search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிக்காய்ச்சல்"

    பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக ராசிபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் இறந்தார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி.ஓ.சி காலனியில் வசித்து வருபவர் விஜி என்ற விஜயரங்கன்(வயது49). இவர் ராசிபுரம் நகர அ.தி.மு.க.வில் 7-வது வார்டு மேலவை பிரதிநிதியாகவும், நகராட்சியில் சுங்க வசூல் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார். அதேபோல் டாஸ்மாக் மதுபான பார் எடுத்து நடத்தி வந்ததோடு, பயணிகள் ஆட்டோவை சொந்தமாக வைத்திருந்தார்.

    இவருக்கு கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர், ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஜி, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜிக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் விஜிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார்.

    பன்றிக்காய்ச்சலால் இறந்த விஜிக்கு, மீனாகுமாரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் ராசிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.
    ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமென் என்பவரால் ஓமியோபதி மருத்துவம் உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஓமியோபதி மருத்துவத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி காய்ச்சல் என்கிற ஸ்வின்புளு என்பது சுவாச நோயாகும். வைரஸ் என்கிற நோய் நுண் கிருமிகள் சுவாச மண்டலத்தை தொற்றுகிறது.

    ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் குடும்பத்தில் உள்ள பலவிதமான இன்புளுன்சா வைரஸ்கள் சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் நோய் நுண்கிருமிகள் பன்றிகளை இருப்பிடமாக கொண்டுள்ளன. இந்த வைரஸ்கள் பல அணுமானத்தில் இருந்தபோதிலும் முக்கிய இன்புளுன்சாவான சி அதன் துணை இன்புளுன்சா ஏ இவற்றை எச்1என்1, எச்1என்2, எச்2என்1, எச்3என்2, எச்2என்3 என்று அறியப்படுகிறது.

    பன்றிக்காய்ச்சலுக்கு காரணம் இன்புளுன்சா ஏ வைரசின் வரையறுக்கப்பட்டது எச்1என்1. இவை ஏன் எச்1என்1 என்று அழைக்கப்படுகிறது என்றால் இரண்டு பெரிய ஆன்டிஜன் இந்த வைரசின் மேல் காணப்படுகிறது. அவை ஹீம்அக்லுடினின் (எச்), மற்றொன்று நியூராமினிடேஸ்(என்).

    இந்த வைரசால் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் இன்புளுயன்சா காய்ச்சல் போலவே சோர்வு, காய்ச்சல், பசியின்மை, தும்மல், இருமல், மூக்கில் நீர்வடிதல், தொண்டைவலி, தலைவலி, உடல்வலி மற்றும் இருமல் ஏற்படும். சிலருக்கு கடுமையான மூச்சு திணறல், மூச்சடைப்பு ஏற்படும். சிலருக்கு வலிப்பு உண்டாகும். நுரையீரல் கடுமையாக தொற்று கிருமியால் பாதிக்கப்படும்போது தவிர்க்க முடியாத மரணம் ஏற்படும்.

    சீதோஷ்ணநிலை மற்றும் தட்பவெப்பம் மாற்றத்தினால் ஸ்வின்புளு, பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசல் நோய் தொற்றும் வேகத்தை அதிகப்படுத்தும். கூட்டநெரிசல் இடங்களில் நோய் பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும். மனிதனுக்கு சுவாச சம்பந்தமான தும்மல், இருமல், தொற்றுநோய்க்குள்ளான பொருட்களை தொடுவதால் மூக்கு, கண், வாய் இவற்றை வைரஸ் தொற்று ஏற்பட்ட கைகளால் தொடுவதால் அடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. சுவாச உறுப்புகளின் மூலமாக ஸ்வின்புளு இன்புளுன்சா வைரஸ் மனிதனின் உடலை வந்து சேர்கிறது.

    நோய் வராமல் தடுப்பதற்கு பொதுஇடங்களில் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். பொது கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இன்புளுன்சா பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் எனும் முகமூடியை அணிந்து, கைக்குட்டையை கொண்டு மூக்கு, வாயை பொத்திக்கொள்ள வேண்டும். இருமல், சளி, தும்மல், களைப்பு போன்ற ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போது தனி அறையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.

