர்களின் முக்கியமானவரான அபூஹுதைபா அல்மக்ஸுமி என்பவரிடம் அடைக்கலம் பெற்று மக்காவில் தங்கினார்.

    அவருடைய நன்னடத்தையால் கவரப்பட்ட அபூஹுதைபா, தன் ஆளுமையின் கீழிருந்த அடிமைப்பெண்களில் ஒருவரான சுமையா என்பவரை யாஸிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இல்லறத்தை நல்லறமாய் நடத்தி வந்த தம்பதியருக்கு அம்மார் (ரலி) தவப்புதல்வராய் பிறந்தார்.

    இவர்கள் மூவரும் அண்ணல் நபிகளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக்கொள்கையை ஏற்றனர். அல்லாஹ் ஒருவனே இறைவன், அவனது தூதர் முஹம்மது நபிகள் (ஸல்) என்பதை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய வழியில் வாழ்ந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமையா (ரலி) ஆவார்.

    ஏக இறைவனை ஈமான் கொண்டதால் அரேபிய குரைஷியர்களால் யாஸிர் (ரலி), சுமையா (ரலி) இருவரும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள்.

    தனது பெற்றோரின் ஈமானில் எள்ளளவும் குறையாத உறுதி மிக்கவராக அம்மார் (ரலி) திகழ்ந்தார். இந்த உறுதியை குலைக்க குரைஷியர்கள் முயன்றனர். கடும் தண்டனைகளும், சித்ரவதைகளும் செய்து அம்மார் (ரலி) அவர்களை கொடுமைப்படுத்தினார்கள். அம்மார் (ரலி) அவர்களைத் தீயிலிட்டு பொசுக்கினார்கள். தீயின் கங்குகளால் உடலை சூடு வைத்து கதற வைத்தனர்.

    ஒரு முறை அண்ணலார் (ஸல்) அவர்கள் அவ்வழியே செல்லும் சந்தர்ப்பத்தில் அம்மார் (ரலி) அவர்கள் படும் வேதனையை சகிக்க முடியாதவர் களாக அவர்கள் தலையை கோதி விட்டவர்களாக, “ஏ! அக்னியே அம்மாரை எரித்து விடாதே, இப்ராகிம் நபிகளுக்கு இறைவன் கட்டளைப்படி நிம்மதியூட்டும் குளிர்ச்சியாக மாறியது போல், அம்மாருக்கும் குளுமையையும் சுகத்தையும் கொடுத்து விடு” என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

    ஒரு நாள் குரைஷியர்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அம்மார் (ரலி) முதுகு முழுவதும் பயங்கரமாய் சூடு போட்டனர். ரண களமான முதுகை கொதிக்கும் பாலைவன மணலில் கிடத்தி வேதனையை அதி கரிக்கச் செய்தனர். அதோடு, முதுகை உயர்த்தி விடாமல் இருப்பதற்காக சுடுகின்ற பாறை கற்களை அம்மார் (ரலி) நெஞ்சில் வைத்து சித்ரவதை செய்தனர்.

    வேதனை தீரும் முன்பே அவர்களை எழுப்பி தலையை தண்ணீரில் அமுக்கி மூச்சு திணற திணற துடிதுடிக்கச் செய்தனர். அதன் பின் சவுக்கால் அடித்து துவைத்து கிட்டத்தட்ட மரணவாயிலின் அருகாமைக்கு கொண்டு சென்றனர்.

    தலை முடியை பிடித்து இழுத்து இப்போதாவது, ஏக இறை கொள்கையை விட்டு விடு என்று துன்புறுத்தினார்கள். கிட்டத்தட்ட சுயநினைவை இழந்து விட்ட நிலையில், உயிர் போய் விடுமோ என்று அஞ்சிய அம்மார் (ரலி) நிராகரிப்புச் சொற்களை வாயால் கூறினார்.

    இதையடுத்து குரைஷியர்கள் அவரை உயிரோடு விட்டனர்.

    நிர்பந்தத்தின் காரணமாக இந்த செயலை அம்மார் (ரலி) செய்தார். ஆனால் அவரது இதயத்தில் எந்தவித இணைவைத்தல் வேறுபாடும் இல்லாமல் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

    சிறிது நேரம் செல்ல, மெல்ல மெல்ல சுய நினைவு திரும்பியவர்களாக, உடம்பில் சிறிது தெம்பு வந்ததும், தன்னிலைக் குறித்து மிகவும் வருந்தினார்கள்.

