search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை"

    அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. #TrumpAdministration #Transgender #USMilitary
    வாஷிங்டன்:

    பாலியல் பாகுபாடின்றி அனைவரும் சரிசமமான வேலைபாய்ப்புகளை பெறும் வகையில் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்ற புதிய உத்தரவை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2016-ம் ஆண்டில் பிறப்பித்தார்.

    பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற உத்தரவில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சில கொள்கை முடிவுகளை மாற்றினார்.

    மூன்றாம் பாலினத்தவர்களாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைகள் முடிந்து முழுமையாக ஆணாகவோ, பெண்ணாகவோ மாறி விட்டவர்கள் மட்டுமே இனி முப்படைகளின் பணிக்காக விண்ணப்பிக்க முடியும்.



    மனதளவில் மாற்றம்பெற்று, சரியான நிலைப்பாடு எடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் உடல்ரீதியாக மாற்றமடையாதவர்கள் பணிகளில் சேர்ந்த பிறகு விடுமுறை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சைக்கு செல்வதால் ஆள்பற்றாக்குறையும் அரசுக்கு அதிகமான செலவினமும் ஏற்படுவதாக கருதிய டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்க தீர்மானித்து உத்தரவிட்டார்.

    இது முற்றிலுமான தடையல்ல, ராணுவத்தில் சேருவதற்காக உளவியல் மற்றும் உடல் கூறியல்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவினரின் பரிந்துரைக்கு பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் முப்படைகளில் பணியாற்றும் சுமார் 13 லட்சம் பேரில் மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் 9 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. #TrumpAdministration #Transgender #USMilitary  #TransgenderMilitaryPolicy
    தமிழகத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து மே 19-ந் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.



    இந்த தேர்தல்களின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட சில வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.

    அதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து மே 19-ந் தேதி மாலை 6.30 மணி வரை, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது போன்றவை தடை செய்யப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இடைப்பட்ட 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னையில் ஓடும் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #HC #NGT #TNGovt
    சென்னை:

    சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

    இதுபற்றிய விசாரணையின் முடிவில் வெளியான 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.

    நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.

    கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.

    மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இருப்பினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறோம். அதில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையம், ‘நீரி’ ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இக்குழு, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை மதிப்பிடுவதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும். இக்குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    உரிய காலத்துக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர், ஏப்ரல் 23-ம் தேதி, தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக பொதுப்பணித்துறை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். #HC #NGT #TNGovt
    மேற்குவங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடைவிதித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.

    ‘இனி திரிணாமுல் இருக்காது’ என தொடங்கும் அந்த பாடலை அமீத் சக்ரவர்த்தியை எழுத, பா.ஜ.க. எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இசையமைத்து பாடி உள்ளார்.



    பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் இனி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பாபுல் சுப்ரியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாடலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்ததாக பாபுல் சுப்ரியோ மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission 
    கொல்லிமலையில் 2-வது நாளாக காட்டுத்தீ எரிந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. #ForestFire #KolliHillsFire
    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலையில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் செடி, கொடி, மரங்கள் காய்ந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ந்த சருகுகள் எளிதில் தீப்பற்றி மலைப்பகுதியில் ஆங்காங்கே அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. மேலும் மலைப்பகுதியில் சுற்றிதிரியும் சில மர்ம ஆசாமிகள் அலட்சியமாக போட்டு செல்லும் பீடி, சிகரெட் துண்டுகள் போன்றவற்றாலும் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொல்லிமலையில் காட்டுத்தீ எரிந்து, காற்றின் வேகத்தால் மலைப்பகுதியில் இருந்து மளமளவென அடிவார பகுதி வரை தீ பரவி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வந்த வாழை, பாக்கு, மா மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசம் அடைந்தன. அப்பகுதியில் இருந்த சில குடிசை வீடுகளும் எரிந்து சேதம் அடைந்தன. மலைப்பகுதியில் பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயின் காரணமாக கொல்லிமலை பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    இதற்கிடையில் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், மாவட்ட வனஅலுவலர் காஞ்சனா, உதவி கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். மலைப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் கொல்லிமலைக்கு தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் மலைப்பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறையினர் அடிவார பகுதியில் நின்று சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    கொல்லிமலை அடிவாரத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. #ForestFire #KolliHillsFire
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள், அருவிகள் மற்றும் பூங்காவை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் ஏராளமான மரங்கள் கருகின. வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அடுத்தடுத்த இடங்களுக்கு தீ பரவி வருகிறது.

    இந்நிலையில் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி, கீழ் செங்காடு பகுதிகளில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காட்டுத்தீயால் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தென்னை, மா, வாழை, மஞ்சள், பாக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.



    காட்டுத்தீ பரவி வருவதால் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். #ForestFire #KolliHillsFire
    டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணத்துக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் புழங்குவது மது பானம்தான்.

    அரசியல் கட்சிகளின் வேலைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள். மாலை நேரம் ஆகிவிட்டால் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதனால் மதுக்கடைகளில் வழக்கத்தைவிட இப்போது மது விற்பனை அதிகமாகி கொண்டு வருகிறது.

    தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தபிறகு மதுபான கடைகளையும், மது உற்பத்தி தொழிற்சாலைகளையும், கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 19 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து தினமும் எத்தனை லாரிகளில் மது பாட்டில்கள் வெளியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்காணிக்க இப்போது ஒவ்வொரு தொழிற்சாலை வாசலிலும் சி.சி.டி.வி. கேமரா நிறுவப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தொழிற்சாலைகளில் இருந்தும் தினமும் 200 லாரிகளில் டாஸ்மாக் குடோன்களுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இப்போது இதைவிட அதிகமான லாரிகளில் மது பாட்டில்கள் அனுப்பப்பட்டால் அதற்கான விளக்கத்தையும், மாவட்ட கலெக்டருக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல் டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடைகளில் வழக்கமாக நடைபெறும் விற்பனையை விட 20 சதவீதத்துக்கு மேல் விற்பனை அதிகரித்தால் அதற்கான காரணத்தையும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுபற்றி டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக டாஸ்மாக் உள்ளது. மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

    இப்போது தேர்தல் நேரம் என்பதால் அனைத்து மதுக்கடைகளிலும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

    எனவே இதை கட்டுக்குள் கொண்டு வர மொத்தமாக பெட்டி பெட்டியாக மது விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக மது விற்பனையில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் கூறி உள்ளோம். #LSPolls

    மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. #Pakistan #MumbaiAttack
    இஸ்லாமாபாத்:

    கடந்த 2008-ம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் ஆகும். புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன. எனவே, ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது.

    பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. #Pakistan #MumbaiAttack
    ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. #Russia #Soldier #SmartphoneBan
    மாஸ்கோ:

    ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ராணுவம் குறித்த ரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    அந்த வகையில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் 400-க்கும் மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

    எனினும் இந்த மசோதா நாடாளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து அதிபர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும்.

    இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கேமரா, இணையதளம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட ‘ஸ்மார்ட்போன்’ மட்டும் இன்றி ‘லேப்-டாப்’ ‘டேப்லட்’ உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும். அத்துடன் அவர்கள் ராணுவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசவும், எழுதவும் தடை வரும்.  #Russia #Soldier #SmartphoneBan
    வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Nalini #Murugan
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    விடுதலை செய்யக்கோரி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து விட்டனர்.

    ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் நளினியின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சிறை விதிகளின்படி கைதி உணவு உண்ணாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்படும். அதன்படி முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இனி தனது வக்கீலை தவிர பிற பார்வையாளர்கள் உறவினர்களை சந்திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    15 நாட்களுக்கு ஒருமுறை நளினி- முருகன் சந்தித்து பேசுவதையும் ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜெயிலில் உள்ள அங்கன்வாடியில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை 2 பேரும் வாங்க மறுத்து விட்டனர்.   #Nalini #Murugan

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #UPgovt #ESMAinUP
    லக்னோ:

    அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு எனப்படும் ‘எஸ்மா சட்டம்’ மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்காக பாராளுமன்றத்தால் 1968-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் ஏற்படும்பட்சத்தில் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்.

    இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

    தபால், விமான நிலையம், துறைமுகம், ரெயில்வே உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் வேலைநிறுத்தத்தால் மக்களுக்கான சேவைகள் பாதிக்காத அளவில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சட்டம் அமலில் இருக்கும்போது போராட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தக்கோரி அம்மாநில அரசு பணியாளர்கள் நாளை முதல் (6-ம் தேதி) வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசின் தலைமை செயலாளர் அனுப் சந்திரா பாண்டே இதற்கான உத்தரவை நேற்றிரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #UPgovt #ESMAinUP
    மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜனதா மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கும் சுமார் 1½ மணி நேரம் மைதானத்துக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #PMModi #AIIMSinMadurai

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் ரூ.1300 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை விமான நிலையம் வருகிறார். பகல் 11.20 மணிக்கு மதுரை வரும் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    பின்னர் காரில் விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் பகுதியில் நடைபெறும் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். 12 மணி வரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

     


     

    பின்னர் 12.05 மணிக்கு பா.ஜனதா மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மத்தியில் தேர்தல் வியூகம் குறித்து மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி 12.55 மணி வரை நடக்கிறது. பின்னர் விமான நிலையம் வரும் மோடி சிறப்பு விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார்.

    மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். 2 நிகழ்ச்சிக்கு அருகருகே மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் வந்து செல்லும் பாதை, பார்வையாளர்கள் அனுமதிக்கும் பகுதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    விழா மைதானம் விமான நிலையம் அருகே உள்ளது. எனவே மோடி பங்கேற்கும் சுமார் 1½ மணி நேரம் மைதானத்துக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளையும் போலீசார் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (சனிக்கிழமை) இரவு மதுரை வருகிறார்.

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார். அவரை வரவேற்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட கலெக்டர் நடராஜன், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

    எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். #PMModi #AIIMSinMadurai

    ×