    கை, முகத்தை அடிக்கடி சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக இருமல், தும்மல் ஏற்பட்டவுடன் சோப்பு தண்ணீரில் கை மற்றும் முகத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.ஓமியோபதி மருந்துகளை கொண்டு ஸ்வின்புளு என்கிற வைரஸ் இன்புளுன்சாவான பன்றிக்காய்ச்சலை வரும்முன் தடுக்கலாம். ஸ்வின்புளு மட்டும் இல்லாமல் இதுபோன்ற பிற எபிடெமிக் காய்ச்சலையும் (மலேரியா, டெங்கு), ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிகஸ் மருந்தை கொண்டு பெருவாரியான ஒரே மாதிரியான நோய் குறிகளை கொண்டுள்ள மக்களை நோயின்றி காப்பாற்றலாம்.

    இந்த குறிப்பிட்ட ஒத்த குறிகளை கொண்ட மருந்தை ‘ஜீனஸ் எபிடெமிக்கஸ்’ என்று ஓமியோபதி வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. இப்படி தேர்வு செய்யப்படும் ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொண்டு ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து வருமுன்னர் தடுக்கலாம். அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.

    ஓமியோபதி மருந்தால் பின்விளைவுகள் துளியும் ஏற்படாது. பாதுகாப்பான மருந்துகள், வேறு நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் உட்கொண்டாலும் ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம். ஆங்கில மருந்துக்கும், ஓமியோபதி மருந்துக்கும் முரண்பாடு ஏற்படாது. ஓமியோபதி மருந்துகள் எதிர்ப்பு சக்தியும், பலத்தையும் கொடுத்து காய்ச்சலை குறைப்பதோடு, பசியை ஏற்படுத்தும். ஓமியோபதி மருந்துகள் பாதுகாப்பானவை. எல்லா வயதினரும் கை குழந்தைகள் உள்பட அனைவரும் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம்.

    ஓமியோபதியில் இன்புளுன்சா எனும் புளு காய்ச்சலை குணப்படுத்த பொதுவாக 132 மருந்துகள் உள்ளன. இருப்பினும் நோய் அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து நடைமுறையில் உள்ள புளு நோயாளியின் அறிகுறிகளை கருத்தில் கொண்டு சரியான ஒத்த ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் புளு மருந்தை ஓமியோபதி டாக்டர் தேர்வு செய்து கொடுப்பார். அப்படி தேர்வு செய்யப்பட்ட மருந்தை அதே பகுதியில் அதே அறிகுறிகளோடு கூடிய புளு நோயாளிகளை கண்டறிந்து ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொடுத்தால் புளு குணமாகும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து இன்புளுன்சா எனும் ஸ்வின்புளு என்ற பன்றி காய்ச்சலை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி கவுன்சிலில் பதிவு பெற்ற ஓமியோபதி டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் மருந்து கடைகளில் தானாகவே ஸ்வின்புளு பன்றிக்காய்ச்சல் மருந்து வாங்கி உபயோகிக்க வேண்டாம்.

    டாக்டர் கே.கிங் (ஓமியோ),

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி துறை முன்னாள் கவுரவ ஆலோசகர்
    வேலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவத்தையடுத்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆம்பூர் பெரியாங்குப்பத்தை சேர்ந்த வரதராஜ் மனைவி ருக்மணியம்மாள் (வயது 55). ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கபட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை சோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமி நகரில் வசிக்கும் சிவக்குமார் என்பவரது மகள் பிரியதர்ஷினி (வயது 4). இவள், கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். இதனையடுத்து அவள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 30 பேரும், பெண்லெண்ட் ஆஸ்பத்திரியில் 40 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல வாலாஜா, அரக்கோணம், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது. காய்ச்சலை கட்டுபடுத்த 60 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தபட்டுள்ளன.

    இந்த குழுவினர் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

    மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிக்கபட்ட பகுதிகளில் 20 விரைவு மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்னர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 2 பேருக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கபடுகிறது.

    மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 50 பேர் காய்ச்சல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தண்டராம்பட்டு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளனர். அங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ##swineflu
    குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலியானதையடுத்து பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே பருத்திவிளையைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சுகன்யா (வயது 30). 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இவர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். முதலில் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்தபோது சுகன்யாவுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    அதன்பின் மேல்சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா இன்று காலை இறந்தார்.

    நாகர்கோவில் ராமன்புதூர் சற்குணவீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை தெரசா ஏற்கனவே பன்றிக்காய்ச்சல் தாக்கி பலியாகி இருந்தார். தற்போது சுகன்யா இறந்துள்ளதால் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் ஒரு குழந்தையும், ஆண், பெண் உள்பட 8 பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. நேற்று மேலும் சிலர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர்.

    நேற்றிரவு மண்டைக்காடு புதூரை சேர்ந்த 2 வயது பெண்குழந்தை, தென்தாமரை குளம் புவியூர் பகுதியை சேர்ந்த 5 வயது ஆண்குழந்தை, இடலாக்குடியை சேர்ந்த 12 வயது சிறுமி, கிருஷ்ணன்கோவில், உடையார்விளையை சேர்ந்த இளம்பெண்கள் என மேலும் 5 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    அவர்கள் பரிசோதனைக்கு பிறகு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் மொத்தம் 13 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து உள்ளது. தினமும் வெளிநோயாளிகள் பிரிவில் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்கள் மருந்து, மாத்திரைகள் வாங்க ஆஸ்பத்திரி பார்மசி முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வெளிநோயாளிகள் பிரிவில் மருந்து வழங்க நேற்று முதல் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

    குமரி மாவட்டம் முழுவதும் பன்றி காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இளம் வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அவர்களில் பலரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்ந்த வண்ணம் உள்ளனர். பல ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து சுகாதார துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். #Swineflu


    டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் நாளை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #Dengue #Swineflu #MinisterVijayabaskar
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து விரிவாக ஆலோசித்தார்.



    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் நாளை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு செய்கின்றனர். காய்ச்சலுக்காக சிகிச்சை அளிக்கப்படும் சிறப்பு வார்டுகளையும் ஆய்வு செய்கின்றனர். நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமும் கிராமம் கிராமமாக கண்காணிக்க உள்ளனர்.

    டெங்கு, பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவு உள்ளது. எனவே காய்ச்சல் வந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஏற்கெனவே 17 விருதுகள் கிடைத்துள்ளன. இப்போது மேலும் 2 விருதுகள் கிடைத்துள்ளது. தாய்-சேய் நலம் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக டெல்லியில் விருது வழங்கப்பட்டது. அதை முதல்-அமைச்சரிடம் வழங்கி இன்று வாழ்த்து பெற்றோம்.

    இதே போல் சுகாதாரம், குடிநீர், மருத்துவ செயல்பாடு உள்ளிட்ட 34 அளவீடுகளை கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி ஆயோக் துணைத்தலைவர் கையால் நாகை கலெக்டர் விருது பெற்றுள்ளார். இதற்காக ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், நினைவு பரிசும் கிடைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை 19 விருதுகளை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #Swineflu #MinisterVijayabaskar

    தி.மு.க. மருத்துவ அணி சார்பில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடத்திட மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #DMK #DengueFever #SwineFlu
    சென்னை:

    தி.மு.க. மருத்துவ அணி தலைவர் பூங்கோதை, செயலாளர் என்.வி.என். சோமு கனிமொழி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இறந்துள்ளனர்.

    இதையடுத்து தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மக்களை நேரில் சந்தித்து மருத்துவ முகாம் நடத்தி நோய்களை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நில வேம்பு கசாயம் வழங்குவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடத்திட மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் என்.வி.என்.சோமு கனிமொழி, விருதுநகரில் பூங்கோதை, திருவள்ளூரில் வி.கலாநிதி, காஞ்சீபுரத்தில் ஆர்.டி.அரசு ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள்.

    தி.மு.க. மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களோடு கலந்து பேசி மருத்துவ முகாம்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #DengueFever #SwineFlu
    பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மீண்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்... ஆகிய வார்த்தைகள் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதற்கான சிகிச்சைகள் குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் டாக்டர் மருதுபாண்டியன் நம்மிடம் விளக்கம் அளித்தார். அதுபற்றிய தகவல்களை இனி விரிவாக காணலாம்.

    ‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும். தொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக காற்றின் மூலம் பரவி வருகிறது. தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

    பன்றிக்காய்ச்சல் தொற்றினால் மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய காய்ச்சலுக்குரிய அறிகுறிகள்தான் இருக்கும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும். பன்றி காய்ச்சலை பரப்பும் வைரசுக்கு ஒரு வினோத சக்தியும் இருக்கிறது. அது என்னவென்றால் இது இன்னொரு வைரசுடன் சேர்ந்து மூன்றாவதாக புதிய வைரசாகவும் உருமாறிவிடக்கூடும். எனவே அலட்சியம் காட்டினால், நோய் தீவிரம் அடைந்து உடல் உறுப்புகள், செயல் இழந்து உயிரிழப்பும் வரலாம்.

    பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி இளநிலை, முதுநிலை டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு டீன் டாக்டர் மருதுபாண்டியன் கூறினார்.

    தடுக்க முடியுமா? :

    பன்றிக்காய்ச்சலை தடுக்க முடியுமா? என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் மருந்தியல் துறை பேராசிரியர் டாக்டர் பாலாஜிநாதன் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு இருந்தால் அதனை 80 சதவீதம் தடுத்து விடலாம். பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட ஒருவரை குணப்படுத்த முடியும். ஆனால், அந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவரை குணப்படுத்துவது சற்று கடினமானதாகிவிடும்.

    எடுத்துக்காட்டாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினை இருந்தால் அவருக்கு தகுந்த சிகிச்சை மிக அவசியமானது. பொதுவாக குழந்தைகளையும், பெரியவர்களையும் இந்த வைரஸ் எளிதாக தாக்குகிறது.

    தினமும் உணவு உண்ணும் முன்பும், பின்பும் சோப்பு போட்டு முறையாக கையை கழுவ வேண்டும். சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும்.

    வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும். இதுபோன்ற வழிகளை பின்பற்றி பன்றிக்காய்ச்சலை எளிதில் பரவாமல் தடுக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை தங்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. அதற்கான தடுப்பூசிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இருக்கிறது. அதுபோல் பன்றி காய்ச்சலை கண்டறிவதற்காக பிரத்யோக ஆய்வகமும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ளது. தென் மாவட்டங்களில் இதுவே அங்கீகாரம் பெற்ற மிகப்பெரிய ஆய்வகமாகும்.

    பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து உண்டா என்று கேட்டால், ‘உண்டு’ என்பதுதான் பதில். பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியை அழிக்கும் ‘ஒசல்டாமிவிர்‘ என்ற மாத்திரை இருக்கிறது. ஆகவே அதற்கான அறிகுறிகள் தென் பட்டால் டாக்டரிடம் சென்று பார்க்க வேண்டும். மேலும், இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியும் போடப்படும். இந்த வைரஸ் ஒவ்வொரு வருடத்திற்கும் மாறி மாறி உருவெடுப்பதால், ஆண்டுதோறும் புது தடுப்பூசி போட வேண்டும்.

    இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

    வைரஸ்களில் பலவகை

    பன்றிக்காய்ச்சலை ஆரம்பத்தில் எச்1என்1 என்ற வைரஸ்தான் பரப்பியது. தற்போது அதில் படிப்படியாக பல மாற்றங்கள் உருவாகி, எச்3என்2, எச்2என்1, எச்2என்3, எச்1என்2, எச்3என்1 என்ற பல்வேறு வைரஸ் வகை வந்து விட்டன. பொதுவாக இந்த காய்ச்சல் வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு வருகிறது. ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற இடங்களில் இருந்துதான் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதுவும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அதிகம் பரவுகிறது. பொதுவாக மற்ற மாதங்களில் இது அதிக பிரச்சினையை ஏற்படுத்துவது இல்லை.

    பன்றிக்காய்ச்சல் ஒருவருக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை பொறுத்து, அவருக்குரிய பாதிப்பை கூறுகிறார்கள். அதாவது, ஏ, பி, சி என்ற 3 நிலைகள் இதில் உள்ளன.