    ‘உயிரை துச்சமாக மதித்து, ஏக இறைவனுக்காக தங்களது உயிரையே கொடுத்த பெற்றோருக்கு பிறந்த நான், எனது உயிரைப் பெரிதாய் எண்ணி எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டேன்’ என்று மிகவும் வருந்தினார்.

    இந்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா? என்று மனம் பதைபதைத்தவர் களாக அண்ணலாரிடம் ஓடோடி சென்று நடந்ததை ஒன்று விடாமல் விவரித்துச் சொன்னார்கள்.

    அம்மார் (ரலி) அவர்களை ஆறுதலாய் அரவணைத்துக் கொண்ட அண்ணலார், ‘உயிர் இறைவன் அளித்த அமானிதம். அதனைக்காப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி தான். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இறைவன் விரைவில் உங்களுக்கு நிவாரணத்தை தருவான்’ என்றார்கள்.

    அண்ணலாரின் கூற்றை ஆமோதிப்பது போல உடனே அல்லாஹ்விடம் இருந்து இறைச்செய்தியும் இறங்கியது.

    ‘இதயம் இறை நம்பிக்கையால் முற்றிலும் வியாபித்திருக்க பிறரின் வற்புறுத்தலுக்கு பணிந்து, மனதில் திடத்தோடு ஆனால் வாயினால் இறை நிராகரிப்பு என்ற சொற்கள் வந்து விட்டால், அதனால் அவர் மீது குற்றமில்லை’. (திருக்குர்ஆன் 16:106)

    கலவரச் சூழலில் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளத்து நம்பிக்கையில் சிறிதளவும் சலனமில்லாமல் வாயால் மட்டும் அந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பேசுவது குற்றமல்ல என்று இந்த வசனம் பேசுகிறது.

    அண்ணலார் இந்த இறைச்செய்தியை அறிவித்ததும் அம்மார் (ரலி) அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விட்டன. தன்னை இறைவன் பொருந்திக் கொண்டான். தன் பொருட்டு இறைச்செய்தியை அறிவித்து விட்டான். இப்பெரும்பேறு யாருக்கு கிடைக்கும்? என்று மனம் மகிழ்ந்தார்கள்.

    ஆனால் அதன் பின் எதிர்கொண்ட எத்தனையோ வேதனைகளை துச்சமாக மதித்தார்களே ஒழிய ஈமான் இழந்து வாய்மொழியில் கூட நிராகரிப்பை சொல்லவில்லை.

    காலங்கள் கடந்தன. இஸ்லாமிய சுதந்திர காற்று மக்கா முழுவதும் வியாபிக்கத் தொடங்கியது. உமர் கத்தாப் (ரலி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாமியக் கொள்கைகள் மக்கா நகர் முழுவதும் வெளிப்படையாக உலா வரத் தொடங்கியது.

    அண்ணலாருக்கும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனா செல்ல வேண்டிய கட்டாயம். அம்மார் (ரலி) அவர்களும் மதீனாவில் குடியேறினார்கள்.

    அதன் பின் பிரகடனப்படுத்தப்பட்ட அத்தனை போர்களிலும் முன்னிலை வீரராக பங்கேற்று மிகவும் உக்கிரமுடன் போராடினார்கள் அம்மார் (ரலி).

    இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி காலத்திலும் ‘யமாமா’, பாரசீக, ரோமபுரி வல்லரசுகளுடன் தொடுக்கப்பட்ட பெரும் போர்களிலும் அம்மார் (ரலி) அவர்கள் பங்கேற்றார். பெரும் வெற்றியை ஈட்டுவதற்கு பெரும் துணையாகவும் இருந்தார்.

    ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.

    யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி) ஆகிய மூவருமே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மக்கள். முதன்மையாக இஸ்லாத்தை ஏற்றதும், அவர்கள் செய்த தியாகங்களும் பின்னால் வந்து இணைந்து கொண்ட மற்ற சஹாபாக்களுக்கே ஒரு பாடமாக, ஓர் அற்புதமான அத்தாட்சியாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.

    ×