    நிலை-‘ஏ’ பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நோயாளிக்கு ஏற்படும் ‘ஏ‘ நிலைக்கான அறிகுறி என்பது மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு ஆகியவை.

    நிலை-‘பி’ கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி.

    நிலை-‘சி’ மேற்கண்ட ‘ஏ‘ மற்றும் ‘பி‘ நிலைகளில் காணப்படும் அறிகுறிகளுடன், மூச்சு திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், மந்தநிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட நபர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக நிச்சயம் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    என்னென்ன பரிசோதனை?

    தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை பரிசோதித்து எந்த வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள். குறிப்பாக ‘சி‘ நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு அவசியம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

    தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

    பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், உடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் தற்போது அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். #Swineflu
    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பல பகுதிகளில் பன்றி காயச்சல் பாதிப்பு இருந்தது. சுகாதார துறை நடவடிக்கையை தொடர்ந்து இந்த காய்ச்சல் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் நெல்லையில் அரசு டாக்டர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாளை ரகுமத் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கல்யாண்குமார். இவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 4 நாட்களாக தீராத காய்ச்சலும், இருமலும் இருந்துள்ளது.



    இதையடுத்து சந்தேகமடைந்த அவர் ரத்த பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் தலைமையிலான டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

    மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து டீன் கண்ணன் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் கல்யாண்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உரிய சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார். அதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் சோதனை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்பட்டது இல்லை. இப்போது தான் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பாளை ரகுமத் நகரில் வேறு யாருக்கேனும் பன்றிக் காய்ச்சல் உள்ளதா? எனவும் ஆய்வு நடத்தி வருகின்றனர். #Swineflu

    கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு தாசில்தார் பலியாகி இருப்பது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. #swineflu
    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 47). கார்கில் போரில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 10 ராணுவ வீரர்களில் இவரது தம்பி செய்யது சத்தாரும் ஒருவர்.

    உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்துல்ரகுமானுக்கு நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் வேலை வழங்கப்பட்டது.

    இவர் துறைரீதியாக தேர்வு எழுதி தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், அரசு கேபிள் டிவி தாசில்தாராகவும் பணியாற்றினர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்துல் ரகுமான் கோத்தகிரி ஆதிதிராவிடர் நலத்துறையில் நிலம் எடுப்பு பிரிவில் தாசில்தாராக மாற்றப்பட்டார். அங்குள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதியில் இருந்து அப்துல் ரகுமான் அதிகப்படியான சளி, இருமலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகவில்லை.

    இதையடுத்து அப்துல் ரகுமானை அவரது குடும்பத்தினர் கடந்த 29-ந் தேதி கோவைக்கு அழைத்து வந்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அப்துல் ரகுமானுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அப்துல் ரகுமானுக்கு நோயின் வீரியம் குறையவில்லை. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அப்துல் ரகுமானை நேற்று முன்தினம் இரவு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு பிரிவில் உரிய சிகிச்சை பெற்று வந்த அப்துல்ரகுமான் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்துல் ரகுமான் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பன்றிக்காய்ச்சலுக்கு பலியான அப்துல்ரகுமானின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். இவரது தந்தை சலாம் மின்வாரியத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்துல் ரகுமானுக்கு ரகுமத் நிஷா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூரை சேர்ந்த வசந்தா என்ற பெண் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இந்த நிலையில் தாசில்தார் அப்துல்ரகுமானும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலருக்கு பன்றிக்காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    தாசில்தார் அப்துல் ரகுமானின் குடும்பத்தினருக்கு நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து அதை தடுப்பதற்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    இதே போல் அப்துல் ரகுமான் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியிலும் சுகாதாரத்துறையினர் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ரகுமான் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கி உள்ளார்.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள் மூலம் கோவை மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேட்டுப்பாளையத்திலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் பொற்கொடி கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக தாசில்தார் அப்துல் ரகுமான் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சளி, இருமல் அறிகுறியுடன் கடந்த சில நாளில் வந்து சிகிச்சை பெற்றவர்கள் யார் என விபரங்கள் தருமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். #swineflu
    ×